ஓர் இனிய நாள்.
எங்கள் காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டில் விகடன் வாயிலாக எனது 100-வது புத்தகம் (கம்ப்யூட்ராலஜி) இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு மாதத்தில் (ஏப்ரல் 2017) வெளிவந்ததைத் தொடர்ந்து, நேற்று விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சந்திப்புக்கு முன்பே புத்தகம் வெளியான தமிழ் புத்தாண்டில் எனக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்.
கணினி மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாகியாக மட்டுமில்லாமல் படைப்பாளியாகவும் செயல்பட்டு இதுவரை 100 புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருப்பதற்கும், என் கைவண்ணத்தில் பலநூறு புத்தகங்கள் எழுதி வெளிவரவும், வெள்ளிவிழா காணும் காம்கேர் நிறுவனம் பொன் விழா, வைர விழா, பவள விழா என பல விழாக்களைக் கொண்டாடி மேன்மேலும் வளர தன் மனப்பூர்வமான வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.
நேற்று நேரில் சந்திக்கும் வாய்ப்பு.
விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்கள் திறந்த மனதுடனும் இதயத்துடனும், மலர்ச்சியான முகத்துடனும் நான் சொல்ல வருவதை நன்கு புரிந்துகொண்டு அதை ஏற்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நான் எழுதிய 13 புத்தகங்கள் தொடர்ந்து விகடன் வாயிலாக வெளிவந்த பெருமை என்னையேச் சேரும் என பெருமிதத்துடன் கூறியது என் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. திறமைக்குக் கிடைத்த பேரங்கீகாரம் அல்லவா?
மேலும் நான் எழுதிய பல புத்தகங்களின் பெயரைக் குறிப்பிட்டு அவை 17, 18, 19 பதிப்புகள் சென்றுகொண்டிருப்பதையும் வெகுவாகப் பாராட்டினார்.
அவருடைய பாராட்டுக்கு நான் நன்றி சொல்ல முற்பட்டபோது ‘உங்களைப் போன்ற திறமையானவர்கள் விகடனுடன் இணைந்து செயல்படுவது எங்களுக்கும் பெருமைதான் என மேலும் என்னை உற்சாகப்படுத்தினார்.
இந்த சந்திப்பில் கிடைத்த மகிழ்ச்சியும் உற்சாகமும், இனி வரும் காலத்துக்கு சிறப்பாக செயல்படும் வகையில் என் மனதை சார்ஜ் செய்துகொண்டதைப் போல அமைந்தது.
முத்தாய்ப்பாக விகடன் வாயிலாக வெளிவந்த நான் எழுதிய 100-வது புத்தகமான கம்ப்யூட்ராலஜியில், ’வெள்ளிவிழா கண்டு காம்கேர் நிறுவனத்தை ஒரு சிறந்த இடத்துக்கு கொண்டு சென்று பெருமை சேர்த்து உள்ளீர்கள்’ என எழுதி ஆட்டோகிராஃப் செய்து கொடுத்து மனமார வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
காம்கேர் நிறுவனத்தின் என் சாதனைகளுக்கும் உழைப்புக்கும் நற்சான்றிதழ் கிடைத்தைப் போன்ற மன நிறைவுடன் விடைபெற்றேன்.
நன்றி
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஆகஸ்ட் 30, 2017