#கதை: செய்யும் தொழிலே தெய்வம்… பிள்ளையார் சுழி போட்ட கோகுலம்! (பிப்ரவரி 1982)

கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம் இதழ்தான்.

1982 – ஆம் ஆண்டு கோகுலத்தில் வெளியான நான் எழுதிய  ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சிறுகதையே பிரசுரத்துக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் முதல் கதை. அப்போது என் வயது 12.

அப்போது கோகுலத்தின் விலை ரூபாய் 2.  ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

அந்தக் கதை வெளியான பிருந்தாவனக் கதையரங்கம் பகுதியையும், சிறுவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எழுத்தாளர் எண்ணையும் (4633), கதைக்கு நான் வைத்த தலைப்பை மாற்றாமல் அப்படியே பிரசுரம் செய்த எடிட்டரையும், பொருத்தமான ஓவியம் வரைந்த ஓவியர் ஆழி அவர்களையும் மறக்க முடியுமா?

என் திறமை ‘எழுத்து’ என் கடமை  ‘எழுதுவது’ என்பதை உணர்ந்து அதையே திடமாகப் பிடித்து விடாமல் தொடர்ந்து எழுதி வருவதும், படிப்பு, தொழில், வேலை இவற்றுக்கு ஏற்ப டிஸைனிங், கிராஃபிக்ஸ், அனிமேஷன், ஆவணப்படங்கள் என எழுத்தின் அடுத்தடுத்தக் கட்ட வளர்ச்சியிலும் என் படைப்பாற்றலை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக பயணிக்க தன்னம்பிக்கையையும், நம்பிக்கையையும் விதைத்தது கோகுலமே. சுருங்கச் சொன்னால் பிள்ளையார் சுழி போட்டுக்கொடுத்தது கோகுலம் பத்திரிகை அங்கீகரித்த என் படைப்பே!

உங்கள் அனைவரின் பார்வைக்காக அந்தக் கதை…

//

அந்து கடிகாரத்தைப் பார்த்தான். இரவு நேரம். மணி ஏழு அடித்தது. ‘இன்று வரட்டும் அம்மா, ஒரு கை பார்த்து விடலாம்’ மனதுக்குள் கருவினான் அந்து.

எட்டு மணி ஆனது. வாசல் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. கையில் இருந்த புத்தகத்தை கீழே வைத்து விட்டு கதவைத் திறந்தான். அம்மா தான் வந்திருந்தாள். அந்து முகத்தை ‘உர்’ என்று வைத்துக் கொண்டு அறை மூலையில் போய் உட்கார்ந்தான்.

‘அந்து…அந்து கண்ணா…வாப்பா சாப்பிடலாம்…என்ன கோபம் என் சின்ன கண்ணனுக்கு?’

‘போம்மா…நீ இனிமேல் வேலைக்குப் போகக் கூடாது’

அந்துவிற்கு எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் தவித்தாள் அந்துவின் அம்மா.

‘அந்து! ஏம்பா தினம் தினம் இப்படிச் சொல்லி என்னை வருத்தப்பட வைக்கிறாய்?

‘அம்மா! தினமும் என் கூட படிக்கும் சுரேஷ் பள்ளியில் இருந்து வந்ததும், அவனோட அம்மா தயாரா பலகாரமும், காப்பியும் தருகிறாளாம். அன்பா அவனோடப் பேசுவாளாம். அவனுக்கு அப்பா கூட இருக்கார். எனக்கு அப்பாவும் இல்லை. நீ இந்த நர்ஸ் வேலைக்குப் போறது எனக்கு சுத்தமா பிடிக்கலை’ பொரிந்து தள்ளிவிட்டான் அந்து.

‘அந்து, இங்கே பார், உனக்கு அப்பா இல்லை. இந்நிலையில் நான் தானே வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்? இதையெல்லாம் யோசித்துப் பாருடா கண்ணா’ பிஞ்சு உள்ளத்துக்கு புரிய வைக்க முயன்றாள் அந்துவின் அம்மா.

‘சரி, நீ வேலைக்குப் போ. வேண்டாம்னு சொல்லலை. ஆனால் இந்த நர்ஸ் வேலைக்குப் போகாதே. அந்த டெட்டால் நாற்றமும், மருந்து ஸ்மெல்லும், சே…சே!’ அருவருப்புடன் பேசினான் அந்து.

அந்துவின் அம்மா ஒரு முடிவோடு, ‘சரி’ என்று சொல்லி விட்டு அந்துவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆயத்தமானாள். இரவு படுக்கும் முன் அந்துவிற்கு மறுநாள் விடுமுறை தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.

மறுநாள் அந்துவின் அம்மா, அந்துவை தன்னோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். பம்பரமாகச் சுழன்றாள். அந்து பாவமாக அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஆ…அம்மா வலிக்கிறதே என்று உடம்பு முழுவதும் புண்ணாகி இருந்த ஒரு வயதான நோயாளி முனகினார். அந்துவின் அம்மா அன்பும், ஆதரவும் கலந்த இனிமையான குரலில் அவருக்கு பதிலளித்தபடி பஞ்சினால் சீழைத் துடைத்தாள். மருந்து தடவி விட்டாள். அந்த நோயாளி அவளை நன்றியோடு பார்த்தார்.  ‘நல்லா இரும்மா’ என்று வாய் விட்டு வாழ்த்தினார் அந்த வயதான நோயாளி.

மாலைப் பொழுதானது. அந்துவிற்காக சீக்கிரமாகவே மருத்துவமனையில் இருந்து புறப்பட்டாள் அந்துவின் அம்மா. அந்துவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு வந்தாள். அவனுக்குப் பிடித்த பட்டாணி, சுண்டல் வாங்கிக் கொடுத்தாள். மெதுவாக அவனுடன் பேச ஆரம்பித்தாள்.

‘அந்து! இன்னிக்கு மருத்துவமனையில் என்னைப் பார்த்தியா? நோயாளிகளுக்கு நான் உதவி செய்யும் போது அவர்கள் எனக்கு நன்றி சொல்கிறார்கள். ஒரு சிலர் வாழ்த்துகிறார்கள். நமக்கு செய்கின்ற தொழில் தானப்பா தெய்வம். அதோட இது மாதிரி மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற வாய்ப்பை கடவுள் நமக்குக் கொடுத்ததிற்கு நாம் தானப்பா கொடுத்து வைத்திருக்க வேண்டும். கடவுளுக்கும், அந்த நோயாளிகளுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு. நான் என் வேலையை செய்கின்றேன். அதற்கு சம்பளமும் வாங்குகின்றேன். ஆனால், இதற்காக தினந்தோறும் நோயாளிகள் மூலமாக எனக்குக் கிடைக்கின்ற வாழ்த்துக்களும், நன்றியும் இப்பணிக்கு இலவசமாகக் கிடைக்கும் வெகுமதிகள். எல்லா பணிகளிலும் இந்த வாய்ப்பு கிடைக்காது. அதோடு மட்டுமில்லாமல் எல்லோருமே நோயாளிகளின் உடம்பைப் பார்த்து அருவருத்து ஒதுங்கினால், யார் தான் நோயாளிகளை கவனிப்பது?’ சொல்லி விட்டு சிறிது நேரம் அந்துவையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவன் அம்மா.

அந்துவிற்கு ஏதோ புரிவதைப் போல இருந்தது. ஆனால் முழுமையாகப் புரியவில்லை.

‘அந்து! உனக்கு இன்னும் புரிய வைக்கணும்னா நான் ஒண்ணு சொல்றேன்.கேளுப்பா. இப்ப எனக்கே உடம்புக்கு வருது. கீழே விழுந்து அடி பட்டு விட்டதா நினைச்சுக்கோ. அப்போ காயத்தில் இருந்து வரும் இரத்தத்தைப் பார்த்து டாக்டர் அருவருத்து ஒதுங்கிட்டா யார் கவனிப்பா? எனக்கு எப்படி இருக்கும்? அப்போ உன் மனசு எப்படி வருந்தும்? சொல்லி விட்டு மீண்டும் அந்துவின் முகத்தை ஆராய்ந்தாள் அவன் அம்மா.

அந்துவின் முகம் தெளிந்திருந்தது. அவன் அம்மாவுக்கு திருப்தியாக இருந்தது.

இப்போதெல்லாம் அந்து, அம்மா வரும்போது சிரித்த முகத்துடன் வரவேற்கிறான். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை புரிந்து கொண்டான் அந்து. //

சிறுவர்களுக்கான கதையாக இருந்தாலும், நாம் அனைவருமே உணர வேண்டிய உன்னத கருத்து பொதிந்த கதை இது.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஆகஸ்ட் 31, 2018

பிப்ரவரி 1982 ம் ஆண்டு கோகுலம் இதழில்
‘செய்யும் தொழிலே தெய்வம்’
என்ற தலைப்பில் வெளியான கதை

 

(Visited 1,555 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon