2018 முழுவதும்…
பிசினஸ் தொடர்பாக நான் சந்தித்து வருபவர்கள் அனைவருமே தன்னம்பிக்கைச் சிகரங்களாகவும், தாங்கள் பணிபுரியும் களம் வேறாக இருந்தாலும் தங்கள் தளத்தில் தொழில்நுட்பத்தின் உச்சத்தை இணைத்துக்கொண்டு தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் வியத்தகு மனிதர்களாக அமைந்தது சிறப்பு. அதிலும் அனைவருமே அவரவர்கள் வயதிலும், தங்கள் களத்தின் அனுபவத்திலும் உச்சம் தொட்டவர்கள்.
நம்மைச் சுற்றி பாஸிட்டிவ் வைப்ரேஷனை ஏற்படுத்தும் நல்ல மனிதர்கள் தொடர்பில் இருப்பதே வரம்தானே.
திருமதி. கிரிஜா ராகவன் – இன்று இவருடன் ‘இணைய வர்த்தகம்’ சார்ந்த ஒரு பிராஜெக்ட் மீட்.
இவருடன் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பிசினஸ் ரீதியாக தொடர்பில் இருந்தாலும், நேரில் நாங்கள் சந்திப்பது என்பது வருடத்துக்கு ஒருமுறையோ இருமுறையோதான்.
பிசினஸ் என்பதையும் தாண்டி இவரை எனக்குப் பிடிப்பதற்குக் காரணம் இவரது தன்னம்பிக்கை.
இந்தத் தன்னம்பிக்கைக்கு அடித்தளமாக எத்தனை முயற்சிகள், தோல்விகள், இழப்புகள், வருத்தங்கள்…. ஆனால் அவை எல்லாவற்றையும் தன் அயராத உழைப்பாலும், திறமையாலும் தன் வாழ்க்கைக்கு உரமாக்கி, தனித்து நின்று தானும் தலைநிமிர்ந்ததோடு சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவரவர்கள் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையில் முன்னேற ஆலோசனைகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்து மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் இவர் லேடீஸ் ஸ்பெஷல் என்ற பத்திரிகையின் ஆசிரியர்.
பொதுவாகவே…
எங்கள் அலுவலகங்களில் நடக்கின்ற சின்னச் சின்ன சுவாரஸ்யமான விஷயங்களுடன் நாட்டின் முக்கியமான பிரச்சனைவரை பேசுவோம். ஆனாலும் அதில் எங்கள் பிசினஸ் குறித்த கண்ணோட்டம் இழையோடிக்கொண்டே இருக்கும்.
இந்தமுறை மோடியின் டிமானிடைசேஷன், மீடூ கான்செப்ட், குட்டி குட்டியாய் பிசினஸ் செய்யும் சுயதொழில் செய்யும் பெண்கள் குறித்து என பலதரப்பட்ட விஷயங்களைப் பேசினோம்.
என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் மனிதர்களை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு Tag வைத்துக்கொள்வேன். அந்த வகையில் இவரை நினைவில் வைத்துக்கொள்ள நான் வைத்திருக்கும் Tag என்ன தெரியுமா?
‘வாழ்க்கையில் ஏதாவது செய்துகொண்டே இருக்கணும்… இயங்கிக்கொண்டே இருக்கணும் காம்கேர் புவனேஸ்வரி’
என்று எப்போதும் இவர் சொல்லுகின்ற உத்வேக வார்த்தைகள் தான் இவருக்கான Tag.
மேலும் என்னை ‘புவனேஸ்வரி’ என்றழைப்பதைவிட ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்றழைப்பதுதான் பிடித்திருக்கிறது, அதுதான் கம்பீரமாக உள்ளது என்பார்.
விரைவில் பிரமாண்டமான தொழில்நுட்ப ஒர்க்ஷாப்பில் சந்திப்போம் என சொல்லி விடைபெற்றோம்.
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 24, 2018