திரு. க.ஜெயகிருஷ்ணன்!
இவருக்கும் எனக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. வளர்தொழில் என்னும் பத்திரிகை ஆசிரியரான இவர் தமிழ் கம்ப்யூட்டர் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து 25 வருடங்களாகின்றன. எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும் தற்போது 25-ஆம் ஆண்டில் சில்வர் ஜூப்லி வருடத்தில்.
என்னுடன் பயணித்து வரும் நல்லுள்ளங்களை நேரில் சந்திக்கும் முயற்சியில் நேற்றைய சந்திப்பு இவருடன்.
நான் 1992-ல் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து சென்னை வந்து, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் தலைக்காட்டவே தயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சாஃப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்து புதுமைகளைப் புகுத்தத் தொடங்கி இருந்த நேரத்தில், கம்ப்யூட்டர் குறித்து நம் மக்களிடம் பலதரபட்ட கருத்துக்கள் நிலவி வந்தன.
கம்ப்யூட்டர் படித்து பட்டம் பெற்றவர்களுக்காக மட்டுமே, ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு மட்டுமே, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என பல்வேறு கருத்துக்களால் அது ஒரு காட்சிப்பொருள். அவ்வளவே. ஒரு கம்ப்யூட்டரின் விலை லட்ச ரூபாய்க்கு குறையாமல் இருந்தது.
இந்த மூன்று கருத்துக்களையும் உடைத்தெறிந்து தமிழை கம்ப்யூட்டரில் பயன்படுத்த சாஃப்ட்வேர்களை முதன்முதலில் தயாரித்து வெளியிட்டு ‘தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்த முதல் தொழில்நுட்ப வல்லுநர்’ என்ற விருதையும் பெற்றேன்.
அதே நேரத்தில் ‘தமிழ் கம்ப்யூட்டர்’ பத்திரிகையும் தமிழால் கம்ப்யூட்டரை நெருங்க முடியும், சாதிக்கவும் முடியும் என்பதை நிரூபித்துக்கொண்டே வந்தது.
அடிப்படையில் எழுதுவதில் ஆர்வம் உள்ள எனக்கு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் நான் பெறுகின்ற அனுபவங்களை எனக்குள் தேக்கி வைத்துக்கொள்ள முடியவில்லை.
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பத்தில் எங்கள் நிறுவனம் மூலம் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர்கள் வழியாக நான் பெறுகின்ற அனுபவங்களை கட்டுரைகளாகவும், தொடராகவும் எழுதி வெளியிட ‘தமிழ் கம்ப்யூட்டர்’ பத்திரிகை உதவியது. இதன் ஆசிரியர்தான் திரு.க.ஜெயகிருஷ்ணன் அவர்கள்.
தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமான அனிமேஷன் குறித்த தொடர்கள், தகவல்தளநுட்பத்தின் உச்சமான ஆரக்கிள் குறித்த தொடர்கள், கம்ப்யூட்டரின் அடிப்படையான ‘பேசிக்’ மொழி குறித்த விரிவான தொடர்கள் என பல தொடர்களை ‘தமிழ் கம்ப்யூட்டர்’ பத்திரிகையில் எழுதி தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவலாக கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கொண்டு சென்றேன்.
பின்னாளில் அவற்றைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டேன்.
‘தமிழ் கம்ப்யூட்டர்’ பத்திரிகை ஆசிரியரான திரு. க.ஜெயகிருஷ்ணன் அவர்கள் என் முதல் ஆங்கிலப் புத்தகத்தை (Easy Way to Learn C Language) வெளியிட்டார். இது ஓர் அழகிய முரண்.
நேற்றைய சந்திப்பில் இந்த முரண் குறித்து அவரிடம் பெருமையுடன் நினைவு கூர்ந்தபோது அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
‘காம்கேர் புவனேஸ்வரி சமுதாயத்துக்கு நல்ல விஷயம் செய்கிறார். அதற்கு நாமும் உதவலாமே… அது மட்டுமே காரணம்…’
இன்று கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் ஏராளமான தொழில்நுட்பப் புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு வருகிறேன்.
சென்னை வந்து காம்கேர் நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில், அதிகம் பேசாத இயல்புடைய நான், தொழில்நுட்பம் குறித்து அதிகம் பேசியது இவரிடம்தான். வயது வித்தியாசம் பார்க்காமல் நான் சொல்லும் கருத்துக்களை காதுகொடுத்து கேட்டு, அதற்கு அவர் பார்வையில் அழகிய விளக்கமும் கொடுப்பார்.
இடையிடையே என் வளர்ப்பு, தாய் தந்தை, குடும்பம் என பேசியதால் ஈர்க்கப்பட்ட அவர் என் பெற்றோரை பேட்டி எடுத்து ‘தலைமுறை இடைவெளி எங்களுக்குள் இல்லை’ என்ற தலைப்பில் அப்போது அவர் ஆரம்பித்து நடத்தி வந்த ‘ஹெர்குலிஸ்’ என்ற ஆண்களுக்கான வாழ்வியல் பத்திரிகையில் வெளியிட்டு சிறப்பித்தார்.
எத்தனையோ பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என மீடியாக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு என் திறமைக்கு மகுடம் சூட்டி என்னை இந்த சமுதாயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் பெற்றோரை சிறப்பித்த பெருமை இவரையே சாரும்.
இன்றைய சந்திப்பில் தொழில்நுட்பத்தையும் தாண்டி சமுதாயம் குறித்தும் நிறைய பேசினோம்.
கடவுள், கர்மா இவற்றில் இவருடைய கருத்துக்களில் இருந்து முற்றிலும் நான் மாறுபட்டிருந்தாலும் இவர் சொல்லுவதில் உள்ள நியாயத்தை காதுகொடுத்து கேட்டு மதிப்பளிப்பேன்.
இன்றைய கமர்ஷ்யல் உலகில், சாதுர்யமாக சூழலை சமாளிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் என்று சொன்னதோடு முத்தான ஒரு கருத்தையும் மிக அழகாக சொன்னார்.
மனிதர்களில் மொத்தம் மூன்றே பிரிவினர்.
எப்போதுமே நல்லவர்களாகவே நல்ல செயல்களை மட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் – முதல் பிரிவினர்.
எப்போதுமே கெட்டவர்களாகவே, தீய செயல்களை மட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் – இரண்டாவது பிரிவினர்.
வாய்ப்பு கிடைத்தால் கெட்டது செய்பவர்கள் – மூன்றாவது பிரிவினர்.
இவற்றில் மூன்றாவது பிரிவினரிடம் மட்டும் ஜாக்கிரதையாக இருந்துவிட்டால் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருந்துவிட முடியும் என்று சொல்லி, ‘இப்போதுபோல் எப்போதும் இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் நல்லது செய்துகொண்டே இருங்கள்…’ என்று மனதார வாழ்த்தியதை மகிழ்வோடு ஏற்று விடைபெற்றேன்.
இன்று(ம்) ஓர் இனிய நாள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 18, 2017