வேதபாரதியும் – யுவஸ்ரீ அமைப்பும் இணைந்து தாம்பரத்தில் இயங்கிவரும் வள்ளுவர் குருகுலம் பள்ளி மாணவிகளுக்காக நடத்திய பெண் குழந்தைகளுக்கான வாழ்வியல் பயிலரங்கத்தில் ‘தன்னம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் வாழ்க்கையை வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்…
நம் அடையாளம்
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். உதாரணத்துக்கு ‘என் பெயர் காம்கேர் புவனேஸ்வரி, நான் எம்.எஸ்.ஸி, எம்.பி.ஏ படித்துள்ளேன், காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறேன், நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் வசித்து வருகிறேன்’ இவை என் அடையாளங்கள்.
இதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு அடையாளம் இருப்பதைப்போல, நம் பாரத நாட்டுக்கு என பிரத்யேகமான அடையாளம் உண்டு.
பாரத நாடு அன்பிலும், கருணையிலும், அறிவிலும், வீரத்திலும், மானத்திலும், கற்பிலும், இரக்கத்திலும், ஆன்மீகத்திலும் சிறந்த ஒரு நாடு. எல்லா மொழி பேசுபவர்களும், எல்லா மதத்தினரும் வாழ்கின்ற அற்புதமான நாடு.
இவைதான் நம் நாட்டின் அடையாளம். இதைத்தான் கலாச்சாரம், பண்பாடு என்கிறோம்.
அமெரிக்காவில் நம் அடையாளம்
அமெரிக்காவில் 12-ம் வகுப்பு முடிந்ததும் கான்வகேஷன் நடக்கும். அந்த நிகழ்ச்சியின்போதுதான் பட்டம் அளித்து சிறப்பிப்பார்கள். அந்த விழாவிற்கு நடை, உடை, பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மாதகாலம் பயிற்சி அளிப்பார்கள். உடை உடல் முழுவதையும் கவர் செய்திருக்க வேண்டும். உடலின் மேல்பகுதியில் முன்போ, பின்போ தெரியும்படி இருக்கக் கூடாது. வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். காலில் எந்தவிதமான காலணி அணிந்திருக்க வேண்டும், எப்படி சபைக்கு நடந்து வரவேண்டும். என்றெல்லாம் பயிற்சி கொடுப்பார்கள். சென்ற வருடம் அமெரிக்காவில் செயிண்ட் லூயிஸ் என்ற பகுதியில் உள்ள பிரபலமான பெண்கள் கிருஸ்துவ பள்ளியில் நடைபெற்ற கான்வகேஷனில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு நேர்த்தி அந்த விழாவில்… விழாவில் கலந்துகொள்ளும் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கும் உடை கட்டுப்பாடு உண்டு. அவர்களும் என்ன உடை அணிந்துவர வேண்டும் என்று சொல்லி விடுகிறார்கள். ஒரு மாணவிக்கு எத்தனை நபர்கள் பார்வையாளராக (Guest) வர இருக்கிறார்கள் என்ற விவரத்தையும் முன்பே சொல்லிவிட வேண்டும். அவர்களுக்கு இருக்கைகளை அவரவர்கள் பெயருடனேயே முன் ஏற்பாடு செய்துவிடுவார்கள்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவிகள் அனைவரும் 17 வயது நிரம்பியவர்கள். 12-ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லக் காத்திருப்பவர்கள். இன்னிசைத் தவழ விழா இனிதே ஆரம்பித்து. ஒவ்வொரு மாணவியாக நம்மூர் கிருஸ்துவ திருமணங்களில் மணப்பெண் நடந்து வருவதைப் போல மெதுவாக அதே சமயம் கம்பீரமாக நடந்துச் சென்று மேடையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்கிறார்கள். ஒவ்வொருவரும் காலில் அணிந்திருக்கும் செருப்பு மட்டுமே தெரியும் வகையில் முழுநீள வெள்ளை உடை. வெள்ளை நிற செருப்பு. கைகளில் பூங்கொத்து. முகத்தில் பெருமித சிரிப்பு என அசத்தலான கம்பீரமான ஏற்பாடு. பார்ப்பதற்கே பூரிப்பாக இருந்தது. அமெரிக்கர்கள் தங்கள் நாகரிகத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.
ஒவ்வொரு மாணவியாக வர, சட்டென ஒரு மாணவி சபையினரின் முழு கவனத்தையும் ஈர்த்தாள். ஆம். வெள்ளை நிறத்தில் அதே வெள்ளை நிற கற்கள் வைத்த புடவை. அதே பேட்டனில் பிளவுஸ். நெற்றியில் நெற்றிச் சுட்டி. காதிலும், கழுத்திலும், கையிலும் வெள்ளைநிற ஆபரணங்கள். கைகளில் சிவப்பு நிற பூங்கொத்து. நம் பாரத மாதாவே நேரில் வந்ததைப்போல ஜொலித்தாள். கம்பீரமாக நடந்து சென்று மேடையில் அமர்ந்ததைப் பார்ப்பதற்கு நம் இந்திரா காந்தி அவர்களே கம்பிரமாக நடந்து வருவதைப் போல இருந்தது.
நிகழ்ச்சி முழுவதும் அந்தப் பெண் அதே கம்பீரத்தோடு, முகத்தில் அடக்கமான புன்னகையோடு தன்னம்பிக்கையோடு காட்சி அளித்தாள். நிகழ்ச்சி முடிந்ததும் நிறைய அமெரிக்கர்கள் அந்தப் பெண்ணை அவளுடைய அனுமதியோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ‘ஐ லவ் யுவர் டிரஸ்’, ‘ஐ லவ் யுர் காஸ்ட்யூம்’, ‘ஐ லவ் இந்தியன் கல்சர்’ என்றெல்லாம் கூறிப் புகழ்ந்தார்கள். புகழ்ந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள் அல்ல. அனைவரும் அமெரிக்கர்கள் என்பதுதான் ஹைலைட்.
என் சகோதரியின் பெண்தான் அவள். அவளைப் பெருமையாகப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்த எங்களையும் சேர்த்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ‘வி லவ் யுவர் ஃபேமிலி’ என்ற புகழாரம் வேறு. அயல்நாட்டினரும் வியக்கும் நம் கலாச்சாரம்தான் நம் அடையாளம்.
அனைத்து அமெரிக்கர்களுக்கு இடையில் அந்தப் பெண்ணின் வீர நடையையும், வெற்றிப் புன்னகையையும், தன்னம்பிக்கையுடன் இந்தியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்திய மேன்மையை நாம் போற்றியே ஆக வேண்டும்.
அமெரிக்கா சென்றால் அங்கு பெண்கள் மினிடிரஸ்தான் போடுவார்கள். ஆண்களோடு டேட்டிங் செய்வார்கள். இரவு நேர பார்ட்டிகள் இருக்கும். இப்படியெல்லாம் நாமாகவே கற்பனை செய்துகொண்டு உடை மாற்றம், பழக்க வழக்க மாற்றம் என மாற வேண்டிய அவசியமே இல்லை. அமெரிக்காவில் நாம் நாமாக இருப்பதற்கு எந்த தடையும் இல்லை என்பதற்கு நம் இந்திய மாணவி புடவை அணிந்து நம் கலாச்சாரத்தை கம்பீரமாக அமெரிக்காவிற்கு எடுத்துக் காட்டியதே ஒரு சாட்சி. மேலும் அந்தப் பள்ளி ஆசிரியர்கள் எங்களிடம் பேசியதுதான் ஆச்சர்யத்தின் உச்சகட்டம். ‘வெள்ளை உடை என்பது இந்தியர்களைப் பொருத்த வரை கணவனை இழந்தவர்கள் அணியும் கலர். எனவே புடவை கட்ட விரும்பும் இந்திய மாணவிகளுக்கு மட்டும் மெல்லிய சந்தனக் கலரை தேர்ந்தெடுக்கலாம் என பள்ளி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம்’. நம் கலாச்சாரத்தை நாம் மறந்தாலும் அமெரிக்கர்கள் நமக்காக பேசும்போது புல்லரிக்கிறது.
மேலும் அங்கு நம்மை யாருமே எதற்காகவும் வற்புறுத்துவது இல்லை. குட்டை ஸ்கர்ட் அணிய உங்களுக்கு விருப்பமா… அணியுங்கள். குடிப்பதற்கும், புகைப்பதற்கும் உங்களுக்கு விருப்பமா… அதையும் செய்யுங்கள். ஆனால் புகைப்பதற்கான இடத்துக்குச் சென்று புகையுங்கள். பார்ட்டியில் குடித்துவிட்டு காரில் சென்றால், பார்ட்டி நடத்தியவர்களுக்கு அபராதம். மது அருந்த விருப்பமா… அருந்துங்கள்… ஆனால் குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள். ஓட்டினால் வாழ்நாள் முழுவதும் லைசன்ஸ் பறிக்கப்படும்.
நம்மை யாருமே அங்கு எதற்கும் வற்புறுத்துவதில்லை. ஒரு முறை இந்தியக் கல்விக்கும், அமெரிக்கக் கல்விக்குமான ஒப்பீடு குறித்த ஆவணப்படம் தயாரிக்க அமெரிக்காவில் இயங்கிவரும் மிசவுரி பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஷூட்டிங் எடுத்தேன். அப்போது மிசவுரி பல்கலைக்கழக சி.ஈ.ஓ ரிசப்ஷனுக்கு வந்து என்னை மிகுந்த மரியாதையுடன் கைகள் கூப்பி வணங்கி அவர் அறைக்கு அழைத்துச் சென்று பேசினார். இறுதியில் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டபோதுகூட வெகு நாகரிகமாக போதிய இடைவெளி விட்டு நின்று மரியாதை கொடுத்தார். நான் இந்தியாவில் இருந்து வந்திருப்பதால் கைகூப்பி வணங்கி மரியாதை தெரிவித்ததையும், புகைப்படம் எடுத்துக்கொண்டபோது அவர் காட்டிய நாகரிக்கத்தையும் என்னால் மறக்கவே முடியாது.
நாம்தான் ஏதேதோ தவறான கற்பனையான புரிதல்களால் நம் அடையாளங்களை துறந்துவிடத் துடிக்கிறோம். அதற்கும் நாம்தான் காரணமேதவிர, மற்றவர்களை கைகாட்டிக் காரணங்கள் சொல்லக் கூடாது.
நம் திறமை, நம் அடையாளம்
நம் ஒவ்வொருவருடைய முக்கிய அடையாளமாக இருப்பது நம்முடைய திறமைகள்தான். திறமை என்றால் என்ன? நம்மிடம் என்ன திறமை இருக்கு என்று தெரிந்து கொள்வதே ஒரு கலை தான்.
15-20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது, படம் வரைவது, பரத நாட்டியம் ஆடுவது… இவற்றை ஹாபியாக செய்துவந்தார்கள். ஆனால் இன்றோ இது போன்ற திறமைகள் இருப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு. கம்ப்யூட்டரில் பாட்டுப் பாடுவது, கம்ப்யூட்டரில் படம் வரைவது, கம்ப்யூட்டரில் கதை,கட்டுரைஎழுதுவது இது போன்ற திறமைகள் இருப்பவர்களை சாஃப்ட்வேர் துறை வரவேற்கிறது.
நாம் தினமும் எத்தனையோ வேலைகளை செய்கிறோம்… விளையாடுகிறோம்… பாடப் புத்தகங்களை படிக்கின்றோம்… நோட்டுப் புத்தகங்களில் எழுதுகின்றோம், பாடங்களுக்குத் தேவையான படங்களை வரைகின்றோம். இப்படி பலதரப்பட்ட வேலைகளில், நமக்கு எந்த வேலையை செய்யும் போது மனதுக்கு பிடித்திருக்கிறதோ, நம் மனம் திருப்தி அடைகிறதோ, அந்த வேலை தான் நம் திறமை. உதாரணத்துக்கு, உங்களில் ராஜி என்ற மாணவிக்கு நோட்டில் படம் வரையும் போது அவரது மனம் திருப்தி அடைகிறது என்று வைத்துக் கொள்வோம். சுலோசனா என்ற மாணவிக்கு தானாக கட்டுரைகள் எழுதும் போது அவரது மனம் திருப்தி அடைகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு மாணவிகளில் ராஜிக்குள் படம் வரையும் திறமை இருக்கிறது. சுலோசனாவுக்குள் எழுதும் திறமை இருக்கிறது. இப்படித்தான் நம் திறமைகளை கண்டறிய வேண்டும்.
அடுத்ததாக, நம் திறமைகளை எப்படி வளர்த்துக் கொள்வது என்று பார்ப்போமா? படம் வரையத் தெரிந்தால் தினமும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அல்லது வாரந்தோறும் ஏதேனும் ஒரு நாள் என்ற கணக்கில் படம் வரைந்து கொண்டே இருக்க வேண்டும். வரைந்தவைகளை அடுக்கி சேமித்துக் கொண்டே வர வேண்டும். கொஞ்ச நாள் கழித்து தொடக்கத்தில் வரைந்த படங்களையும், தற்போது வரைகின்ற படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்ல மாற்றம் தெரியும்.
அது போலவே எழுதும் பழக்கம் உள்ளவர்கள், தங்களைச் சுற்றி நடக்கின்ற விஷயங்களை கவனித்து அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதிப் பழகலாம். எழுதுவதை சேமித்துக் கொண்டே வர வேண்டும்.
இது போல எழுதுவதையும், வரைவதையும் உங்கள் ஆசிரியர்களிடம் காண்பித்து, கருத்து கேட்டு உங்கள் திறமைகளை செம்மைப்படுத்திக் கொள்ளலாம். நாளடைவில் உங்கள் திறமை உங்களை அறியாமல் அழகாக மெருகேறிக் கொண்டே வரும்.
அடிப்படையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு விட்டால், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் மூலமும், உங்கள் கல்வி மூலமும் அவற்றை இந்த உலகம் அறிய வைக்கலாம். பணமும் சம்பாதிக்க முடியும்.
தன்னம்பிக்கையே நம் கேடயம்
நம் வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நாம் நம் மீதான நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. நம் ஒவ்வொருவருக்கும் பிடித்த சாப்பாடு, பிடித்த உடை, பிடித்த சினிமா, பிடித்த சப்ஜெக்ட், பிடித்த சுற்றுலாத் தளம் என்று இருப்பதைப் போல நமக்கு மிகவும் பிடித்த நம் திறமை ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். தேடிக் கண்டுபிடித்து வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கை தானாக நமக்குள் ஏற்படும். தைரியத்தைக் கொடுக்கும்.
சவால்கள் நிறைந்ததும், ஏற்றத்தாழ்வுகள் கொண்டதும்தான் வாழ்க்கை. சிறு குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்வதாக வைத்துக்கொள்வோம். ஒரு காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு ஆடு குடும்பத்தோடு வசித்து வந்தது. ஒரு யானை தன் குட்டியோடு தண்ணீர் குடித்தது என்று கதை முழுக்க சொல்லிக்கொண்டிருந்தால் கதை கேட்கின்ற குழந்தைகளுக்கு போர் அடித்துவிடும்.
ஒரு நாள் சிங்கத்துக்கு அகோரப் பசி… அந்த சமயம் ஒரு குட்டி ஆடு அம்மா ஆட்டைவிட்டு விலகிச் சென்று ஓர் இடத்தில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாம்…. அப்போது சிங்கம் என்ன செய்ததாம்…. கர்ஜித்தபடி அந்த ஆட்டுக்குட்டியைத் துரத்தியதாம்… அந்த ஆட்டுக்குட்டி கத்திக்கொண்டே யானையிடம் தஞ்சம் அடைந்ததாம்… அந்த யானை சிங்கத்தை தன் தும்பிக்கையால் வீசிப் பிடித்து மடக்கி தூக்கி எறிந்ததாம்… திரும்பவும் சிங்கம் வந்ததாம்… யானைக்கும் சிங்கத்துக்கும் சண்டை வந்ததாம்… இதற்கிடையில் ஆட்டுக்குட்டி தன் அம்மாவிடம் ஓடிச் சென்று சரண் அடைந்ததாம்…. அப்போது அம்மா ஆடு ஒரு குறிப்பிட்ட வயது வரும்வரை அம்மாவைவிட்டு எங்கும் தனியாகச் செல்லக் கூடாது என்று அறிவுரை சொன்னதாம்… குட்டி ஆடு திருந்தியதாம்….
இப்படி ஒரு கதையில் அழகு, அமைதி, சண்டை, சச்சரவு, போராட்டம், பாதுகாப்பு என அனைத்தும் இருந்தால்தான் குழந்தைகள் கூட ஆர்வமாக கதையை கேட்பார்கள்.
அதுபோலதான் வாழ்க்கையும். எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தால் சலிப்புத்தான் மிஞ்சும். பிரச்சனைகள் வந்தால் அதை எதிர்கொள்ளப் பழக வேண்டும். அதுதான் வாழ்வியல் கல்வி.
ஏதேனும் பிரச்சனை, மன அழுத்தம் என்றால் உடனடியாக அப்பா, அம்மாவிடம் சொல்ல வேண்டும். அடுத்து நமக்கு மனதுக்குப் பிடித்த ஆசிரியர்கள் யாரேனும் பள்ளியில் இருப்பார்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும். நம் வயதை ஒத்தவர்களைவிட நம்மைவிட பெரியவர்களை அணுகினால் அவர்கள் மூலம் நம் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். எல்லோரிடமும் சொல்லி தம்பட்டம் அடித்துவிடக் கூடாது. நம்பிக்கையானவர்களை அணுகினால் நம் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்ற புரிதல் கிடைக்கும்.
நம் படிப்பு, நம் திறமை, நம் பெற்றோர், நம் ஆசிரியர்கள், நம்பிக்கையான பெரியோர்கள், நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட சக நண்பர்கள், கூடவே இறை நம்பிக்கை – இவை இருந்துவிட்டால் வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.
மதிப்பெண் குறைவு, தேர்வில் தோல்வி, ஈவ் டீசிங்கில் மனம் உடைதல், சோஷியல் நெட்வொர்க்கில் பிளாக் மெயில் போன்ற காரணங்களால் மனம் நிம்மதியைத் தொலைத்து, எதிர்கொள்ள மனதளவில் தைரியம் இல்லாமல் தற்கொலைதான் தீர்வு என முடிவுக்கு வரும் மாணவிகளைப் பற்றி கேள்விப்படுகிறோம்.
எந்த ஒரு சூழலிலும் நாம் இதுபோன்ற முடிவை எடுக்கவே கூடாது. இந்த நேரத்தில்தான் நாம் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும். அதற்கான சக்தி நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு. எந்த சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற மனதைரியத்தை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்.
முயற்சியும், வெற்றியும்
நாம் வாழ்க்கையில் நம் குறிக்கோள்களுக்காக முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். தோல்வி அடைந்து விட்டாலும் மீண்டும் தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டே இருந்தால் தோல்வியே சலிப்படைந்து வெற்றிக்கு வழிவிடும். திரும்பத்திரும்ப முயற்சி செய்துகோண்டே இருக்கும்போதுதான் வெற்றிக்கான வழிகளும் நம் கண்களுக்குப் புலப்படும். இதைப் புரிந்துகொள்ள ஒரு கதை.
கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்பறவை ஒன்று கூடு கட்டியது. அதனுள் இரண்டு முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் புயல் காற்றினாலும் பெரிய அலைகளினாலும் கிளையில் இருந்த கூடு நழுவி கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
ஆண் குருவி சொன்னது, ‘ நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .’
இரண்டு குருவிகளும் தங்கள் வாயில் கொள்ளும் அளவுக்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் உமிழ்ந்தன. திரும்பவும் தண்ணீரை வாயில் எடுத்துக்கொண்டன. கொண்டுபோய் தொலைவில் உமிழ்ந்தன. இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம். இப்படிச் செய்தால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். தங்கள் முட்டைகள் வெளிப்படும் என்பது அவற்றின் எண்ணம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். குருவிகளின் செய்கை அவருக்கு வியப்பாக இருந்தது. உடனே அந்த மகான் கண்களை மூடினார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த குருவிகளின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா அல்லது முனிவரின் அருளாலாலா? இரண்டினாலும்தான். தண்ணீர் வற்றியது முனிவரின் தவசக்தியால் என்றாலும், குருவிகள் கடல் நீரை வாயில் கொண்டு சென்று வேறோர் இடத்தில் ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவருக்கு குருவிகளின் தவிப்பும், முயற்சியும் தெரியாமலே போயிருக்கும். குருவிகளின் முயற்சியும், உழைப்பும் தெரிந்ததால்தான் முனிவரும் உதவ முடிந்தது. எனவே நம் முயற்சியில் வெற்றி பெறுவது என்பது நம் உழைப்பில் மட்டும் இல்லை, எத்தனையோ காரணிகள் உள்ளன. அவை அனைத்தும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உழைப்பு, முயற்சி இரண்டும் வெற்றிபெரும்.
சோஷியல் நெட்வொர்க்குகளில் பாதுகாப்பு
- சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்களில் நம்மை பதிவு செய்து கொள்ளும் போது, இரண்டு விதமாக அவற்றை அணுகலாம். நாம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் என்றும், தொழில் ரீதியான செயல்பாடுகள் என்றும் இரண்டு முகங்கள் இருக்குமல்லவா? அதனடிப்படையில், professional மற்றும் personal சமாசாரங்களைத் தனியாகப் பிரித்து எடுத்துவிடுங்கள். ஒவ்வொருவரும் தொழில் சார்ந்த பிரிவுக்காக ஒரு அக்கவுண்டையும், விருப்பம் சார்ந்த பிரிவிற்காக மற்றொரு அக்கவுண்டையும் பயன்படுத்துவது நல்லது. இதையே ஆங்கிலத்தில் Professional & personal என்று சொல்லலாம். Professional சோஷியல் நெட்வொர்க் தொடர்பை அனைவரும் பார்க்கும்படியும், Personal தொடர்பை நம் நட்பு வட்டாரம் மட்டும் பார்க்கும்படியும் அமைத்துக் கொண்டால், பிரைவஸியை ஓரளவுக்குக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இப்படி நாம் அனுமதி கொடுக்கும் போது, நம் நண்பர்கள் மட்டும் பார்க்கும் படியோ அல்லது நம் நண்பர்களோடு நண்பர்கள் பார்க்கும் படியோ அல்லது உலகம் முழுதும் பார்க்கும் படியோ அனுமதி கொடுத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும் மிகவும் பர்சனலான விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இன்று சிறியதாக இருக்கும் நட்பு வட்டம் நாளை பெரிதாக விரிவடையும் போது பிரச்சனைகள் வரலாம்.
- தெரியாத நபர்களை நம் நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்வது ரோடில் போகும் ஓணானை நாமே எடுத்து நம் சட்டைக்குள் போட்டுக் கொள்வதைப் போன்ற செயலாகும். எனவே, தவிர்த்து விடுவது நல்லது.
- இன்டர்நெட்டில் நாம் செய்கின்ற பிழைகளை திருத்திக் கொள்ள வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. ஏனென்றால் நாம் வெப்சைட்டுகளில் பதிவாக்குகின்ற தகவல்கள்/புகைப்படங்கள்/வீடியோ காட்சிகள் போன்றவற்றை, நாம் பதிவு செய்த அடுத்த நொடியே நமக்கேத் தெரியாமல் பிரதி எடுத்துக் கொண்டே இருக்கும் வெப்சைட்டுகள் உள்ளன. நாம் அதைக் கண்டுபிடித்து நம் பதிவில் இருந்து நீக்குவதற்கு முன், ஏற்கனவே பிரதி எடுக்கப்பட்ட வெப்சைட்டுகளில் இருந்து மேலும் பல பிரதிகள் பல்வேறு வெப்சைட்டுகள் மூலம் பரவ ஆரம்பித்திருக்கும். எனவே இன்டர்நெட்டில் பதிவு செய்யும் முன் ஒரு முறைக்கு 100 முறை சிந்தித்து send அல்லது submit பட்டனை அழுத்துங்கள்.
- பாஸ்வேர்டினை பத்திரப்படுத்துங்கள். நம் பெயரையோ / வேலை செய்யும் நிறுவனப் பெயரையோ பாஸ்வேர்டாக்க் கொடுப்பதைத் தவிர்த்து விடுவது நல்லது. மற்றவர்கள் அறிந்து கொள்ளாதவாறு பாஸ்வேர்டை கொடுத்துக் கொண்டு, 1 மாதத்துக்கு ஒரு முறை மாற்றி விடுவது நல்லது.
- தவறானதைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு இது போன்ற சோஷியல் நெட்வொர்க்குகளில் குறைவு. எனவே வரும் முன் காப்போம் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
- சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்டுகளில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் என நாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருந்தாலும், நம்முடைய அந்தரங்கம் பாதுகாக்கப்படுகிறது என்று வலியுறுத்தப்பட்டாலும், நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
- மேலும் இதுபோன்ற நெட்வொர்க்குகளின் தொடர்பில் இருந்து நாம் விலகினால் கூட, ஏற்கனவே நாம் பதிவாக்கிய விஷயங்கள் இன்டர்நெட்டில் இருந்து கொண்டு தான் இருக்கும். ஏற்கனவே நான் சொன்னவாறு, யாரோ ஒருவர் நம்மைக் கண்காணித்துக் கொண்டே நம் பின்னே வந்து நம் அந்தரங்கங்களைப் பிரதி எடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள்.
- ஆபத்துகளை மட்டுமே கண்டு அஞ்சாமல், ஆபத்துகள் வராமல் எப்படி தடுப்பது அல்லது குறைப்பது என யோசித்து கவனமாக செயல்பட்டால் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தரும் அனுகூலங்களை சுதந்திரமாக அனுபவிக்க முடியும்.
கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி
மீடியா செய்திகள்
நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி மாணவர்களுக்கு காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய ‘காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள்’ என்ற புத்தகங்களை ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.