பள்ளிகளில் ஏஐ பாடம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு – ஜூன் 13, 2026!
//சென்னை, ஜூன் 13 : சென்னைகோட்டூர்புரத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நிருபர்களிடம் கூறியது:மாணவர்கள் மனப்பாடக் கல்வியையும், மதிப்பெண்களையும் மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு அவர்களை தயார்படுத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), காக்னிட்டிவ் ஏஐ, கோடிங், பைதான், விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்), ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி (ஏஆர்), எச்டிஎம்எல் போன்ற நவீன தொழில்நுட்பப் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும். நம் வீட்டுப் பிள்ளைகள், சாட் ஜிபிடி அல்லது கூகுள் ஜெமினி போன்ற செயலிகளை பயனாளர்களாக மட்டுமே பயன்படுத்தாமல், அவர்களே இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் இன்குபேஷன் மையங்களாக அரசுப் பள்ளிகள் மாற வேண்டும். இதற்காக புதிய ஆசிரியர்களை நியமிக்காமல், இப்போது இருக்கும் ஆசிரியர்களுக்கே ‘டிரெய்னிங் தி டிரெய்னர்ஸ்’ முறையில் உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.//
இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றவரும், இந்தியாவில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் பொறியாளரும், காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருபவருமான காம்கேர் கே. புவனேஸ்வரி, பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தினமலரில் திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம் பதிப்புகளில் 3 நாட்கள் (ஜூன் 23,24,25) குறுந்தொடராக எழுதினார்.








