திரு. முருகராஜ் லஷ்மணன் – ஒரு மனிதரால் எல்லோரிடமும் பாகுபாடின்றி ஒரே மாதிரி கனிவான மரியாதை கொடுத்து பேசவும், பழகவும் முடியுமா என நான் வியக்கும் மனிதநேயம் மிக்க மனிதர்.
தேவை மற்றும் எதிர்பார்ப்பு சார்ந்த உலகமாகிவரும் இன்றைய கமெர்ஷியல் உலகில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயத்துடன் பழகும் இவரது மென்மையான உயர்ந்த குணம்தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து இவர் தினமலரில் எழுதும் நிஜக்கதைகளை உள்வாங்கிக்கொள்வோர் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்வார்கள். எப்போதுமே கஷ்டப்படும் மனிதர்களின் சோகங்களை உள்வாங்கி அவர்களுக்கு ஏதேனும் ஒருவிதத்தில் வெளிச்சத்தை காட்டுவதற்கு தன் எழுத்து மற்றும் புகைப்பட திறமையை சேவையாக்கிக்கொண்டவர்.
வேலையில் சேர்ந்து கொஞ்சம் பதவி உயர்வு கிடைத்தவுடனேயே நடை உடை பாவனை அத்தனையிலும் மாற்றம் பெற்று சற்றே செருக்குடன் நடந்துகொள்ளும் இன்றைய மனிதர்களுள் 30 வருட உழைப்பையும் தன் கனிவில் கரைத்து பழகி அனைவரையும் அன்பால் ஈர்க்கும் இனிய சுபாவம் கொண்டவர்.
யார் இவர்?
தினமலரில் முதன்மை போட்டோ ஜர்னலிஸ்ட். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமலரில் பணிபுரிந்து வரும் இவர் படிப்படியாக தன் குணத்தாலும், உழைப்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.
இவர்களின் முதல் மகன் திரு. ராகவேந்திரனின் திருமணம் சமீபத்தில் பழனியில் நடைபெற்றது. பெற்றோருடன் அவசியம் வரவேண்டும் என என்னை அன்புடன் அழைத்திருந்தார்.
திருமணத்துக்கு நேரில் செல்ல முடியாத சூழல். நேற்று நேரில் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மெல்லிய தூரலுடன் கூடிய இனிய மாலைப் பொழுதில் முக்கால் மணி நேரம் அவர்கள் வீட்டில் அவருடனும், அவர் மனைவி மற்றும் புதுமணத் தம்பதிகளுடனும் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தேன்.
வீட்டுப் பொறுப்பை தன்னிடத்தே வைத்து, தன் இரு பிள்ளைகளையும் நல்ல குணநலன்களோடு வளர்த்து ஆளாக்கிய இவரது மனைவி திருமிகு. கலைச்செல்வி இவருக்கு பக்கபலம் என்பதை நேரில் சந்தித்தபோது நன்கு உணர்ந்தேன்.
என் மேடைப் பேச்சு குறித்து தினமலர் டாட் காமில் இவர் எழுதிய நேர்காணல் உலகளாவிய பெருமையை உண்டாக்கியது. தினமலரில் எத்தனையோ நேர்காணல்கள் வந்திருந்தாலும் என் மேடை பேச்சுக்கு மகுடம் சூட்டுவதுபோல் அந்த நேர்காணல் அமைந்தது. லிங்க்: http://www.dinamalar.com/news_detail.asp?id=809104
என் அம்மாவின் படிக்கும் ஆர்வத்தை உணர்ந்து, எங்கள் வீட்டில் இருக்கும் கணக்கில்லா புத்தகங்களை அறிந்து 2014 சென்னைப் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்தபோது அம்மாவை நேர்காணல் செய்து என் பெற்றோரையும் பெருமைப்படுத்தினார். தினமலர் நேர்காணலின் லிங்க்: http://w.dinamalar.com/news_detail.asp?id=903120&Print=1
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் நான் நடத்துகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு என்னை ஊக்கப்படுத்தி வருபவர்.
என் அம்மாவின் ஹார்ட் அட்டாக் குறித்து அறிந்து நேரில் வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவை சந்தித்து பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்ற நிகழ்வு எங்களுக்கு ஆறுதல் மட்டுமல்ல, புத்துணர்வையும் கொடுத்தது.
2017- எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் என்னுடன் பயணித்த, பயணித்துவரும் மனிதநேயமிக்க நல்ல உள்ளங்களை நேரில் சந்தித்திக்கும் முயற்சிக்கு இவரது மகனுடைய திருமண நிகழ்வு ஒரு காரணமாயிற்று.
‘எவ்வளவு சம்பாதித்தாலும் அதை இந்த சமுதாயத்துக்கே திரும்பச் செய்யப் போகிறீர்கள். அதற்காகவாவது நிறைய சம்பாதியுங்கள்’ என்ற இவரது வாழ்த்துச் செய்தியைப் பெற்று மனநிறைவுடன் விடைபெற்றேன்.
இன்று(ம்) ஓர் இனிய நாள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 17, 2017