‘அன்புடன் ஏஐ’ – தினமலர் (ஜூலை 18, 2026)

நிறுவனத்தில் கூட்டாளியாகும் ஏஐ!

நிறுவனங்களின் AI புரட்சிக்கு புதிய வழிகாட்டி!

செயற்கை நுண்ணறிவு உலகம் தற்போது ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்கிறது. AI மாடல்களை உருவாக்குவது மட்டுமல்ல; அவற்றை நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகளில் வெற்றிகரமாக இணைப்பதே அடுத்த பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த மாற்றத்திற்கான தீர்வாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முயற்சிதான் “Microsoft Frontier Company”.

புதிய AI மாடல் அல்ல!

Microsoft Frontier Company என்ற பெயரை கேட்டவுடன், இது இன்னொரு புதிய AI மாடல் என்று பலரும் நினைக்கலாம்.

ஆனால், இது ChatGPT, Gemini போன்ற ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் அல்ல.

இது நிறுவனங்களுக்கு AI தொழில்நுட்பத்தை சரியான முறையில் தேர்வு செய்து, அவர்களின் பணிச்சூழலுடன் இணைத்து, அதன் மூலம் உண்மையான வணிகப் பலன்களைப் பெற உதவும் ஒரு புதிய AI செயல்பாட்டு அமைப்பாகும்.

இந்த நுட்பத்தை 1990  முதல் 2000 வரை பிரபலமாக உருவெடுத்த ERP (Enterprise Resource Planning) என்ற தொழில்நுட்ப வசதியுடன் ஒப்பிடலாம். ERP  ஒரு நிறுவனத்தின் பல்வேறு துறைகளை ஒரே சாஃப்ட்வேர் அமைப்பில் இணைத்தது. உதாரணமாக, கணக்கு வழக்கு, மனிதவளம், விற்பனை, கொள்முதல், கையிருப்பு, உற்பத்தி  இவற்றின் தகவல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, நிறுவனம் திறமையாக இயங்க உதவியது. சுருக்கமாக சொன்னால், ERP = நிறுவனத்தின் தகவல்களை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் டிஜிட்டல் நிர்வாக அமைப்பு.

Microsoft Frontier Company என்பது நிறுவனங்களில் AI-ஐ செயல்படுத்த உதவும் புதிய AI பொறியியல் அணுகுமுறை. இது, நிறுவனத்தின் தரவுகளை AI உடன் இணைக்கிறது. பணிகளை தானியக்கமாக்குகிறது. முடிவெடுக்க உதவும் அறிவார்ந்த AI அமைப்புகளை உருவாக்குகிறது. நிறுவனத்தின் தேவைக்கேற்ப AI தீர்வுகளை வடிவமைக்கிறது. சுருக்கமாக சொன்னால், Microsoft Frontier Company = நிறுவனத்தின் தகவல்களுக்கு AI மூலம் அறிவையும் முடிவெடுக்கும் திறனையும் வழங்கும் அமைப்பு.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், ERP நிறுவனத்தை ஒழுங்குபடுத்தியது; AI நிறுவனத்தை அறிவார்ந்ததாக மாற்றுகிறது.

நித்தம் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேரை ஏராளமான தனியார் நிறுவனங்கள் அணுகி ‘எங்கள் நிறுவனத்தில் செயல்பாடு இது. இதற்கு என்ன ஏஐ மாடலை பயன்படுத்தலாம்’ என ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுக்கு பொருத்தமான ஏஐ மாடல்களை தனித்தனியாக சொல்லாமல் அவர்கள் நிறுவனத்தையே முழுமையாக ஏஐ சார்ந்த நிறுவனமாக மாற்றித்தருகிறோம். அதைத்தான் மைக்ரோசாஃப்ட் புதிய திட்டமாக அறிவித்துள்ளது.

AI-ஐ வாங்குவது மட்டும் போதாது!

இன்றைய நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றன. ஆனால், ஒரு AI கருவியை வாங்குவது மட்டும் வெற்றியைத் தராது.

ஒரு நிறுவனத்தின் தரவுகள், பணிமுறைகள், பாதுகாப்பு விதிமுறைகள், வாடிக்கையாளர் தேவைகள் ஆகியவற்றை புரிந்து கொண்டு AI-ஐ பயன்படுத்த வேண்டும்.

இதற்காகவே Microsoft Frontier Company உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்துடன் இணைந்து…

எந்த AI தீர்வு பொருத்தமானது என்பதை கண்டறிதல்,
நிறுவனத்தின் தரவுகளுடன் AI-ஐ இணைத்தல்,
AI அமைப்புகளை உருவாக்குதல்,
தொடர்ந்து மேம்படுத்துதல்

போன்ற பணிகளை மேற்கொள்வதே இதன் நோக்கம்.

6,000 AI நிபுணர்கள் கொண்ட மிகப்பெரிய முயற்சி

Microsoft Frontier Company-க்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை அறிவித்துள்ளது என செய்திகள் கூறுகின்றன. மேலும், 6,000-க்கும் மேற்பட்ட AI பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களை இதில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். இந்த நிபுணர்கள் வெறும் ஆலோசனை வழங்குபவர்கள் அல்ல. நிறுவனங்களுடன் நேரடியாக இணைந்து, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, AI தீர்வுகளை உருவாக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

“AI Consultant” அல்ல… “AI Partner”

இதுவரை பல நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை ஒரு வெளிப்புற சாஃப்ட்வேர் சேவையாகவே பார்த்தன. ஆனால், Microsoft Frontier Company அணுகுமுறை வேறுபட்டது. இது AI-ஐ ஒரு சாஃப்ட்வேராக மட்டும் பார்க்காமல், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கான கூட்டாளியாக மாற்ற முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தின் வெற்றி, “எந்த AI மாடலை பயன்படுத்துகிறார்கள்?” என்பதை விட, “அந்த AI-ஐ எவ்வாறு தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள்?” என்பதில்தான் இருக்கும்.

ஒரே AI அல்ல… பல AI-களின் ஒருங்கிணைப்பு

எதிர்கால நிறுவனங்கள் ஒரே ஒரு AI மாடலை மட்டுமே சார்ந்து இருக்காது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் AI தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல், பிற AI மாடல்கள் மற்றும் திறந்த மூல (Open Source) AI தொழில்நுட்பங்களையும் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற AI தீர்வுகளைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தைப் பெறுகின்றன.

AI யுகத்தில் புதிய போட்டி

கடந்த காலங்களில் நிறுவனங்களின் போட்டி என்பது கம்ப்யூட்டர், இணையம், மொபைல் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்துவதில் இருந்தது.

இப்போது போட்டி மாறியுள்ளது.

AI-ஐ வைத்திருப்பவர்கள் அல்ல; AI-ஐ திறமையாகப் பயன்படுத்துபவர்களே எதிர்காலத்தில் முன்னிலை வகிப்பார்கள்.

ஒரு மருத்துவர் நோயைக் கண்டறியவும், ஒரு தொழிற்சாலை உற்பத்தியை மேம்படுத்தவும், ஒரு வங்கி மோசடிகளை கண்டறியவும், ஒரு நிறுவனம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும் AI முக்கிய பங்காற்றப் போகிறது.

AI-யின் அடுத்த அத்தியாயம்

கம்ப்யூட்டர் மனிதனின் கணக்கிடும் திறனை அதிகரித்தது. இணையம் மனிதர்களை உலகம் முழுவதும் இணைத்தது.ஸ்மார்ட்போன் தகவல்களை நம் கைகளுக்குள் கொண்டு வந்தது.

இப்போது AI…

மனித அறிவுடன் இணைந்து செயல்படும் புதிய டிஜிட்டல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.

Microsoft Frontier Company போன்ற முயற்சிகள், AI தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்தை, அதாவது “AI உருவாக்கம்” என்பதிலிருந்து “AI செயல்படுத்தல்” என்ற புதிய பாதைக்கு கொண்டு செல்கின்றன.

எதிர்காலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள், AI-ஐ வைத்திருப்பவை அல்ல… AI-ஐ அறிவுடன் பயன்படுத்தத் தெரிந்த நிறுவனங்களே!

தொடரும்…

(Visited 18 times, 19 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon