கிராமங்களில் ஓடு மாற்றுபவர்கள் ஓடு மாற்றிய பிறகு அதில் கொஞ்சம் பட்டாணியை வீசிவிட்டுச் செல்வார்களாம்.
அதைத் தின்பதற்காக அவ்வப்பொழுது பறவைகளும், குரங்குகளும் வந்து அவற்றை எடுக்க முற்படும்போது ஓடு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டே வருமாம். நாளடைவில் ஓட்டு வீட்டுக்குள் வெயிலும் மழையும் அழையா விருந்தாளியாய் எட்டிப் பார்க்கத் தொடங்குமாம்.
சில மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் அவர்கள் அதே ஓடுமாற்றும் நபரைத்தான் அழைப்பார்கள் சரி செய்வதற்கு.
ஓடு மாற்றுபவரின் செயலும் அந்த மக்களுக்குத்தெரியும். தங்கள் செயல் அந்த மக்களுக்குத் தெரியும் என்பது ஓடு மாற்றுபவருக்கும் தெரியும்.
தெரிந்தே சில விஷயங்களுக்கு இடம்கொடுத்துத்தான் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.
வாட்ஸ் அப் வெர்ஷனில் என் புத்தகம் ரிலீஸ் ஆகிவிட்டதா என சற்று முன்னர் ஒரு வாசகர் போன் செய்திருந்தார். அதன் தாக்கத்தில் இந்தப் பதிவு.
இது புத்தகங்களுக்கான நிலை மட்டுமல்ல… திரைப்படம் வெளிவரும் முதல்நாள் அன்றே ஆன்லைனிலும், விசிடியாகவும் லீக் ஆகிவிடுகிறதே… எத்தனை சாஃப்ட்வேர்களை ஒரிஜினல் வாங்காமல் பயன்படுத்துகிறோம்…
வாட்ஸ் அப்பில் குரூப்புகளில் ஷேர் ஆகிக்கொண்டிருப்பது அத்தனையும் பதிப்பாளர் / எழுத்தாளர்கள் உரிமை பெறாமல் ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது என தெரியாமல் ‘வாட்ஸ் அப் வெர்ஷன்’ என்ற பெயர் டிரெண்டாகியதுதான் டிஜிட்டல் உலகின் வீச்சு.
டிஜிட்டல் உலகின் பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்தேதான் இதில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
எழுத்தும் ஆக்கமும்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 31, 2019