இங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்! (https://dhinasari.com)

என்னிடம் பேச வேண்டும் என ஒரு வாசகர் விரும்புவதாக சொல்லி எனக்கு லைனை கனெக்ட் செய்தார் என் உதவியாளர்.

‘புவனேஸ்வரி அவங்ககிட்ட பேசணும்…’

முன் அல்லது பின் அடைமொழி இன்றி இப்படி பெரும்பாலும் யாரும் என்னிடம் பேசுவதில்லை என்பதால் சற்றே யோசனையுடன், ‘சொல்லுங்க… நான்தான் பேசறேன்…’ என்றேன்.

‘உங்க புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன். காஞ்சிபுரம் அருகே உள்ள கிராம்தான் எங்க ஊர். கிராஃபிக்ஸில் டிப்ளமா படித்து முடித்திருக்கிறேன்… உங்க கம்பெனில வேலை வேணும்…’

இப்போதுகூட படித்துமுடித்த மாணவன் போல பேசவில்லை. ஒரு ஃபார்மாலிடிக்குக்கூட மேடம் என்ற வார்த்தை வரவேயில்லை.

‘சரி… எப்போ முடித்தீர்கள்… எங்கேனும் வேலை செய்த அனுபவம் இருக்கிறதா?’ என்றேன்.

‘சென்னைல ஒரு கம்பெனில 3 மாசம் வேலை செய்தோம் நானும் என் நண்பர்கள் 4 பேரும்…. ஆனா அந்த கம்பெனில நாங்க செஞ்ச வேலைய சினிமா கம்பெனிகளுக்குக் கொடுத்து நல்லா சம்பாதிச்சாங்க… ஆனா எங்களுக்கு சம்பளம் தரவில்லை…’

‘அப்போ அந்த கம்பெனில நல்லா வேலை கற்றுக்கொண்டீர்கள் அல்லவா?’

‘இல்லை இல்லை… நாங்க காலேஜ்ல படிச்சதோட சரி… ஒரு அனுபவமும் கிடைக்கவில்லை…’

‘ஏம்பா இப்போதானே சொன்னீர்கள்…. நாங்க செய்த வேலையை சினிமா கம்பெனிகளுக்குக் கொடுத்து நல்லா சம்பாதிச்சாங்க… அப்படின்னு… அப்போ நீங்கள் செய்த வேலை நன்றாக இருந்ததால்தானே அவர்களால் அவற்றை விற்க முடிந்தது… அப்போ நீங்கள் அந்த வேலை மூலம் கொஞ்சமாவது அனுபவம் பெற்றிருக்கிறீர்கள்தானே… உங்கள் வேலை சரியில்லை என்றால் எப்படி அவர்களால் அதை விற்று காசாக்கி இருக்க முடியும்… ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே…’

இப்படி லாஜிக்காக அந்த இளைஞனை கேள்வி கேட்டவுடன் கொஞ்சம் தடுமாறினார்.

‘ஆமாம்…’ என இழுத்தார்.

‘சரி இப்போ என்ன செய்யறீங்க…’

‘எங்களை ஏமாத்த நினைச்சா கோபம் வராதா, அந்த கம்பெனில நல்ல நாலு கேள்வி கேட்டுட்டு அந்த கம்பெனி ஓனரை திட்டிட்டு வெளில வந்துட்டோம்…’

ஏதோ சாதனை செய்துவிட்ட தோரணையில் பேசிய அந்த இளைஞனிடம் ‘சரிப்பா… எங்க நிறுவனத்தில் தற்சமயம் வேலைக்கு ஆட்கள் எடுக்கவில்லை. இமெயிலில் உங்கள் பயோடேட்டாவை அனுப்பி வையுங்கள்…’ என்றேன்.

‘சரி நான் ஒரு எண் கொடுக்கறேன். அதை குறிச்சுக்குங்க… அதுதான் என் வாட்ஸ் அப் எண்…’ என்று சிறுபிள்ளைத்தனமாக சொன்னபோது ஏற்பட்ட எரிச்சலை வெளிக்காட்டாமல்     ‘சாரி… பிசியாக இருக்கிறோம்… இமெயில் செய்யுங்கள்….’ என்று சொன்னதோடு கூடுதலாக ஒரு தகவலையும் சொல்லி போனை வைத்தேன்.

‘இதுவரை நான் உங்களை போனிலேயே இண்டர்வியூ செய்து முடித்துவிட்டேன்… உங்கள் இமெயில் ஐடியை கொடுங்கள். வேலை கிடைக்க டிப்ஸ் கொடுக்கிறேன்…’

கடைசிவரை ஒரு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவரிடம், தன்னைவிட வயதில் மூத்த பெண்மணியிடம் தாம் பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் பேசியது அந்த இளைஞனின் அறியாமையையே காட்டியது.

அந்த இளைஞனுக்கு ஒரு இமெயில் ரெடி செய்தேன். அதன் சாராம்சம் இதுதான். இது படித்து முடித்து வேலை தேடும் அனைவருக்கும் பொருந்தும்.

‘அறிமுகம் செய்துகொண்டபோது விஷ் செய்துவிட்டு கான்வர்சேஷனை ஆரம்பித்திருக்கலாம்…

வாட்ஸ் அப் எண்ணை குறித்துக்கொள்ளுங்கள் என்பதற்கு பதிலாக எஸ்.எம்.எஸ் மூலமாகவோ அல்லது அவரது வாட்ஸ் அப் எண் மூலமாகவோ தன்னிடம் பொறுமையாக பேசியமைக்கு நன்றி… இதுதான் என் வாட்ஸ் அப் எண் என தகவல் கொடுத்திருக்கலாம்…

ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சேர விண்ணப்பிக்கும் போது முந்தைய நிறுவனத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் கூட பாசிடிவாக சொல்லி இருக்கலாம்… ஆனால் அவர் தனக்குக் கிடைத்த சிறிய அனுபவத்தைக்கூட எங்களை வைத்து வேலை வாங்கிகொண்டார்கள் என நெகடிவாக சொன்னார்… படித்து முடித்துவிட்டு உடனடியாக வேலைக்கு சேரும் மாணவர்களின் அனுபவத்தை வைத்து வேலை வாங்குவது எவ்வளவு கடினம் என்று எல்லோருக்கும் தெரியும்…’

கிராமப்புறத்தில் படித்து பட்டம் பெற்று தகுதி பெற்று சென்னை போன்ற மாநகரங்களுக்கு வருபவர்கள் தங்கள் ஊர் நட்பு வட்டத்துடன் மட்டும் தங்கள் நட்பை வைத்துக்கொள்ளாமல் நகர சூழலுக்கு தங்களை அப்டேட் செய்துகொள்ள இங்குள்ள இளைஞர்களுடன் தொடர்பை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தங்கள் திறமையை வெளிக்காட்ட முடியும்.

ஏனெனில் கல்லூரி கற்றுத் தருவது பாடம், அனுபவம் கற்றுக் கொடுப்பது வாழ்க்கை!

(விகடகவி APP பத்திரிகையில் 29-11-2017 இதழில் வெளியான கட்டுரை)

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஜனவரி 8, 2019

தினசரி டாட் காமில்  லிங்க்…https://dhinasari.com/?p=65567 

தொடரும்…

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் ஜனவரி 8, 2019

 

(Visited 110 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon