Big Data தகவல் சூழ் உலகின் ‘பிக் பிரதர்’ (28-07-2017 முதல் 25-08-2017 வரை)

‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரபரப்பாக இருக்கும் நம் மக்கள் ‘பிக் டேட்டா’ குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் சூழ் உலகில் வசிக்கும் நாம் ‘பிக் டேட்டா’ தகவல் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை எனில் அதையும் ‘பிக் டேட்டா’ தன் கணக்கில் ‘டெக்னாலஜி அப்டேட் ஆகாவதர்கள்’ என்ற பட்டியல் தலைப்பில் சேகரித்து வைத்துக்கொள்ளும்.

நம் பெயர், வயது, பாலினம், குடும்பம், இருப்பிடம் இவற்றுடன் நாம் விரும்பும் விளையாட்டு, சாப்பாடு, ஆடைவகை,  நம் பொழுதுபோக்கு, நம் திறமை, நம் நண்பர்கள், விரோதிகள், நாம் ரசிக்கும் நடிகைகள்/நடிகர்கள், நமக்குப் பிடித்த பாடல் மற்றும் திரைப்படங்கள்,  நாம் அடிக்கடி செல்லும் உணவகம், தியேட்டர் என நம்மைப் பற்றி நுணுக்கமான விஷயங்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு இன்னென்ன குணாதிசயங்கள் கொண்ட நமக்கு என்ன பிசினஸ்/வேலை பொருத்தமாக இருக்கும், எப்படிப்பட்டவரை திருமணம் செய்தால் இல்வாழ்க்கை நன்றாக அமையும், என்ன கார் வாங்கலாம், எங்கு வீடு வாங்கினால் நம் இருப்பிடத்தில் இருந்து டிராஃபிக் ஜாமில் மாட்டாமல் சென்றுவர வசதியாக இருக்கும் என்பதுபோன்ற தகவல்களை கணித்துச் சொல்கிறது ‘பிக் டேட்டா’.

‘அப்போ பிக் டேட்டா ஜாதகம் கணிக்கிறதா?’ என நினைக்க வேண்டாம் ஜாதகம் கணிக்கவில்லை, தன்னிடம் உள்ளடக்கிய கணக்கில்லா தகவல்களை அலசி ஆராய்ந்து தீர்வளிக்கிறது. அவ்வளவுதான்.

உதாரணத்துக்கு ஒரு சேல்ஸ் நிறுவனத்தின் வெப்சைட்டில் ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக தேடிப் பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம். எந்த மாடல் வாங்குவது என நாம் சற்றே குழம்பி நிற்கும் வேளையில் நம் விருப்பம் அறிந்து, ‘இந்த வகை போன்கள் நிறைய விற்பனை செய்யப்பட்டுள்ளன…’ என நிறைய மாடல் போன்களை பட்டியலிடும். அடுத்து அந்த மாடல் போன்களை வாங்கிய அவர்கள் வாடிக்கையாளர்கள், வாங்கியுள்ள செல்போன் கவர், ஸ்கிரீன் புரொடக்ட்டர், பவர் பேங்க், இயர் போன், செல்போன் ஸ்பீக்கர்ஸ், மெமரி கார்ட், ஓடிஜி ஃப்ளாஷ் ட்ரைவ், புளூ டூத் போன்றவற்றை பட்டியலிடும். அடுத்து ஸ்மார்ட் போன் சம்பந்தப்பட்ட அத்தனை துணை உபகரணங்களுக்கான பிற நிறுவனங்களின் விளம்பரங்கள் பட்டியலிடப்படும்.

இவற்றை எல்லாம் மீறி நாம் எதையுமே வாங்காமல் வெப்சைட்டைவிட்டு வெளியேறிவிட்டால் இமெயிலில் அந்த பொருட்கள் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்கும். விரும்பிய சாக்லெட்டை வாங்கித்தந்தே ஆக வேண்டும் என அழிச்சாட்டியம் செய்யும் சின்னஞ்சிறு குழந்தைகளைப் போல, அவர்கள் பொருட்களை நாம் வாங்கும் வரை விடாமல் நம்மை நச்சரிக்கும். அப்படியே அந்தப் பொருளை வாங்கிவிட்டால் அந்த நிறுவனத்தின் அடுத்தகட்ட தயாரிப்பை நம் கண்முன் விரிக்கும். ஐபோன் வாங்கியிருந்தால், ஐபேடை காண்பித்து ஆசைகாட்டும். ஆண்ட்ராய்ட் போன் வாங்கியிருந்தால் டேப்லெட்டை காட்டி சுண்டி இழுக்கும். இப்படியே அவர்கள் விற்பனை சங்கிலிபோட்டு நம்மை அவர்கள் பிடிக்குள்ளேயே வைத்துக்கொள்வர்.

இப்படி ஒரு வாடிக்கையாளரின் ஆர்வத்தை பல கோணங்களில் அலசி ஆராய்ந்து விற்பனை செய்யும் சேல்ஸ் நிறுவனங்கள் பிக் டேட்டாவின் பின்னணியில்தான் இயங்குகின்றன.

‘காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்…’ என்ற கண்ணதாசன் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது. ஐபோன் வாங்கப்போய் ஐபேட் வாங்கியவர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் புத்தகங்கள் வாங்கப் போய் அவர் எழுதிய மொபைல் தொழில்நுட்பப் புத்தகங்களையும் சேர்த்து வாங்கியவர்களும் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவம். அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினருக்கு திடீரென அங்கு புகழ்பெற்று விளங்கும் டார்கெட் என்ற பல்பொருள் அங்காடியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி என அலங்காரப் பொருட்களுக்கான தள்ளுபடி கூப்பன்கள் அவர்கள் மகளுடைய இமெயிலிலும், தபாலிலும் வர ஆரம்பித்தது. அந்த தம்பதியினருக்கு ஆச்சர்யம் கலந்த கோபம். படிக்கும் வயதில் உள்ள டீன் ஏஜ் பெண் இருக்கின்ற வீட்டிற்கு இப்படி கூப்பன்கள் வந்தால் கோபம் வரதா பின்னே?

கோபமாக டார்கெட் சென்று ‘எங்கள் வீட்டில் கர்பிணிப் பெண்கள் யாருமில்லை… டீன் ஏஜில் ஒரு பெண் படித்துக்கொண்டிருக்கிறாள். எதற்காக இதுபோன்ற கூப்பன்களை எங்களுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று சத்தம் போட டார்கெட் முதலில் மன்னிப்புக் கேட்டது.

பின்னர் இமெயில், வந்து சென்ற தம்பதியினரின் வீட்டு முகவரி போன்றவற்றை வைத்து அவர்கள் வீட்டில் உள்ள டீன் ஏஜ் பெண்தான் சில நாட்களுக்கு முன் கிரெடிட் கார்ட் மூலம் ‘கர்பமாக இருப்பதை பரிசோதிக்கும் உபகரணத்தை’ வாங்கிச் சென்றுள்ளாள் என கண்டறிந்தனர். அவர்களிடம் உள்ள அனலடிக் சாஃப்ட்வேர் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் வாங்குகின்ற பொருட்களை வைத்து அவர்களின் விருப்பம், தேவை போன்றவற்றை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி வைப்பது அவர்கள் வழக்கம். கர்ப்பம் என்றால் அடுத்து என்ன குழந்தை, அதற்கான உடை, விளையாட்டு சாமான்கள், அழகுப் பொருட்கள் இப்படி வாங்க வேண்டியத் தேவை இருக்கும்தானே. அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் அவர்கள் வீட்டுக்கு குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி இருந்தார்கள். இதை அந்தப் பெற்றோருக்கு தெரிவிக்க அவர்கள் டார்கெட்டிடம் மன்னிப்புக் கேட்டனர்.

இப்படி ஒருவரிடமிருந்தோ அல்லது பலரிடம் இருந்தோ தொகுக்கப்பட்ட பல்வேறு தகவல்களை அலசி ஆராய்ந்து,  அதிலிருந்து ஒரு நூல் பிடித்து,  இது  நடந்தா ல் அடுத்தது  இதுதான் நடக்கும் என கணிப்பதோடு அதை பிசினஸாக்குவதற்கும் உதவுகிறது பிக் டேட்டா.

நாம் ஒரு சுற்றுலா செல்வதாக வைத்துக்கொள்ளலாம். அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பு. இனிய நினைவுகளுடன் வீடு திரும்புகிறோம். ஓய்வெடுக்கும்போது ஃபேஸ்புக்கைப் பார்வையிடுகிறோம். என்ன ஒரு ஆச்சர்யம்… சுற்றுலா சென்றபோது பேசிப் பழகிய நண்பர்களின் புகைப்படங்கள் ‘இவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம். நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்…’ என்று பொருள்படும் வகையில் ‘People You May Know… Add Friend’ என்ற தகவல் வெளிப்பட்டு ‘அட நாம் சந்தித்தது ஃபேஸ்புக்கிற்கு எப்படித் தெரியும்’ என ஆச்சர்யப்படுத்தும்.

பஸ், ரயில், சிக்னல் நிறுத்தத்தில் என நாம் சந்திக்கின்றவர்கள்  புகைப்படங்களும் ஃபேஸ்புக்கில் இதுபோல வெளிப்பட்டு நட்பாகிக்கொள்ளுங்கள் என ஆசைகாட்டும்.

நாம் பேசிப் பழகாதவர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவதில் ஃபேஸ்புக்குக்கு ஏன் இத்தனை ஆர்வம்? எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது.

நம் ஸ்மார்ட் போனில் பதிவு செய்துகொள்ளும் மொபைல் எண்கள் மூலமும், நம் போனில் உள்ள புளூடூத் (Blue Tooth), ஒய் ஃபை (Wi-Fi), ஜிபிஎஸ் (GPS) போன்ற தொழில்நுட்பங்கள் மூலமும் நாம் செல்லுகின்ற இடங்கள் சந்திக்கும் நபர்கள் போன்ற தகவல்கள் ஏதேனும் ஒருவடிவில் சேகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இதன் மூலம் ஏற்கெனவே நம் நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்கள் வசிக்கும் இடத்துக்குச் செல்லும்போது அங்கு எதேச்சையாக அறிமுகம் ஆகும் அவர்கள் நண்பர்கள் உறவினர்கள் போன்றோர்களையும் ‘உன் நண்பன் வசிக்கும் அதே இடத்தில் வசிக்கும் இவர்களையும் உங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்’ என பல நண்பர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக்.

தகவல்தளத்தில் உள்ள தகவல்களை நாம் எதிர்பார்க்காத கோணத்தில் ஒப்பிட்டு அலசி ஆராய்ந்து எடுத்துக்கொடுப்பதே பிக் டேட்டா கான்செப்ட்டின் அடிப்படை. ‘சிறு துரும்பும் பல்குத்த உதவும்’ என்பதைப்போல பிக் டேட்டா சிறிய விஷயத்தைக்கூட ஆராய்ந்து அறியப் பயன்படுத்தும்.

உதாரணத்துக்கு ‘எனக்கு குல்ஃபி பிடிக்கும்’ என என்றோ எப்போதோ பதிவு செய்த சிறிய விவரத்தை அடிப்படையாக வைத்து குல்ஃபி ஐஸ்கிரீமைப் பிடிக்கும் நண்பர்களை நமக்கு அறிமுகப்படுத்தும்.

இன்டர்நெட்டில் நாம் அடிக்கடி பார்வையிடும் வெப்சைட்டுகள், சமூக வலைதளங்கள், யுடியூப் வீடியோக்கள், கூகுளில் தேடும் தகவல்கள் போன்றவை அம்பலப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே யு-டியூபில் நாம் நுழைந்ததுமே நம் ஆர்வம் என்ன என்று தெரிந்துகொண்டு  ‘You May Like this Video…’  என அது தொடர்பான பல வீடியோக்களை அறிமுகப்படுத்தும். கூகுளில் நாம் ஒரு தகவலைத் தேடும்போது அதோடு தொடர்புடைய விஷயங்கள் அனைத்தையும் தேடி எடுத்துக் கொடுப்பதும் இதனாலேயே.

ஒருமுறை, ஒரு வெப்சைட்டின் பெயரை (டொமைன் நேம்) ரெஜிஸ்ட்டர் செய்வதற்காக ஒரு சர்வீஸ் புரொவைடரில் அந்தப் பெயரை வேறு யாரும் எடுக்காமல் இருக்கிறார்களா என ஒரே நாளில் காலை, மாலை, இரவு என வெவ்வேறு நேரங்களில் ஐந்தாறு முறை தேடினேன். அன்று முழுவதும் அந்த டொமைன் நேம் Available என சொன்னது.

அடுத்தநாள் தேடியபோது ‘It is Unavailable’ என்ற தகவலை கொடுத்ததோடு ‘இந்த டொமைன் பெயர் உங்களுக்குத் தேவை எனில் கட்டணமாக இவ்வளவு கட்டுங்கள்’ என்று சொல்லி கலர் எழுத்துக்களில் கண்சிமிட்டியது.

அதாவது டிமாண்ட் அதிகம் இருக்கிறது என தெரிந்துகொண்டு அந்த குறிப்பிட்ட டொமைன் பெயருக்கு விலையை ஏற்றிவிட்டிருந்தது அந்த சர்வீஸ் புரொவைடர் நிறுவனம்.

இன்டர்நெட்டில் இணைந்துள்ள நம் கம்ப்யூட்டர்/லேப்டாப்பின் ஐபி முகவரி மூலம் அந்த சர்வீஸ்புரொவைடரின் வெப்சைட்டுக்கு தகவல் கிடைக்கிறது. எந்தெந்த டொமைன் பெயர் அதிகமாக தேடப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் விலையை ஏற்றி விற்பனை செய்கிறது.

‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்பதைப்போல நாம் பயன்படுத்தும் அத்தனை இணையம் சார்ந்த எலக்ட்ரானிக் சாதனங்களிலும் ஏதேனும் ஒரு தொழில்நுட்ப விவரத்தின் மூலம் நாம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறோம்.

எங்கும் டேட்டா, எதிலும் டேட்டா. நம்மைத் தொடர்ச்சியாக கண்காணித்து வேவு பார்க்கும் வேலையை செவ்வனே செய்யும் டேட்டாவுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே!

திருட்டு, கொலை, கொல்லை இன்னபிற வன்முறைகள் நடப்பதற்கு முன்பே அவை இனம் கண்டுகொள்ளப்பட்டு அவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்படும் வகையில் ஏராளமான, பலவிதமான நம்பகத்தன்மையுள்ள தகவல்களை அதிவேகமாக ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பதிவு செய்து வைத்துக்கொண்டு தேவையானதை தேவையானபோது அலசி ஆராய்ந்து நொடிப் பொழுதில் துல்லியமான பதிலைக்கொடுக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது ‘பிக் டேட்டா’.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.  அயல்நாட்டில் வசிக்கும் ஒருவர் இந்தியாவில் வசிக்கும் தன் பெற்றோருக்கு தன் கிரெடிட் கார்டில் ‘ஆட் ஆன் கார்ட்’ வாங்கிக்கொடுத்திருந்தார். ஆனால் அவர்கள் அந்த கார்டைப் பயன்படுத்தவே இல்லை.

ஒருநாள் திடீரென அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வர மருத்துவமனைக்கு உடனடியாக ஒரு இலட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய அவசர நிர்பந்தம். அப்பா அந்த கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலித்தியிருக்கிறார். கார்டு ஸ்வைப்பாகிய அடுத்த நொடி கிரெடிட் கார்டு கம்பெனியின்  சர்வரில் இயங்கும் அனலிடிக்ஸ் சாப்ட்வேர்   ‘அட! இந்த ஆட் ஆன் கிரெடிட் கார்ட் இந்தியாவில் ஒருமுறைகூட பயன்படுத்தப்பட்டதே இல்லையே என்று  சந்தேகப்பட்டு கார்ட் ஸ்வைப்  செய்யப்பட்ட மருத்துவமனைக்கு ‘எதற்கும் கிரெடிட் கார்ட் கொண்டு வந்தவரை யார் என்ன என விசாரித்து ஏதேனும் ஓர் அடையாள அட்டை பெற்றுக்கொண்டு, கையொப்பமும் வாங்கிக் கொள்ளுங்கள்’  என்று ஒரு அலர்ட்  போன் கால் வருகிறது. மகனுடைய கார்டைப் பயன்படுத்திய அப்பாவிடமே அடையாள விவரங்களை கையொப்பமுடன் பெற்றுக்கொண்ட பின்னரே பணம் மருத்துவமனை அக்கவுண்ட்டுக்கு கிரெடிட் செய்யப்பட்டது.

இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒன்று கிரெடிட் கார்ட் மூலம் கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு அதிகம். இரண்டாவது ஆட் ஆன் கார்ட் 10 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் சாஃப்ட்வேர்  இந்த இரண்டு பாயிண்ட்டுகளை வைத்து அலசி ஆராய்ந்து கிரெடிட் கார்ட் தேய்க்கப்பட்ட இடத்துக்கு அவசர எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்கிறது.

பெற்ற மகன் வாங்கிகொடுத்த ஆட் ஆன் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த தந்தையே அடையாள புரூஃப் காண்பிக்க வேண்டுமா என உங்களில் யாரேனும் யோசிக்கிறீர்களா? சாஃப்ட்வேருக்கு பெற்ற தந்தையும் ஒன்றுதான், திருடனும் ஒன்றுதான். ஒருகணம் யோசியுங்கள். நம் கிரெடிட் கார்ட் தொலைந்துவிடுகிறது. அதை எடுத்தவர்கள் அதைப் பயன்படுத்தி கடையில் பெரிய தொகைக் கொடுத்து பொருட்கள் வாங்க முற்படும்போது, ‘அட இந்தக் கார்ட் இதுநாள் வரை இத்தனை பெரிய தொகை மூலம் எந்தப் பொருளையும் வாங்கியதில்லையே’ என கிரெடிட் கார்ட் நிறுவனத்தின் அனலிடிக்ஸ் சாஃப்ட்வேர்  அலர்ட் ஆகி அந்த கார்ட் தேய்க்கப்பட்ட இடத்தைத் தொடர்புகொண்டு செய்தி சொல்லும். அவர்கள் கார்டை தேய்ப்பவர்களிடம் புரூஃப் வாங்கி ஒப்பிடும்போது அவர்கள் பிடிபடுகிறார்கள்.

இதுதான் ‘பிக் டேட்டா’ கான்செப்ட். வெறும் டேட்டாவை சேமித்து வைத்துக்கொள்வது மட்டும் அதன் பணி அல்ல. உதாரணத்துக்கு நாம் எடுத்துக்கொண்ட கிரெடிட் கார்ட் விஷயத்தில் கவனியுங்கள். கிரெடிட் கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர் பெயர், முகவரி, அடையாள விவரங்கள், அவர்கள் பணி தொடர்பான தகவல்களை மட்டும் சேமித்து வைத்திருப்பதில்லை. அவை எப்போதெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன. எங்கு, எந்த மாதியான கடை ஓட்டல் தியேட்டர் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன என்பதுபோன்ற நுணுக்கமான விஷயங்களையும் சேமித்து அதனடிப்படையில் அந்த கார்ட் தவறாக பயன்படுத்தப்படும்போது கண்காணித்து தவறு ஏதும் நடக்காமல் தடுக்கிறது.

மாதம் இருமுறை சரவண பவனில் சாப்பிட்டு கிரெடிட் கார்ட் தேய்க்கும் வழக்கமுள்ளவர் திடீரென் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் 10 நபர்களுடன் சாப்பிட்டு கார்டை தேய்த்தால் ‘பிக் டேட்டா’ விழித்துக்கொள்ளும். அனலிடிக்ஸ் சாஃப்ட்வேர்  அலர்ட் ஆகி கார்டை பயன்படுத்துபவர் சரியான நபராகவே இருந்தாலும் சரி பார்க்கக் கிளம்பிவிடும். நல்லதுதானே. ‘நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்ற நேர்மையான அணுகுமுறையை நாம் ஆதரித்தால்தான் குற்றங்கள் குறையும்.

இஷ்டப்பட்டு அம்பலப்படுத்தும் அந்தரங்கங்கள்

தகவல்களில் தனிநபர் தகவல்கள், நிறுவனம் மற்றும் அமைப்பு சார்ந்த தகவல்கள் என்ற பேதமெல்லாம் கிடையாது. உதாரணத்துக்கு, கோயில் எத்தனை மணிக்கு திறக்கப்படுகிறது, எத்தனை மணிக்கு அபிஷேக ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பிக்கிறது, என்னென்ன பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன, எத்தனை ரூபாய் உண்டியலில் போடப்படுகிறது, கோயிலுக்குள் செல்லும் நபர்களின் எண்ணிக்கை என்று அமைப்பு சார்ந்த தகவல்கள் முதற்கொண்டு அங்குள்ள குளத்தில் எத்தனை பேர் குளித்தார்கள், எத்தனைபேர் காலை மட்டும் நனைத்தார்கள், எத்தனை பேர் செல்ஃபி எடுத்தார்கள் என்பதுபோன்ற தகவல்களையும் பதிவாக்கி வைத்துக்கொள்ளும்.

தவிர ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கில் நாமாகவே வலிய பதிவு செய்யும் தகவல்களின் அடிப்படையில் நாம் அந்தக் கோயிலுக்குச் சென்ற தேதி, கிழமை உட்பட யாருடன் சென்றோம், எங்கு தங்கினோம், எந்த ஓட்டலில் சாப்பிட்டோம் என்ற தனிநபர் தகவல்களும் சேகரிக்கப்பட்டு தகவல் சூழ் உலகில் நம் அந்தரங்கங்களை நாமே டிஜிட்டல் தடயமாக விட்டுச் செல்கிறோம்.

நான் எழுதுகின்ற புத்தகங்களை வாசித்து வாசகர்களிடம் இருந்து சந்தேகங்கள் கேட்டு நிறைய போன்கால்கள் வரும். அப்படி ஒரு வாசகர் கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

‘மேடம், போனில் நாம் பேசும்போது எதிர் முனையில் இருப்பவருக்குத் தெரியாமல் நாம் அந்த காலை ரெகார்ட் செய்ய முடியுமா… அப்படியென்றால் எப்படி செய்ய வேண்டும்?’ – இதுதான் அந்தக் கேள்வி.

‘முடியாது’ – என்றேன் சற்றே கோபத்துடன்.

‘ரெகார்ட் செய்ய முடியாதா…. நன் நண்பன் சொன்னான் ரெகார்ட் செய்ய முடியும் என்று…’

‘சார்…. நான் முடியாது என்று சொன்னது என்னால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்ற நோக்கத்தில்… தகவல் தொழில்நுட்பத்தை சரியான பாதைக்குப் பயன்படுத்தவே நான் எழுதி வருகிறேன்… இதுபோல பிறர் அந்தரங்ககளை பதிவு செய்து தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்த என்னால் சொல்லித்தர முடியாது….’ என அழுத்தமான பதில் சொல்லி போனை வைத்தேன்.

இப்போதெல்லாம் என்ன நடக்கிறது தெரியுமா? காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருத்தேன்… எப்போது என்ன டிபன் யாருடன் சாப்பிட்டேன்… மனைவியுடன்/கணவனுடன் ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகள்… பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… என அத்தனை பர்சனல் விவரங்களையும் புகைப்படத்துடன் மட்டுமில்லாமல் ஆடியோ, வீடியோவுடன் தங்கள் அந்தரங்கங்களை தாங்களே அம்பலப்படுத்தும் அவலமும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

மேலும், தங்கள் எண்ணங்களையும், விருப்பு வெறுப்புகளையும் எழுத்து வடிவில் எந்த வடிகட்டலும் இல்லாமல் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அப்படியே குப்பையாய் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தவிர பதிவாக்கும் புகைப்படங்கள், ஆடியோ வீடியோக்களை எடிட் செய்து விருப்பம்போல மாற்றத் தேவையான எடிட்டிங் ஆப்களும் தயாரிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஒருவர் தாஜ்மகாலுக்கே செல்லாமல் அவருடைய நண்பருடன்/தோழியுடன் அங்கு சென்று உல்லாசமாக இருப்பதைப்போல வீடியோ தயாரிக்கும் அளவுக்கு எடிட்டிங் ஆப்கள் வலுவாக உள்ளன.

தொழில்நுட்பங்களும் மீடியாக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களின் ஆர்வத்தைத்தான் பணமாக்கின்றன. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நமக்கு என்ன தேவை என்பதில் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நம்மை வைத்து பிறர் மறைமுகமாக பணம் சம்பாதிக்க அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா என்பதையும் நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இப்படியாக ஒருவரது உருவம், குரல் உட்பட அவர்களின் விருப்பு வெறுப்புகள், குணாதிசயங்கள் அத்தனையும் இஷ்டப்பட்டு இலவசமாக இணைய உலகில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இவை தவிர ஏராளமான ஆப்கள் சென்ற பிறவியில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள், அடுத்தப் பிறவியில் எங்கு பிறக்க இருக்கிறீர்கள், உங்களை மறைமுகமாக நேசிக்கும் உங்கள் நண்பரை அறிய வேண்டுமா என பல்வேறு ஆசை வார்த்தைகள் மூலம் தூண்டில் போட்டு உங்களை அவர்கள் ஆப்களை பயன்படுத்த சுண்டி இழுக்கும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையும்போது ‘சமூக வலைதளத்தில் நீங்கள் பதிவு செய்துள்ள உங்கள் பர்சனல் தகவல்களை பயன்படுத்துகிறோம்’ என்ற ஒரு எச்சரிக்கை தகவலை வெளிப்படுத்தும். நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஓகே என சொல்லி உள்ளே நுழையும்போது நம் பர்சனல் தகவல்களை நம்மை அறியாமலேயே அவர்களுக்குத் தாரை வார்த்துக்கொடுக்கிறோம்.

இப்படி நாம் அறிந்தோ அறியாமலேயோ நம்மைப் பற்றிய தகவல்களை இணையத்தில் பரவலாக அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஏற்கனவே தகவல் தாகத்துடன் அலைந்துகொண்டிருக்கும் பிக் டேட்டாவுக்கு இவை போதாதா? கரும்புத் தின்ன கூலி வேறு வேண்டுமா?  ‘கொண்டா கொண்டா’ என அத்தனையையும் தன்னுள் அதிவேகமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி உள்ளே ஏற்றிக்கொள்ளும். பின்னர் தேவைப்படும்போது ‘இந்தா பிடி’ என எடுத்துக்கொடுக்கும்.

டேட்டா, டேட்டா பேஸ், டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர்

பிக் டேட்டாவுக்குள் செல்லும் முன் டேட்டா (Data), டேட்டா பேஸ் (Data Base), டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர் (Data Base Managemnet Software) குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

டேட்டா என்பதை தகவல்(கள்) எனலாம். உதாரணத்துக்கு ரம்யா என்ற மாணவியின் பெயர் தகவலின் ஒரு பகுதி. ரம்யா என்ற மாணவியின் பெயருடன், அவருக்கான கல்லூரி அடையாள எண், அவருடைய வயது, பாலினம், முகவரி, படிக்கும் கல்லூரி, படித்துவரும் பாடப்பிரிவு இதுபோன்ற தகவல்கள் சேர்ந்ததே முழுமையான டேட்டா.

டேட்டா பேஸ் என்பதை தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளும் தளம் எனலாம். அதாவது, பலதரப்பட்ட தகவல்களை எளிதாக கையாளும் வகையிலும், சுலபமாக பராமரித்து அப்டேட் செய்யும்படியாகவும், முறையாக சேகரித்து வைத்துக்கொள்ளும் விதத்திலும் செயல்படும் தகவல்தளம் எனலாம்.

உதாரணத்துக்கு, ரம்யா என்ற மாணவியின் தகவல்களை முறையாக சேகரித்ததைப் போல அந்தக் கல்லூரியில் படிக்கும் அத்தனை மாணவ மாணவிகளின் தகவல்களையும் முழுமையாக முறையாக சேகரித்து வைத்திருந்தால் மட்டுமே முழுமையான தகவல்தளமாக செயல்படும். மாணவ மாணவிகளின் கல்லூரி அடையாள எண்ணை வைத்து தகவல்களை தேடுவது சுலபமாக இருக்கும். மாற்றங்கள் செய்து அப்டேட் செய்வதும் தவறில்லாமல் நடைபெறும்.

ஆக, முறையாக சேகரிக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கியதே தகவல்தளம்.

முறையாக சேகரிக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய தகவல்தளத்தை கையாள்வதற்கு உதவுகின்ற தொழில்நுட்பத்துக்கு தகவல்தள பராமரிப்பு (Data Base Management System) என்று பெயர். அதற்கு பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்கள் தகவல்தள பராமரிப்பு சாஃப்ட்வேர்கள் (Data Base Management System Software) என்று அழைக்கப்படுகின்றன.

டிபேஸ் (dBASE), ஃபாக்ஸ்பேஸ் (FoxBase), ஃபாக்ஸ்ப்ரோ (FoxPro), கிளிப்பர் (Clipper) என அடிப்படை சாஃப்ட்வேரில் இருந்து தொடங்கி எம்.எஸ்.அக்ஸஸ் (MSACCESS), ஆரக்கிள் (ORACLE), எஸ்.கியூ.எல் (SQL), மை எஸ்.கியூ.எல் (MYSQL), டிபி2 (DB2) என பல்வேறு காலகட்டங்களில் பலதரப்பட்ட டேட்டா பேஸ் சாஃப்ட்வேர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இப்போதும் ஆரக்கிள், எஸ்.கியூ.எல், மை எஸ்.கியூ.எல் போன்ற சாஃப்ட்வேர்கள் பயன்பாட்டில் உள்ளன. இன்னும் ஒருசில இடங்களில் எம்.எஸ்.அக்ஸஸ்கூட பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவை தகவல்களை குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த உதவி செய்கின்றன.

தற்சமயம் ஹடூப் (Hadoop), நோ எஸ்.கியூ.எல் (NoSQL), எம்.பி.பி (Massively Parallel Processing-MPP), மங்கோடிபி (MongoDB) போன்றவை பரவலாக பரபரப்பான பயன்பாட்டில் உள்ளன.   பிக்டேட்டாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களும் இவற்றில் உள்ளன.

இவை தகவல்களை பல்வேறு கோணங்களில் அதிவேகத்தில் துல்லியமாக அலசி ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு மட்டும் அல்லாமல் பல்வேறு பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தும் வகையில் செயல்படுகின்றன.

நம்பகத்தன்மையுடன் கூடிய அதிகமான தகவல்கள், அதிகமான வேகம், பலதரப்பட்ட பல்வேறு பிரிவுகளில் தகவல்கள் – இவைதான் பிக் டேடாவின் சிறப்பு.

பிக் டேட்டா என்றால் என்ன?

பிக் டேட்டா என்ற தலைப்பை வைத்து, நிறைய தகவல்கள் கொட்டிக்கிடந்தால் மட்டுமே அதை நாம் பிக் டேட்டா என்று சொல்லிவிட முடியாது.

இந்தியாவில் வசிக்கும் மக்கள் அத்தனை பேரையும் டேட்டா பேஸில் பதிவு செய்துவிட்டால் அது பிக் டேட்டா அல்ல. தினமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்துசெல்லும் மிகப்பெரிய மாலில் உள்ள ஸ்கேனர் எண்ணிக் கொடுக்கும் அன்றைய தினம் மாலுக்குள் சென்று திரும்பியவர்கள் எண்ணிக்கை பிக் டேட்டாவாகிவிடாது. ரயில் நிலையம், ஏர்போர்ட் போன்ற இடங்களில் தினந்தோறும் குவியும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவும் பிக் டேட்டாவில் வராது.

கருப்புக் கோட் போட்ட அத்தனை பேரும் வக்கீலும் அல்ல, வெள்ளை கோட் போட்டவர் அனைவரும் டாக்டரும் அல்ல என்பதைப்போல நிறைய தகவல்கள் சேகரித்து வைக்கும் டேட்டா பேஸ் எல்லாமே பிக் டேட்டாவாகிவிடாது. அதற்கென முக்கியமான சிறப்பம்சங்களும், செயல்பாடுகளும் உள்ளன.

பிக் டேட்டாவின் சிறப்பம்சங்கள்

அதிக அளவில் தகவல்களை  தேடித்தேடி உருவாக்குதல், சேமித்தல், தேவையானதைத் தேடி எடுத்துப் பயன்படுத்துதல், அலசி ஆராய்தல் போன்றவற்றின் அடிப்படையில் பிக் டேட்டாவின் சிறப்பம்சங்களாக கீழ்காண்பவற்றைச் சொல்லலாம்.

  1. அதிகமான பதிவுகள் (Volume)
  2. அதிவேகமான பதிவுகள் (Velocity)
  3. பலவிதமான பதிவுகள் (Variety)
  4. உண்மையான பயனுள்ள பதிவுகள் (Veracity)

இந்த நான்கு சிறப்பம்சங்களைக் கொண்ட பிக் டேட்டாவை பிசினஸ் பயன்பாடுகளுக்குக் கொண்டு வருவதற்கு வேல்யூ (Value) என்ற சிறப்பம்சமும் அவசியமாகிறது.

மேலே குறிப்பிட்ட நான்கு  சிறப்பம்சங்களைக் கொண்ட பிக்டேட்டாவை வைத்துக்கொண்டு  பிசினஸின் மதிப்பை எப்படி அதிகரிக்க முடியும் என்பதில்தான் சூட்சுமமே அடங்கியுள்ளது. பிக் டேட்டாவில் பதியும் தகவல்களை தொழிலுக்கும், தனி மனிதனுக்கும் உபயோகப்படுமளவிற்கு மாற்ற உதவுவதுதான் அனலிடிக் எனப்படும் ஆராய்ந்தறியும் ஆய்வு. அதாவது வெவ்வேறு கோணங்களில் சேகரித்த தகவல்களை வித்தியாசமான பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து தீர்வைக் கொடுக்கிறது பிக் டேட்டா.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன கிரெடிட் கார்ட் உதாரணத்தில் இந்தியாவில் உள்ள கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரின் பெயர், பாலினம், வயது, வேலை போன்ற விவரங்களை சேமித்து வைத்திருந்தால் மட்டுமே அது பிக் டேட்டாவாகிவிடாது. அதுவும் பிக் டேட்டாவின் ஒரு சிறப்பம்சம் அவ்வளவுதான்.

அந்தக் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கடைசியாக எந்த உணவகத்தில் என்ன உணவு சாப்பிட்டார்கள், கடைசியாக எந்த துணிக்கடையில் என்ன உடை வாங்கினார்கள், எந்த ஊரில் எந்த தியேட்டரில் என்ன சினிமா பார்த்தார்கள், மருத்துவமனை செலவுக்கு பயன்படுத்தி இருக்கிறார்களா, அப்படி என்றால் எந்த ஊரில் எந்த இடத்தில் உள்ள மருத்துவமனை என்பது போன்ற தகவல்களை பதிவு செய்து வைத்திருத்தலும் பிக் டேட்டாவின் சிறப்பம்சங்களை சற்றே உள்ளடக்கியது எனலாம்.

அதை அவர்கள் எந்தெந்த இடங்களில் பயன்படுத்துகிறார்கள். எந்தெந்த கால இடைவெளியில் பயன்படுத்துகிறார்கள், தோராயமாக எவ்வளவு செலவு செய்கிறார்கள், அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் அதேவகை கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறார்களா, அப்படியெனில் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள், ஏன் கடந்த சில மாதங்களாக பயன்படுத்தவில்லை என்பது போன்ற தகவல்களை பதிவு செய்து வைத்திருத்தல் பிக் டேட்டாவின் மற்றுமொரு சிறப்பம்சம்.

இப்படி பதிவு செய்கின்ற தகவல்களினால் ஏதேனும் ஒரு முக்கிய உபயோகமும் இருக்கவேண்டும்.   பிறந்தபோது யார் முதலில் தூக்கினார்கள், முதலில் பார்த்த சினிமா தியேட்டரின் பெயர் என்ன, முதல் காதல், காதல் தோல்வியடைந்த வருடம், பிடித்த ஆசிரியர், முதலில் பார்த்த மரணம் என  தேவையில்லாத தகவல்களை  டேட்டா என்ற பெயரில் பெருமளவில் சேமித்து வைத்திருந்தால்  பிக் டேட்டாவாகாது.

கிரெடிட் கார்ட் நிறுவனம் பயன்படுத்தும் அனலிடிக் சாஃப்ட்வேர் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்ட் தவறாகப் பயன்படுத்தப்படும்போது அவர்களுக்கு அலர்ட் செய்து உதவி செய்யுமேயானால் அதுதான் பிக் டேட்டாவின் உண்மையான பயன்.

கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களின் பெயர் முகவரி வயது மற்றும் அவர்களது மாதந்திர பில்லிங் தொகை போன்ற விவரங்களை மட்டும் பதிவு செய்து வைத்துக்கொண்டு செயல்படுமேயானால் அது சாதாரண டேட்டாபேஸ் செய்யும் வேலை.

இப்படி வெறுமனே வாடிக்கையாளர்களின் செலவுகளை மட்டும் கணக்கு வைத்து பில் அனுப்பி பணத்தை வசூலிக்கும் வட்டிக்கடைப்போல  செயல்படாமல் பல்வேறு அனலிடிக்ஸ்களை கிரெடிட்கார்டு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

எப்போதும் இல்லாத அளவில் அடிக்கடி நகைகள் வாங்க ஒருவரது கிரெடிட் கார்ட் உபயோகிக்கப்படுத்தப்பட்டால் இவர் பணம் கட்டாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கிரெடிட்கார்ட் நிறுவனம் அனலிடிக்ஸ் மூலம் புரிந்துகொண்டு செயல்படமுடியும். வாடிக்கையாளருக்கு அலர்ட் மெசேஜ் கொடுத்து கண்காணிக்க முடியும். தேவைப்பட்டால் அந்த நகைக்கடைக்காரருக்கும் அலர்ட் மெசேஜ் கொடுத்து வாடிக்கையாளரை கண்காணிக்க முடியும். இதற்கு உதவுவதே பிக் டேட்டா.

பிக் சல்யூட் to பிக் டேட்டா!

சுருங்கச் சொன்னால் தன் குழந்தைகளை பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பி விட்டு நோட்டு புத்தகம் வாங்கிக்கொடுப்பதும், கட்டணம் செலுத்துவதும் மட்டுமே நம் கடமை என்று செயல்பட்டால் அந்தப் பெற்றோர்களை சாதாரண டேட்டா பேஸ் சாஃப்ட்வேர்களோடு ஒப்பிடலாம். இந்த வகை பெற்றோர்கள் பெற்ற கடமைக்கு படிக்க வைக்கும் வகையில் அடங்குவர்.

மேலே சொன்னவற்றையும் தாண்டி தன் பிள்ளைகளின் நெருங்கிய நண்பர்களின் பெயர் மற்றும் அவர்களின் பெற்றோர் பற்றிய தகவல்கள், ஆசிரியர்கள், விரோதியாக எண்ணி செயல்படும் நட்புகள் குறித்த விழுப்புணர்வு, தன் பிள்ளைகளுக்கு எந்த சப்ஜெட்டில் ஆர்வம் உள்ளது, அதை எப்படி மேம்படுத்தலாம், அதற்கான போட்டிகளில் எப்படி கலந்துகொள்ளச் செய்யலாம் என்பது போன்ற தகவல்களை தெரிந்து வைத்திருப்பதோடு அவர்கள் நண்பர்களை மட்டுமல்லாது விரோத மனப்பான்மையோடு செயல்படும் நண்பர்களையும் அவ்வப்பொழுது வீட்டுக்கு அழைத்து பேசி அவர்களுக்குள் ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்துவதும், அடிக்கடி ஆசிரியர்களை சந்தித்துப் பேசி பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள், படிப்பு, குணநலன்கள் போன்றவற்றை அறிந்துகொள்வதும் அவசியம்.

மேலும் சாதாரணமாக அதிக மதிப்பெண் பெறும் பிள்ளைகள் மதிப்பெண் குறைந்தாலோ அல்லது அடிக்கடி சிடுசிடுத்தாலோ அல்லது பேச்சைக் குறைத்தாலோ அல்லது இரவில் வெகுநேரம் தூங்காமல் தவித்தாலோ அவர்களுக்குள் என்ன மாற்றம் ஏற்படுள்ளது ஏன் இப்படி செய்கிறார்கள் எப்படி அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டு வருவது என ஆராய்ந்து அறிய வேண்டும்.

மேக் அப்பில் அதிக ஆர்வமில்லாத பிள்ளைகள் மேக் அப்பில் அதிக கவனம் செலுத்தினாலோ அல்லது தொடர்ச்சியாக போனில் பேசிக்கொண்டும், வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றத்தில் இருந்தாலோ அல்லது  சாப்பாடு குறைந்தாலோ பிள்ளைகள் காதல் போன்ற செயலில் ஈடுபடுகிறார்களோ என பெற்றோர் அலர்ட் ஆகி கொஞ்சம் கவனமாக கண்காணித்து திருத்த வேண்டும்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு, பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படை கடமையோடு அவர்களை நல்ல குணநலன்களோடு திறமைசாலிகளாக புத்திசாலிகளாக வளர்ப்பதோடு அவர்களிடம் ஏற்படும் சிற்சில மாற்றங்களையும் கவனித்து தேவைப்பட்டால் அலர்ட் செய்து கொஞ்சமாக கண்டித்தும் தேவைப்பட்டால் மன்னித்தும் பிள்ளைகளை வளர்ப்பவர்கள் ‘பிக் டேட்டா’ போல செயல்படும் பெற்றோர்கள். இவர்கள் நல்ல அனலிடிகல் திறன் பெற்ற பெற்றோர்கள். பல்வேறு கோணங்களில் சிந்தித்து பிள்ளைகளின் வாழ்க்கைப் பாதையை சீரமைக்க வல்லவர்கள்.

சாதாரண டேட்டா பேஸ்கள் தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளும். தேவைப்பட்டால் தேவைப்பட்ட தகவல்களை தேடி எடுத்து பயன்படுத்த உதவி செய்யும்.

பிக் டேட்டா என்பது அனலிடிகல் தன்மை வாய்ந்தது. தன்னிடம் குவித்து வைத்துள்ள தகவல்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக அதி வேகமாக அலசி ஆராய்ந்து, தேவைப்படும் தகவல்களை மட்டுமில்லாமல், தேவைப்படாமலேயே  சரியான நேரத்தில் தானாகவே தகவல்களை எடுத்துக் கொடுக்கும் அதி புத்திசாலி டேட்டா பேஸ்.

இதற்காகவே ஹடூப், நோ எஸ்.கியூ.எல், எம்.பி.பி , மங்கோடிபி  போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதோடு அதில் என்னதான் நடக்கிறது என தெரிந்துகொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட.

பிக் சல்யூட் to பிக் டேட்டா!

-காம்கேர் கே.புவனேஸ்வரி
25-08-2017

(Visited 293 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon