அமிழ்தம்/சிருஷ்டி மின்னிதழில் என் நேர்காணலை படித்துவிட்டு அதன் தொடர்ச்சியாக நேற்று வந்த ஒரு இமெயில் என் உழைப்புக்கான பரிசாக அமைந்திருந்தது.
‘அமிழ்தம் / சிருஷ்டி மின்னிதழில் தங்கள் பேட்டி படித்தேன்.
தங்களைப் பற்றியும் உங்கள் பேருழைப்பையும் அறிந்து வியக்கிறேன்.
உங்கள் கட்டுரைகளையும் நூல்களையும் தமிழில் படித்து மட்டுமே கணிணித்
துறையில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டேன்….’ இப்படி ஆரம்பித்து ‘தங்களின் மாபெரும் பணிகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துகள்!’ என
வாழ்த்தில் முடித்திருந்தது அந்த இமெயில்.
அந்த இமெயிலை அனுப்பியவர் ஸ்ரீனி என்று அழைக்கப்படும் திரு. T.ஸ்ரீனிவாசன். இவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு தொழில்நுட்ப கருத்தரங்கில் சந்தித்திருக்கிறேன்.
உடனடியாக போனில் தொடர்புகொண்டு வாழ்த்தி இமெயில் அனுப்பியமைக்கு நன்றி சொன்னேன். ‘உங்கள் கம்ப்யூட்டர் கட்டுரைகளையும், புத்தகங்களையும் படித்துத்தான் நான் சாஃப்ட்வேர் துறைக்கு வர வேண்டும் என விரும்பினேன்… நீங்கள் பத்திரிகைகளில் எழுதிய பல தொழில்நுட்ப கட்டுரைகளையும், வெளியிட்டுள்ள புத்தகங்களையும் படித்திருக்கிறேன், ஆனால், உங்களைப் பற்றி இப்போதுதான் படிக்கிறேன்’ என மனதார நெகிழ்ச்சியுடன் தன் அன்பை வெளிப்படுத்தினார்.
மேலும், ‘நாங்கள் பராமரித்து வரும் தொழில்நுட்ப வெப்சைட்டுகள் அனைத்தும் உங்கள் முயற்சிகளுக்கு என்னால் ஆன கூடுதல் பங்களிப்புகளே…’ என அவரது உழைப்புக்கு என் உழைப்பை அஸ்திவாரம் ஆக்கினார்.
இந்தப் பரந்த மனப்பான்மையும், குழுவாக இயங்கும் தன்மையும், தான் மட்டும் வளராமல் தன்னைச் சார்ந்தவர்களையும் அவரவர் திறமைக்கு ஏற்ப தன் பணிகளுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் குணமே இவரது வெற்றிக்குக் காரணம்.
இவர்…
14 வருடங்களாக ஐடி துறையில் பணிபுரிகிறார்.
கணியம் (http://www.kaniyam.com) என்ற கம்ப்யூட்டர் மின்னிதழை 2012 –ம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார்.
http://freetamilebooks.com என்ற வெப்சைட்டை 2013-ம் ஆண்டில் இருந்து பராமரித்து வருகிறார். இது முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வெப்சைட். இதன் ஒரே நோக்கம் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனார்களுக்கு வழங்குவதும்.
தவிர, நம் அனைவரையும் வியக்க வைக்கும் மற்றுமொரு சிறப்பு இவரிடம் உண்டு. இவர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை. அதனால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், மெசன்ஞர் என்ற தொந்திரவுக்குள் சிக்குவதில்லை. ஃபேஸ்புக் அக்கவுண்டே வைத்தில்லை என்பது மற்றொரு ஆச்சர்யமான விஷயம். நிறைய புத்தகங்கள் படிப்பது, மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்வது, மனைவி, குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிடுவது என வாழ்க்கையை சொர்கமாக கொண்டாடி மகிழ்கிறார்.
இன்றைய இளைஞர்களுக்கு இவர் ஒரு ஆகச் சிறந்த ரோல்மாடல்.
இவரது அத்தனை முயற்சிகளும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஜூலை 20, 2018