ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம். – செய்தி டிவியில் ஓடிக்கொண்டிருந்தது.
வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கதறி அழும் சீன்களை மனதை உருக்கிக்கொண்டிருக்கிறது.
என் உறவினர் மகனுக்கு 15 வயதாகிறது. அவனுடைய இலட்சியமே இராணுவத்தில் சேர்வதுதான். அதை அவன் தன் 10 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறான்.
அவன் பெற்றோருக்கு அதில் அவ்வளவு நாட்டமில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் கொள்கையில் மாறுவதாக இல்லை.
சமீபத்திய செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து அவர்களுக்கு ஒரே சோகம். காரணம் செய்தியின் தாக்கம் ஒருபுறம், மறுபுறம் தங்கள் மகனின் இராணுவத்தில் சேருகின்ற விருப்பத்தின் தீவிரம்.
தன் அம்மா சோகமாக இருப்பதை கவனித்தவன், ‘அம்மா இதையெல்லாம் காரணம் காட்டி என்னை இராணுவத்தில் சேராமல் இருக்கச் செய்துவிடாதே… நம்முடைய விதி எங்கு எப்போது முடியனும்னு இருக்கோ அங்கேதான் முடியும்… எல்லோருமே இப்படி பயந்துகொண்டிருந்தால் யார்தான் நாட்டை காப்பாற்றுவது…’ என்றானாம்.
‘அதுக்கு நான் பெத்த பிள்ளைதான் கிடைத்ததா?’ என்று சொன்ன சொன்னவளிடம் ‘யாரோ ஒருசிலர் இராணுவத்திலும் சேர்ந்தால் தானே நாட்டை காப்பாற்ற முடியும்… அந்த யாரோ ஒரு சிலரில் நானும் ஒருவனாக இருக்கிறேன்…’ என்று ஒரே வாக்குவாதமாம்.
இப்படி பெரிய மனிதன்போல் அவன் பேசுவதை நினைத்து மகிழ்வதா அல்லது ஒரே மகனை இராணுவத்துக்கு அனுப்பி விட்டு வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதா என தெரியவில்லை என போனில் என்னிடம் அழுதுகொண்டே பேசியவர்களை என்ன சொல்லி தேற்றுவது?
காஷ்மீர் தாக்குதலுக்குப் பலியான நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி.
வீர வணக்கங்கள்.
ஜெய்ஹிந்த்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
பிப்ரவரி 16, 2019