இன்று ஒருசில வெப்டிவி சானல் மற்றும் யு-டியூப் சானல்களை எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் வடிவமைத்தும் நிர்வகித்தும் வருகின்ற சூழலில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் என் பங்களிப்பு குறித்தும் எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டின் (2017) வெற்றிப் பயணத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
2000-ம் ஆண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான TTN தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க்கில் (TTN-Tamil Television Network) என் முதல் தொலைக்காட்சி நேர்காணல். நேர்காணல் செய்தவர் திருமிகு. மாலா மணியன்.
அதைத் தொடர்ந்து, வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக இதே தொலைக்காட்சி மூலமே கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிகழ்ச்சியை 300 எபிசோடுகளுக்கும் மேல் தயாரித்து வழங்கி உள்ளேன். ஒவ்வொரு எபிசோடும் 1/2 மணி நேரம். என் தொழில்நுட்ப அறிவை உலக அளவில் தமிழர்களுக்குக் கொண்டு செல்ல இந்த நிகழ்ச்சி உதவியது.
2001-ம் ஆண்டு, ஜெயா டிவியில் காலைத் தென்றலில் என் நேர்காணல்.
அதைத் தொடர்ந்து ஜெயா டிவியில் பெண்களுக்காக கம்ப்யூட்டர் கல்வி மற்றும் தொழில் ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சியை 5 வருடங்கள் தொடர்ந்து நடத்தி வந்தேன். என் நிறுவனத்திலேயே ஷூட்டிங் நடந்து ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. என் நிறுவன தயாரிப்புகள் மூலம் நான் பெற்ற தொழில்நுட்ப அனுபவங்களை தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு வழங்க இந்த நிகழ்ச்சி பேருதவி செய்தது.
2005-ம் ஆண்டு பொதிகை டிவியில் திருமிகு. கிரிஜா ராகவன் அவர்கள் பெண்களுக்கான நிகழ்ச்சியை தயாரித்தபோது அதில் பெண்களுக்கான தொழில்நுட்ப நிகழ்ச்சியை சுமார் ஒரு வருடம் நான் வழங்கி வந்தேன்.
2012-ம் ஆண்டு ‘ஆல் இந்தியா ரேடியோ (All India Radio)’- வில் என் நேர்காணல் வெளியானது. மேலும், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களுக்கான FM-களில் என் நேர்காணல் ஒலிபரப்பாகியுள்ளன.
பாண்டிசேரி FM – காக ‘தினம் ஒரு குறள்’, ‘தினம் ஒரு கதை’, ‘தினம் ஒரு பழம்’, ‘தினம் ஒரு காய்’, ‘தினம் ஒரு பூ’ என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கினோம். கதை, பாடலுடன் திருக்குறள் மற்றும் அதன் பொருளை விளக்கிய அந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏராளமான தமிழ் இலக்கியவாதிகள், சான்றோர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் அதில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
2017 -ல் மக்கள் தொலைக்காட்சியில் ‘திறமையை சம்பாத்யமாக்கும் மினி தொழில்நுட்பத் தொடர்’ ஒன்றை வழங்கினேன்.
இந்த வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30 நிமிட நிகழ்ச்சி. அதுவும் ‘நேரலை’ (Live) என்பது குறிப்பிடத்தக்கது. (https://www.youtube.com/watch?v=b05d3j8Bh3Y&feature=youtu.be&t=26m11s )
மேலும், இந்த நேர்காணல் என் பெற்றோரையும் பெருமைப்படுத்தியது என்பதில் எனக்குப் பேரானந்தம். இந்த நேர்காணல் குழந்தை வளர்ப்பு, பெற்றோர்-குழந்தைகள் ரிலேஷன்ஷிப் போன்றவற்றுக்கு சிறந்த முன்னுதாரணம் என் பெற்றோர் என பலரிடம் பாராட்டை பெற்றது.
தூர்தர்ஷன் – பொதிகையில் என்னுடைய நேர்காணலுக்காக அன்புடன் அழைப்பு விடுத்திருந்த, அதில் தலைமைப் பொறுப்பில் உள்ள திருமிகு. ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள், நேர்காணல் முடிந்ததும் ‘Hats off to your parents’ என்று தகவல் அனுப்பி வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அக்டோபர் 5, 2017