சரஸ்வதி தேவியை வழிபட்டால் நமக்கு வரப்போகும் துன்பத்துக்கான எச்சரிக்கையை நமக்கு உணர்த்துவதன் மூலம் துன்பங்களில் இருந்து காப்பாற்றி விடுவாள்.
இந்தக் கருத்தை பாரதியார் ‘தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்’ என்கிறார்.
எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவதைப் போல சரஸ்வதியையும் வணங்கி வழிபட்டுத் தொடங்கினால் அந்த செயல் வெற்றிகரமாக முடியும். இதற்கும் பாரதியார் ஒரு பாட்டை பாடியுள்ளார்.
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்…
மனதிலே தவறான எண்ணங்கள் வராமல் நேர் வழியில் சிந்தித்து வாழ்ந்தால் மட்டுமே நமக்கு நன்மைகள் நடைபெறும். தீய எண்ணங்களை மனதில் இருந்து நீக்குபவள் சரஸ்வதி.
எனவே கல்வி பயிலும் மாணவ மாணவிகள், தொழில் செய்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமில்லாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் சும்மா இருப்பவர்களும் வணங்க வேண்டிய தெய்வம் சரஸ்வதி.
ஏனெனில் சும்மா இருக்கும்போதுதான் தீய எண்ணங்கள் மனதில் வந்து மண்டிக்கொள்ளும். தீய எண்ணங்களை தூர விரட்டி தூய்மையான எண்ணங்களை மனதில் தங்க வைப்பவள் சரஸ்வதி.
இதனால்தான் சரஸ்வதி தேவி தூய்மையான வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள்.
இதையே பாரதியார் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்… என்று பாடியுள்ளார்.
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
அக்டோபர் 18, 2018