திருமிகு. நா.சடகோபன்
எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய வெற்றிப் பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், நேரடியாக பொது மக்களுடன் பழகவும், உதவவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வரும் திருமிகு. நா.சடகோபன் அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
இவர் விஜயபாரதத்தில் எடிட்டராக இருந்தபோது எனக்கு சமூக வாழ்வியல் பங்களிப்பை கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டு அது இன்றுவரை தொடர்கிறது.
ஒரு சமயம் புயலால் பாதிக்கப்பட்ட இடத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் இடத்தில் அவர்களுக்கு உணவு, உடை கொடுத்து உதவுவதற்காக 200-க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்திருந்தோம். அந்த ஒருங்கிணைப்பிற்கு உதவியவர் இவர்.
அந்த இடத்தில் மைக் இல்லை, மாலை சூரியன் மறையும் நேரமும் கூட. வெளிச்சமும் குறைவுதான்.
நான் வழக்கம் போல மெதுவாக பேச ஆரம்பித்தேன். அந்தக் கூட்டம் தன் சத்தத்தை குறைக்கவே இல்லை.
‘கொஞ்சம் அமைதியா இருந்தால்தான் நான் பேசுவது புரியும்…’ என மென்மையாக கூட்டத்தைப் பார்த்துச் சொன்னபோது இவர் என்னிடம் சொன்ன கருத்து இன்றும் நான் எப்போதெல்லாம் மேடையில் பேச ஆரம்பிக்கிறேனோ அப்போதெல்லாம் என் மனதில் ஒலிக்கும்.
‘இவர்கள் சத்தம் போட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். நீங்கள்தான் குரலை உயர்த்தி சப்தமாகப் பேச வேண்டும்… நீங்கள்தான் சப்தத்தை அமைதியாக்க வேண்டும்’
என்ன ஒரு அருமையான கருத்து. இது மேடைப் பேச்சுக்கு மட்டுமல்ல. வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் நம்முடைய செயல்களாலும், குணம் மற்றும் பண்புகளாலும் மட்டுமே, சதா நம்மை உற்று நோக்கும் இந்த சமுதாயத்தின் கவனத்தை சரியான பார்வையாக நம் மீது கொண்டுவர முடியும். இல்லை என்றால் இந்த சமுதாயம் தம் போக்கில்தான் மதிப்பிட்டுக்கொண்டிருக்கும் என்ற பொருள் அடங்கியதாக எனக்குத் தோன்றியது.
சிலரிடம் அதிகம் பேசி பழகியிருக்க மாட்டோம். ஆனால் அவர்கள் நம்மை மிகவும் நன்றாக புரிந்துவைத்திருப்பார்கள். அந்தப் புரிதலே நம் செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதற்கு இவரே உதாரணமாவார்.
ஆம். இவரிடம் அதிகம் பேசியதில்லை. அடிக்கடி சந்தித்ததும் இல்லை. யுவசக்தி அமைப்பின் ‘பாதை பயணம் பார்வை’ என்ற தலைப்பில் நான் நடத்தி வரும் நிறுவன வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் மேடையில் இவரும் ஒரு முக்கிய பேச்சாளர். அப்போதுதான் இவரை நேரில் முதன்முறை சந்தித்தேன். இவருடைய உத்வேக உரையையும் கேட்கும் வாய்ப்பு.
அதன் பிறகு ஓரிரு மேடைகளில் இவரோடு நானும் சிறப்பு விருந்தினராக இருந்திருக்கிறேன். இவர் பேசி முடித்த பிறகு நான் பேச வேண்டும் என்றால் எனக்கு பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் வருவதை தவிர்க்கவே முடியாது. ஏனெனில் இவரின் உரையோ எழுச்சி உரை. என் உரையோ மிகமிக மென்மையானது. எனவே, தெரிந்த மேடை, அறிந்த மனிதர்கள் என்றால் நான் அவர்களிடம் சொல்லி இவருக்கு முன் பேச அனுமதி கேட்டிருக்கிறேன்.
பள்ளி, கல்லூரிகளில் ‘தொழில்நுட்ப வாழ்வியல்’ குறித்து ஒர்க்ஷாப்புகளை எங்கள் தாய் தந்தை பெயரில் நாங்கள் நடத்தி வரும் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அமைப்பின் வாயிலாக நடத்தி வருகிறோம்.
அந்த டீமில் தொழில்நுட்பம், வாழ்வியல் என இரண்டு பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம். தொழில்நுட்பம் குறித்துப் பேச எங்கள் காம்கேர் நிறுவனத்தில் இருந்தும், வாழ்வியல் குறித்துப் பேச சிறப்பு விருந்தினர்களையும் அழைத்துச் செல்வோம். வெவ்வேறு ஊர்களில் இந்தக் கருத்தரங்கு நடைபெறும்போது, வாழ்வியல் குறித்துப் பேசுவதற்கு அந்தந்த ஊர்களில் உள்ள தகுதியான பெரியோர்களையும், சான்றோர்களையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் இவர்.
நாங்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகளுக்கு இவரே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு எழுச்சி உரை ஆற்றியிருக்கிறார். இவர் மைக்கைப் பிடித்துப் பேசினால் அமைதியான மாணவனுக்கும் வீரமும், உத்வேகமும் உண்டாகும். அந்த அளவுக்கு கம்பீரமும் உற்சாகமும் இழைந்தோடும் கருத்துச் செறிவுள்ள உரையாக இருக்கும்.
நம்மைப் பற்றிய சரியான புரிதலோடு தொடர்பில் இருக்கும் ஒருசிலருடன் சேர்ந்து இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் செய்யும்போது, நாம் நேர்மையான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை பரிபூரணமாக உணர முடிகிறது.
எப்போதேனும் இவரை சந்திக்கும் போது சமுதாயம் குறித்தும், குணத்தாலும் செயல்பாடுகளாலும் மாறிவரும் சென்ற தலைமுறை மனிதர்கள் குறித்தும் பேசுவதுண்டு. அப்போதெல்லாம அவர், ‘இந்த கமர்ஷியல் உலகில் உங்கள் துறையில் உங்கள் இயல்பு மாறாமல் நீங்கள் நீங்களாகவே தாக்குப் பிடித்து வருவது பெரிய விஷயம்’ என்பார்.
இதையே இவருடைய வாழ்த்தாக எடுத்துக்கொண்டு, இவருக்காக ஒரு சின்ன பிராத்தனையோடு இந்தப் பதிவை முடிக்கிறேன்.
இவர் Workaholic. கடுமையான உழைப்பாளி. செய்கின்ற பணியை மன நிறைவுடன், நேர்த்தியாக, நேர்மையாக செய்யக் கூடியவர். சாப்பாடு, தூக்கம் பார்க்காமல் சமுதாயத்துக்காக தன்னையே மறந்து பணிபுரிந்து வந்தவர் சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இவர் விரைவில் பூரண குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அக்டோபர் 3, 2017