கனவு மெய்ப்பட[18] – ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல! (minnambalam.com)

எங்கள்  நிறுவனத்தில் மல்டிமீடியா பிராஜெக்ட்டுக்காக கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட்டுகள் தேவை இருந்ததால், இன்டர்வியூ செய்துகொண்டிருந்தோம்.

அதில் கடைசிவரை தேர்வாகி வந்தவருக்கு முப்பது வயதிருக்கும். நான் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் முதலில்  அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என ஆச்சர்யமாக இருந்தது.

‘நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில்தானே இருந்தீர்கள். அதைவிட்டு ஏன் வெளியே வந்துவிட்டீர்கள்?’  என்ற என் கேள்விக்கு அவர், “மேடம், அதற்குக் காரணம் என் சீனியரால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல். என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் இருக்கிறார்… அவர் போடும் மொக்கை பதிவுகளுக்கும் நாங்கள் லைக்கும், அவ்வப்பொழுது கமென்ட்டும் போட வேண்டும். இல்லை என்றால் நேரில் சந்திக்க நேரிடும்போது ‘என்னய்யா ரொம்ப பிசியா, உன் கேர்ள் ஃபெரெண்டுக்கு லைக்குகளை அள்ளி வீசுகிறாய்…. என் போஸ்ட் எல்லாம் உன் கண்ணில் படாதே…’என்று சில சமயம்  நக்கலாகவும், பல சமயம் ‘ஃபேஸ்புக்கில் கமென்ட்டுகளில் காட்டும் வார்த்தை ஜாலத்தை கொஞ்சம் வேலையிலும் காட்டுங்கள் பாஸ்’ என்று நேரடியாகவும் அர்ச்சனைகள் கிடைக்கும்… அதோடு மட்டுமில்லாமல் ப்ரமோஷன், ப்ராஜெக்ட் அலாட்மெண்ட் என அனைத்திலும் எனக்குத் தகுதியானவை கிடைக்காமல் போனது…”என  வருத்தத்துடன் பதிலளித்தார்.

இதுபோன்ற காரணங்களால்தான் ஆரம்பத்தில் இருந்தே, என் ஃபேஸ்புக்கில் என் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் யாரையும் நட்பில் வைத்துக்கொள்வதில்லை. லைக்குகள் மற்றும் கமென்ட்டுகளால் ஒரு சாஃப்ட் கார்னரை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது, நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு. மேலும் அவர்களுக்கும் சதா நம் சீனியர் நம்மை கவனித்துக்கொண்டே இருக்கிறார் என்ற பதட்டம் வேண்டாம் என்பதும் ஒரு காரணம்.

எப்படி எல்லாமோ பணி புரியும் இடங்களில் பிரச்சனைகள் வரும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஃபேஸ்புக் லைக், கமென்ட்டினால் கூட பிரச்சனை வரும் என்பதை கேள்விப்படும்போது எங்கே நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என யோசிக்க வைத்தது.

தூண்டில்போடும் Apps!

சென்ற வருடம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு வைரலாகப் பரவியது அனைவரும் அறிந்ததே.

ஃபேஸ்புக் முழுக்க முழுக்க இலவசமாக கிடைக்கும் ஒரு நெட்வொர்க் வசதி. இவற்றை எத்தனையோ கோடானுகோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். தகவல்களை ஷேர் செய்கிறார்கள். இலவசமாக தங்களையும், தங்கள் வியாபாரத்தையும், தங்கள் தயாரிப்புகளையும் ப்ரமோட் செய்கிறார்கள்.

பயனாளர்களுக்கு இலவசமாக வசதிகளை அள்ளிக் கொடுத்து அந்த பிரமாண்ட நெட்வொர்க் நிறுவனம் எப்படி இயங்குகிறது என்று கொஞ்சம் யோசிப்போமா?

ஃபேஸ்புக்கில் நடுநடுவே Sponsored என்ற வார்த்தையைத் தாங்கிவரும் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவை கட்டணம் செலுத்தி கொடுக்கப்படும் விளம்பரம். நாமும் கட்டணம் செலுத்தி நம் ஃபேஸ்புக் பிசினஸ் பக்கம் மற்றும் பர்சனல் பதிவுகளைக்கூட விளம்பரப்படுத்தலாம். இப்படி விளம்பரப்படுத்தப்படும் ஃபேஸ்புக் பதிவுகள் அவற்றின் கட்டணத்துக்கு ஏற்ப லைக்குகளை பெற்றுத்தரும். அதாவது லைக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம்.

மிகக் குறைந்த கட்டணத்திலும் இது சாத்தியமாவதால் தங்கள் தயாரிப்புகள், வியாபாரம் என்றில்லாமல் தங்கள் பதிவுகளைக்கூட விளம்பரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக் நிறுவனத்தில் இல்லாமல் வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் ஆப்ஸ்களுக்கு Third Party Apps என்று பெயர். இவற்றைப் நாம் பயன்படுத்த கட்டணம் இல்லை. அதற்குக் கூலி நம்மைப் பற்றிய பர்சனல் ஃபேஸ்புக் தகவல்கள்.

மக்களை ஏமாற்றுவது இவர்கள் குறிக்கோள் அல்ல. அவற்றை நாம் பயன்படுத்தும்போது அது அவர்களுக்கு மறைமுகமான விளம்பரமாகிறது. அவர்கள் ஆப் / வெப்சைட் விளம்பரப்படுத்தப்பட்டு வியாபாரமாகிறது.

நீங்கள் முற்பிறவியில் என்னவாக இருந்தீர்கள், அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறக்கப் போகிறீர்கள், உங்களை மறைமுகமாக காதலிப்பவர் யார், உங்களை அதிகம் நேசிக்கும் நண்பர் யார், நீங்கள் பிறக்கும்போது கடவுள் என்ன வாழ்த்துச் சொல்லி அனுப்பி இருப்பார்… இது போன்ற கேள்விகளால் நம் ஆர்வத்தைத் தூண்டில் போட்டு இழுக்கும் ஆப்கள் பரவலாகக் கொட்டிக் கிடக்கின்றன.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஆப்களை கிளிக் செய்து அவற்றில் நுழைந்து நம்மை அறியாமலேயே நம்மைப் பற்றிய விவரங்களை அந்த நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக்கொடுக்கிறோம். நம்மிடம் அனுமதி வாங்கிய பின்னரே அந்த ஆப்கள் செயல்பட ஆரம்பிக்கும். நாமே அனுமதி கொடுத்துவிட்டு ‘ஆச்சா போச்சா எப்படி என் தகவல்களை நீங்கள் பார்க்கலாம்?’ எனப் பதறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் தகவல்கள், நட்பு வட்டம் மற்றும் நம் பர்சனல் விவரங்களை வைத்துதான் அவை ஆராய்ந்து கவர்ச்சியான பதிலை வெளிப்படுத்தும்.

இப்படிப்பட்ட Third Party ஆப்ஸ் மூலமும், லைக்குகளுக்காகவும், வியாபாரத்துக்காகவும் நாம் கொடுக்கின்ற விளம்பரம் மூலமாகவும் தகவல்கள் கசிய வாய்ப்புண்டு.

ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல

அண்மையில் என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் “பேஸ்புக்கில் யார் யாருக்கெல்லாம் லைக் போடலாம், கமென்ட் செய்யலாம்…  ஃபேஸ்புக்கை எப்படி கையாள்வது….”  என்று இன்பாக்ஸில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். வயது 65+. ஃபேஸ்புக்குக்குப் புதிது.

நான் அவருக்கு எழுதிய பதிலுடன் இன்னும் சில பாயின்ட்டுகளை சேர்த்து இங்கு அனைவருக்கும் பொதுவாக்குகிறேன்.

 1. ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்து, தனிப்பட்ட முறையில் மெசஞ்சரிலும் சென்று வேண்டுகோள் விடுக்காதீர்கள்.
 2. ஃபேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த ஒரு தகவலையே திரும்பவும் மெசஞ்சரில் அனுப்பி வைக்காதீர்கள். அப்படி அனுப்பிக்கொண்டிருந்தால் உங்கள் தகவலை மெசஞ்சரில் அவர்கள் திறக்கவே மாட்டார்கள். உண்மையில் நீங்கள் ஏதேனும் உதவி என கேட்கும்போது உங்கள் வேண்டுகோள் அவர்கள் பார்வைக்குச் செல்லாமல் போகும்.
 3. நன்கொடை போன்ற விஷயங்களை உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆன நண்பர் என்றாலே தவிர தனிப்பட்ட முறையில் மெசஞ்சரில் கேட்காதீர்கள்.
 4. பொதுவில் ஃபேஸ்புக்கில் போடும் பதிவுகளைப் பார்த்தே, உதவும் வாய்ப்பு இருந்தால் உங்கள் நண்பர்(கள்) உதவ முன்வருவார். உதவ முடியாத சூழல் என்றால் மெசஞ்சரில் சென்று தனிப்பட்ட முறையில் கேட்டாலும் உதவப் போவதில்லை.
 5. உங்கள் பதிவுகளுக்கு லைக், கமென்ட் ஏன் போடவில்லை என கேட்டு இன்பாக்ஸில் தொல்லைக் கொடுக்காதீர்கள். லைக் கமென்ட் என்பது அவரவர் விருப்பம்.
 6. ஃபேஸ்புக் என்பதும் நாம் வாழுகின்ற சமூகம் போலதான். தரம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
 7. ஃபேஸ்புக் நம் எண்ணங்களை வெளிப்படுத்தும் இடம்தான் என்றாலும் பலரும் வந்து செல்லும் இடம் என்பதால் நம் எண்ணங்களை கண்ணியத்துடன் வெளிப்படுத்துவோம்.
 8. நம் வீட்டு பிள்ளைகளும் நட்புத் தொடர்பில் இருப்பார்கள். நம்மைப் பார்த்துதான் அவர்கள் வளர்கிறார்கள் என்பதை மனதில் வைத்து வார்த்தைகளில் நயத்தைக் கூட்டுவோம்.
 9. ஃபேஸ்புக்கில் படிக்கின்ற எல்லாவற்றுக்கும் லைக்கும், கமென்ட்டும் போட வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் லைக் போடலாம்.
 10. உங்களுக்கு ஏதேனும் எழுதத் தோன்றினால் அதை உங்கள் எண்ண ஓட்டத்தில் உங்கள் சொந்த கருத்துக்களை பதிவாக எழுதுங்கள்.
 11. எல்லோருக்கும் சமூகவலைதளங்களில் பேசவும் எழுதவும் உரிமை இருப்பதால் அவரவர்கள் தங்களுக்கு தோன்றுவதை பதிவு செய்கிறார்கள். அதில் நீங்கள் கமென்ட் போட்டு அதற்குள் நுழைவதை தவிர்த்தாலே பாதி பிரச்சனைகள் குறைந்துவிடும்.
 12. எப்படி கமென்ட் போட்டாலும் நான்குபேர் அதற்கு எதிர்வினை செய்வார்கள். நம் கமென்ட்டுகளால் யாருடைய எண்ணத்தையும்  மாற்ற முடியப் போவதில்லை. அனைவருமே ஏற்கெனவே ஒரு டெம்ப்ளேட்டுடன் வளர்ந்தவர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
 13. மேலும் அவரவர்களுக்கென்று தனி நட்பு வட்டம் வைத்திருக்கிறார்கள்.  எழுத்தாளர்கள், இலக்கிய மக்கள், சினிமா குழுவினர், பதிப்பாளர் இப்படி… அவர்கள் அவர்களுக்குள் லைக்கும், கமென்ட்டும் போட்டுக்கொள்வதை பார்க்கலாம். அவர்கள் வட்டத்தை விட்டு யாரும் வெளி நபர்களுக்கு லைக்கும் கமென்ட்டும் போடுவதில்லை பெரும்பாலும்.
 14. எனவே, உங்களுக்கு என நட்பு வட்டமும் அதில் நல்ல புரிதலும் இருந்தால்மட்டும் அவர்களை பின் தொடருங்கள்.  கருத்துத் தெரிவியுங்கள். இல்லை என்றால் எல்லாவற்றையும் படியுங்கள், ரசியுங்கள்… என்ஜாய் செய்யுங்கள்.
 15. ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வையுங்கள்… ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல.

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2019/03/09/20

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 18

(Visited 93 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon