‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ – என்னைப் பார்க்கும் பலரும் சொல்வார்கள் ஆனால் இதற்காக நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. காரணம் என் குடும்ப அமைப்பு அப்படி.
என் அம்மா…
40 வருடகாலம் தொலைபேசி துறையில் 24 மணிநேர சுழற்சிப் பணியில் இரவு பகல் பார்க்காமல் பணிக்குச் சென்று ஓய்வு பெற்றவர். தைரியம், உழைப்பு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் இவைதான் இவரின் சொத்து. எங்களுக்கு சேர்த்துவைத்ததும் அதுவே. அந்த வகையில் என் அம்மா என் முதல் ரோல் மாடல்.
என் அப்பாவின் அம்மா… (என் பாட்டி)
வைராக்கியம் மிக்கவர். என் அப்பா 12 வயதில் எனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்தபோது எனக்கு சைக்கிள் பழக வேண்டும் என்பதால் நானும் அப்பாவும் தனித்தனி சைக்கிளில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்குச் சென்றோம். அப்போது என் பாட்டி ‘நாலு பேர் கண்ணு படப்போறது… இனிமே சாயங்கால வேளையில் இப்படி சைக்கிளில் கூட்டிண்டு வராதே… பகலில் அழைத்துக்கொண்டு வா’ எனச் சொல்லி எனக்கு திருஷ்டி சுத்திப் போட்டார். பெண் குழந்தைகளுக்கு சைக்கிள் எதற்கு… என்று சொல்லாமல் உண்மையில் என் நலன் கருதி பாசத்தில் அட்வைஸ் செய்த என் அப்பா வழி பாட்டி மற்றொரு ரோல் மாடல்.
என் அம்மாவின் பாட்டி… (என் கொள்ளுப் பாட்டி)
பரோபகாரி. பசி என்ற சொல் காதில் கேட்டாலே அவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவாராம். தாத்தாவின் வேட்டிகளும், துண்டுகளும் திடீர் திடீர் என காணாமல் போகுமாம். வறுமையில் வாடுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு தூக்கிக்கொடுத்து விடுவாராம். எராளமான புத்தகங்கள் படிப்பாராம். என் அம்மாவின் திருமணத்துக்கு புத்தகங்களையே பரிசாகக் கொடுத்தாராம். என் அம்மாவின் பாட்டி மற்றொரு ரோல் மாடல்.
இன்று என் சகோதரி…
பரபரப்பாக சிந்தனை செய்யும் துடிப்புமிக்கவர். தூக்கத்தில் வரும் கனவுகள் கூட சுறுசுறுப்பாய் ஃபாஸ்ட் ட்ராக்கிலேயே இருக்கும் அளவுக்கு பயங்கர சுறுசுறுப்பு. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் சாஃட்வேர் துறையில் உச்சத்தில் இருந்தாலும் தன் கொள்கைகளை இம்மியும் விட்டுவிடாமல் வாழ்ந்துவரும் பழமையை விட்டுக்கொடுக்காத புதுமைப் பெண். தன் குழந்தைகளை இந்திய உணர்வுகளுடன் வளர்த்து வரும் மெகா தைரியசாலி. அந்த வகையில் என் தங்கை மற்றொரு ரோல் மாடல்.
இந்தச் சூழலில் நானும்…
ஆனாலும் இந்த சமூகத்தில் நித்தம் நான் சந்திக்கும் அனுபவங்கள் எனக்குக் கற்றுக்கொடுப்பவை என்னவென்றால்…
‘பாரதியை உயிராக நேசிப்போருக்கு, பாரதி கண்ட புதுமைப் பெண்ணைப் பிடிக்க வேண்டும் என்பதில்லை. அவர்களின் இலக்கு பாரதி மட்டுமே. பாரதி கனவு கண்ட புதுமைகள் அல்ல. சாதாரணிகள் போதுமானதாக உள்ளது அவர்கள் வாழ்க்கையை சுலபமாக்க…
மேடையில் மேற்கோள்கள் காட்டி தங்கள் உரையை அலங்கரிக்கவும்…
தங்கள் எழுத்துக்களை அழகுபடுத்தவும்…
புதுமைக் கனவுகள் கண்ட பாரதி உதவுகிறார்…
மற்றபடி வாழ்க்கையில் அவர்களைச் சுற்றி புதுமைகள் தேவைப்படுவதில்லை…
சராசரிகள் போதுமானதாக இருக்கிறது!’
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்க நாம் நாமாக இருந்தாலே போதும். அந்த வரம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது என தெரியவில்லை.
நான் அந்த வரம் பெற்று வந்தவள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 8, 2019