இதுபோன்ற ஒரு ஆகஸ்ட் மாதத்தில்தான் 2003-ம் ஆண்டு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துக்காக தொடங்கப்பட்ட ஒரு மாத இதழுக்கு எடிட்டராகவும், அதற்குத் தேவையான அனிமேஷன் சிடி தயாரித்து வெளியிடும் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன்.
‘டிஜிட்டல் ஹைவே’– என்ற கம்ப்யூட்டர் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து, அந்தந்த இதழுக்குப் பொருத்தமான ‘மல்டிமீடியா சிடி’வடிவமைத்துத் தரும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன், 2003-ம் ஆண்டில் இருந்து சில வருடங்கள்…
அந்த பத்திரிகையின் அச்சு பிரதி மற்றும் டிஜிட்டல் பிரதி தயாரிப்புகள் இரண்டுமே காம்கேரின் பணிகளுள் ஒன்றாக நடைபெற்று வந்தது.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்கவே யோசித்துக்கொண்டிருந்த 1992-ல் காம்கேர் நிறுவனத்தை தொடங்கி, சாஃப்ட்வேர் தயாரிக்கும் பணியை முதன்மைப் பணியாகக்கொண்டு செயல்படத் தொடங்கிய நிறுவனத்தின் வாயிலாக எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அத்தனையையும் எழுத்து, புத்தகம், பேச்சு, சாஃப்ட்வேர், அனிமேஷன், இணையம், பயிற்சி, ஆப்ஸ் என எல்லா கோணங்களிலும் தொழில்நுட்பத்தை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றதில் பெரும்பங்கேற்றுள்ளேன்…
இடையில், தொழில்நுட்பத்துக்காகவே ஒரு மாத இதழை மதுரையில் இருந்து ஒரு பப்ளிஷர் வெளியிட அதன் ஆசிரியராக தலைமையேற்க என்னை தொடர்புகொள்ள, அதன் அச்சு மற்றும் டிஜிட்டல் பிரதி இரண்டுமே காம்கேரில் வடிவமைக்கப்பட்டன.
முகப்பு அட்டையில் இருந்து பின்பக்க அட்டை வரை ஒவ்வொரு பக்கமும், என் கண்காணிப்பில் என் கண் முன்னே தயார் செய்யப்பட்ட அனுபவம் அப்பப்பா வித்தியாசமானது.
பளபள காகிதத்தில் பக்கத்துப் பக்கம் வண்ணமயமான வடிவமைப்பில் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு இணையாக வெளிவந்த அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அனுபவம் கொடுத்த தன்னம்பிகையும், தைரியமும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
இதையெல்லாம் இப்போது எதற்குச் சொல்கிறேன்? காரணம் இல்லாமல் இல்லை.
டாக்டர் வ.ஜெயதேவன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் குறித்த இனிய நினைவலை…
ஆகஸ்ட் 2003 – டிஜிட்டல் ஹைவே பத்திரிகையின் முதல் மாத இதழ். இதில் வாழ்த்துரைக்காக, அப்போது சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இயங்கிவந்த டாக்டர் வ. ஜெயதேவன் அவர்களை அணுகினேன்.
தொழில்நுட்பத்துக்காக தமிழில் ஒரு பத்திரிகை தொடங்கப் போகிறோம் என்றவுடனேயே உடனடியாக வாழ்த்துச் சொல்லி, வாழ்த்துரையும் அனுப்பிவைத்த அவர் பண்பை மறக்க முடியாது.
அந்த காலகட்டத்தில் தமிழில் 30 தொழில்நுட்பப் புத்தகங்கள்வரை எழுதி இருந்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்காகவும் பேராசிரியர்களுக்காகவும் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகப் பேச அழைக்கப்பட்டிருக்கிறேன். மேலும், என்னுடைய சில புத்தகங்கள் சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சில கல்லூரிகளில் பாடதிட்டமாக வைக்கப்பட்டன.
தமிழின் மீதான அளவற்ற பற்றிலும், தொழில்நுட்பத்தின் மீதான எல்லையற்ற நம்பிக்கையிலும், இளைஞர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் பண்பிலும் உயர்ந்தவராக இருந்ததால் மட்டுமே என் முயற்சிகளுக்கு இவரால் ஊக்கமளிக்க முடிந்தது…
பிறந்தநாள் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்!
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஆகஸ்ட் 19, 2018