திரு. சேது நாகராஜன்!
எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய இந்த நீண்ட பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், தினமலர் நாளிதழுக்கும் எனக்கும் பாலமாகத் திகழ்ந்த இவரை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.
யார் இவர்?
என்னுடன் சேர்த்து என் குடும்பத்தையும் மதிக்கின்ற மனிதர்களை மிக உயர்வான இடத்தில் வைத்திருக்கும் என் மனோபாவத்திற்கு ஏற்ப திரு. சேது நாகராஜன் எனக்கு ஓர் உயரிய ஸ்தானத்தைக் கொடுத்து கெளரவித்தார் என்றே சொல்ல வேண்டும். அதற்கு அவர் குடும்ப நிகழ்வு ஒன்றே காரணம்.
ஜனவரி 27 2011 –ல் மதுரையில் அவர் அப்பா அம்மாவுக்கு சதாபிஷேகம் விழாவையும், ரிசப்ஷனை பிப்ரவரி 5, 2011 –ல் சென்னையிலும் ஏற்பாடு செய்திருந்தார்.
80 – ம் ஆண்டு நிறைவில் சதாபிஷேகம் கண்ட தம்பதிகள், பார்வதி –பரமேஸ்வர தம்பதிகளாக மாறிவிடுவதாகவும் அவர்களை நாம் நமஸ்கரித்து ஆசி பெற்றால் , அவர்களின் வாழ்த்து அப்படியே பலித்து நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் நான் பெறும்பேறு பெற்றேன். சென்னையில் நடைபெற்ற ரிசப்ஷனுக்கு நான் சென்றபோது அங்கு அவர்கள் குடும்ப உறவினர்கள், தினமலர் உறுப்பினர்கள், நண்பர்கள் என பலர் வந்திருந்தனர்.
திடீரென ‘என் அப்பா அம்மாவுக்கு மாலையிட காம்கேர் புவனேஸ்வரியை அழைக்கிறேன்’ என்று கணீர் குரலில் இவர் அழைப்பை விடுத்தபோது கொஞ்சம் ஆச்சர்யம், கொஞ்சம் நெகிழ்ச்சி, கொஞ்சம் படபடப்பு… இத்தனை பெரிய மனிதர்களுக்கும், உறவினர்களுக்கும் மத்தியில் சதாபிஷேக தம்பதியினருக்கு மாலையிட்டு மரியாதை செய்து வாழ்த்தைப் பெறுவதற்கு எத்தனை கொடுப்பினை வேண்டும்? அந்த உயரிய கெளரவத்தைக் கொடுத்தவர் இவர்.
1988-ல் தினமலரில் பணியில் சேர்ந்து 29 வருடங்கள் முடிந்து 30-வது வருடத் துவக்கத்தில் உள்ளார். கடின உழைப்பும் நேர்மையும் இவரை படிப்படியாக வாழ்க்கையிலும், பணியிடத்திலும் மிக உயரிய இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
ஆரம்பத்தில் இவரைப் பற்றி இவர் அலுவலகத்தில் ஒருவர் சொன்னது இன்னமும் என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. ‘தினமலருக்காகவே நேந்துவிட்டவர் போல கடுமையான உழைப்பாளி இவர்’. உண்மைதான். ஒவ்வொரு வெற்றி நிறுவனங்களுக்குப் பின்னும் இவரைப் போன்ற ஓயாத உழைப்பாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் மகனும் (முகில்), மகளும்(ரூபி) அவரவர்கள் பாதையில் அவரவர்கள் இயல்புக்கு ஏற்ப ஜொலிக்கத் தொடங்கியுள்ளனர். வாழ்க்கைக்கு கல்வியும், நல்ல பழக்க வழக்கங்களும் இருகண்கள் போன்றவை. அதை தன் பிள்ளைகளிடத்தில் அதிகமாகவே ஊட்டி வளர்க்க இவருடைய மனைவி திருமிகு. சபரி அவர்களும் உறுதுணையாக இருந்ததால்தான், தாத்தா பாட்டியின் கனிவின் நிழலில் பாதுகாப்போடு வளர்ந்து இன்று இந்த சமுதாயத்தில் தங்கள் பெற்றோரை தலைநிமிரச் செய்துகொண்டு வருகிறார்கள். Hats off to Mugil & Rubi.
நான் எழுதிய ‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஓர் அறிமுகம்’ – என்ற புத்தகத்தை 2006–ஆம் ஆண்டு ஹிக்கின்ஸ் பாதம்ஸ் புத்தக நிலையத்தில் பார்த்துவிட்டு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ‘தினமலரில் தொழில்நுட்பம் குறித்து எழுத முடியுமா… நேரம் இருக்குமா?’ என்ற போது முழுமனதுடன் உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டேன்.
அதன்பிறகு வேலூர் தினமர் எடிஷனில் தகவல் தொழில்நுட்பம் என்றாலே ‘காம்கேர் புவனேஸ்வரியை அழையுங்கள்!’ என்று சொல்லும் அளவுக்கு எனக்கான ஓர் இடத்தை தினமலரில் ஏற்படுத்திக்கொடுத்தவர். அதன் பின்னணியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதே ஹைலைட். திறமையை அது எங்கு தேவைப்படுகிறதோ அங்குகொண்டு சேர்க்கும் பணியை நேர்மையாகச் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.
தினமலர் – கம்ப்யூட்டர் மலரில் 2008-ம் ஆண்டு ‘முதல்பக்க கவர் ஸ்டோரி’-க்காக இரண்டு பக்கங்கள் எனக்காக ஒதுக்கியபோது, ஒரு நாளிதழின் முதல் இரண்டு பக்கங்கள் என் எழுத்தில் அட்டகாசமான வடிவமைப்பில் எனக்குள் இருந்த திறமைக்கு பெரிய அங்கீகாரம், தகவல் தொழில்நுட்பத்தில் நான் அறிந்துகொள்ளும் விஷயங்களை எல்லாம் இந்த சமுதாயத்துக்கு கொடுக்க ஆரம்பித்தேன்.
அதைத் தொடர்ந்து தினமலரின் இணைப்புப் பத்திரிகைகளான வாரமலர், பெண்கள் மலர் என அத்தனையிலும் தொடர்ச்சியாக காலத்துக்கு ஏற்ப தொடர் எழுத ஆரம்பித்தேன். அதில் குறிப்பாக வாரமலரில் ‘வெளிநாட்டுக் காற்று’ பகுதியில் வெளிவந்த என் அமெரிக்க அனுபவங்கள் மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. அண்மையில் பெண்கள் மலரில் நான் எழுதிவந்த ‘ஆண்ட்ராய்ட் போன் அதிசயங்கள்’ என்ற தொடர் ஸ்மார்ட் போன் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கியது.
மேலும் சின்னதும் பெரியதுமாக எத்தனை நேர்காணல்கள்! எங்கள் காம்கேர் மூலம் நாங்கள் வெளியிடும் அனிமேஷன் மற்றும் சாஃப்ட்வேர் தயாரிப்புகள் சார்ந்து என்னை நேர்காணல் செய்து தமிழகமெங்கும் உள்ள தினமலர் வாசகர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தவர்.
தவிர என் பெற்றோர் பெயரில் நான் நடத்திவரும் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் மாற்றித்திறனாளிகளுக்கான கருத்தரங்களை தினமலர் மூலம் வெளிச்சம்போட்டு காண்பித்து எங்கள் பணியில் தானும் இணைந்துகொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
‘நீங்கள் எத்தனை கொடுத்துவைத்தவர்… உங்களுக்கான பாதையில் உங்கள் விருப்பப்படி நிம்மதியான வாழ்க்கைப் பயணம்… சாதிப்பதற்கு உறுதுணையாக உங்கள் பெற்றோர்… ரொம்ப பெருமையா இருக்கு!’ என்று அடிக்கடி இவர் சொல்லிக்கொண்டே இருப்பார். இதுவே எனக்கு மாபெரும் வாழ்த்துச் செய்தியாகும்.
இந்த நினைவலைகளை தொகுத்த இன்று(ம்) ஓர் இனிய நாள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 24, 2017