இந்த நாள் இனிய நாள் – 76
ஒரு பெண்ணாய் இருப்பதாலேயே எல்லாவற்றிலும் சரியாகவும் சிறப்பாகவும் செயல்பட்டால்தான் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை, அவ்வப்பொழுது இந்த சமுதாயம் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது.
நான் 20 வருடங்களுக்கும் மேலாக பைக்கும், 15 வருடங்களுக்கும் மேலாக காரும் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். வண்டியும், சாலையும் என் கன்ட்ரோலில் இருக்கும் அளவுக்கு விவேகத்துடன் வேகமாக(வே) ஓட்டுவேன்.
ஆனாலும் இப்போதும், எங்காவது ரிவர்ஸ் எடுக்கும்போது ‘கொஞ்சம்’ தடுமாறினாலும், ‘பொம்பளைங்க சரியா ஓட்டத் தெரியாம வண்டிய எடுத்துட்டு வந்துடறாங்க…’, ‘எடும்மா, எடும்மா… வண்டி ஓட்டத் தெரியாம ஏம்மா வண்டிய எடுக்கறீங்க…’, ‘கொஞ்சம் இறங்கறீங்களா…. நான் ரிவர்ஸ் எடுத்துத் தரேன்…’ என்ற விமர்சனங்களை தவிர்க்க முடிவதில்லை.
இதுவே ஒரு ஆண் ரிவர்ஸ் எடுக்கும்போது தடுமாறினால், ‘கொஞ்சம் பேலன்ஸ் செய்து எடுங்க…’ என்பது போன்ற வார்த்தைகளால் டெக்னிக்கலாக பேசி அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து உதவுவார்கள்.
ஒருமுறை என் அலுவலக ஸ்டாஃப் வண்டியை ரிவர்ஸ் எடுக்கும்போது சுவரில் இடித்து பின்பக்கம் ‘சற்று’ நசுங்கி விட்டது.
என் கிளையின்ட் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு ‘என்ன மேடம், நீங்கள் ரிவர்ஸ் எடுக்கும்போது நசுங்கி விட்டதா?’ என்று சற்று நக்கலாகக் கேட்டார்.
‘காரில் ஏதும் டேமேஜ், விபத்து என்றால் அது பெண்கள் ஓட்டும் போது மட்டும்தானா? ஒருமுறை அண்ணா சாலையில் தலைகுப்புற விழுந்ததே ஒரு அரசுப் பேருந்து… அதை ஒரு பெண் டிரைவரா ஓட்டினார்?’ என்று சற்று கோபமாகவே கேட்டேன். அவர் வாயைத் திறக்கவில்லை.
ஒருமுறை பைக்கில் சென்றபோது ரேஸில் செல்வதைப்போல மிக வேகமாக பின்னால் வந்த பைக் என் பைக் மீது மோதிவிட, கூட்டம் கூடியது. என் வண்டி மீது மோதியவருக்கு ஹெல்மெட் போடாததால் அடிபட்டு இரத்தம் கொட்டத் தொடங்கியது. அனைவரின் ஒட்டுமொத்த பார்வையும், கேள்வியும் என் மேல்தான்.
‘என்ன மேடம் குறுக்க வந்துட்டீங்களா?’, ‘என்ன சடன் பிரேக் போட்டுட்டீங்களா?’, ‘கவனிக்காம வண்டியைத் திருப்பிட்டீங்களா?’
இதற்குள் அடிபட்டவர் தன்மீதுதான் தவறு என்பதை உணர்ந்து, ‘சாரி மேடம்…..’ என்று சொல்ல, கூட்டம் அமைதியானது.
நாமும் சரியாக இருக்க வேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் சரியாக செயல்பட வைக்க வேண்டும். இப்படித்தான் செல்கிறது பெண்களின் வாழ்க்கை.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஏப்ரல் 17, 2019
2019 வருடம் முழுவதும் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில்
தினந்தோறும் நான் எழுதி வந்த
ஃபேஸ்புக் கட்டுரைத் தொடர்
குமுதம் ஆன்லைனில் ஏப்ரல் 17 2019 இதழில் வெளியானது.
https://www.facebook.com/KumudamOnline/photos/a.2157788854244776/2831576743532647/?type=3&theate