ஆண் தேவதைகளும் பெண் தெய்வங்களும்!
ஒரு மேடை நிகழ்ச்சி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மைக்கில் பேசிக்கொண்டிருக்கிறார்.
அவர் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பெண்மணியை சிறப்பு பேச்சாளராக அழைத்தாராம். அதற்கு அந்தப் பெண்மணி வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னாராம்.
இப்படித்தான் பெண்கள் தங்கள் முடிவை தாங்கள் எடுக்காமல் வீட்டில் கேட்டுச் சொல்கிறேன், கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று தங்கள் சுதந்திரத்தை மற்றவர்கள் கைகளில் ஒப்படைத்து அடிமையாக இருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டே போனார்.
ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது அன்றைய தேதியில் வீட்டில் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் இருக்கலாம், வீட்டுப் பெரியவர்களுக்கு ஹாஸ்பிடல் அப்பாயின்மென்ட் இருக்கலாம் அல்லது பிள்ளைகள் பள்ளியில் ஏதேனும் நிகழ்ச்சி இருக்கலாம் இப்படி ஏதேனும் கமிட்மென்ட் இருக்கலாம். அவற்றை எல்லாம் கவனத்தில் கொண்ட பிறகுதானே நிகழ்சிக்கு ஒப்புதல் அளிக்க முடியும்.
இப்படி எல்லா விஷயங்களுக்கும் ‘பெண்ணிய முலாம்’ பூசுவதால்தான் பெண்களின் நியாயமான உணர்வுகள்கூட பல நேரங்களில் கேலிக்கூத்தாகிவிடுகின்றன.
இந்த இடத்தில் ஆண்களாக இருந்தாலும் யோசித்துச் சொல்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் குடும்பத்தில் இருக்கும் மனிதர்களுக்கான இலக்கணம்.
இந்த இலக்கணத்தை ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் மிக அழகாக சொல்லி இருப்பார்கள்.
நாயகி +2 தோல்வி. வேலைக்குச் சென்ற அனுபவமே இல்லை. சமயோஜமாகப் பேசுவதும், மிமிக்கிரி செய்வதும் நாயகியின் இயல்பு. அந்த இயல்பை வைத்தே ரேடியோவில் RJ-ஆக வேலைக்குச் சேர்கிறாள்.
இரவு நேர பணி. போனில் அந்தரங்கப் பிரச்சனைகளை கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சி. ஆண்கள் பலர் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்க நாயகி சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பதில் சொல்லி அவர்கள் மனமாற்றத்துக்கு உதவுவதாக கதை செல்கிறது.
இந்த நிகழ்ச்சி குறுகிய நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்று விருதுக்கும் தயாராகிறது.
இரவு நேரப் பணிக்குச் செல்ல வேண்டாம் என அக்காக்களும், அப்பாவும் அறிவுரை சொல்ல அதை அவள் மறுக்க ‘ஏதாவது பிரச்சனைன்னா எங்க கிட்ட தானே வந்து நிற்பாய்’ என அவர்கள் கண்டிப்புடன் சொல்லும்போது நாயகி சொல்லும் பதில் கிளாசிக்.
‘ஆமாம். நீங்கத்தானே என்னுடைய ஃபேமிலி. உங்க கிட்டத்தான் வந்து நிற்பேன்…’
பொதுவாக என்ன சொல்லுவார்கள் ‘நான் ஏன் உங்ககிட்ட வரப்போறேன். செத்தாலும் உங்ககிட்ட வந்து நிக்க மாட்டேன்…’ இதுதான் பதிலாக இருக்கும்.
ஆனால் இந்தப் படத்தில் நாயகி சொல்லும் இந்த பதிலில் குடும்ப அமைப்புக்கான அஸ்திவார நம்பிக்கை பொதிந்துள்ளது.
உச்சம் தொடும்வரை எல்லாவிதமான இடர்களையும் தாண்டி பயணிப்பவர்கள் மட்டுமே இந்த வாழ்வின் முழு பரிணாமத்தை உணரமுடியும்.
அதற்கு இதோ நம் கண் முன்னே ஒரு ரோல்மாடல் ‘தங்க மங்கை’ கோமதி.
முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலிதொழிலாளர்களான மாரிமுத்து-ராசாத்தி தம்பதியினரின் மகள்தான் கோமதி.
காலை 3 மணி்க்கு எழுந்து மகளை தயார் செய்து ஐந்து கிலோமீட்டர் துாரம் சைக்கிளில் வைத்து ஒட்டிக்கொண்டு வந்து மெயின் ரோட்டில் விடுவார் இவர் தந்தை.
அங்கிருந்து பஸ்ஸில் கோமதி கல்லூரி மைதானத்திற்கு காலை 4 மணிக்கு வந்துவிடுவார். பிறகு கடுமையான பயிற்சி. பயிற்சி முடிந்து கல்லூரி. பிறகு மாலையில் மீண்டும் பயிற்சி. இவர் வீடு திரும்பும் நேரத்தில் சைக்கிளோடு வந்து இவரது தந்தை அழைத்துச் செல்வார்.
விளையாட்டில் இவரது பங்களிப்பினால் இவருக்கு பெங்களூருவில் மத்திய அரசின் வருமானவரித்துறையில் வேலை கிடைத்தது.
தோகா கத்தாரில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் பிரிவில் இப்போது முதலாவதாக வந்து தங்கம் வென்று தனது தோளில் தேசத்தின் கொடியை ஏந்தி வலம் வந்தவர் கண்களில் மட்டும் கண்ணீர். காரணம் இந்த வெற்றியை பார்க்க இவரது தந்தை இப்போது உயிரோடு இல்லை.
இவர் அப்பாவின் மறைவுக்குப் பிறகு, இவருக்கு உதவியர் இவர் அக்கா. யாரிடம் பேசி எப்படி போட்டிக்குள் நுழைவது உள்ளிட்ட அனைத்தையும் அவர்தான் பார்த்துக்கொண்டாராம்.
இந்த செய்தி ஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ திரைப்படத்தை நினைவுபடுத்தியது. தங்கள் குழந்தைகளுக்கு அப்பா கொடுக்கும் தைரியம்தான் எத்தனை வலிமையானது?
மல்யுத்த வீரராக இருந்த அமீர்கான் குடும்பச் சூழல் காரணமாக அந்தத்துறையில் ஜொலிக்க முடியாமல் போய்விட தன் மல்யுத்தக் கனவை தன் பெண் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்காக சர்வதேச மல்யுத்தத்தில் தன் மூத்த மகளை தங்கம் வெல்ல வைக்கிறார். (மகாவீர் சிங் போகட் என்பவரின் நிஜக்கதை அது. அவரின் மகள்கள் கீதா போகட் மற்றும் பபிதா குமாரி ஆகியோர் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக பதக்கங்களைக் குவித்த வீரப்பெண்கள்.)
பயிற்சி காலத்தில் அவர் மகள் தண்ணீருக்குள் தத்தளிக்கும் போது அவர் சொல்லும் வார்த்தைகள் எல்லா பெண்களுக்கும் அவர்கள் அப்பா சொல்வதைப் போல அமைந்திருந்தது.
‘உனக்கு அப்பாவினால் கற்றுக்கொடுக்க மட்டுமே முடியும். ஒவ்வொரு முறையும் அப்பா உன்னைக் காப்பாற்ற வர முடியாது. நீதான் போராடணும்…’
‘விளையாட்டில் எதிராளியின் மூளையை குழப்பி விளையாடணும். போக்கு காட்டுவது ஒன்றாகவும், நிஜத்தில் செய்வது வேறொன்றாகவும் இருக்கணும்…’
கோமதியின் வெற்றியும், அந்த மல்யுத்தப் பெண்களின் வெற்றியும் கொண்டாடப்பட வேண்டியவைதான். மறுப்பதற்கில்லை.
ஆனாலும் ஒருவரின் இமாலய வெற்றிக்கு அவரவர்களின் உழைப்பு திறமை என்பதையெல்லாம்தாண்டி அவர்கள் வீட்டில் உள்ள ஆண் தேவதைகள் மற்றும் பெண் காவல் தெய்வங்களின் தியாகங்களும் மாபெரும் காரணம்.
வெற்றியைக் கொண்டாடும் அதே நேரம் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் வணங்குவோம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜூன் 1, 2019
சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’ மாத பத்திரிகையில் (ஜூன் 2019)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 3
புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி – ஜூன் 2019