‘மணிமேகலை பிரசுரம்’ ரவி தமிழ்வாணன்

2017 – எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள் எங்கள் முதன்மைப் பணியாக இருந்தாலும் எழுத்து என் உயிர்மூச்சு.

என் சாஃப்ட்வேர் துறையில் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அறிவை எழுத்துவடிவில் அச்சு புத்தகமாகவும், இ-புத்தகமாகவும் எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாகவே வெளியிட்டு அதிலும் முத்திரைப் பதித்து வருகிறோம்.

என் 12 வயதில் இருந்தே என் படிப்புடன் இணைந்து என் கற்பனையை எழுத்துவடிவில் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால் கல்வியுடன் இணைந்து தமிழும் எழுத்தும் அதிகம் பரிச்சயமானது என்றே சொல்லலாம். நான் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று வெளியே வந்தபோது, கதை கவிதை கட்டுரை என என் எழுத்தும் 100-ஐத் தொட்டிருந்தது.

20 வருடங்களுக்கு முன்பு, தகவல் தொழில்நுட்பத்தையும் எழுத்துவடிவில் கொண்டுவருவதில் நான் முனைந்திருந்த காலகட்டத்தில்  மணிமேகலை பிரசுரத்தின் மூலம் கம்ப்யூட்டர் ரிப்பேரிங் & அசெம்ப்ளிங், ஆரக்கிள் முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள், கோரல் டிரா, ஃப்ளாஷ்-அனிமேஷன் கற்றுக்கொள்ளுங்கள் போன்ற தனித்துவம் வாய்ந்த ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிடும் வாய்ப்பைப் பெற்றேன்.

திரு. லேனா தமிழ்வாணன் மற்றும் திரு. ரவி தமிழ்வாணன் – தமிழ் பதிப்பகத் துறையில் நான் வியக்கும் இருவர் இவர்கள். தமிழர்கள் வாழுகின்ற 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பயணம் செய்து புத்தகக்கண்காட்சி அமைத்து புத்தக விற்பனை செய்து தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் சேவை செய்து தமிழை உலகளாவி பரப்பி வரும் இவர்களை சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், ‘உலகம் சுற்றி தமிழ் பரப்பும் சிகரங்கள்’ எனலாம்.

இவர்கள் பதிப்பகத்தில் நான் எழுதிய புத்தகங்கள் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகமெங்கும் தமிழ்பேசும் மக்கள் இருக்கின்ற அத்தனை நாடுகளிலும் சென்றடைந்துள்ளன. அவ்வப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து நம் தமிழ்மக்களிடம் இருந்து வருகின்ற போன் அழைப்புகளும், உற்சாக வாழ்த்துகளும்தான் அதற்கு சாட்சி.

‘மணிமேகலை பிரசுர கண்காட்சியில் உங்கள் புத்தகங்கள் வாங்கினோம். தமிழ்வாணன் குடும்பத்தினரை சந்தித்தோம். உங்கள் புத்தகங்களை வாங்கினோம். படித்தோம். எளிமையாக உள்ளது… அனிமேஷன் துறையில் உங்கள் புத்தகம் படித்துத்தான் சேர்ந்தேன், ஆரக்கிள் புத்தகம் படித்து டேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக உள்ளேன், நானே சொந்தமாக கிராஃபிக்ஸ் கம்பெனி ஆரம்பிக்க கோரல் டிரா புத்தகம் உதவியது, சர்வீஸ் செண்டர் ஆரம்பித்து இன்று என்கீழ் 10 பேர் பணியில் உள்ளார்கள்-காரணம்  நீங்கள் எழுதிய கம்ப்யூட்டர் அசெம்ப்ளிங் & ரிப்பேரிங் புத்தகம்’

என் எழுத்தையும் அதன் பயனையும் போற்றி எத்தனையோ வாழ்த்துகள் வந்துகொண்டிருந்தாலும் அடிப்படையில் அவர்கள் சொல்லும் கருத்துக்கள்தான் இவை.

தமிழில் எழுதும் புத்தகங்கள் கிராமம் மற்றும் நகர்புற மக்களை மட்டுமே சென்றடைகின்றன என்றெண்ணிக்கொண்டிருந்த நாட்களில் அவை கடல்கடந்து உலக நாடுகளை சென்றடைந்து அதுவே எனக்கு உற்சாகமாகி இடைவிடாமல் என்னை இயங்கச் செய்தது என்று சொன்னாலும் அது மிகையல்ல.

சில்வர் ஜூப்லி ஆண்டில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நேரில் சந்திக்கும் முயற்சியில் மணிமேகலை பிரசுரத்தில் திரு. ரவி தமிழ்வாணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு.

‘தனி ஒரு பெண்ணாக One Man Army – ஆக செயல்பட்டு ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் திறம்பட நடத்திக்கொண்டிருப்பது  பிரமிக்க வைக்கிறது… இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்…’ என்ற வாழ்த்துச் செய்தியைப் பெற்று மனநிறைவுடன் விடைபெற்றேன்.

இன்று(ம்) ஓர் இனிய நாள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி

செப்டம்பர் 14, 2017

(Visited 425 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon