டெக்னோஸ்கோப்[5] – நீங்களாக இ-புத்தகம் வெளியிட ஆசையா?

புத்தகம் வெளியிட ஆசையா?

நீங்கள் எழுதும் புத்தகங்களை இ-புத்தகங்களாக வெளியிட்டு சம்பாதிக்கவும் உதவக்கூடிய வகையில் சில நிறுவனங்கள் செயல்படுகின்றன.

ஒருசில புத்தக பதிப்பளர்கள் தங்கள் புத்தகங்களை தாங்களே தங்கள் தளத்தில் இ-புத்தகங்களாக வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள்.

இன்று பல பதிப்பகங்கள் அமேசான் போன்ற தளங்களில் அவர்களுடன் விற்பனை ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விற்பனை செய்கிறார்கள்.

உலக அளவில் அமேசான் இ-புத்தகங்கள் பரவலாக மக்களைச் சென்றடைந்துள்ளன.

அமேசான் நிறுவனம் தன் கிண்டில் புக்ஸ்டோரில் தமிழ், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் மின்னூல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு துறைச்சார்ந்த  ஆயிரக்கணக்கான மின்னூல்களைக் கொண்டு வந்துள்ளது.

இங்கு அமேசான் தளத்தில் இ-புத்தகம் வெளியிட உதவும் சில குறிப்புகளைக் கொடுக்கிறேன்.

எழுத்தாளர்கள் தாங்களாகவே இ-புக்ஸ்களை வெளியிட முடியுமா?

முடியும்.  அமேசானில் KDP – Kindle Direct Publishing மூலம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை இ-புத்தகங்களாக வெளியிடலாம். இந்த வசதி எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதம். மேலும் விவரங்களுக்கு… https://kdp.amazon.com/en_US/

ராயல்டி எப்படி கிடைக்கும்?

அமேசானில் KDP அக்கவுண்ட் ஏற்படுத்திக்கொண்டு விண்ணப்படிவத்தில் உங்கள் வங்கி விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் கொடுக்கும்  வங்கி விவரங்களில் உங்களுக்கான ராயல்டி கிரெடிட் செய்யப்படும்.

பின்னர் அவர்களிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கும் நாள் வரை காத்திருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து ஒப்புதல் இமெயில் வந்ததும் புத்தக பதிப்பிக்கத் தயாராகலாம்.

ஒரு புத்தகம் விற்பனை ஆனாலும் அதற்கான ராயல்டி உங்கள் வங்கி அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகிவிடும். யாரிடமும் புத்தகங்கள் எவ்வள்வு காப்பிகள் விற்பனை ஆகியுள்ளன,  ராயல்டி எப்போது கிடைக்கும் என்றெல்லாம் வேண்டிக் கேட்க வேண்டாம். எல்லாமே வெளிப்படையாக உங்கள் அமேசான் கிண்டில் KDP அக்கவுண்ட்டில்  வெளிப்படுத்துவார்கள். உலகெங்கிலும் எத்தனை வாசகர்கள் படிக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

ஒருவரே எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாமா?

ஆம். ஒருவரே எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம்.

புத்தகங்களை எப்படி வடிவமைப்பது?

தாங்களே டைப் செய்து, புரூஃப் பார்த்து, விருப்பம்போல லே-அவுட் செய்து, அட்டைப் படம் வடிவமைத்துக்கொள்ளலாம்.

எம்.எஸ்.வேர்டில் யுனிகோட் ஃபாண்ட்டில் தகவல்களை டைப் செய்ய வேண்டும்.  எம்.எஸ்.வேர்டிலேயே டைப் செய்த தகவல்களை புத்தக வடிவில் படிப்பதற்கு ஏற்றாற்போல லே-அவுட் செய்துகொள்ள வேண்டும்.

லே-அவுட் செய்தல் என்றால் புத்தக தலைப்பு, அத்தியாயத் தலைப்புகள், முதன்மை தகவல் தலைப்புகள், துணை தகவல் தலைப்புகள், பொருத்தமான படங்களை தேவையான அளவில் இணைப்பது என புத்தகங்களை படிக்கும்போது கண்களை உறுத்தாதவாறும், நன்கு புரியும்படியும் வடிவமைத்தல் என்று பொருள்.

புத்தக அட்டைகளை எப்படி வடிவமைப்பது?

போட்டோஷாப், பவர்பாயிண்ட் போன்ற சாஃப்ட்வேர்களில் புத்தக அட்டையை வடிவமைக்கலாம்.

புத்தகத்துக்கு விலையை எப்படி நிர்ணயம் செய்வது?

புத்தகத்துக்கு என்ன விலை வைக்கலாம், ராயல்டி எப்படி வேண்டும் போன்றவை உங்கள் சாய்ஸ்தான். புத்தக வடிவமைப்பைத் தொடங்கி அப்லோட் செய்யும்போது இதற்கான விவரங்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.

புத்தகம் விற்பனை ஆன பிறகு அவர்களுக்கான தொகையை எடுத்துக்கொண்டு உங்களுக்கான ராயல்டி உங்கள் அக்கவுண்ட்டுக்கு வந்து சேரும்.

எப்போது விற்பனையில் வைப்பார்கள்?

லேஅவுட் செய்து வடிவமைத்த புத்தகங்களை அமேசான் தளத்தில் அப்லோட் செய்த பிறகு நம் புத்தகத்தை அவர்கள் ரிவ்யூ செய்துவிட்டு அவர்கள் தளத்தில் விற்பனைக்கு வைப்பார்கள்.

விளம்பரப்படுத்துதல் அவசியம்

எழுத்தாளர்கள் தங்கள் புத்தகம் அமேசானில் கிடைக்கிறது என்ற தகவலை தங்கள் நட்பு வட்டத்தில் விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். நாளடைவில் உங்கள் புத்தகம் தேவை என்றால் அவர்களாகவே அமேசான் தளத்துக்குச் செல்வார்கள்.

எழுத்தும் ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூன் 4, 2019

(Visited 182 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon