பார்வைகள் – பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்க உரை (2012)

Women’s day Celebration

@

Vinobha Hall, No: 58, Venkat Narayana Road, T.Nagar, Chennai – 17

for

College Students and Graduates Association for the Blind

On

Saturday  – 3.30 p.m, 10th  March 2012

Special Speech by:  Compcare K. Bhuvaneswari,  Topic: பார்வைகள்

பார்வைகள்

பார்வையற்றோர்களுக்கான சிறப்புரை

          முன்பெல்லாம் பார்வைகுறை உள்ளவர்கள் ‘பப்ளிக் பூத்’, கூடை, நாற்காலி பின்னுவது, சீப்பு, கண்ணாடி, ஊக்கு போன்ற சிறுபொருட்களை வியாபாரம் செய்வது போன்ற ஈடுபாடுகளில் தங்களை அற்பணித்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார்கள்.

இன்று, தொழில்நுட்ப வளர்ச்சியோடு தங்களை இணைத்துக் கொண்டு…

உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்

பேராசிரியராக பணி புரிகிறார்கள்

இசைக் கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்

கம்ப்யூட்டர் துறையில் கால்பதித்து ஆராய்ச்சியும் செய்கிறார்கள்

ஆடியோ ரெகார்டிங்கில் கலக்குகிறார்கள்

படம் வரைகிறார்கள்

பாட்டுப் பாடுகிறார்கள்

சாஃப்ட்வேரில் புரோகிராம் எழுதிகிறார்கள்

கால்சென்டர், பி.பி.ஓ போன்ற துறைகளிலும் வல்லுநர்களாக இருக்கிறார்கள்.

எந்த ஒரு தொழில்நுட்பமும் சமுதாயத்தின் எல்லா தரப்பு மனிதர்களையும் சென்றடையும்போது தான் அது முழுமையான வெற்றி பெறும் என்பர். கூடவே நாம் மற்றொன்றையும்சேர்த்துக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு மாற்றுத்திறனாளியையும் சென்றடையும் போதுதான் அந்த வெற்றி பூரணத்துவம் பெறும் என்பது என் கருத்து.

இன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகள்ஒவ்வொருவரையும் சென்றடையும் விதத்தில், அவர்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும்நோக்கத்தில், அவற்றின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இதை பறைசாற்றும் விதமாகத் தான் இன்று, நாம் பயணிக்கின்ற, பணியாற்றுகின்ற பணியிடங்களில் எல்லாம், வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தில் தங்களை இணைத்துக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பலரை நாம் காண முடிகிறது.

தன்னம்பிக்கை தான் என்னம்பிக்கை என்ற எண்ணத்துடன் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டதன் பலனால் தான் அவர்களின் முன்னேற்றத்தை நம் கண் குளிர காண முடிகிறது என்று சொன்னால் மிகையாகாது.

நம் நிழல் கூட நமக்கு உதவாது!

ஒரு பெரும் பணக்காரர் தன் பிறந்த நாள், தன் குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில், பெரும் பொருள் செலவழித்து, பலருக்கு பொன் தானம், பொருள் தானம், அன்ன தானம் செய்து தன்னுடைய பெருமையை நிலைநாட்டி வந்தார்.

அவருக்கு ஒரு துறவி மீது மிகுந்த மரியாதை இருந்து வந்தது. ஒவ்வொரு முறை தான தர்மம் செய்த பின்னரும், துறவியை சந்தித்து தான் செய்த தானங்களைப் பற்றி பெருமையாக சொல்லி வருவார். ஆனால், அத்துறவியின் பதிலோ ஒரே ஒரு புன்சிரிப்பாக மட்டுமே இருந்து வந்தது.

ஒரு முறை அந்த பணக்காரர் துறவியிடம் கேட்டார்… ‘ஏன் துறவியாரே! ஒரு முறை கூட நான் செய்த தானங்களுக்காக என்னைப் பாராட்டவே இல்லையே..’. இதற்கும் துறவியின் பதில் புன்னகையே.

சுட்டெறிக்கும் வெய்யிலில், சிறிது தூரம் நடந்ததும் அந்த பணக்காரர்  ‘வெயிலில் கொடுமை அதிகமாக இருக்கிறதே’ என்று துறவியிடம் கேட்க, துறவி பணக்காரரிடம் ‘அதனால் என்ன உன்னுடைய நிழல் தான் உன் முன் இருக்கிறதே…அதில் சற்று இளைபாரேன்’ என்றார். அதற்கு அப்பணக்காரர் ‘எப்படி ஸ்வாமி என் நிழலில் நான் இளைபார முடியும்?’ என்று கேட்டார்.

அதற்கு அத்துறவி சொன்னார்…

‘உன்னுடைய நிழலே உனக்கு உதவாது என்று நீயே சொல்கிறாய். மற்றவர்கள் அந்த நிழலில் இளைபாறி அதனுடைய சுகத்தை அனுபவித்து மனதார வாழ்த்தும் போது தான், நமக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

அதுபோல தான், பொன்னும், பொருளும் செலவு செய்து தானமிட்டு அதனுடைய பயனாளிகள் பயனடைந்து மனதார வாழ்த்துவதன் மூலம் தான், நீ செய்கின்ற தானங்களின் பலன் முழுமையாக உன்னை வந்தடையும். அதை விடுத்து, நாமே நம் பெருமையை ‘நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன்’ என்று தற்பெருமை பேசுவதால், நம் நிழல் நமக்குப் பயன்படாததைப் போல நம் பேச்சும், பெருமையும் எந்த விதத்திலும் நமக்குப் பலனைக் கொடுக்காது’

இந்தக் கதையில் வரும் துறவியின் வார்த்தைகளுக்கு ஏற்ப, பேராசிரியர் டாக்டர் ஜெயசந்திரன் அவர்களும் தான் கற்று பயனடைந்து வருவதை பார்வையற்றவர்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தன் சேவையை செய்து வருகிறார் என்பது பெருமைக்குரிய விஷயம்.

மானசீக பார்வை

63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் ஒரு தீவிர சிவபக்தர். சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்பது இவரது தீராத  ஆசை. ஆனால் எவ்வளவு முயற்சித்தும், இவரது சக்தியில் அது இயலவில்லை. ஆனாலும் துயலவில்லை. மனதிலேயே ஆலயம் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆலயம் கட்டத்  தேவையான பொருட்கள், சிற்பிகள் மற்றும் இதர ஏற்பாடுகளையும் மனதாலேயே செய்து, கும்பாபிஷேகத்துக்கும் நாள் குறிப்பிட்டார்.

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவபெருமானுக்கு கருங்கல்லால் ஆன அழகிய ஆலயத்தை கட்டியிருந்தான். வேதியர்களின் ஆலோசனைப்படி கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தான் மன்னன். பூசலார் குறித்த நாளும், மன்னன் குறித்த நாளும் ஒரே நாளாக அமைந்தது இறைவனின் திருவிளையாடல்.

அன்றிரவு சிவபெருமான் மன்னனின் கனவில் தோன்றி,

‘என்னுடைய பக்தர் ஒருவர் திருநின்றவூரில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய இருப்பதால், உன்னுடைய கும்பாபிஷேக நாளை வேறு நாளுக்கு மாற்றி அமைத்துக் கொள்ளவும்’ என்று கூறிவிட்டு மறைந்தார்.

மன்னன் மிகுந்த ஆவலுடன் தன்னை மிஞ்சிய பக்தன் யார் என்று பார்ப்பதற்காக திருநின்றவூருக்கு விரைந்தான். அங்கு சென்று பார்த்தால் கோயிலும் இல்லை, கும்பாபிஷேக ஏற்பாடும் இல்லை. பூசலாரின் மனக்கோவில் தான் அந்தக் கோயில் என்றுணர்ந்த மன்னன், பூசலாரை வணங்கி நின்றான். பூசலாரின் ஆசைப்படி சிவபெருமானுக்கு திருநின்றவூரில் ஓர் ஆலயம் எழுப்பி சிறப்பாக கும்பாபிஷேகமும் செய்தான்.

பார்வைக்குறை உள்ளவர்கள், நேரடியாக செய்ய முடியாத காரியங்களையும், மானசீகமாக நினைத்து செயல் வடிவம் கொடுத்தால், அது கண்டிப்பாக நாயனாரின் மானசீக எண்ணங்களின் பிரதிபலிப்புப் போலவே அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனவே பார்வைக் குறை ஒரு குறையே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக்கப்பட்ட ஓர் உண்மை.

பார்வைகள் பலவிதம்

பார்வையில் 3 விதம் உண்டு. ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு பலன் உண்டு.

  1. ஹஸ்த தீட்சை
  2. நேத்ர தீட்சை
  3. மானச தீட்சை

ஹஸ்த தீட்சை:

கையசைத்து ஆசிர்வதிப்பது ஹஸ்த தீட்சை. உதாரணத்துக்கு, மகான்கள் தங்கள் பக்தர்களுக்கு கையசைத்து ஆசிர்வாதம் செய்வது ஹஸ்த தீட்சை.

நேத்ர தீட்சை:

கண்களாலேயே தன் அருளைக் காட்டி ஆசிர்வதிப்பது நேத்ர தீட்சை. உதாரணத்துக்கு மீன்கள் தண்ணீரில் முட்டைகளை இட்டு, முட்டைகளை திரும்பித் திரும்பிப் பார்த்து கண்காணித்து வரும். அந்த பார்வையினாலேயே அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்குமாம். இது நேத்ர தீட்சை.

மானச தீட்சை:

மனதால் நினைத்து மானசீகமாக ‘நலமாக இரு’ என்று வாழ்த்துவது மானச தீட்சை. உதாரணத்துக்கு ஆமை மணலில் முட்டை இட்டு விட்டுப் போய்விடும். ஆனால் தன் முட்டைகளை மனதிலேயே நினைத்திருக்குமாம். தன் நினைவினாலேயே ஆமை குஞ்சு பொரித்து விடும்.

இதைப் போல பார்வைக்குறையுள்ளவர்கள் தாங்கள் செய்ய நினைப்பதை எல்லாம், மனதால் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கும் போது அதற்கு செயல்வடிவம் நிச்சயமாகக் கிடைக்கும்.

திரைப்படத்தில் சாதனை

படம் : ஆட்டோ கிராப்
பாடல் : ஒவ்வொரு பூக்களுமே
இசை : பரத்வாஜ்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : சித்ரா

பார்வையிழந்தவர்களைக் கொண்டு இப்பாடலை படமாக்கி, அவர்களுக்கு மட்டுமில்லாமல், பார்வையாளர்களுக்கும், ஒவ்வொரு முறை இப்பாடலைக் கேட்பவர்களுக்கும் தன்னம்பிக்கை ஏற்படச் செய்யும் விதத்தில் சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் சேரன்.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

(Visited 136 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon