
தினமலர் நாளிதழிலேயே வாசிக்க Click here!
‘சாப்ட்வேர்களின் பரிணாம வளர்ச்சியே ஏஐ’!
விரைவில் 5 ஆயிரம் பள்ளிகளில் ஏஐ கோடிங், பைத்தான், விர்சுவல் ரியாலிட்டி, எச்.டி.எம்.எல். பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் தெரிவித்தார். இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றவரும், இந்தியாவில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் பொறியாளரும், காம்கேர் சாப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவருமான காம்கேர் கே. புவனேஸ்வரி, பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எழுதுகிறார்.
ஆதிக்கம்
தொழில்நுட்பம் சாராத வெகுஜன மக்களும் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி போன்ற ஏஐ அப்ளிகேஷன்களை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்து, தகவல்களைத் தேடவும், தங்கள் புகைப்படங்களை விதவிதமாக உருவாக்கவும், சிறிய அனிமேஷன்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கவும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
தவிர, மருத்துவம், விவசாயம், கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, விண்வெளி என பல்வேறு துறைகளில் ஏஐ தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
ஏஐ சாப்ட்வேர்
கம்ப்யூட்டர்கள் உட்பட அனைத்து சாதனங்களும் சாப்ட்வேர்களின் அடிப்படையில்தான் இயங்குகின்றன. அப்படி இருக்க ஏஐ என்பது இயந்திரமா, ரோபோவா அல்லது சாப்ட்வேரா என்ற குழப்பங்கள் பலருக்கு இருக்கலாம்.
ஏஐ என்பதும் ஒரு சாப்ட்வேர்தான்.
ஏஐ காலத்துக்கு முன்பு சாதாரண சாப்ட்வேர்கள், எதற்காக உருவாக்கப்படுகிறதோ அந்த வேலையை மட்டுமே செய்யும். உதாரணத்திற்கு, பில்லிங் சாப்ட்வேரில் பில் போட மட்டுமே முடியும்; அதில் படம் வரைய முடியாது.
அதாவது, சாப்ட்வேர்களை எழுதிய புரோகிராமர்கள் என்ன விதிமுறைகளைக் கொடுத்து புரோகிராம் எழுதியுள்ளார்களோ, அந்த விதிமுறைகளின்படி மட்டுமே அந்த சாப்ட்வேர்கள் வேலை செய்யும். அவற்றுக்கு தானாகச் சிந்திக்கத் தெரியாது.
ஆனால், ஏஐ சாப்ட்வேர்கள் நாம் கொடுக்கும் தரவுகளைப் பார்த்து, அதிலிருந்து கற்றுக்கொண்டு, அடுத்த முடிவை தானாக ஊகிக்கும் ஒரு புத்திசாலி அமைப்பு.
கட்டளைகளைப் பின்பற்றும் சாதாரண சாப்ட்வேர்களிலிருந்து, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும் சாப்ட்வேர்களுக்கான அடுத்த பரிணாம வளர்ச்சியே ஏஐ.
புரிந்துகொள்ளணும்
இன்றைய மாணவர்களே நம் நாட்டின் வருங்காலத் தூண்கள். அவர்களுக்குப் பள்ளிப் பருவத்திலேயே ஏஐ துறையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துவிட்டால், வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், ஏஐ துறையில் மாணவர்கள் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் காட்ட முடியும்.
ஏஐ சாப்ட்வேர் மூலம் பள்ளி மாணவர்களுக்கு எப்படியான பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என்பதை நாளை பார்க்கலாம்.
தொடரும்!







