THE JOURNEY – FUELLED BY DETERMINATION
The Biography of Sri. S. Sankaranarayanan by RAMANAN
SSN என்று மூன்றெழுத்துக்களில் அனைவராலும் அறியப்படும் திரு. எஸ். சங்கரநாராயணன் (1912-1987) அவர்களின் சுயசரிதை புத்தகம் இது. ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் திரு. ரமணன்.
SSN குறித்து சிறிய குறிப்பு. ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் கணிதம் படித்து கிடைத்த ஆசிரியர் வேலையை ஒதுக்கி தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டு அதில் மிக உறுதியாக நின்று தொடர்ந்து பல்வேறு தொழில்களைத் துவங்கி உயரங்களையும் துயரங்களையும் சந்தித்த ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணக் கதைதான் இந்தப் புத்தகம்.
தோல் பொருட்களை விற்பனை செய்வதில் தொடங்கிய SSN, வாழ்க்கையில் Master Cutter, Army Clothing Supplier, Civil Engineering Contractor, Master Printer, Steel Drum Manufacturer, Agriculturist என்று பல துறைகளில் உச்சம் தொட்டவர்.
இறுதியில் இவர் மகன் சீதாராமனுடன் இணைந்து Super Auto forge Private Limited (SAF) என்ற நிறுவனத்தைத் துவக்கி, Cold Forging Technology தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய தொழிலதிபராக அவதாரம் எடுத்தார். இன்று இந்த நிறுவனத்தின் மொத்த வியாபாரம் பல கோடிகளைத் தொட்டாலும், மிக எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் இவர்கள்.
படிப்பு மட்டும் இல்லாமல் பல்துறை ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே வாழ்க்கையில் தன் Comfort Zone தாண்டியும் வேலை செய்ய முடியும். ரிஸ்க் எடுத்து செயல்பட முடியும். வெற்றி தோல்வி எதுவந்தாலும் கவலைப்படாமல் அடுத்தடுத்து நகர்ந்துகொண்டே இருக்க முடியும். இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் SSN.
நூலாசிரியர் திரு. ரமணன் அவர்கள் குறித்து சிறிய குறிப்பு. ஆங்கிலத்தை இத்தனை எளிமையாக எழுத முடியுமா என ஆச்சர்யப்படும் வகையில் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும். இவரது தமிழும் இதைவிட அழகாக இருக்கும். ஏராளமான புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
அழகு தமிழ் என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்போம். திரு. ரமணன் அவர்களின் ஆங்கிலம் அழகு மட்டுமல்ல எளிமையும்தான். எந்த ஒரு வாக்கியத்தையும் புரியாமல் இரண்டாம் முறை படிக்க அவசியமில்லாத சீரான ஆங்கில எழுத்தோட்டம்.
‘தேசத்தை நேசிக்கவும் சுதந்திரத்தைப் போற்றவும் மிக சிறுவயதிலிருந்து கற்பிக்க பட்ட குடும்பம் எங்களுடையது. பாரதியை அம்மாவும், உலக சரித்திரத்தை அப்பாவும் பள்ளிக்காலத்திலேயே சொல்லித் தந்தவர்கள். அதன் தாக்கம் இன்னும் இருக்கிறது…’ என்று தன் குடும்பப் பின்னணி குறித்து திரு. ரமணன் அவர்கள் ஒருமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார்.
இத்தகு பெருமையுடைய திரு. ரமணன் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை வாய்ப்புள்ளவர்கள் வாசித்துப் பயனடையுங்கள்.
வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited
ஜனவரி 15, 2019 | செவ்வாய்
விரிவான புத்தக விமர்சனம்
(Chapter-1 – A Winner is born)
SSN பிறப்பிலேயே வித்தியாசம் காட்டியவர் என்கிறார் திரு. ரமணன்
1912 பனிபொழியும் டிசம்பர் மாதத்தில் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அந்த சிறிய வீட்டில் உள்ள அந்த அறை வாசலில் அனைவரும் காத்திருக்கிறார்கள் பிறக்கப் போகும் குழந்தையின் அழுகுரலுக்காக.
குழந்தை பிறந்தது. ஆனால் அழவே இல்லை. சின்ன விசும்பல்கூட இல்லை. பிரசவம் பார்த்த மருத்துவச்சிகள் சூடான பெரிய இரும்பு ஊசிகள் மூலம் விபூதி போடுவதைப்போல உடலில் 18 இடங்களில் முத்திரையிட்டனர். ஆனாலும் குழந்தை அழவே இல்லை.
அடுத்த முயற்சியாக கொதிக்கும் வெந்நீரில் முக்கி எடுத்தனர். குழந்தை மெல்லியதாக அழ ஆரம்பிக்க மென்மேலும் சில முயற்சிகள் மூலம் அதை பெருங்குரலெடுத்து அழ வைத்தனர்.
இதன் காரணமாய் அந்தக் குழந்தைக்கு பின்னாளில் குரலில் மென்மைத்தன்மை இல்லாமல் போனது.
அந்த அதிசயக் குழந்தை யார் தெரியுமா? அவர்தான் சங்கரநாராயணன். இவரை SSN என நாம் குறிப்பிடுவோம்.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
அதிசயங்கள் புரிய இருக்கும் சிலர் பிறக்கும்போதே அதிசயக் குழந்தையாகவே பிறப்பார்களாம். அந்த வகை குழந்தைதான் SSN.
(Chapter-2 – On the banks of Agni River)
SSN குடும்பப் பிண்ணனி திரு. ரமணன்
SSN அம்மா காமாட்சி, அம்மா சீதாராம ஐயர், தாத்தா வாசுதேவ ஐயர், பாட்டி பாகிரிதி, தாய்வழி பாட்டி மீனாட்சி, தாத்தா சுந்தர தீட்சிதர் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கண்முன் நிறுத்துகிறார் திரு. ரமணன். மேலும் அவர்கள் செய்துவந்த பணி, ஆற்றிய சேவைகள், தொடர்ச்சியாக செய்துவந்த பூஜைகள் என அவர்கள் பரம்பரை வழக்கங்களை காட்சிப்படுத்தியுள்ளார்.
அந்தக் குடும்பத்தில் 27 வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஆண் குழந்தை என்ற முறையில் SSN செல்லப் பிள்ளை. குறிப்பாக பாகிரிதி பாட்டிக்கு.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
Lovely Family. அழகான, ஆச்சாரமான, பாரம்பர்யத்தைக் காப்பாற்றிய அருமையான குடும்பப் பின்னணி. படிக்கவே அத்தனை ஆனந்தமாக இருந்தது.
(Chapter-3 – Enterinng into a new world)
SSN க்கு மனதுக்கு மிகவும் பிடித்தது பிசினஸ் என்கிறார் திரு. ரமணன்
SSN கடலூர் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். SSN நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர் மட்டுமல்ல நல்ல நினைவாற்றல், எதையும் எளிதாகவும் விரைவாகவும் புரிந்துகொள்ளக் கூடிய மாணவராகவும் இருந்தார். 6-ம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை ஸ்காலர்ஷிப்பிலேயே படித்தார். அதுவும் மாவட்ட அளவில் நடந்த போட்டித் தேர்வில் வெற்றிபெற்றதால் கிடைத்த உதவித்தொகை.
SSN அப்பாவின் பணி இட மாற்றல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம்.
SSN படிக்கின்ற காலத்திலேயே சகிப்புத்தன்மை, மனிதர்களின் மீதான மதிப்பு, எந்த எல்லைக்கும் சென்று பிறருக்கு உதவுதல் என மிகச் சிறந்த பண்புகளுடன் வளர்ந்தார்.
1928 –ல் கணிதத்தை மேஜராக எடுத்து கல்லூரியில் காலடி எடுத்து வைத்த SSN, படிப்புடன் சேர்த்து இசை, ஆங்கில இலக்கியம், ஸ்போர்ட்ஸ் மற்றும் நாடகக் கலை இவற்றில் ஆர்வமாக இருந்தார். டென்னிஸ், வாலிபால் என அனைத்திலும் ஈடுபாடு காட்டினார். தினமும் உடற்பயிர்சி செய்து தன்னை ஹெல்தியாக வைத்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டினார்.
கல்லூரி முடிந்ததும் மாதம் 30 ரூபாய்க்கு ஆசிரியர் பணி கிடைத்தது. ஆனால் SSN மனம் முழுவதும் பிசினஸ் ஆர்வமே.
காரணம் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அவருக்கு ஏற்பட்ட 2 அனுபவங்கள்.
முதலாவதாக, பள்ளியில் மாணவர்களின் பிராஜெக்ட் ஒன்றுக்கு தனிப் படங்கள் தேவையாக இருந்தது. ஆனால் மார்க்கெட்டில் நிறைய படங்கள் அடங்கிய சார்ட்டே கிடைத்தது. SSN அதை வாங்கிவந்து மாணவர்களுக்குத் தேவையான படங்களை மட்டும் கட் செய்து விற்று பணம் சம்பாதித்தார்.
இரண்டாவதாக, தஞ்சாவூரில் படித்து வந்த போது ஒரு சில்க் வியாபாரி, மிகப் பெரிய அளவில் செலவு செய்து தன் மகளுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்தார். ஐந்து நாட்கள் முன்னணி கலைஞர்களை ஏற்பாடு செய்து கலகலப்பான திருமணம். SSN அந்த வியாபாரிக்கு, ஸ்பீக்கர் மற்றும் ஆப்ளிஃபையர் வைத்தால் இசை நிகழ்ச்சிகள் இன்னும் அருமையாக இருக்கும் என யோசனை சொல்ல அதை அவரும் ஏற்க சென்னையில் இருந்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார் SSN.
இந்த ஏற்பாட்டுக்காக சென்னையில் இருந்து வரழைத்த எலக்ரிக்கல் காண்ட்ராக்டரிடம் இருந்து 100 ரூபாய் கமிஷன் கிடைத்தது. சில்க் வியாபாரி ஒரு ஜோடி வேட்டியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
இதுபோன்ற சின்ன சின்ன பிசினஸ் அனுபவங்கள் SSN க்குள் பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தை வளர்த்தது என்கிறார் திரு. ரமணன்.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
படிப்பு மட்டும் இல்லாமல் பல்துறை ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே வாழ்க்கையில் தன் Comfort Zone தாண்டியும் வேலை செய்ய முடியும். ரிஸ்க் எடுத்து செயல்பட முடியும். வெற்றி தோல்வி எதுவந்தாலும் கவலைப்படாமல் அடுத்தடுத்து நகர்ந்துகொண்டே இருக்க முடியும்.
(Chapter-4 – Enterinng into a new world
to
Chapter 8-Silver Lining in Sheet Metal)
அத்தியாயம் 4 முதல் அத்தியாயம் 8 வரை SSN செய்துவந்த பிசினஸ் அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள், வெற்றிகள், தோல்விகள் என பல்வேறு சுவையான அனுபவங்களை புள்ளி விவரங்களுடன் அழகாக எடுத்துரைத்துள்ளார் திரு. ரமணன். பிசினஸில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், பிசினஸ் செய்துகொண்டிருப்பவர்களுக்கும் நிச்சயம் அந்த அத்தியாயங்கள் விருந்துதான். அவரவர்கள் படித்தால் மட்டுமே அந்த டேஸ்ட்டை உணர முடியும் என்பதால் அந்த அத்தியாயங்கள் அவரவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.
எந்த ஒரு சூழலையும் பிசினஸாக்குவதை தன் வசப்படுத்திய SSN உண்மையிலேயே வியப்புக்குரியவரே.
(Chapter-9 – A Happy farmer)
SSN அவர்களின் விவசாயத்தின் மீதான ஆர்வம் குறித்து திரு. ரமணன்
1966 ஆம் ஆண்டு SSN வாழ்க்கையில் தன் பொறுப்புகள் அத்தனையையும் முடித்து விட்ட திருப்தியை அடைகிறார். பிசியான கமர்ஷியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற விரும்பினார். ஆனால் சும்மா உட்கார்ந்து பிராத்தனை செய்து பக்தி புத்தகங்களை படித்து நாட்களை ஓட்ட விரும்பாமல் ஏதேனும் பயனுள்ள வகையில் நாட்களை நகர்த்த விவசாயம் செய்ய நினைத்தார்.
கூடுவாஞ்சேரிக்கு அருகில் உள்ள கன்னிவாக்கம் என்ற இடம் அந்த காலத்தில் சென்னையைத் தாண்டிய புறநகர் பகுதியாகக் கருதப்பட்டு வந்தது. அந்த இடத்தில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கினார் SSN. அதன் பெரும்பாலான பகுதி காடாக இருந்தது. சிறு பகுதி மட்டுமே விளைநிலமாக இருந்தது.
SSN வழக்கம்போல அந்த நிலத்தை விஞ்ஞான முறைப்படி சீரமைக்க நினைத்தார். விவசாயத்துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையின்படியும் மற்றும் அது சம்மந்தப்பட்ட புத்தகங்களைப் படித்தும் அந்த நிலத்தை பெரும் செலவு செய்து சீரமைத்தார்.
தான் அவ்வப்பொழுது வரும்போது தங்குவதற்காக அங்கேயே சிறிய பண்ணை வீடு கட்டினார். தன் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியான இயற்கை சூழலில் ஒரு விவசாயியாக கழிக்க நினைத்தார். ஆனால் அது அத்தனை சுலபமல்ல என்பதையும் உணர்ந்தார். தான் அங்கில்லாத நாட்களில் அந்த நிலத்தை பராமரிக்கவும் கவனிக்கவும் ஒருவரை நியமித்தார். அப்படியும் விளைகின்ற பொருட்களில் 50% திருடப்பட்டு மீதி 50% மட்டுமே கைக்குக்கிடைத்தது.
இதற்கிடையில் SSN ஆஸ்த்மா நோயால் தீவிரமாக பாதிப்படைகிரார். 1970 – ஆம் ஆண்டு இறுதியில் அவரது பிள்ளைகள் யாரும் அந்த நிலத்தை பராமரிக்க முன் வராததால் அந்த நிலத்தை முழுவதும் விற்றுவிடுகிறார்.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
தான் எடுத்துக்கொண்ட துறை எதுவானாலும் அதில் வெற்றி கிடைக்குமா தோல்வியடையுமா என்பது குறித்தெல்லாம் யோசித்துக் குழம்பாமல், முழுவதுமாக தன்னை அற்பணித்துக் கொண்டு அதில் புதுமைகளைப் புகுத்தி தொழில்நுட்பத்தின் உச்சங்களை எல்லாம் பயன்படுத்தி அதை மேம்படுத்தி தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு வாழ்ந்த SSN என் பார்வையில் வியத்தகு மனிதரே.
(Chapter-10 – Handing Over the Baton)
SSN அவர்களின் பிசினஸ் வளர்ச்சி குறித்து திரு. ரமணன்
1970 ஆம் ஆண்டு SSN அவர்களின் மகன் சீதாராமன் லார்சன் & டர்போவில் பணியில் சேர்ந்து அதை விட்டு விலகி சொந்தமாக Microturns என்ற கம்பெனி உருவாக்கினார். இது SSN மற்றும் அவரது 4 பிள்ளைகளும் இணைந்த பார்ட்னர்ஷிப் நிறுவனமானது. SSN தன் மகன் சீதாராமனுக்கு பிசினஸின் அத்தனை நுணுக்கங்களையும் நிதி நிர்வாகத்தையும் கற்றுக்கொடுத்தார். தினமும் டைரி எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இன்றளவும் திரு. சீதாராமன் அந்த பழக்கத்தைக் கடைபிடித்து வருகிறார்.
தன் மகன் நுழைய விரும்பிய Cold Forging Technology தொழில்நுட்பம் இந்தியாவுக்கு புதிது என்பதால் யு.எஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து அந்தத்துறை சார்ந்த புத்தகங்களைப் படித்து மகனுடன் டிஸ்கஸ் செய்து அவரை அந்தத்துறையில் சாதிக்க பெருமளவில் உதவினார். இன்று அந்த தொழில்நுட்பத்தில் உச்சத்தை அடைந்துள்ளார் திரு. சீதாராமன்.
தோல் பொருட்களை விற்பனை செய்வதில் தொடங்கிய SSN அவர்கள் வாழ்க்கையில் Master Cutter, Army Clothing Supplier, Civil Engineering Contractor, Master Printer, Steel Drum Manufacturur, Agriculturist என்று பல துறைகளில் உச்சம் தொட்டு இந்த காலகட்டத்தில் Cold Forging Technology தொழில்நுட்பத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய தொழிலதிபராக அவதாரம் எடுத்தார்.
SSN அவர் மகன் சீதாராமனுடன் இணைந்து Super Auto forge Private Limited என்ற நிறுவனத்தைத் துவக்கினார். இந்தியாவிற்கு Cold forging தொழில்நுட்பத்தை கொண்டு வந்தவர்கள் இவர்கள். இன்று திரு. சீதாராமனும் அவரது மகனும் இந்த நிறுவனத்தை நிர்வகிக்கிறார்கள். மொத்த வியாபாரம் பல கோடிகளைத் தொடப்போகிறது. 90% ஏற்றுமதி. இருந்தபோதிலும் மிக எளிமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பவர்கள்.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
ஒரு பிசினஸில் நாம் கற்கும் அனுபவங்கள் அத்தனையையும் நாம் தொடங்கும் எல்லா முயற்சிகளிலும் பணத்துடன் சேர்த்து முதலீடாக்கும்போது வெற்றி கிடைப்பது உறுதி.
அப்படித்தான் SSN படிப்படியாக முன்னேறி வந்துள்ளார்.
(Chapter-11 – The Family)
SSN அவர்களின் குடும்பம் குறித்து திரு. ரமணன்
‘The Family’ : அத்தியாயம் 11 – SSN அவர்களின் குடும்பம் குறித்து விரிவாக உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளார் திரு. ரமணன்.
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை குறிப்பிட்டு SSN வெற்றிக்குப் பின் அவரது மனைவியே பெருந்துணையாக இருந்திருக்கிறார் என்று தொடங்கி அவரது செயல்பாடுகளை விவரித்துள்ளார். அவரது மனைவி திருமதி நாமகிரி அன்பு, பண்பு, பாசம், அரவணைப்பு, பிறருக்கு உதவும் மனிதாபிமானம் என அனைத்தின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவர்.
SSN வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் வேலை, தொழில், பணம் என எல்லாவற்றையும் இழந்து கஷ்டப்பட்ட காலத்தில் இருந்து தொடங்கி கடைசி காலத்தில் வானப்பிரஸ்தம் செல்ல முடிவெடுத்த காலம் வரை அவருடைய எல்லா செயல்பாடுகளுக்கும் ஆதரவாக இருந்திருக்கிறார்.
தெருவில் முகம் தெரியாத நபர் ஏதேனும் அடிபட்டு விழுந்திருந்தால்கூட அவரை மருத்துவமனையில் சேர்ப்பதோடு, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களை ஃபாலோ அப் செய்யவும் செய்வாராம். அந்த அளவுக்கு கருணை உள்ளம் கொண்டவர் என விவரித்துள்ளார் திரு. ரமணன்.
நிறைய நேரம் பூஜை செய்வதற்கோ அல்லது புத்தகங்கள் படிப்பதற்கோ பொறுமை இல்லாவிட்டாலும் தீவிரமான மத நம்பிக்கைக் கொண்டவர். இவரது கடைசி காலத்தில் 3 மில்லியன் முறை ராம நாமா எழுதி முடித்ததாகவும், இதை அவர்கள் குடும்பம் ஒரு நிகழ்சியாகவே கொண்டாடினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
பெரும்பாலான முந்தைய தலைமுறை பெண்கள் தங்கள் கணவரின் அத்தனை செயல்பாடுகளுக்கும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அதே சமயம் தங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்வதையும் மறந்திவிடவில்லை. தங்கள் இயல்புக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப தாங்கள் செயல்படுவதையும் விட்டுக்கொடுப்பதில்லை.
இன்று பெண்ணியத்தை தவறாக புரிந்துகொண்டு தவறாக செயல்பட்டு வரும் இளைய தலைமுறையினருக்கு இவரும் ஆகச் சிறந்த ஒரு ரோல்மாடல்! இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ‘நேர்மையான பெண்ணியவாதி’.
SSN அவர்களின் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் குறித்து திரு. ரமணன்
பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பெற்றோர் இருக்கும்வரை ஒற்றுமையாக இருக்கும் பிள்ளைகள் அவர்கள் காலத்துக்குப் பிறகு ஒற்றுமையாக இருப்பதில்லை.
ஆனால் SSN மறைந்து 30 வருடங்களுக்குப் பிறகு, அவரின் 4 பிள்ளைகள் மட்டுமில்லாமல், அடுத்த தலைமுறை 11 பேரன் பேத்திகளும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் அன்புடனும் பாசத்துடனும் இருக்கிறார்கள்.
SSN குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். SSN குடும்பத்தைப் பற்றி இதைவிட உயர்வாகச் சொல்ல வேறொன்றும் சொல்வதற்கில்லை. இதற்குக் காரணம் SSN அவர்களும் அவரது மனைவி திருமதி நாமகிரி இருவரும் வாழ்ந்து காட்டிய தார்மீக வாழ்க்கையே என்கிறார் திரு. ரமணன்.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
பல குடும்பங்கள் பெற்றோர் மறைவுக்குப் பிறகு சிதைவதற்குக் காரணம் அவர்களின் வாழ்க்கை முறையாகவும் இருக்கலாம். அவர்கள் வாழ்ந்து காட்டுவதைத்தானே குழந்தைகள் பார்த்து வளர்கிறார்கள். பெற்றோர் என்ன செய்தார்களோ அதுவே திரும்ப அவர்களுக்கும் கிடைக்கிறது. எதை விதைக்கிறோமோ அதுவே விளைகிறது. இதில் விதி விலக்குகள் இருக்கலாம்.
(Chapter-12 – The Complete Man)
SSN அவர்களின் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறித்து திரு. ரமணன்
‘SSN – The Complete Man’ என்ற கடைசி அத்தியாயத்தில் பக்கம் 118-ல் SSN அவர்களின் வெவ்வேறு துறை சார்ந்த புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மிக அழகாக எழுதியுள்ளார் திரு. ரமணன்.
தன்னுடைய சிறிய வயதில் இலக்கியம், கவிதைகள், வரலாறு, தத்துவங்கள், பொருளாதாரம், மருத்துவம், வானியல் போன்றவற்றை ஆழ்ந்து படித்தவர் மத்திம வயதில் மதம் சார்ந்த இலக்கிய புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டினார். தமிழில் பாரதியாரும், ஆங்கிலத்தில் பெர்னாட்ஷாவும் இவரது விருப்ப நாயகர்கள். எல்லா இடங்களிலும் இவர்கள் கொடேஷன்களைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இயல்பிலேயே புத்திசாலியாக இருந்த SSN தன் சிறு வயதிலேயே ஏராளமான வெவ்வேறு துறைசார்ந்த நூல்களை படித்ததன் காரணமாக அறிவாளியாகவும் திகழ்ந்தார். மேலும் விடா முயற்சி என்பதை தன் சுபாவமாகவே கொண்டிருந்த SSN உபநிஷத்துக்கள் (உபநிடதங்கள்), பகவத் கீதை, நாராயணீயம், சவுந்தர்யலஹரி போன்றவற்றையும் வரிவிடாமல் படித்து தன்வசப்படுத்தினார்.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
வெவ்வேறு துறைசார்ந்த புத்தகங்கள் நிறைய படித்து, படித்ததில் உள்ள கருத்துக்களை உள்வாங்கி தன் மனதை விசாலப்படுத்தியுள்ளார் SSN. படிப்பதையும் அதிலுள்ள கருத்துக்களையும் தான் எழுதும் படைப்புகளுக்கும், மேடையில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மட்டும் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு மத்தியில் SSN எனக்கு வித்தியாசமானவராகவே தெரிகிறார். அதனால்தான் அவர் வாழ்க்கையிலும் பிசினஸிலும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் மீதான அவரது கண்ணோட்டமும் வித்தியாசமாக இருந்திருக்கிறது. எல்லாவற்றையும் தைரியமாக சந்தித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.
SSN இறை மற்றும் மத நம்பிக்கை குறித்து திரு. ரமணன்
அடிக்கடி கோயில்களுக்கும் மடங்களுக்கும் சென்று தன் மத நம்பிக்கையை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும், SSN மறைந்த முன்னோர்களுக்கு செய்கின்ற தர்பணம் மற்றும் சிராத்தம் போன்ற மத சம்பிரதாயங்களை என்றுமே விட்டுக்கொடுத்ததில்லை.
மேலும் ஸ்ரீராமரை மிஞ்சிய தெய்வமில்லை எனக் கருதி தன் பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தார்.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
ஏதேனும் ஒரு நம்பிக்கையை எந்த கேள்வியும் கேட்காமல் ஆராய்சிகள் செய்யாமல் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நம் மனமும் ஒருமுகப்படுத்தப்படும். நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது, அது நம்மை இயக்குகிறது என்ற நம்பிக்கையே வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கு அஸ்திவாரமாகும். தவறுகள் செய்யாமல் நம் மனதை நல்வழிப்படுத்த அந்த நம்பிக்கைகள் அவசியம்.
SSN கடைபிடித்த வானப்பிரஸ்தம் குறித்து திரு. ரமணன்
இந்த வானப்பிரஸ்தம் காலத்தையும் SSN அவர்கள் முறையாக கடைபிடித்ததாக ‘SSN – The Complete Man’ என்ற கடைசி அத்தியாயத்தில் மிக அழகாக எழுதியுள்ளார் திரு. ரமணன்.
Page 119: The Purpose of life as per Bhagavad-Gita is to purify our existance from all material contamination by practicing Bhakti-Yoga. In 1983 SSN decided to move to Guduvancheri, Calling this as his ‘Vanaprastha’; a stage of life prescribed in Hindu religion to stay away from dear and near ones and focus on spiritual subjects.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
வானப்பிரஸ்தம் என்பது மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும். இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல்.
இந்தக் காலகட்டத்தில் பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே முக்கியமான கடமைகளாகும்.
துறவறத்திற்கு ஆயத்தப்படுத்தும் காலமே வானப்பிரஸ்த வாழ்க்கை. இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்.
இன்று பலரும் தன் 60 வயதுக்குப் பிறகும் புகழுக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு அதன் பின் ஓடிக்கொண்டிருப்பதைக் காணும்போது, பரிதாபமே மிஞ்சுகிறது.
SSN தன் வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்து வாழ்திருக்கிறார் என்ற மனநிறைவு எனக்கு ஏற்பட்டது. கடைசி அத்தியாத்தின் தலைப்பு ‘SSN – The Complete Man’ என்பது மிகப் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது.
SSN வாழ்க்கை ஒரு பொக்கிஷம் என்கிறார் திரு. ரமணன்
SSN மறக்க முடியாத உன்னத வாழ்க்கையை வைரம்போல கருதி புதையலாகக் கருதி பொக்கிஷமாகப் பாதுக்காத்து வருகிறார்கள் அவரது சந்ததியினர்.
இதையே மிக அழகாக ‘To live in the hearts of those we leave behind, is not to die…’ என்று எழுதி முடித்திருக்கிறார் திரு. ரமணன்.
இதைப் படித்தபோது எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்…
வாழ்க்கையை அதிகபட்ச ரசனையுடன் அனுபவித்து வாழ்ந்ததோடு அதன் ஏற்றத் தாழ்வுகளை தன் மனதைரியத்தால் எதிர்கொண்டு சமாளித்து விடாமுயற்சியுடன் போராடி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ எனச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
இவர் இன்றைய இளைய சமுதாயத்துக்கு ஒரு மாபெரும் ரோல்மாடல்.
‘SSN – The Complete Man’ என்பதுடன் SSN – The Great Admirable Excellent Human being’ என்றே எனக்குத் தோன்றுகிறது.
புத்தகத்தை முழுமையாகப் படித்து
சுருக்கமாக மொழிபெயர்த்து
தன் சுய கருத்துக்களையும் இணைத்து விமர்சனம் எழுதியவர்
காம்கேர் கே. புவனேஸ்வரி
இந்த விமர்சனத்துக்கு திரு. ரமணன் அவர்களிடம் இருந்து வந்திருந்த பாராட்டு! இமெயிலில்…
அன்புடன் ரமணனிடமிருந்து…
நன்றி. மிக சந்தோஷமாக இருக்கிறது. மிகமிக மெனக்கெட்டிருக்கிறீர்கள். முழுவதும் படித்து ஒவ்வொரு அத்தியாயத்தையும் அழகாகத் தமிழில் சுருக்கி அதன் மீதான உங்கள் பார்வையும் எழுதியிருக்கிறீர்கள். நன்றி என்ற ஒரு வார்த்தையால் எல்லா நேரங்களிலும் முழு உணர்வுகளையும் வெளிப்படுத்திவிட முடியுமா என்பது பற்றி பல முறை நான் யோசிப்பது உண்டு. இன்று அந்த எண்ணம் மீண்டும் எழுந்தது நிஜம்.
திரு. ரமணன் அவர்கள் மூலம் Super Auto forge Private Limited நிறுவன தலைவர் திரு. சீதாராமன் அவர்களிடம் இருந்து வந்திருந்த பாராட்டு! இமெயிலில்…
Extremely nice analysis of the book. Please convey my thanks to the writer.
Best Wishes
Seetharaman