‘ஐராவதம் இறுதிச்சடங்குக்கு வந்த 40 பேர்: தமிழ் வாழும்!’ – இந்தத் தலைப்பும் செய்தியும் உணர்த்தும் உண்மை நெருப்பாய் சுடுகிறது.
‘சர்வதேச ஆய்வுலகுக்குக் கல்வெட்டுச் சான்றுகளோடு தமிழின் தொன்மையை எடுத்துரைத்தவர் ஐராவதம் மகாதேவன். ‘தமிழ், தமிழர்’என்று முகவரியுடன் அரசாள வருபவர்கள் மத்தியில் இந்திய ஆட்சிப்பணியைத் தமிழ் ஆய்வுக்காகத் துறந்து வாழ்நாள் முழுவதையும் கழித்தவர்.
அவருடைய கடைசி ‘தமிழி’ களப்பணிக்கு அவருக்கு உதவியாகப் பயணித்து, பூலாங்குறிச்சி கல்வெட்டினைக் காணச்சென்று வந்தது ஒரு பெரும் பாக்கியம். பாறைச் சரிவில் உள்ள அந்த நெடிய கல்வெட்டை அருகில் இருந்து பார்க்க ஆசைப்பட்டார்.
அவரைக் கூட்டிச்செல்லத் தயங்கிய நாங்கள், அவருடைய ஆசையை நிறைவேற்ற சரிவான பாறையின் மேல் கூட்டிச்சென்றோம். தனது சுண்டு விரலால் எழுத்துகளை வருடிப்பார்த்தார்.
தனது சுண்டு விரலைச் சிற்றுளியாய் எண்ணிக்கொண்டு எழுதிய எழுத்துகள் மீது எழுதிப்பார்த்து அறிவது அவருடைய வாசிப்பு முறைகளுள் ஒன்று. காடு, மேடு, பாறை, குகை என வெயில், மழை பார்க்காமல் ‘தமிழி’-யைத் தேடிய கண்கள் மூடிய இமைகளுடன் சிந்து வெளி – தமிழ் தொடர்பைத் தேடிக்கொண்டே சாம்பலானது.
‘தமிழி’-க்கு சர்வதேச அரங்கில் ஓர் அங்கீகாரம் பெற உதவியாய் இருந்தவரின் இறுதிச் சடங்கில் பெசன்ட் நகர் மயானத்தில் பங்குபெற்றோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கொடுமை… சுமார் 40 பேர். அவர்களில் 30 பேர் அவருடைய உறவினர்கள் / நெருங்கிய நண்பர்கள். தமிழ் வாழும்!’
தமிழ் இந்துவில் வெளியான செய்தி இது. இதை தொல்லியல் ஆய்வாளர் திரு. காந்திராஜன் எழுதி இருந்தார்.
இவர் குறிப்பிட்டதைப் போல ஐராவதம் அவர்களுக்கு பழந்தமிழ் எழுத்துக்களை ‘தமிழி’ என்றழைப்பதில் உடன்பாடில்லை. பழந்தமிழ் எழுத்துக்களை ‘தமிழ் பிராமி’ என்றழைப்பது சரியில்லை ‘தமிழி’ என்றுதான் அழைக்க வேண்டும் என்ற கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த காலத்தில் தன் ஆராய்ச்சிகள் கொடுத்த தீர்க்கமான முடிவில் எந்த விமர்சனத்துக்கும் கவலைப்படாமல் தொடர்ந்து பழந்தமிழ் எழுத்துக்களை ‘தமிழ் பிராமி’ என்றே இவர் குறிப்பிட்டுவந்தார்.
இவரது இறுதிச்சடங்கு குறித்த செய்தியை படித்தவுடன் மனம் கனத்துப் போனது.
கூடவே, 1921, செப்டம்பர் 11 அன்று தன் 39 வயதில் இறந்த பாரதியின் மறைவுக்கு 20 பேர்தான் வந்திருந்தனர் என்பதும் என் நினைவுக்கு வந்து சென்றது.
இப்போது தன் 88 வயதில் மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவுக்கு வந்திருந்த 40 பேரில் 30 பேர் அவரது உறவினர்கள் மட்டுமே என்பதும் கூடுதல் சோகம்.
இந்த வருத்தத்தை சுடச்சுட சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன். அந்தப் பதிவுக்கு ‘உண்மையில் மனம் வலிக்கிறது. காரணம் பார்த்தால் இவர்களை போன்றவர்கள் வெகுஜன மக்களுக்குத் தெரிவதில்லை. இவர்களும் வெகுஜன மக்களுடன் ஒட்டுவதில்லை…’, ‘இந்தியாவில் உண்மையான திறமைசாலிகள் கண்டுக்கொள்ளப்படுவதில்லை…’ என அவரவர் தளத்தில் அவரவர்கள் களத்தில் இருந்து ஏகப்பட்ட கமெண்ட்டுகள்.
நேரில் கூடுகின்ற கூட்டத்தையும், வெர்சுவல் உலகில் சமூக வலைதளங்களில் போடப்படும் RIP-களின் எண்ணிக்கைகளையும் தாண்டி, ‘ஆய்வுத் துறையில் அவர் அளித்த பங்களிப்புகள் என்றும் நின்று பேசும்’ என்பது மட்டும்தான் மறுக்க முடியாத உண்மை.
ஒரு நிகழ்ச்சிக்கு சினிமா துறை சார்ந்த பிரபலம் தலைமை தாங்குகிறார் என்றால், வருகின்ற கூட்டத்துக்கும், தமிழ் இலக்கியத்துறை சார்ந்த பிரபலங்களோ அல்லது கல்வியாளர்களோ தலைமை தாங்கும்போது வருகின்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.
2014 டிசம்பர் 23-ம் தேதி மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் இறுதிச்சடங்குக்கும் ஊர்வலத்துக்கும் கூட்டமோ கூட்டம். காரணம் பாலச்சந்தர் மீதுள்ள உண்மையான அன்பு என்பதையும் தாண்டி அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் நடிகை நடிகர்களைக் காண கூடிய கூட்டமே அதிகம்.
அதே நாளில் மறைந்த வானொலி அண்ணா கலைமாமணி கூத்தபிரான் இறுதிச்சடங்குக்கு அவரது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர் என்பதும் நாம் அனைவரும் அறிந்த செய்தியே.
இதில் யாரையும் குறை சொல்வதற்கில்லை. எல்லாவற்றுக்கும் காரணம், நாம் வளர்த்துவிட்ட வழக்கமும் பழக்கமும்தான்.
ஒரு பொது இடத்தில் ஏதேனும் ஒரு நடிகரை / நடிகையைப் பார்த்துவிட்டால் முகமெல்லாம் பரவசமாக ஏதோ வேற்றுக்கிரஹத்தில் இருந்து வந்தவர்களைப் போல பார்ப்பதும், அவர்களுடன் பேசத் துடிப்பதும், ஆட்டோகிராஃப் வாங்க ஆசைப்படுவதும் நம்மில் பெரும்பாலானோரின் இயல்புதானே.
இப்போதெல்லாம் கையெழுத்தில் ஆட்டோகிராஃப் வாங்கும் மோகம் போய், செல்ஃபி எடுத்து விஷுவல் ஆட்டோகிராஃபாக்கிக் கொள்ளும் மனோநிலைக்கு தொழில்நுட்பத்தில் உயர்ந்துள்ளோம்.
இப்படி சினிமாத்துறை சார்ந்த நடிகர்கள், கவிஞர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் போன்றவர்களுக்கு அடுத்தகட்டமாக புகழ் வளையத்துக்குள் வருபவர்கள் டிவியில் செய்தி வாசிப்பாளர், ஸ்பெஷல் ஷோ நடத்துபவர்கள், நிகழ்ச்சி ஆங்கர்கள்.
இதற்கும் அடுத்தகட்டமாக இலக்கியத்துறை சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள்.
ஆனாலும் பொதுவாக அனைவருக்கும் அறிமுகம் ஆகி இருப்போர் சினிமாத் துறையினர் மட்டுமே. இவர்களிலும் உலக அழகி ‘ஐஸ்வர்யாராய்’ பற்றி கூட தெரியாதவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் அத்தகையோரின் பர்சண்டேஜ் மிகமிகக் குறைவு.
அண்மையில் என் நிறுவனத்தின் லைப்ரரிக்கு புதிதாக புக் ஷெல்ஃப் தயாரிப்பதற்காக ஒரு கார்பென்டரை வரச் சொல்லி இருந்தோம். எங்கள் லைப்ரரியில் ஏற்கெனவே இருந்த புத்தக ஷெல்ஃபுகளைப் பார்வையிட்டவர் அதில் அடுக்கி இருந்த நான் எழுதிய புத்தகங்களைப் பார்த்துவிட்டு ‘இத்தனையும் நீங்கள் எழுதியவையா?’ என கேட்க, நான் ‘ஆமாம். 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்….’ என இயல்பாய் சொல்ல, அவர் கண்களில் கண்ணீர் மல்க என்னை கை கூப்பி வணங்கினார்.
உடனே தன் சட்டைப் பையில் இருந்த 10 ரூபாய் நோட்டை எடுத்து ஆட்டோகிராஃப் போட்டுத்தரச் சொன்னார்.
எனக்கு ரூபாய் நோட்டில் ஆட்டோகிராஃப் போட உடன்பாடில்லை. மறுத்துவிட்டு ‘அவரிடம் எத்தனை வருடங்களாக கார்பென்டராக இருக்கிறீர்கள்… இதுபோல எத்தனை விதமான மரவேலை செய்திருப்பீர்கள்’ என்றேன்.
‘25 வருடங்களுக்கு மேல் கார்பென்டரா இருக்கேன். எவ்வளவு மரவேலை செய்திருக்கிறேன் என சரியா கணக்குத் தெரியலை… நிறைய செய்திருக்கிறேன்….ஏன்னா அதுதானே என் வேலையே…’ என்று பதில் சொன்னவரை பார்த்துப் புன்னகைத்தேன்.
‘நான் எழுதியவை 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களே… நீங்கள் செய்ததோ எண்ணற்றவை… அப்போ யார் பெரியவர் சொல்லுங்கள்…’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.
‘இன்ஜினியர், டெக்னீஷியன், கார்பென்டர், டிரைவர், ஆடிட்டர் போன்றவர்களின் சேவைகள் எப்படி மக்களுக்குப் பயன்படுகிறதோ, அப்படித்தான் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், சினிமாத்துறை சார்ந்தவர்கள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளும்.
ஒருசில பணிகள் முழுக்க முழுக்க அறிவு சார்ந்தவை. ஒருசில உழைப்பு சார்ந்தவை. ஒருசில அறிவும், உழைப்பும் சார்ந்தவை. இவை எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒன்றுள்ளது அதுதான் ஈடுபாடு. அது இருந்துவிட்டால் அவரவர் பணியில் அவரவர் ராஜாதான்.’
இது என் பெற்றோர் எனக்குக் கொடுத்த OTP. இந்தத் தெளிவை அவரிடம் புகுத்த முற்பட்டேன்.
என் நண்பர் ஒருவர் தன் பணிகளுக்கிடையே சமூகசேவை அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அதுசார்ந்து அவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் அந்த அமைப்பின் பெயரையும் தன் பெயரையும் பேனரிலும், விளம்பரங்களிலும் சிறியதாக வெளிப்படுத்திக் கொள்வார். அவரால் விருதுபெறும்/பயனடையும் நபர்களின் பெயர்கள் பெரியதாக வெளிப்படுத்தி இருப்பார்.
அந்த நிகழ்ச்சியை யார் நடத்துகிறார், எந்த அமைப்பு நடத்துகிறது என்பதெல்லாம் பொதுவெளியில் இருந்து பார்ப்பவர்களின் மனதுக்குச் செல்லவே செல்லாது.
‘ஏன் இப்படி செய்கிறீர்கள்… உங்கள் அமைப்பின் பெயரும் உங்கள் பெயரும் அனைவருக்கும் தெரியும் வண்ணம் அமைய வேண்டாமா?’ என கேட்டேன்.
‘கூச்சமாக இருக்கு… அப்படி போட்டுக்கொள்வது சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதைப் போலுள்ளது…’ என்றார்.
அதற்கு நான், ‘நீங்கள் செய்யாத ஒரு விஷயத்தை செய்ததாகச் சொல்லி பெருமைப்படுவதும், மற்றவர்கள் செய்ததில் நீங்கள் கூடவே ஒட்டிக்கொண்டு உங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வதும்தான் தவறு…
நீங்கள் நேர்மையாகச் செய்வதை வெளிப்படையாக சொல்லிக்கொள்வதில் தவறில்லை. சொல்லாமல் இருப்பதுதான் தவறு.
மேலும் நாம் செய்கின்ற நல்ல செயல்களை வெளிப்படையாகச் சொல்லுவதால் மற்றவர்களுக்கும் நாம் இன்ஸ்பிரேஷனாகிறோம். அவர்களாலும் அதுபோல நல்ல விஷயங்கள் நடைபெறுமல்லவா?’ என்றேன்.
இதுவே நான் அவருக்குக் கொடுத்த OTP. அதை பெற்றுக்கொண்டு முயற்சிக்கிறேன் என்றவரின் அடுத்த நிகழ்ச்சியின் பேனரில் அவரது அமைப்பின் பெயர் பளிச்சென்றிருந்தது.
டெல்டா பகுதியில் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் ஆன உதவிகளை செய்துவரும்போது, ஒரு பெண்மணி அந்தந்தப் பகுதிக்குச் சென்று ஆங்காங்கே கிடைக்கும் வீடுகளில் தான் எடுத்துச் சென்ற காய்கறிகள், அரிசி, பருப்பு வகைகள் கொண்டு தானே சமைத்து பரிமாறி வருவது என் கவனத்தை ஈர்த்தது.
சில சமயம் அவருடன் கூடவே பணி ஓய்வுபெற்ற அவரது கணவரும் செல்கிறார். இப்போது மொபைல் கிச்சன் ஒன்றை உருவாக்கி பத்துபத்து கிலோவாக முப்பது கிலோ சாதம் சமைக்கிறார். தேவையான சாம்பார் செய்கிறார். இந்த மொபைல் கிச்சனை தன் காரிலேயே செல்லுமிடம் எங்கும் கொண்டு செல்கிறார்.
இவர் பெயர் ராஜாமகள். படிப்பு +2. வயது 53+. கணவர் அரசு பணியில் இருந்தவர். தன் மூன்று குழந்தைகளையும் முதுகலை பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார்.
இவர் அவ்வப்பொழுது தான் சமைப்பதையும், காய்கறி நறுக்குவதையும், தன் மொபைல் கிச்சனையும் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவார். நேற்று புகைப்படத்துடன் கூடவே ‘இது சுயதம்பட்டமோ விளம்பரமோ அல்ல… 53 வயசு பாட்டி சமைச்சிப் போட்டு சமூக சேவை செய்யறாளே… நாமும் ஏன் ஏதேனும் உதவக் கூடாதுன்னு நாலு பேரை தூண்டறதுக்காகத்தான் இந்த போட்டோக்கள்…’ என்ற குறிப்பையும் இணைத்து வெளியிட்டிருந்தார்.
‘நாம் செய்கின்ற நல்ல செயல்களை வெளிப்படையாகச் சொல்லுவதால் மற்றவர்களுக்கும் நாம் இன்ஸ்பிரேஷனாகிறோம்’ என்று நான் ஏற்கெனவே சொன்ன கருத்தை இவரது செயல்பாடு நிரூபணம் செய்கிறதல்லவா?
ஒருமுறை எங்கள் நிறுவனம் வெளியிட்ட ‘சாலைவிதிப் பாடல்கள்’ என்ற புத்தகத்துக்கு அந்த நூலாசிரியர் விருப்பத்துக்கு ஏற்ப புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தோம்.
அந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர், சிறப்பு விருந்தினர்கள் என அனைவரையும் மேடை ஏற்றிவிட்டு நான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பிசியாக இருந்தேன். நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சிறப்பு விருந்தினரிடம் என் அப்பா அம்மாவை அறிமுகம் செய்து வைத்தபோது அவர் என்னைப் பார்த்து, ‘உங்க பொண்ணா இவள்… ரொம்ப அழகா தமிழ் பேசறா… என்ன படிக்கறா… இன்னும் மேல படிக்க வையுங்கள்…’ என்று சொல்லிக்கொண்டேபோக எனக்கு தலை சுற்றியது.
என்னை கல்லூரி படிக்கும் பெண்ணாக நினைத்து அவர்கள் பேசியதும், வயது குறைவாகத் தெரியும் என் தோற்றம் குறித்தும் ஒருபக்கம் பெருமையாக இருந்தாலும், நான் தான் அந்த நிகழ்ச்சியை நடத்துவது, என் நிறுவனம் மூலம்தான் அந்த புத்தகம் வெளியாகியுள்ளது என்பதே வெளியில் தெரியாத அளவுக்கு செயல்பட்டிருக்கிறோமே என மறுபக்கம் கூச்சமாகிப் போனது.
சிறப்பு விருந்தினரைப் பொருத்தவரை எழுத்தாளர், அவரது புத்தகம் இவற்றில்தான் கவனம். அவர் மீது தவறில்லை. நான் தான் இன்னும் வெளிப்படையாக நிகழ்ச்சி குறித்த தெளிவை உண்டாக்கி இருக்க வேண்டும்.
அந்த நிகழ்ச்சி, பொதுவெளியில் என்னை எப்படி வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும், எந்த அளவுக்கு வெளிச்சம் போட்டு வெளிப்படுத்திக்கொண்டால் அனைவருக்கும் நம் செயல்பாட்டின் வீச்சு சென்றடையும் என கற்றுக்கொடுத்தது.
இந்தா பிடிங்க உங்களுக்கான OTP… ‘நாலு பேருக்கு நல்லது செய்வோம். அதை உரக்கச் சொல்வோம். நம் தற்பெருமைக்காக அல்ல, மற்றவர்களும் நம்மைப் போல நல்லது செய்யத் தூண்டுவதற்காக…’
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 6
ஜனவரி 2019