ஃபேஸ்புக் இங்கிதங்கள்! (மின்னம்பலம் மார்ச் 9, 2019)

 

அண்மையில் என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் “பேஸ்புக்கில் யார் யாருக்கெல்லாம் லைக் போடலாம், கமென்ட் செய்யலாம்… ஃபேஸ்புக்கை எப்படி கையாள்வது….” என்று இன்பாக்ஸில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். வயது 65+. ஃபேஸ்புக்குக்குப் புதிது.

நான் அவருக்கு எழுதிய பதிலுடன் இன்னும் சில பாயின்ட்டுகளை சேர்த்து இங்கு அனைவருக்கும் பொதுவாக்குகிறேன்.

  1. ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்து, தனிப்பட்ட முறையில் மெசஞ்சரிலும் சென்று வேண்டுகோள் விடுக்காதீர்கள்.
  2. ஃபேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த ஒரு தகவலையே திரும்பவும் மெசஞ்சரில் அனுப்பி வைக்காதீர்கள். அப்படி அனுப்பிக்கொண்டிருந்தால் உங்கள் தகவலை மெசஞ்சரில் அவர்கள் திறக்கவே மாட்டார்கள். உண்மையில் நீங்கள் ஏதேனும் உதவி என கேட்கும்போது உங்கள் வேண்டுகோள் அவர்கள் பார்வைக்குச் செல்லாமல் போகும்.
  3. நன்கொடை போன்ற விஷயங்களை உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆன நண்பர் என்றாலே தவிர தனிப்பட்ட முறையில் மெசஞ்சரில் கேட்காதீர்கள்.
  4. பொதுவில் ஃபேஸ்புக்கில் போடும் பதிவுகளைப் பார்த்தே, உதவும் வாய்ப்பு இருந்தால் உங்கள் நண்பர்(கள்) உதவ முன்வருவார். உதவ முடியாத சூழல் என்றால் மெசஞ்சரில் சென்று தனிப்பட்ட முறையில் கேட்டாலும் உதவப் போவதில்லை.
  5. உங்கள் பதிவுகளுக்கு லைக், கமென்ட் ஏன் போடவில்லை என கேட்டு இன்பாக்ஸில் தொல்லைக் கொடுக்காதீர்கள். லைக் கமென்ட் என்பது அவரவர் விருப்பம்.
  6. ஃபேஸ்புக் என்பதும் நாம் வாழுகின்ற சமூகம் போலதான். தரம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
  7. ஃபேஸ்புக் நம் எண்ணங்களை வெளிப்படுத்தும் இடம்தான் என்றாலும் பலரும் வந்து செல்லும் இடம் என்பதால் நம் எண்ணங்களை கண்ணியத்துடன் வெளிப்படுத்துவோம்.
  8. நம் வீட்டு பிள்ளைகளும் நட்புத் தொடர்பில் இருப்பார்கள். நம்மைப் பார்த்துதான் அவர்கள் வளர்கிறார்கள் என்பதை மனதில் வைத்து வார்த்தைகளில் நயத்தைக் கூட்டுவோம்.
  9. ஃபேஸ்புக்கில் படிக்கின்ற எல்லாவற்றுக்கும் லைக்கும், கமென்ட்டும் போட வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் லைக் போடலாம்.
  10. உங்களுக்கு ஏதேனும் எழுதத் தோன்றினால் அதை உங்கள் எண்ண ஓட்டத்தில் உங்கள் சொந்த கருத்துக்களை பதிவாக எழுதுங்கள்.
  11. எல்லோருக்கும் சமூகவலைதளங்களில் பேசவும் எழுதவும் உரிமை இருப்பதால் அவரவர்கள் தங்களுக்கு தோன்றுவதை பதிவு செய்கிறார்கள். அதில் நீங்கள் கமென்ட் போட்டு அதற்குள் நுழைவதை தவிர்த்தாலே பாதி பிரச்சனைகள் குறைந்துவிடும்.
  12. எப்படி கமென்ட் போட்டாலும் நான்குபேர் அதற்கு எதிர்வினை செய்வார்கள். நம் கமென்ட்டுகளால் யாருடைய எண்ணத்தையும் மாற்ற முடியப் போவதில்லை. அனைவருமே ஏற்கெனவே ஒரு டெம்ப்ளேட்டுடன் வளர்ந்தவர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
  13. மேலும் அவரவர்களுக்கென்று தனி நட்பு வட்டம் வைத்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள், இலக்கிய மக்கள், சினிமா குழுவினர், பதிப்பாளர் இப்படி… அவர்கள் அவர்களுக்குள் லைக்கும், கமென்ட்டும் போட்டுக்கொள்வதை பார்க்கலாம். அவர்கள் வட்டத்தை விட்டு யாரும் வெளி நபர்களுக்கு லைக்கும் கமென்ட்டும் போடுவதில்லை பெரும்பாலும்.
  14. எனவே, உங்களுக்கு என நட்பு வட்டமும் அதில் நல்ல புரிதலும் இருந்தால்மட்டும் அவர்களை பின் தொடருங்கள். கருத்துத் தெரிவியுங்கள். இல்லை என்றால் எல்லாவற்றையும் படியுங்கள், ரசியுங்கள்… என்ஜாய் செய்யுங்கள்.
  15. ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வையுங்கள்… ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல.

யோசிப்போம்!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 9, 2019

(மின்னம்பலம் டாட் காமில் மார்ச் 9, 2019 சனிக்கிழமை வெளியான கட்டுரையின் ஒரு பகுதி)

 

(Visited 69 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon