கதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014)

 மே 12, 2018 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு  கதை சொல்லம்மா, கதை சொல்லு – Religious & Cultural stories என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்!

மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த வயதில் கற்றுக் கொள்ள வேண்டியது டிஸிப்ளின். ஒழுக்கம். அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களிடம் பழகும் விதம், படிப்பிலும், வேலையில் காட்டும் மரியாதை, நல்ல பழக்க வழக்கங்கள் இவை தான் ஒழுக்கம். இவற்றை யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. வீடுகளில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி இப்படி இவர்கள் வாழ்ந்து காட்டியதைப் பின்பற்றி வழிவழியாக ஏற்றுக் கொள்வது தான் ஒழுக்கம். ஒழுக்கத்தை கதைகள் மூலம் கற்றுக் கொடுத்தார்கள்.

கதைகள்… நம் கற்பனைக் குதிரையை தட்டி எழுப்பி, ஆகாசத்தில் நம்மை உலவ விட்டு, நமக்கு உற்சாகத்தை அள்ளித் தரும் அற்புத சக்தி வாய்ந்ததாகும்.

அந்த காலத்தில் பாட்டி தாத்தாக்கள் பேரன் பேத்திகளுக்கு கதைச் சொல்லி உறவை வளர்த்தார்கள். ஒரு ஊர்ல ஒரு இராஜா இருந்தாராம்… என்று ராகம் போட்டு கதை சொல்லிக் கேட்கும் ஆனந்தமே ஆனந்தம். அதுபோல பெரும்பாலான அம்மாக்கள் நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா என்று பாட்டிப் பாடித் தான் குழந்தைகளை சாப்பிட வைத்தார்கள்… ஆராரோ ஆரிரரோ ஆரடிச்சா நீ அழுதே…என்று நாட்டுப்புறப் பாடல்கள் குழந்தைகளை தூங்க வைக்க உதவின.

கதையாக இருந்தாலும், பாடலாக இருந்தாலும், செய்தியாக இருந்தாலும் அவற்றில் ஒரு கருத்தும், நீதியும் இருக்கும்.

இன்று தாத்தா பாட்டி கதைகள், பேரன் பேத்தி பாடல்கள் என கார்ட்டூன் சிடிக்கள் வாயிலாக தான் குழந்தைகள் கதைகளையும், பாடல்களையும் கேட்க வேண்டிய சூழல். அதுபோல தொலைக்காட்சி சானல்கள் மூலமாகத் தான் கதைகளையும், பாடல்களையும் குழந்தைகள் கேட்டு ரசிக்க வேண்டிய டிஜிட்டல் உலகில் இருக்கிறோம்.

எங்கள் சிறுவயதில் எங்கள் அப்பா, அம்மா அறிவுரைகளைக் கூட கதை போல மிக அழகாக சொல்லி வளர்த்தார்கள். அதில் சில உண்மைக் கதைகளும் இருக்கும். அன்றாடம் நடக்கின்ற நிகழ்வுகளும் இருக்கும். இதன் காரணமாக அவர்கள் சொல்வதை காதால் மட்டும் கேட்காமல், மனதாலும் உணர முடிந்தது.

என் அம்மா நிறைய புத்தகங்கள் படிப்பார். படித்ததில் பிடித்ததை சேகரித்து வைப்பார். அவற்றை எங்கள் கைகளால் ஊசி, நூல் கொண்டு தைத்து பைண்டிங் செய்வதே பள்ளி விடுமுறை நாட்களில் எங்கள் பொழுது போக்கு. அது தான் சம்மர் கோர்ஸ். இன்று காசு கொடுத்து விடுமுறை தினங்கள் முழுவதும் சம்மர் வகுப்புக்குச் செல்கிறார்கள்.

அப்படி எங்கள் கைகளால் நாங்கள் உருவாக்கிய புத்தகத்தைப் படிக்கும் போதே அவற்றைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் உருவாகும். எங்களுக்குள் இருந்த கிரியேடிவிடி தானாகவே வெளிவரத் தொடங்கின. எனக்குள் இருந்த எழுத்துத் திறமையும், என் சகோதரிக்குள் இருந்த ஓவியம் வரையும் திறமையும், என் சகோதரனுக்குள் இருந்த கார்ட்டூன் திறமையும் பெரிய அளவில் முயற்சி ஏதும் செய்யாமலேயே வெளிவரத் தொடங்கின.

இன்று நாங்கள் அவரவர் துறையில் சிறப்பாக இருப்பதற்கு நிறைய கதைகள் கேட்டதும், படித்ததும் தான் என்றால் அது மிகையாகாது.

அதுபோல பாட புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கும் செய்திகளை புகைப்படங்களோடு படிக்கும் போது ஏதோ ஒன்று என்னைத் சுண்டி இழுக்கும். உதாரணத்துக்கு சர்.சி.வி இராமன், நியூட்டன் விதிகள், ஜான்சிராணி லஷ்மிபாய் போன்றோரது புகைப்படங்களோடு அவர்கள் சாதனைகளைப் படிக்கும் போது, அவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி எனக்கு உண்டாகும். என் பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் எனக்குள் இலட்சியம் ஆழப் பதியும். நான் படித்த செய்திகளின், கதைகளின் தாக்கம் என்னையும், என் இலட்சியத்தையும் வளர்த்துள்ளது. அவை நனவாகியும் உள்ளது.

அதுபோல கதைகளுக்கும், கற்பனைகளுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. நான் வாழ்க்கையை பெரும்பாலும் விஷூவலாக கற்பனை செய்தே பழகி விட்டதால், எனக்குள் எப்போதுமே கற்பனைக் குதிரை தயாராக இருக்கும். என் சிறு வயது இலட்சியம் நான் எழுத்தாளராக வேண்டும் என்பது தான். 12 வயதில் நான் எழுதிய செய்யும் தொழிலே தெய்வம் என்ற முதல் கதை கோகுலம் மாத இதழில் வெளிவந்தது. அது எனக்குள் வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையை பெரிய அளவில் விதைத்தது.

அதன் பிறகு என் கற்பனையில் நான் பெரிய எழுத்தாளராக மாளிகையில் அமர்ந்திருப்பது போலவும், என்னைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருப்பது போலவும் சதா கனவு தான். அதற்காக உழைக்கவும் ஆரம்பித்தேன். இரவு 2 மணி, 3 மணி என்று எழுந்து தினமும் கதை எழுதத் தொடங்கினேன். பல முன்னணிப் பத்திரிகைகள் எனக்கு ஆதரவளித்தன. இன்று கம்ப்யூட்டர் உலகில் தொழில்நுட்ப புத்தகங்கள் அதிக அளவில் எழுதிய முதல் எழுத்தாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளேன்.

இதையெல்லாம் நான் எதற்காகக் கூறுகிறேன் என்றால், கதைகள், கற்பனைகள், கனவுகள் இவையனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையன. அவற்றின் சக்தி பிரமாண்டமானது. அவற்றை சரியாக புரிந்து கொண்டால் நாம் மிகப் பெரிய வெற்றி பெற முடியும்.

மீடியாக்கள் இன்று போல பிரபலம் ஆகாத அந்தக் காலத்தில் காகிதங்களில் அச்சிடப்பட்டிருக்கும் கதைகளைப் படித்தும், பெரியோர்கள் சொன்ன கதைகளை காதால் கேட்டும் வளர்ந்த நமக்கே இத்தனை பெரிய தாக்கம் உண்டாகிறதென்றால், வார்த்தைகளை விஷூவலாக்கி பிரமாண்டத்தை மண்டைக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கின்ற இன்றைக்கு அவை குழந்தைகளை எப்படி எல்லாம் பாசிடிவாக உருவாக்க வேண்டும்? அப்படி நடக்கிறதா? யோசிக்க வேண்டிய விஷயம்.

குழந்தைப் பருவம் என்பது தான் பார்ப்பதையும் கேட்பதையும் அப்படியே நம்பிச் செயலாற்றும் பருவமாகும். அவர்கள் இயல்பாகவே கதைகள் கேட்பதில் மிகுந்த விருப்பம் உடையவர்கள். அவர்களுக்குக் கதைகளோடு சிறந்த நீதிகளையும் மனதில் பதியச் செய்தால், அது அவர்களின் வாழ்நாள் வரையும் மனதில் பதிந்து தக்க சமயத்தில் கை கொடுக்கும். இதனால், அவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன் ஆகியவை வளர உதவியாக இருக்கும்.

மேலும் தீர்க்கமான பேச்சு,  ஆழமான எழுத்து, எதையும் சவாலாக எடுத்தாளும் ஆளுமைத்திறன் , சூழ்நிலைக்கேற்றவாறு முடிவுகள் மேற்கொள்ளும் திறன், தன்னம்பிக்கை, தைரியம், பிறரை மதிக்கின்ற குணம், நேசிக்கும் பண்பு, எல்லா உயிர்களிடத்தும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் குணம், வயது வித்தியாசமின்றி எல்லோரையும் மதிக்கின்ற திறன், விட்டுக் கொடுத்தல்  போன்ற பண்புகளை கதைகள் வாயிலாக குழந்தைகளிடம் நாம் வளர்க்க முடியும்.

இன்று நான் எழுத்துத் துறையில் மட்டுமில்லாமல் என்  நிர்வாகத்திலும் சிறப்பாக இருப்பதற்கும் கதைகள் தான் காரணம். முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு நிகராக என் நிறுவனத்தை 20 வருடங்களாக செயல்படுத்தி வருவதற்கும் என் படைப்புத் திறனே காரணம். கேட்டல்/படித்தல், உணர்தல், செயல்படுத்துதல் இவை மூன்றும் என்னை பண்படுத்தின. இன்று கேட்டல், படித்தல் இவற்றோடு பார்த்தல் என்பதும் இணைந்து கொண்டுள்ளதால் இன்னும் திறமையான குழந்தைகளைத் தானே உருவாக வேண்டும்.

குழந்தைகளை மட்டுமின்றி பெரியோர்களையும் கதைகள் என்பது வெகுவாக ஈர்க்கச் செய்யும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஈசாப் கதைகள் – மிருகங்கள் அடிப்படைக் கதைகள்
முல்லா – காமெடிக் கதைகள்
தெனாலிராமன் – விவேகக் கதைகள்
இராமாயணம், மகாபாரதம் – புராண, இதிகாசக் கதைகள்

ஒற்றுமையாக இருக்க வேண்டும், பேராசைக் கூடாது, பண்போடு இருக்க வேண்டும், அன்போடு பழக வேண்டும், மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் போன்ற அரிய பெரிய பண்புகளை கதை மூலம் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள்.

உலகம் முழுவதும் குழந்தைகள் பண்புள்ளவர்களாக வளர்ந்தால் அன்பு மலரும், அமைதி மணமும் உலகில் வீசும்.

இன்றைய குழந்தைகள் கார்ட்டூன் சானல்களில் மூழ்கி விடுகிறார்கள். தவறில்லை. நேரம் கிடைக்கும் போது பெற்றோர்கள் கதைகளை வாயால் சொல்லி குழந்தைகளை கேட்கச் செய்ய வேண்டும். அதற்கு முதலில் இன்றைய இளம் பெற்றோர்கள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எழுத்து, படங்கள், அனிமேஷன்கள், ஆடியோ, வீடியோ போன்றவை கற்பனையை இன்னும் ஆழமாக மனதில் விதைக்க வேண்டும்; வளர்க்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இன்றைய குழந்தைகளின் படைப்பாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியக் காரணம் காதால் கதை கேட்டு மனதால் கற்பனைச் செய்கின்ற செயல்பாடு மறைந்தே விட்டது. எல்லாமே பிரமாண்டமாய் கண் முன்னே காட்சிகளாக விரியும் போது நாம் ஏன் கஷ்டப்பட்டு கற்பனை செய்ய வேண்டும்? குழந்தைகளுக்கு கற்பனை செய்ய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தான், வரும் காலத்தில் மன ஆரோக்கியமான சந்ததிகள் உருவாகும்.

கதை படியுங்கள்; கதை சொல்லுங்கள்; குழந்தைகளை காது கொடுத்து கேட்கச் செய்யுங்கள்; கற்பனை செய்யப் பழக்குங்கள்; ஆரோக்கியமான சமுதாயம் உருவாக உதவுங்கள்.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

மீடியா செய்திகள்

 

(Visited 398 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon