பள்ளிகளில் ஏஐ பாடம்-3: ஜூன் 25, 2026 (வியாழன்) தினமலரில்!

தினமலர் நாளிதழிலேயே வாசிக்க Click here!

விரைவில் 5 ஆயிரம் பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்பப் பாடங்களை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் தெரிவித்தார். இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டத்தைக் கற்பிக்க என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்பது குறித்து  காம்கேர் கே. புவனேஸ்வரி தினமலரில் எழுதிவரும் குறும் தொடரின் மூன்றாவது நாளில்…

பள்ளிகளில் ஏஐ ஹப்களை உருவாக்கலாம்

எந்த ஒரு தொழில்நுட்பமானாலும் அதில் இரண்டு பிரிவினர்கள் உள்ளனர். முதலாமானவர், தொழில்நுட்பத்தை உருவாக்குபவர். இரண்டாமானவர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்.

தொழில்நுட்பம் சாராத மக்கள் அனைவருமே இரண்டாவது பிரிவில் வருவார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் முதலாவது பிரிவில் வருவார்கள்.

நம் பள்ளி மாணவர்களை முதலாவது பிரிவில் கொண்டு வந்துவிட்டால் இன்றிருக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஏராளமான அப்ளிகேஷன்களை உருவாக்க முடியும்.

ஏற்கெனவே இருக்கும் ஏஐ நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டிருக்காமல், எதிர்காலத்தில் அவர்களாகவே ஏஐ தொழில்நுட்ப டூல்களை உருவாக்கும் அளவுக்கு அவர்கள் திறனை பள்ளிகளில் மேம்படுத்த முடியும்.

பள்ளிகளில் “ஏஐ ஹப்” (AI Hub – செயற்கை நுண்ணறிவு மையக்கூடம்)  உருவாக்க வேண்டும். ஏஐ ஹப் என்பது என்பது வெறும் கம்ப்யூட்டர்கள் நிறைந்த ஒரு லேப் கிடையாது. அது மாணவர்கள் தங்களின் அன்றாடப் பாடப்புத்தக அறிவைத் தாண்டி, புதிய ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு “படைப்பாற்றல் மற்றும் ஆராய்ச்சி கூடம்”  ஆகும்.

பள்ளிகளில் ஏஐ ஹப் அமைப்பதன் நோக்கம் மாணவர்களை ஐடி  வேலைக்குத் தயார் செய்வது மட்டுமல்ல; மாறாக, எந்தவொரு துறையாக இருந்தாலும் (கல்வி, விளையாட்டு, விவசாயம், மருத்துவம், சட்டம், கலை) அங்கு ஏஐ-யை ஒரு கருவியாகப் பயன்படுத்தி எப்படிப் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவது என்ற சிந்தனையை வளர்ப்பதே ஆகும்.

ஏஐ தொழில்நுட்பத்தில் உலகளாவிய மாற்றங்கள் மிக வேகமாக நடந்து வரும் நிலையில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஒரு வெற்றிகரமான ஏஐ ஹப்பை  உருவாக்க வழிமுறைகள்:

  1. ஏஐ ஹப்பின் 4 முக்கிய பிரிவுகள்:

Learning Zone: மாணவர்கள் ஏஐ தத்துவங்கள்,  டேட்டா சயின்ஸ் மற்றும் பைத்தான் மொழிகளை திரைகளில் பார்த்துப் படிக்கும் இடம்.

Sandbox/Experiment Zone: Code.org, Scratch, மற்றும் Teachable Machine போன்ற தளங்கள் மூலம் தங்களின் சொந்த ஏஐ மாடல்களை கோடிங் இல்லாமல் மாணவர்கள் இயக்கிப் பார்க்கும் இடம்.

Development Zone: உயர்நிலை மாணவர்கள் ஏஐ ஏபிஐ-களைப் (AI APIs) பயன்படுத்தி இணையதளங்கள், மொபைல் ஆப்ஸ் மற்றும் சாட்பாட்டுகளைச் சுயமாக உருவாக்கும் இடம்.

AI Ethics & Collaboration Zone: ஏஐ-ன் நன்மைகள், தீமைகள், ஆபத்துகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி மாணவர்கள் குழுவாக அமர்ந்து விவாதிக்கும்  இடம்.

  1. இதற்குத் தேவையான ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் கட்டமைப்புகள்

ஹார்டுவேர்:

இணைய வசதியுடன் கூடிய சாதாரண கணினிகளே போதும். ஏனெனில் பெரும்பாலான ஏஐ பயிற்சிகளை கூகுள் கொலாப் போன்ற கிளவுட் தளங்களிலேயே செய்துவிடலாம்.

மாணவர்களின் முகங்கள் மற்றும் பொருட்களை அடையாளம் காண எளிய வெப்கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள்.

சாஃப்ட்வேர் முற்றிலும் இலவசமானவை:

Scratch, Python (Google Colab), Hugging Face, மற்றும் Anvil (எளிய முறையில் ஏஐ ஆப்களை உருவாக்க).

  1. ஏஐ ஹப் மூலம் பள்ளிகளில் செய்யக்கூடிய லைவ் புராஜெக்ட்கள்:

மாணவர்கள் ஏஐ ஹப்பில் அமர்ந்து தங்கள் பள்ளிக்குத் தேவையான தீர்வுகளைத் தாங்களே உருவாக்கலாம். மாதிரிக்கு சில:

Smart Attendance System: கம்ப்யூட்டர் விஷனைப் பயன்படுத்தி, மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததும் முகத்தை வைத்துத் தானாகவே வருகைப்பதிவு   செய்யும் சிஸ்டம்.

Library Chatbot: பள்ள நூலகத்தில் எந்தப் புத்தகம் எந்த அலமாரியில் இருக்கிறது, எப்போது திரும்பத் தர வேண்டும் என்று மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு தமிழ் சாட்பாட்.

Smart Energy Saver: பள்ளியின் மின்சாரக் கட்டணத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, எந்தெந்த வகுப்புகளில் மின்சாரம் வீணாகிறது என்று கண்டறியும் தரவு அறிவியல் புராஜெக்ட்.

  1. தமிழ்நாட்டில் ஏஐ ஹப்பை எப்படிச் செயல்படுத்தலாம்?

ஏஐ கிளப் (AI Club): ஒவ்வொரு பள்ளியிலும் ஆர்வமுள்ள மாணவர்களைக் கொண்டு ஏஐ கிளப் தொடங்கி, மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்   முறையைக் கொண்டு வரலாம்.

ஹேக்கத்தான்கள் (Hackathons): ஏஐ ஹப்களுக்கு இடையே ஆண்டுக்கு ஒருமுறை மாவட்ட அளவிலான ஏஐ புராஜெக்ட் போட்டிகளை நடத்தலாம்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி!

ஏஐ துறையே புதிது என்பதால், பள்ளி மாணவர்களுக்கு ஏஐயில் பாடம் நடத்துவதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களுக்கு ஏஐயில் உயர் தொழில் நுட்பத்தில் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பதைப் போல புதிதாக ஆசிரியர்களை நியமிக்காமல் ‘Training the Trainers’ முறையில் இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கே பயிற்சி அளிக்க வேண்டியது மிக அவசியம்.

ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள், தாங்கள் கற்பிக்கும் பாடங்களில் அனுபவம் மிக்கவர்களாக இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு ஏஐ பயிற்சி அளிக்கும்போது, தங்கள் பாடம் சார்ந்த தேவைகளோடு தொடர்புபடுத்தி ஏஐ தொழில்நுட்பத்தின் பல்வேறு வசதிகளை அவர்கள் மிக எளிதாகப் புரிந்துகொள்வார்கள். ஏஐ பற்றிய அடிப்படைப் புரிதல் கிடைத்தவுடன், “என் பாடத்திட்டத்துக்குப் பயன்படும் இன்னும் என்னென்ன ஏஐ வசதிகள் உள்ளன?” என்று தாங்களாகவே ஆர்வத்துடன் கேட்டு, தொடர்ந்து கற்றுக்கொள்ள முன்வருவார்கள்.

புரியாதவரை ஏஐ என்பது கைக்கு எட்டாத பிரமாண்டமாகத் தோன்றலாம். ஆனால், அதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கியவுடன், அதே பிரமாண்டம் நமக்காக வளைந்து கொடுத்து, எண்ணற்ற பணிகளை எளிதாக்கும் சக்திவாய்ந்த துணையாக மாறிவிடும். இதுவே ஏஐயின் மிகப் பெரிய சிறப்பு!

—***—-

(Visited 4,106 times, 13 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon