விகடன் டிவியில்! குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்? (JULY 2019)

பெற்றோர்களே… இப்படியெல்லாம் பிள்ளைகள் மொபைல் பயன்படுத்தினால் பிரச்னையே இல்லை! என்ற தலைப்பில் என்னுடைய கருத்துக்கள் விகடன் டிவியில்.

விகடன் டிவியில்!

– காம்கேர் கே. புவனேஸ்வரி (ஜுலை 4, 2019)

குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்?

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவக்கூடிய ஆப்கள் குறித்து ஜூலை 4, 2019 வியாழன் அன்று விகடன் டிவியில் வெளியான என் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு…

ஒருமுறை என் உறவினர் ஒருவர் தன் இரண்டு வயது பேத்திக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தார். சாப்பிடும் வரை பேத்தியின் கண்கள் மொபைல் APP  வீடியோ கேம்ஸில். சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்ததும் மொபைலை பாட்டியிடம் கொடுத்துவிட்டு பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடத் தொடங்கியது.

நான் வியந்தேன்.

குழந்தை சாப்பிடும்போது மட்டும் Wi-Fi சுவிட்சை ஆன் செய்வாராம். சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்கும்போது குழந்தைக்குத் தெரியாமல் ஆஃப் செய்துவிடுவாராம். வீடியோ கேம்ஸ் இயங்காமல் நிற்கும்போது கவனம் வேறு திசையில் திரும்புவதாகச் சொன்னார். அப்படிப் பழக்கப்படுத்தி இருந்தார்.

இதனால் வீடியோ கேம்ஸ் பார்க்கும் நேரமும் கட்டுப்படுத்தப்படுகிறது. சாப்பாடும் முழுமையாக உள்ளே செல்கிறது.

இப்படிச் செய்யாமல் சாப்பிடும்போது வீடியோ கேம்ஸ் எதற்கு என கட்டுப்படுத்தத்தொடங்கினால் சாப்பாடும் முழுமையடையாது. வீடியோ கேம்ஸின் மீதான வெறியும் அடங்காது.

குழந்தைகளாகட்டும், இளைஞர்களாகட்டும் முதலில் பழக்கங்களை வழக்கப்படுத்துவோம். பின்னர் அவர்களாகவே அவற்றுக்கான எல்லைகளை வகுத்துக்கொள்வார்கள்.

பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் உதவக்கூடிய ஆப்கள் உள்ளன.

அன்பு, பாசம், நேசம், அரவணைப்பு என உணர்வுகளால் ஆளக்கூடிய அப்பா அம்மா குழந்தைகள் உறவுமுறையை இன்று தொழில்நுட்பம் ஆளும்நிலை வந்துவிட்டது.

குழந்தைகளுக்கு எழுத்துக்களையும் ஒலிகளையும் வண்ணங்களையும் வீடுகளில் தாத்தா பாட்டிகளும் அப்பா அம்மாக்களும் கற்றுக்கொடுத்த காலம்போய் இன்று ஆப்கள் சொல்லிக்கொடுக்கின்றன. ஆப்கள் டியூஷன் எடுக்கின்றன. ஆப்கள் கதை சொல்கின்றன. பாட்டு சொல்லித் தருகின்றன. A-Z எல்லாமே ஆப் மயம்தான்.

இவ்வளவு ஏன் குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் இருக்கும்போதே தாய்க்கு உதவக்கூடிய பேறுகால ஆப்களும் உள்ளன.

குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப கல்வி, பொழுதுபோக்கு, மருத்துவம் என பல்வேறு பிரிவுகளில் ஆப்கள் உள்ளன.

முன்பெல்லாம் வெப்சைட்டுகளில் கிடைத்த தகவல்களும் வசதிகளும் இன்று மொபைல் ஆப்களாக வடிவமெடுத்துள்ளன.

APP for Pregnancy Care

  1. Bump
  2. Healofy
  3. What to expect
  4. Pregnancy Tracker

App for 6 months to 6 years  Kids

  1. ABC Kids, Learning Games
  2. ABC Tracing & Phonics – Teach Phonics and Letters of the alphabets
  3. Yuggler – Keep track of your child activities
  4. Screen Time Parental Control – This app lets you control how much screen time your child is allowed.
  5. Life 360 – Keep Track of your kids activities.
  6. Google Calendar – To Keep track of appointments
  7. Rooster Money – To teach money management skills.

Entertainment App for 7-12+ Age Kids

  1. Box Island
  2. Marble Math
  3. Duolingo
  4. A Dark Room
  5. Gorogoa
  6. Kudos

Education App for 7-12+ age Kids

  1. Learn French Mind Snacks
  2. TimesTables
  3. 6 numbers by brainbow
  4. 3D Brainn
  5. Monkey Maths
  6. Little Alchemy

Stories, Poems for Kids APP

  1. Tamil Kids Stories
  2. Tamizh Kids Rhymes
  3. Bharathiyar Padalgal
  4. Tamil Nursery Rhymes
  5. Top 100 Tamil Rhymes
  6. iLLakkana Padalgal
  7. Tamil Stories
  8. Tenali Raman Stories

இப்படி ஏராளமான ஆப்கள் கொட்டிக்கிடக்கின்றன… நாம்தான் அவற்றை ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். Rating & Reviews பார்த்து நல்ல மதிப்பீடுகள் பெற்ற ஆப்களை மட்டும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இங்கு சொல்லப்பட்ட ஆப்கள் உதாரணத்துக்காக சொல்லப்பட்டவையே. எனவே பயன்படுத்தும் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்.

ஆப்களே பிள்ளைகளின் பாதுகாப்புக்கு முழுமையான தீர்வாகாது.

பிள்ளைகளின் பயன்பாடுகளுக்கு உதவுகின்ற ஆப்கள் போலவே அவர்களின் பாதுகாப்புக்கும் உதவுகின்ற ஆப்கள் உள்ளன. ஆனால் ஆப்களே பிள்ளைகளுக்கான பாதுகாப்புக்கான முழுமையான தீர்வாகாது.

சமீபத்தில் ‘Go Put Your Strength to work’ என்ற நான் படித்த ஆங்கிலப் புத்தகத்தின் சாராம்சம் இதுதான்.

‘போரை நிறுத்துவது என்பது வேறு; அமைதியை உருவாக்குவது என்பது வேறு. நோயை குணப்படுத்துவது என்பது வேறு; ஆரோக்கியத்தை உருவாக்குவது என்பது வேறு. பலவீனத்தைப் போக்குவது என்பது வேறு; பலத்தைப் பெருக்குவது என்பது வேறு. இரண்டுக்கும் வெவ்வேறு மனநிலைகள், வெவ்வேறு முயற்சிகள், வெவ்வேறு உத்திகள் தேவைப்படுகின்றன.’

அதுபோலதான் பிள்ளைகளை கண்காணிக்கவும் பாதுகாக்கவும் ஆப்களை பயன்படுத்துவது என்பது வேறு… பிள்ளைகளை மனதளவில் பாதுக்காப்பாக இருக்கக் கற்றுக்கொடுப்பதும் அதற்கான சூழலை உருவாக்குவதும் வேறு வேறு…

ஆப்கள் மூலம் ஓரளவுக்கு அவர்களின் இருப்பிடத்தை, செல்லும் இடங்களை, போன் கால்களை, மெசேஜ்களை, பார்வையிடும் வெப்சைட்டுகளை, பயன்படுத்தும் கேம்ஸ்களை கண்காணிக்கலாம், கட்டுப்படுத்தலாம். ஆனால் எந்நேரமும் இதே வேலையாக இருப்பது என்பது இயலாத காரியம்.

இதைவிட பிள்ளைகளை பாதுகாப்பாக இருக்கக் கற்றுக்கொடுத்து பழக்குவது மிக முக்கியம்.

உங்கள் பிள்ளை மொபைலை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என தெரிந்துகொள்ள சின்ன டெஸ்ட்…

உங்கள் குழந்தைகளிடம் என் போனில் சிக்னல் கிடைக்கவில்லை. உன் மொபைலை கொடு… பேசிவிட்டுத் தருகிறேன் என சொல்லிப் பாருங்கள்…

உங்கள் பிள்ளை பதட்டப்படாமல் உங்களிடம் மொபைலைக் கொடுத்தால் அவர்கள் மொபைலை சரியாகப் பயன்படுத்துகிறார்கள் எனக் கொள்ளலாம்.

அதைவிட்டு அவர்கள் பதட்டப்பட்டு வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ் மெசேஜ்களை டெலிட் செய்வதில் முனைப்பு காட்டினாலோ அல்லது மொபைலை கொடுப்பதில் சுணக்கம் காட்டினாலோ அவர்கள் மனதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என தெரிந்துகொள்ளலாம்.

அதுபோல உங்கள் பிள்ளைகள் உங்கள் மொபைலில் கேம்ஸ் விளையாட எடுக்கும்போது  ‘மேசேஜ்களை பார்க்காதே… என் வாட்ஸ் அப்பை நோண்டாதே’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அவர்களும் அதையே பயன்படுத்துவார்கள்.

பிள்ளைகளின் பாதுகாப்புக்கான ஆப்கள்

Life 360 என்ற ஆப்பில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் குரூப் உருவாக்கிக்கொண்டு அவர்களை முழுமையாகக் கண்காணிக்க முடியும். கண்காணிப்பது என்று சொல்வதைவிட பாதுக்காப்பை கொடுக்க முடியும் என்று சொல்லலாம்.

நாள்முழுவதும் அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதை டிராக் செய்யும் வசதிகள் உள்ளன. இதன் மூலம் பிள்ளைகளும் பெற்றோர் எங்கிருக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ளலாம். பெற்றோரும் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ளலாம். பெற்றோர் அலுவலகத்தில் இருந்து டிராஃபிக்கில் மாட்டி இருந்தால் அவர்கள் வீட்டுக்கு வர எவ்வளவு மணிநேரம் ஆகும் என்பதை அறியலாம்.

இதுபோல ஏராளமான பேரண்டிங் கன்ட்ரோல் சாஃப்ட்வேர்களும், ஆப்களும் இணையதளத்திலும் ஸ்மார்ட்போனிலும் பிள்ளைகளை கண்காணிப்பதற்கு உதவுகின்றன.

  1. Zift/Net Nanny
  2. Norton Family Premier
  3. Kaspersky Safe Kids
  4. Qustodio
  5. OurPact
  6. Screen Time
  7. ESET Parental Control for Android
  8. MMGuardian

இதுபோன்ற ஆப்களை பயன்படுத்துவதை விட முக்கியமான வேறொரு அடிப்படை விஷயம் ஒன்றுள்ளது.

பிள்ளைகளின் மனதளவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளச் செய்யும் பக்குவத்தை வளர்த்துவிட வேண்டும்.

சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஜெனலியா அப்பா வீட்டை விட்டு காதலன் ஜெயம்ரவி வீட்டிற்கு சிலகாலம் வந்து தங்கியிருப்பார்.  காதலன் வீட்டினர் சற்று வசதியானவர்கள். அவர்கள் சாப்பிடும்போது சாப்பாடு மேலே சிந்தாமல் இருப்பதற்கு கழுத்தில் துணி கட்டிக்கொண்டு சாப்பிடுவார்கள். ஆனால் ஜெனலியா அப்படிச் செய்யாமல் சாப்பிடும்போது  ‘என்ன உங்க வீட்டில் இதெல்லாம் சொல்லித் தரவில்லையா?’ என்று கேட்க ‘மேலே சிந்தாமல் இருக்க துணி கட்டிக்கொள்ள கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் சிந்தாமலேயே சாப்பிடக் கற்றுக்கொடுத்திருக்கிறார் என் அப்பா…’ என்று சொல்லும் தத்துவத்தை நம் வாழ்க்கையில் எல்லா விஷயங்களோடும் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

நாம் இயங்கிக்கொண்டிருக்கும் உலகம் போலவே இன்டர்நெட் மூலம் மற்றொரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு சைபர் வேர்ட் எனலாம். அந்த உலகத்துடனும் ஒன்றி வாழப் பழக வேண்டும். அப்படியில்லையென்றால் நான் தனிமைப்படுத்தப்படுவோம்.

ஆப்களே தேவையில்லை என ஒதுக்கிவிட முடியாது. ஆப்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதுதான் முக்கியம்.

12:55 நிமிட வீடியோவை விகடன் டிவியில் முழுமையாக பார்க்க… https://www.facebook.com/vikatanweb/videos/421217288607745/?v=421217288607745

குழந்தைகளுக்கு மொபைலும் ஆப்களும் முக்கியம்தானா?

விகடன் டிவியில் வெளியான என்னுடைய கருத்துக்களை உள்ளடக்கிய வீடியோ வெளியான பிறகு எனக்குக் கிடைத்த பின்னூட்டங்களை அலசி ஆராய்ந்து குழந்தைகளுக்கு மொபைலும் ஆப்களும் முக்கியம்தானா என்பது குறித்து இன்னும் கொஞ்சம் ஆழமாக, விரிவாக…


நீங்கள் எல்லாம் என்ன மொபைல் ஆப்களிலா வளர்ந்தீர்கள், மொபைலா பாட்டும் கதையும் சொல்லிக்கொடுத்தன, குழந்தைகளிடம் மொமைல் ஆப்ஸ் கேம்ஸ்களை ஏன் பழக்கப்படுத்த ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பது ஒரு சாராரின் கருத்து.

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த நாட்களில் குழந்தைகளை பெரும்பாலும் பாட்டி தாத்தாக்கள்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கும் குளிக்க வைப்பதற்கும், தூங்க வைப்பதற்கும் டிவியில் கார்ட்டூன் சேனல்களையோ, யு-டியூபில் குழந்தைகளுக்கான ரைம்ஸ்களையோ அல்லது மொபைல் ஆப்களில் கதைகளையோ அல்லது கேம்களையோ காட்டித்தான் அவர்களை சமாளிக்க முடிகிறது.

தாத்தா பாட்டிகள் கதைகள் சொல்லலாம்தான். பலரும் சொல்லிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். ஆனாலும் குழந்தைகளும் எத்தனை நேரம்தான் தாத்தா பாட்டி முகங்களையே  பார்த்துக்கொண்டிருக்கும்? அவர்கள் குரல்களையே கேட்டுக்கொண்டிருக்கும்?

ஸ்மார்ட் போன்களும், யு-டியூப் மற்றும் ஆப்களும் பிரபலமாவதற்கு முன்பெல்லாம் அனிமேஷன் சிடிக்கள் குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்தன.

நாங்கள் எங்கள் நிறுவனத்தில் தயாரித்த குழந்தைகளுக்கான மழலை மெட்டுக்கள், மழலை சந்தங்கள், குழந்தைகளுக்கான கந்தர் சஷ்டிக்கவசம், இராமாயணம், தினம் ஒரு பழம், தாத்தா பாட்டி கதைகள், பேரன் பேத்திப் பாடல்கள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்ற அனிமேஷன் சிடிக்கள் மக்கள் மத்தியில் பிரசித்திப் பெற்றிருந்தன. அப்போதெல்லாம் அந்த சிடிக்களை கம்ப்யூட்டரில் ஓடவிட்டித்தான் சாப்பாடு கொடுப்பதாக பல பெற்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கடுத்து குழந்தைகளுக்கான தொலைக்காட்சி சேனல்கள் வர ஆரம்பித்தன. அதற்கடுத்து இப்போது மொபைல் ஆப்ஸில் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள்.

இப்படி கால மாற்றத்துக்கு ஏற்ப குழந்தைகளை சமாளிக்க ஏதேனும் ஒரு யுக்தி தேவையாகவே இருக்கிறது.

குழந்தைகள் சாப்பிட வைக்க மொபைலை ஏன் அவர்களிடம் கொடுக்கிறீர்கள்? மாறாக  கதைகள் சொல்லலாம், அவர்களுடன் விளையாடலாம் என ஆயிரம் வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ப்ரீ கேஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி செல்லும் குழந்தைகளை காலை வேளையில் பள்ளிக்குக் கிளப்பும் நேரத்தில் இதெல்லாம் சாத்தியமா?

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.

முந்தைய தலைமுறையில் பெரும்பாலும் வீடுகளில் அப்பா அம்மா மட்டும் இருப்பதில்லை. தாத்தா பாட்டி அத்தை மாமா என்று கூட்டுக்குடும்பமாக நிறைய உறவுகளின் முகங்களைப் பார்த்து வளர்ந்தன குழந்தைகள்.

சாப்பிடும் குழந்தைகளைச் சுற்றி அம்மா பாட்டி அத்தை என சுற்றி ஒரு கூட்டமே உற்சாகப்படுத்தும். நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டவும், நாய் பூனை இவற்றுடன் பேசிக்கொண்டே அவற்றுக்கு ஒரு வாய் சாப்பாடு குழந்தைக்கு ஒரு வாய் சாப்பாடு என குழந்தைகளை ஊக்கப்படுத்தி சாப்பாடு ஊட்ட வைத்த காலமெல்லாம் இருந்தனதான். இல்லை என நானும் சொல்லவில்லை.

சாப்பிட வைக்க வேண்டும், தூங்க வைக்க வேண்டும், குளிக்க வைக்க வேண்டும் இப்படி நாள் முழுவதும் குழந்தைகளை முழுமையாக கவனித்துக்கொள்ளும் கட்டாயச் சூழலில் சில மணி நேரங்கள் குழந்தைகள் ஆப்பிலோ அல்லது யு-டியூபிலோ கதைகளையும், பாடல்களையும் பார்ப்பதிலோ அல்லது கேம்களை விளையாடுவதினாலோ தவறே இல்லை.

ஆனால் 24 மணி நேரமும் மொபைலில் கேம்ஸ் என அடிக்ட் ஆகும்போதுதான் பிரச்சனை ஆரம்பம்.

நாம் தொந்திரவின்றி வேலை செய்வதற்காக குழந்தைகள் கைகளில் மொபைலை கொடுத்துச் செல்வதும், டிவியில் கார்ட்டூன் சேனலை ஆன் செய்துவிட்டு செல்வதுமான பழக்கத்தை வழக்கப்படுத்தினால் குழந்தைகள் அவற்றுக்கு அடிக்ட் ஆகத்தான் செய்வார்கள்.

டிஜிட்டல் சாதனங்களை நாமும் அளவோடு பயன்படுத்தி குழந்தைகளுக்கும் அதையே வழக்கப்படுத்தினால் எந்தக் குழந்தையும் எதற்கும் அடிக்ட் ஆகாது என்பது நிதர்சனம்.

நம்மைப் பார்த்துத்தானே வளர்கின்றன குழந்தைகள். யோசிப்போம்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூலை 9 2019

DISCLAIMER

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டுகள்  சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆப்களின்  தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் கட்டுரை ஆசிரியரோ அல்லது கட்டுரை வெளியாகியுள்ள  இந்த வெப்சைட்டோ எந்தவிதத்திலும் பொறுப்பேற்க இயலாது.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சாஃப்ட்வேர்கள், வெப்சைட்டுகள், ஆப்கள், நிறுவனங்களின் பெயர்கள், அவற்றின் தயாரிப்புகள், புகைப்படங்கள், லோகோ மற்றும் காப்புரிமை ஆகிய அனைத்தும் அந்தந்த நிறுவனங்களுக்கே உரிமையுடையது.

ஆப் ஆகட்டும், வெப்சைட் ஆகட்டும், சாஃப்ட்வேர் ஆகட்டும் அதன் வடிவமைப்பாளர்கள் அவற்றில் எப்போது வேண்டுமானாலும் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்வார்கள். இந்தக் கட்டுரையை  நீங்கள்  படிக்கும்போது இதில் குறிப்பிடப்பட்டுள்ள  வெப்சைட்டுகள், ஆப்கள்  மற்றும் சாஃப்ட்வேரின் வடிவமைப்பில் அவர்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால்  அதற்கும் கட்டுரை ஆசிரியரோ அல்லது கட்டுரை வெளியாகியுள்ள இந்த வெப்சைட்டோ எந்தவிதத்திலும் பொறுப்பேற்க இயலாது.

 

(Visited 246 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon