கற்பனை மனிதர்களுக்கு ‘ரியாலிட்டி’ புரியாது!

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு!

அவர் வரலாற்று நாவல்கள் எழுதும் எழுத்தாளர். அப்போதே அவருக்கு 70+ வயதிருக்கும்.

அவர்  ‘பெண்கள் மேம்பாடு’ குறித்து ஒரு ஆய்வு செய்யப் போவதாகவும் அதற்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்களை சந்தித்து தகவல் திரட்டுவதாகவும் அதற்காக சிறிய மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் தொழில்நுட்பத் துறை சார்பில் விவாதிக்க நானும் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாக ஒரு எழுத்தாளர் மூலம் எனக்கு தகவல் கிடைக்க என்னதான் பேசுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆனாலும் போகலாமா வேண்டாமா என்ற குழப்பம். இது வழக்கமான ‘பெண்ணியம்’ குறித்த உரையாடலாக இருந்துவிடுமோ என்பதே என் குழப்பத்துக்குக் காரணம்.

அந்த நாவலாசிரியரும் என்னை போனில் அழைத்து மீட்டிங்குக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.

வயதில் மூத்தவர். பல நாவல்கள் எழுதியுள்ளார். என் துறை சார்ந்த கருத்துக்களையும் கேட்கிறார். பர்சனலாக போனிலும் அழைத்துள்ளார் என்பதால் நான் அந்த மீட்டிங்குக்குச் செல்லலாம் என  முடிவெடுத்தேன்.

மீட்டிங் அவர் வீட்டில் என முடிவாயிற்று. வயதானவர் நடக்க முடியாது என்பதால் அவர் வீட்டில் வைத்திருக்கிறார் என நினைத்தேன்.

குறிப்பிட்ட நாளும் வந்தது.

எழுத்துத் துறையில், பதிப்புத் துறையில், மருத்துவத் துறையில், இசைத் துறையில் என ஒவ்வொரு துறையிலும் கொஞ்சம் பிரபலமானவர்களுடன் நானும் ஒரு வேனில் அவர் வீட்டுக்குச் சென்றோம். என்னைத் தவிர மற்ற அனைவருக்கும் 50+ வயது.

ஒரு அப்பார்ட்மெண்ட். பழைய பில்டிங். அவர் ஃப்ளாட் முகப்பிலேயே ஒரு வயதான பெண்மணி மீன்களை சுத்தம் செய்துகொண்டிருந்தார். எங்களை நிமிர்ந்து வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு அவர் வேலையில் கவனமானார்.

எங்களால் சுவாசிக்கக் கூட முடியவில்லை. எங்களை மீட்டிங்குக்கு வரச்சொல்லி இருக்கும் நாளிலாவது இதை தவிர்த்திருக்கலாம்.

அவர் ஓர் அறையில் தளர்வாக அமர்ந்திருந்தார். அறையும் காற்றோட்டமாக இல்லை. உயர உயரமாக நான்கு புத்தக அலமாரிகள் அந்த சிறிய அறையின் பெரும்பகுதியை அடைத்துக்கொண்டிருந்தன.

உட்கார்ந்தபடியே எங்களை வரவேற்று எதிரில் இருந்த ஒரு கட்டிலில் அமரச் சொன்னார்.

நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பேசினார்.

அத்தனையும் அவர் எழுதி புத்தகங்கள் குறித்தும், அவர் காலத்து எழுத்தாளர்கள் குறித்தும், அவர் அப்பா தாத்தா என பழைய குடும்பக் கதைகள் பேசினார். தன் பிள்ளைகளிடம் பாரமாக இருக்க விரும்பாமல் இந்த அப்பார்ட்மெண்ட்டில் இருப்பதாகச் சொன்னார்.

** மனைவி இறந்துவிட்டார் என நினைத்தோம். **

எந்த இடத்திலும் ‘பெண்கள் மேம்பாடு’ என்ற டாப்பிக் வரவே இல்லை. எங்களைப் பற்றி கேட்டார். நாங்கள் எங்கள் துறையில் செய்த விஷயங்களைச் சொன்னோம்.

இடையில் அவர் உட்கார்ந்த இடத்திலேயே ஒரு பெண்ணின் பெயர் சொல்லி பெருங்குரலில் அழைத்தார்.

அறை வாசலில் ஒரு பெண்மணி வந்து நின்றார். அனைவருக்கும் டீ போடச் சொன்னார். குரலில் அதிகாரம். தளர்ந்த உடலுக்கான தன்மையான குரல் கொஞ்சமும் இல்லை.

அந்தப் பெண்மணி நாங்கள் அந்த அப்பார்ட்மெண்ட் வாசலில் நுழையும்போது பார்த்த அதே  பெண்மணிதான்.

** வீட்டு வேலை செய்பவர் என நினைத்தோம். **

‘நான் எங்கும் டீ காபி சாப்பிடுவதில்லை’ என்று மறுத்தேன். ஆனாலும் எனக்கும் சேர்த்தே டீ வந்தது. மரியாதைக்கு வாங்கிக்கொண்டு ஓரமாக வைத்தேன்.

அடுத்து அவரது புத்தக அலமாரியில் வைத்திருந்த புத்தகங்களைக் காண்பித்து இதில் உள்ள அத்தனை சரித்திர நாவல்களும் நான் எழுதியவை என மீண்டும் தன் கதையைத் தொடர்ந்தார்.

மற்றவர்கள் ‘அத்தனை நாவல்களும் நீங்கள் எழுதியவையா?’ என கொஞ்சம் ஆச்சர்யம் காண்பிக்க நான் வழக்கம் போல அவர் சொன்னதை ஒரு செய்தியாக மட்டுமே உள்வாங்கிக்கொண்டேன். அது என் இயல்பு.

இடையே நாங்கள் எதற்காக வந்தோமோ அந்த பேச்சை எடுத்தாலும் அவர் அவரது பேச்சில் இருந்து விலகி சப்ஜெக்ட்டுக்குள் வருவதாக இல்லை.

நாங்கள் ஐவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

திடீரென என்னைப் பார்த்து  ‘நான் இறப்பதற்குள் என் இலக்கிய அறிவு முழுவதையும் யாருக்காவது தானம் செய்துவிட்டு போக நினைக்கிறேன். தினமும் 2 மணி நேரம் ஒதுக்கி விட்டு வாருங்கள்… இலக்கியம் கற்றுக்கொடுக்கிறேன்… இலக்கியத்தில் பெரிய ஆளாக வந்துடலாம். இந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பமெல்லாம் கொஞ்ச காலம்தான்… இலக்கியம் தான் நிரந்தரம். நூறு கம்ப்யூட்டர் புத்தகம் எழுதினா கிடைக்கின்ற புகழை ஒரு இலக்கிய புத்தகம் கொடுத்துவிடும்’ என்றார்.

எனக்கு அதிர்ச்சி. என்னுடன் வந்திருந்தவர்களுக்கோ பேரதிர்ச்சி.

இப்படியாக நேரம்தான் கடந்துகொண்டிருந்தது…

தெரியாமல் வந்துவிட்டோம் என புரிந்துகொண்டோம். ஒருவழியாக அங்கிருந்து நகர முற்பட என்னுடன் வந்திருந்த ஒரு டாக்டர் பொறுக்க முடியாமல் அவரிடம்  ‘உங்கள் மனைவி…’ என்றிழுக்க…

‘உங்களுக்கு டீ போட்டு எடுத்து வந்தாளே அவதான் என் மனைவி’ என்றபோது எங்கள் ஐவருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

‘அவளுக்கு எழுத படிக்கத் தெரியாது…. அப்படித்தான் நான் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துகொண்டேன். அப்போதான் அவ பாட்டுக்கு வீடு, சமையல் என இருப்பாள்… நான் என் எழுத்தில் கவனம் செலுத்த முடியும்…. படிச்ச பெண்ணாக இருந்தால் கேள்வி கேட்பாள்…. அதான் இப்படி…’ என்ற சர்வ அலட்சியமாக பதில் சொன்னார்.

மூன்றாம் நபர்கள் முன் மனைவியை அவள், இவள் என சொன்னது முதல் படிக்காத பெண் கேள்வி கேட்க மாட்டாள் என்று சொன்னதுவரை அவர் தன் மீதான மதிப்பு மொத்தத்தையும் தானே குழிதோண்டி புதைத்துக்கொண்டார்.

இப்படிப்பட்ட சிந்தனை உள்ளவர் எதற்காக ‘பெண்கள் மேம்பாடு’ குறித்து ஒரு ஆய்வு செய்யப் போவதாகச் சொல்லி எங்களை அழைத்தார் என்று எங்களுக்குப் புரியவே இல்லை.

அங்கிருந்த 2 மணி நேரத்தில் அவருடைய பர்சனல் கதைகளுக்கு 1-1/2 மணி நேரம் என்றால் நாங்கள் ஐவரும் சேர்ந்து பேசியவை ½ மணி நேரம் மட்டுமே.

கிளம்பும்போது உபரியாக ஒரு தகவலையும் சொன்னார்…

‘நான் அவளை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்….’ என்றார். அப்போதுகூட அவர் ‘நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்’ என்று சொல்லவில்லை.

பக்காவாக படிக்காத பெண் கேள்வி கேட்க மாட்டாள் என திட்டம்போட்டு திருமணம் செய்துகொண்டவர் ‘காதல் திருமணம்’ என்று சொன்னது உறுத்தலாக இருந்தது.

என்னால் இதற்கு மேலும் வாயைத் திறக்காமல் இருக்க முடியவில்லை.

‘நீங்கள் காதலித்தீர்கள் சரி… உங்கள் மனைவி உங்களை விரும்பினாரா?’

அவர் முகத்தில் ஈயாடவில்லை.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
பிப்ரவரி 17, 2019

(Visited 40 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon