உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் உன்னை அழைத்து வரசொல்லி என்னை அனுப்பி இருக்கிறார். வா போகலாம்’ எனச் சொல்லி அழைத்தபோது, அந்தச் சிறுமி ‘பாஸ்வேர்ட் சொல்லுங்க’ என்று கேட்கிறாள். அந்த நபர் குழம்பி மிரண்டு ஓடிவிடுகிறான். இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம்.
அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளுக்கு ஒரு பாஸ்வேர்டை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். யாராவது அறிமுகம் இல்லாத நபர்கள் வந்து அழைத்தால் அந்த பாஸ்வேர்டை கேட்டு செக் செய்துகொள்ள வேண்டும் எனவும் சொல்லிக்கொடுத்துள்ளார்கள்.
இதுபோல ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாஸ்வேர்ட் வைத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்க்கை நடத்தவேண்டிய சூழல் இன்று.
மனிதர்களை சந்தேகிக்கும் இயந்திரங்கள்
மனிதர்களை மனிதர்களே நம்ப முடியாத இந்த நாட்களில் மனிதர்களை இயந்திரங்களும் சந்தேகிக்கின்றன.
கம்ப்யூட்டரில் நாம் இமெயில் முகவரிகளை உருவாக்கும்போதும்…
ஆன்லைனில் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் வழியாகக் கட்டணம் செலுத்தும்போதும்…
ஓரிரு முறை நம் பாஸ்வேர்டை சரியாக டைப் செய்யாமல் அடுத்த முறை சரியாக டைப் செய்யும்போதும்…
சமூக வலைதள வெப்சைட்டுகளில் புதிதாக அக்கவுன்ட்டுகளை உருவாக்கும்போதும், அவற்றில் கமென்ட்டுகளை பதிவுசெய்யும்போதும்…
கம்ப்யூட்டருக்கு நாம் மனிதனா அல்லது வைரஸா அல்லது ரோபோவா என்ற சந்தேகம் ஏற்படும். அது நம்மை நம்பாமல் நமக்கு ஒரு இமேஜை அனுப்பிவைக்கும்.
அந்த இமேஜில் வளைவு நெளிவாகவும் குழப்பமாக டைப் செய்யப்பட்ட எண்களும் எழுத்துக்களும் இருக்கும். அதைப் பார்த்து நாம் சரியாக டைப் செய்தால் மட்டுமே கம்ப்யூட்டர் நம்மை மனிதன் என ஒப்புக்கொள்ளும். வைரஸ் புரோகிராம்களுக்கு, இமேஜில் குழப்பமாக உள்ளவற்றைப் பார்த்து புரிந்துகொள்ளத் தெரியாது.
தன்னை இயக்கும் நபர் மனிதன்தானா என்பதை உறுதிசெய்தகொண்ட பின்னர்தான் கம்ப்யூட்டர் நம்மை தொடர்ச்சியாகச் செயல்பட வைக்கும்.
‘நாம் மனிதன்தான்’ என நிரூபிக்க உதவும் CAPTCHA
கம்ப்யூட்டர், நம்மை மனிதனா, வைரஸா என பரிசோதிப்பதற்காக நமக்கு அனுப்பிவைக்கின்ற விவரத்துக்கு ‘Captcha’ என்று பெயர். CAPTCHA என்றால், Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.
கம்ப்யூட்டரைத் தாக்குகின்ற வைரஸ்களில் இருந்து மட்டும் இல்லாமல், நம்மை ஏமாற்றி நம் அக்கவுன்ட்டுக்குள் சென்று நம் தகவல்களையும் பணத்தையும் ‘அபேஸ்’ செய்கின்ற மனிதர்களிடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கு ‘கேப்ட்சா’ என்ற பாதுகாப்புக் கவசம் மிகவும் அவசியம்.
கேப்ட்சா (CAPTCHA) – எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
1997-ம் ஆண்டு மார்க் டி. லில்லிபிரிட்ஜ் (Mark D. Lillibridge), மார்ட்டின் அபாடி (Martin Abadi), கிருஷ்ணா பாரத் (Krishna Bharat), ஆண்ட்ரி பார்டர் (Andrei Z. Broder) போன்றோரால் கேப்ட்சாவின் (CAPTCHA) அடிப்படைத் தத்துவம் உருவாக்கப்பட்டது.
2003-ம் ஆண்டு முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட கேப்ட்சா, லூயிஸ் வான் ஆஹன் (Luis von Ahn), மானுவல் ப்ளம் (Manuel Blum), நிகோலஸ் ஜே. ஹுப்பர் (Nicholas J. Hopper), ஜான் லாங்ஃபோர்டு (John Langford) போன்றோரால் வடிவமைப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது.
இயந்திரம் தோற்று, மனிதன் ஜெயிக்கும் ‘கேப்ட்சா’ தத்துவம்
மார்டன் கம்ப்யூட்டர் நுணுக்கங்களின் தந்தை என்றழைக்கப்படும் ‘ஆலன் ட்யூரிங்’ (Alen Turing) என்பவர் மனிதனும், கம்ப்யூட்டரும் ஒன்றுபோல செயல்பட முடியுமா, மனிதனைப்போல சிந்திக்க முடியுமா, செயல்பட முடியுமா என்பதை பரிசோதிக்க விரும்பினார்.
மனிதனையும் கம்ப்யூட்டரையும் வைத்து ஒரு சிறிய சோதனையை நடத்தினார். அதில் நடுவராக இருப்பவருக்கு எதிரில் இருக்கும் மனிதனும் கம்ப்யூட்டரும் கண்களுக்குத் தெரியாது. எது இயந்திரம், மனிதன் யார் என்பதும் தெரியாது. இருவரிடமும் கேள்விகள் கேட்கப்படும். இருவரிடம் இருந்து கிடைக்கின்ற பதிலில் மனிதன் சரியான பதிலைச் சொன்னானா அல்லது இயந்திரம் சரியான பதிலைச் சொன்னதா என்பது நடுவரால் கணிக்க முடியாத அளவுக்கு மனிதனும் இயந்திரமும் சரிநிகர் சமானமாகச் செயல்படுவர்.
இந்தப் பரிசோதனைக்கு ‘Turing Test’ என்று பெயர்.
கேப்ட்சாவில் பயன்படுத்தப்படும் தத்துவம், Turing Test என்ற பரிசோதனைக்கு எதிர்பதமாகச் செயல்படும். அதாவது கம்ப்யூட்டரே செய்கின்ற பரிசோதனையில் இயந்திரம் தோற்று மனிதன் ஜெயித்து ‘தான் மனிதன்’ என்பதை நிரூபிப்பதால், இதில் பயன்படுத்தப்படும் தத்துவத்துக்கு ‘Anti Turing Test’ என்று பெயர்.
எழுத்தும் ஆக்கமும்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 7, 2019
(இது என் 100-வது புத்தகம் ‘கம்ப்யூட்ராலஜி’-யின் ஒரு சிறு பகுதி. இந்த நூலை காம்கேரின் வெள்ளிவிழா ஆண்டில் விகடன் பிரசுரம் வெளியிட்டு சிறப்பித்தது.)