‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன்

திருமிகு. கிரிஜா ராகவன்!

‘தங்கல்’ போன்ற படத்தை மென்மனம் படைத்தவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது. முடிவில் அந்தப் பெண் குஸ்தி போட்டியில் போராடப் படும்பாடு பார்த்து இதயம் ஒரு நெருக்கடிக்கு உள்ளான மாதிரி சிரமமாக இருந்தது. மிக நீண்ட க்ளைமேக்ஸ் வேற. பாடுபட்டு ஜெயிக்கணும்தான். ஆனா பாடே பெரும்பாடாகப் படக்கூடாது. எனக்கெல்லாம் இவ்வளவு போராட்டம் வந்தால் அவ்வளவுதான். முடியவே முடியாது….’ – சமீபத்தில் நான் படித்த ஒரு ஃபேஸ்புக் பதிவு.

பெரும்பாலும் ஃபேஸ்புக்கில் மற்றவர்களின் பதிவுகளை பார்த்து படிப்பதோடு சரி. கமெண்ட் செய்வதில்லை. ஆனால் இந்தப் பதிவுக்கு உள்ளுக்குள் ஏற்பட்ட உந்துததில் கமெண்ட் செய்திருந்தேன். ‘பலருக்கு வாழ்க்கை இதைவிட போராட்டமாக இருக்கிறது… சுழற்காற்றாய் சூழல் சுற்றியடிக்கும்போது அத்தனையையும் முறியடித்து மீளும் அசுர தைரியமும் கூடவே வந்து ஒட்டிக்கொள்ளும்…’

பெரும்பாலானோருக்கு வாழ்க்கை இந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட ‘தங்கல்’ படத்தின் கிளைமேக்ஸ் மாதிரிதான் இருக்கிறது. ஆனால் சோதனைகள் வரும்போது அதை ஜெயிக்கவும் மனப்பக்குவம் வந்துவிடும். அதுவும் பெண்களுக்கு அந்த மனப்பக்குவம் அதிகமாகவே இருக்கும்.

எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய வெற்றிப் பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையை சாதனைகளாக்கி வெற்றிகொண்ட தன்னம்பிக்கைப் பெண்மணியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.

யார் இந்தத் தன்னம்பிக்கைப் பெண்மணி!

இந்த பட்டத்துக்குப் பின்தான் எத்தனை முயற்சிகள், தோல்விகள், இழப்புகள், வருத்தங்கள்…. ஆனால் அவை எல்லாவற்றையும் தன் அயராத உழைப்பாலும், திறமையாலும் தன் வாழ்க்கைக்கு உரமாக்கி, தனித்து நின்று தானும் தலைநிமிர்ந்ததோடு  சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவரவர்கள்  திறமைக்கு  ஏற்ப  வாழ்க்கையில் முன்னேற ஆலோசனைகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்து மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் லேடீஸ் ஸ்பெஷல்  என்ற பத்திரிகையின் ஆசிரியர்  இவர். திருமிகு. கிரிஜா ராகவன்.

இளம் வயதில் சின்னஞ்சிறு குழந்தையுடன் கணவனை இழந்து நின்றபோது சோகங்கள் அனைத்தையும் அடிமனதில் போட்டுப் புதைத்து  ‘இனிதான் இருக்கிறது வாழ்க்கை’ என வெற்றிப் புன்னகையோடு தன் வங்கிப் பணியையும் உதறிவிட்டு தனக்குப் பிடித்த மீடியா பணியை மகிழ்வுடன் ஏற்றுகொண்டு பத்திரிகை, தொலைக்காட்சி, ஆடியோ வீடியோ என பல்வேறு நிலைகளில் பயணித்து அனைத்திலும் அனுபவமும் வெற்றியும் கண்டு இன்று ‘லேடீஸ் ஸ்பெஷல்’ என்ற பெண்களுக்கான பத்திரிகையை  திறம்பட நடத்த ஆரம்பித்து மீடியா ஜாம்பவான்களுக்கு எல்லாம் சவால்விடும்படியாக இணைப்புப் புத்தகம், ஒர்கஷாப், அறக்கட்டளைப் பணிகள் என அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டி… எழுதவே பிரமிப்பாக இருக்கிறது இவரது தனித்திறமையும் வளர்ச்சியும்.

எங்கள் காம்கேர் சாஃப்ட்வேரும், இவருடைய லேடீஸ் ஸ்பெஷலும்  இணைந்து கால மாற்றத்துக்கும் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப  பெண்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்குகளில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக ‘காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள்’ என்ற கருத்தரங்கிற்கு தமிழகமெங்கும் பல ஊர்களில் இருந்து பெண்கள் கலந்துகொண்டது பெருத்த வரவேறப்பைப் பெற்றது.

2005 –ம் ஆண்டு,  என் புகைப்படத்தை லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் அட்டையில் (Wrapper) பப்ளிஷ் செய்து  சாஃப்ட்வேர் நிறுவன CEO என்ற முறையில் என் நேர்காணலையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியவர். ஜனரஞ்சகப் பத்திரிகையின் அட்டையில் என் புகைப்படம் அதுவே முதன்முறை!

அதைத் தொடர்ந்து எத்தனையோ தொழில்நுட்பத்  தொடர்கள் மூலம் என் பங்களிப்பு. தொழில்நுட்பம் மட்டுமில்லாமல், வாழ்வியல் மற்றும்  சுயமுன்னேற்றம் குறித்து  ‘லேடீஸ் ஸ்பெஷல்’ தீபாவளி மலர்களில் என் பங்களிப்புகள் வரத் தொடங்கின. 2017-ம் ஆண்டு, என் துறையில் நான் பெற்ற அனுபவங்களை ‘பெண்களைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்ற வாழ்வியல் தொடர் மூலம் வெளிப்படுத்தக் காரணமானவர். இப்போதும் அந்தத் தொடர் வந்துகொண்டிருக்கிறது.

2016-ம் ஆண்டு, நான் அவருடன் பயணித்த நாட்களை நினைவு கூர்ந்து தன்  ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையின் 20-வது வருட சிறப்பு நிகழ்ச்சியில் ‘Best Contributor to Ladies Special’ என்ற அங்கீகாரத்தை வழங்கி என்னை கெளரவித்தவர்.

பொதிகை டிவியில் இவர்  நிகழ்ச்சித்  தயாரித்து வந்த காலகட்டத்தில் அதில் எனக்கும் தொடச்சியாக பல மாதங்கள்  கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பு அமைந்தது.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு வெப்டிவி  பிராஜெக்ட்டுக்காக நாங்கள் நேரில் சந்தித்தபோது மிகவும் சர்ப்ரைஸாக என்னைப் பற்றியும், காம்கேர் நிறுவனத்தைப் பற்றியும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டதோடு, அதை தான் நடத்திவரும் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையிலும் வெளியிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.  லிங்க்: https://www.facebook.com/photo.php?fbid=10209083767756766&set=a.1047480552681.2009505.1395705137&type=3&theater

‘அமைதி,அழுத்தம்,அசாத்திய திறமை,கலாசாரம் வழுவாத செயல்பாடுகள், வெற்றி போதை தலைகேறாத குணம், பெற்றோர் மேல் மாறாத அன்பு … என்கிற எல்லாமே சேர்ந்தது தான்  காம்கேர் புவனேஸ்வரியின் வெற்றி.

அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு, குறிப்பாக கம்ப்யூட்டர் துறையில் தொழில் தொடங்கி வெற்றி பெற நினைக்கும் பெண்களுக்கு , காம்கேர் புவனேஸ்வரி ஒரு பெரிய ரோல் மாடல்.  15 வருடங்களுக்கு மேலாக எனக்குத் தெரிந்த காம்கேர் புவனேஸ்வரியை  பற்றி நினைக்கையில் ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.  இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்கள் என்கிற ஆசி….ஆசை மனதில் ஓட அவரை வாழ்த்துகிறேன்…’

இவருடைய இந்த வாழ்த்தின் பசுமையான நினைவலைகளை தொகுத்த இன்று(ம்) ஓர் இனிய நாள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி

செப்டம்பர் 26, 2017

(Visited 201 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon