என் வயதில் வேலைக்காக அவரவர்கள் ஃபைலை எடுத்துக்கொண்டு கம்பெனி கம்பெனியாக இண்டர்வியூவுக்குச் சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் நான் என் நிறுவனத்துக்காக செய்த இந்த முதல் இண்டர்வியூ எனக்கு புதுமையான அனுபவமாக இருந்ததுடன் இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் உணர்த்தியது.
1999 வருடம். அப்போதெல்லாம் அலைபேசி கிடையாது. தொலைபேசி மட்டுமே. The Hindu வில் விஷுவல் பேசிக் புரோகிராமர் தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்தேன். எங்கள் முதல் பத்திரிகையில் விளம்பரமும் அதுவே.
எதிர்பார்க்க முடியாத அளவுக்கு ரெஸ்பான்ஸ்.
1992 – நான் காம்கேர் ஆரம்பித்த வருடம்.
கம்ப்யூட்டர் ஆங்கிலம் தெரிந்த, பணம் படைத்த, பட்டம் பெற்ற… என ஏராளமான தகுதிகள் உள்ளவர்கள் வசமாக மட்டுமே இருக்க முடியும் என நம்பிய நம் மக்களிடையே தொழில்நுட்பத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தெடுத்து…
அவர்களுக்குப் புரியும் தமிழ் மொழியில் அங்குலம் அங்குலமாக புரிய வைத்து…
கம்ப்யூட்டர் வாங்கச் செய்து…
நாங்கள் தமிழில் தயாரித்த சாஃப்ட்வேர்களை இலவசமாக இன்ஸ்டால் செய்து…
தமிழகமெங்கும் தொழில்நுட்பத்தின் தேவை எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் கொண்டு சேர்த்ததில் காம்கேரின் பங்கு அளவிடமுடியாதது.
சரி இப்போது நான் சொல்லிக்கொண்டிருந்தேனே அந்த விளம்பரத்துக்கு வருவோம்.
எங்கள் காம்கேரின் பணிகளை விரிவுபடுத்தவே ஆட்கள் தேவை / Wanted Programmers விளம்பரம் கொடுத்திருந்தேன். அதுவும் 2-3 வரிகளில் கொடுக்கப்படும் வரி விளம்பரம்தான்.
அப்போது எங்கள் அலுவலகம் 500 சதுர அடி மட்டுமே. அதுவும் கொஞ்சம் பழைய பில்டிங்.
விளம்பரத்துக்கு தினமும் 50 பேர் முதல் 100 பேர் வரை நேரடியாக நேர்காணலுக்கு வர ஆரம்பித்தார்கள்.
ஆட்கள் உட்காரவோ நிற்கவோ முடியாத அளவுக்கு இளைஞர்கள் வந்துகொண்டே இருந்தனர். அந்த கட்டடமே தாங்குமா என சந்தேகம் வரும் அளவுக்கு வேலை தேடி வந்த இளைஞர்கள் கூட்டம்.
ஏதோ கண்காட்சிக்கு வருவதைப் போல. ஆனால் முகத்தில் ஏராளமான நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும், எதிர்காலக் கனவுகளையும் சுமந்தபடி.
தவிர ரெஸ்யூமை போஸ்டலிலும், கொரியரிலும் அனுப்பி வைத்தவர்கள் அநேகர்.
காலை 6 மணிக்கு காம்கேர் வருவேன். இரவு 9 மணிக்கு வீடு திரும்புவேன். இந்த அலுவலக நேரம் தாண்டி வீட்டு முகவரி கண்டுபிடித்து வீட்டுக்கே வந்து வேலைக்காக விண்ணப்பிக்க வந்தவர்கள் பல நூறு பேர்.
எனக்கான ரெஸ்பான்சிபிலிடி அதிகரித்ததை உணர்ந்தேன்.
தொலைபேசி அழைப்புகளுக்காகவே கூடுதலாக இரண்டு ஸ்டாஃப் பணிக்கு அமர்த்தினேன். ஆனாலும் அவர்கள் அலுவலக நேரம் 9 மணிக்குதானே. அதற்கு முன் வருகின்ற அழைப்புகளை நான் எடுத்துப் பேசுவேன்.
தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லிச் சொல்லி தொண்டை வரண்டது. ரெஸ்யூம்களை ஒழுங்குபடுத்தி நேர்காணல் செய்து அதை மீண்டும் சரிசெய்து பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குள் ஏதோ உலக சாதனை புரிந்துவிட்டு வந்ததைப் போல பிரமிப்பு.
இப்படியாக தொடங்கிய பணிக்குப் பொருத்தமானவர்களை தேடும் வேட்டை இன்றுவரை தொடர்கிறது.
என் கண் முன் குவிந்த இளைஞர்களின் கூட்டத்தைப் பார்த்த போது இத்தனை பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு தேவைகள் இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
எனக்குள் ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்த பிசினஸ் ஆர்வமும், புதுமையான முறையில் எதையும் அப்ரோச் செய்யும் நுணுக்கமும் இன்னும் பிரகாசமாக கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
நான் நடத்திய இந்த முதல் இண்டர்வியூ எனக்கு ஒரு படிப்பினையையும் கற்றுக்கொடுத்தது.
நான் சொன்னேன் அல்லவா காலை 6 மணிக்கே அலுவலகம் வந்துவிடுவேன் என்று. அப்போது வருகின்ற தொலைபேசி அழைப்புகளை நான் எடுக்கும்போது எதிர்முனையில் பேசுபவர்கள் நான் விளம்பரம் கொடுத்திருந்த விஷுவல் பேசிக் மொழியில் எந்த பிரிவில் அனுவவம் இருக்க வேண்டும், வேறு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும், எப்போது இண்டர்வியூவுக்கு வர வேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்பார்கள். நானும் மிகப் பொறுமையாக பதில் சொல்லுவேன்.
இப்படி ஒரு நபருக்கு பதில் சொல்லி முடித்து அவருக்கான இண்டர்வியூ நேரத்தை சொல்லி போனை வைக்க முற்பட்டபோது அவர் சொன்ன விஷயத்தில் கொஞ்சம் தடுமாறிப் போனேன்.
‘மேடம் நீங்கள் ரொம்ப ஸ்மார்ட்டா பேசறீங்க… தமிழ் ஆங்கிலம் இரண்டுமே சரளமா வருது… இப்படிப்பட்ட ஸ்டாஃப் கிடைக்க உங்கள் நிறுவனம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களோ அதைவிட இரண்டு மடங்கு கொடுக்கிறோம். எங்கள் நிறுவனத்துக்கு வேலையில் சேர்கிறீர்களா?’
அதிர்ச்சியில் இருந்து மீளாமல் ‘அப்படியா…’ என்றேன்.
‘ஆமாம் மேடம்…’
‘நான் தான் இந்த நிறுவனத்தோட ஃபவுண்டர், சி.இ.ஓ. எம்.டி எல்லாமே…’ என்று நான் பதில் சொன்னதும் அவர் என்ன ரியாக்ஷன் செய்திருப்பார் என்பதை அவரவர் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு ஆட்களை இழுக்கும் டெக்னிக் கால மாற்றத்துக்கு ஏற்ப மாறிவந்தாலும் நானே நேரடியாக சந்தித்த இந்த அனுபவத்தை மறக்க முடியவில்லை.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 18, 2019