PON TV Chennai யு-டியூப் சேனலில் என் வாசிப்பு அனுபவம் குறித்த நேர்காணல்! (JANUARY 2020)

 ‘வாசிப்பு எனக்கு என்னெவெல்லாம் கொடுத்தது’ என்ற தலைப்பில்  என் வாசிப்பு அனுபவம் குறித்து திரு.பொன். காசிராஜன் அவர்களின் பொன் டிவி தமிழ் (Pon Tv Tamil) யு-டியூப் சேனலுக்காக நான் கொடுத்த நேர்காணல்! https://youtu.be/EpHiX2xjpGk

வீடியோவில் பேசியுள்ள விவரங்கள் கட்டுரை வடிவில்!

பெரும்பாலும் வாசிப்பு என்றாலே கதை, கவிதை, கட்டுரைகள், இலக்கிய புத்தகங்கள் படிப்பதையே வாசிப்பாகக் கருதுகிறார்கள். வாசிப்பு என்பது எல்லா துறையினருக்குமே மிகவும் அவசியம். வாசித்தால் மட்டுமே அவரவர் துறையில் தங்கள் அறிவை அப்டேட் செய்துகொள்ள முடியும்.

நான் இயங்கிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பத் துறையில் நான் அப்டேட்டாக இருப்பதற்கு நான் எப்படி வாசிக்கிறேன், என்னென்ன வாசிக்கிறேன், வாசிப்பு என்னை எப்படியெல்லாம் செதுக்கியது போன்ற விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

என் வாசிப்பனுபவத்தை படிப்பது என்ற ஒற்றைச் செயலுடன் நிறுத்திக்கொள்ள முடியவில்லை. என்னுடைய எழுத்துடனும் இணைந்(த்)தே அந்த அனுபவத்தை சிந்திக்க முடிகிறது என்பதால் வாசிப்பனுபவத்தையும் எழுத்தனுபவத்தையும் இணைத்தே பகிர்கிறேன்.

என் கொள்ளு பாட்டியின் வாசிப்பும் நேசிப்பும்

என் வாசிப்பு வழக்கத்தைப் பற்றி சொல்வதற்கு முன் என் கொள்ளுபாட்டி சஞ்சீவியம்மாள் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் என் அம்மாவின் பாட்டி. அவரை நாங்கள் பார்த்ததில்லை. அம்மா அவரைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.

அவர்தான் எங்களது அறிவின் ஆசான். புதுச்சேரியில் வாழ்ந்த அவர் நான்கு மொழிகள் படிக்கவும், பேசவும், எழுதவும் தெரிந்த திறமைசாலி. நிறைய படிப்பார், படித்ததை சுவராஸ்யமாக சொல்வாராம். படிப்பு மட்டுமே நம்மை பண்படுத்தும், உயர்த்தும், உன்னதம் தரும் என்று திரும்ப, திரும்ப சொல்வாராம்.

என் அம்மாவின் கல்யாணத்திற்கு கொள்ளு பாட்டி புத்தகங்களைத்தான் பரிசாக கொடுத்தாராம். கல்யாணத்துக்குப் பிறகு அவரது  வீட்டிற்கு விருந்திற்கு போயிருந்தபோதும்  ‘இந்தாருங்கள்  மாப்பிள்ளை’  என்று என்அப்பாவுக்கு புத்தகத்தையே பரிசாக கொடுத்தாராம்.

என் கொள்ளுபாட்டி பத்திரிகைகளில் வந்ததை பகுதிவாரியாகக் கிழித்து புத்தகமாக்கி வைத்திருப்பாராம். தன் குழந்தைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் நிறைய கதைகள் சொல்லி வளர்த்தாராம்.

பெற்றோரின் வாசிப்பு வழக்கம்

என் அம்மாவும் அப்பாவும்  நிறைய வாசிப்பார்கள்.

அதிலும் என் அம்மா அது இது என்றில்லாமல் எது கிடைத்தாலும் படிப்பார். மளிகை சாமான் கட்டி வரும் செய்தித்தாளைக்கூட விடமாட்டார், படித்துவிடுவார். சாப்பிடும்போதும் கையில் ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும்.

இத்தனைக்கும் என் அம்மாவும் அப்பாவும் அந்த காலத்திலேயே இரவு பகல் என 24 மணிநேர சுழற்சி வேலையில் தொலைபேசித் துறையில் பணிபுரிந்து வந்தனர்.

மழை, பனி, புயல், வெள்ளம் எதுவாக இருந்தாலும் அலுவலகம் செல்ல வேண்டிய பொறுப்பான பதவியில் இருவருமே இருந்ததால் எந்தக் காரணத்தைச் சொல்லியும் விடுப்பு எடுத்து வீட்டில் தங்க முடியாது.

 

அப்பாவுக்கு பகல் ஷிஃப்ட் பணி என்றால்,  அம்மாவுக்கு இரவு நேர ஷிஃப்ட் பணி. அதுப்போல அம்மாவுக்கு பகல் ஷிஃப்ட் என்றால் அப்பா இரவு ஷிஃப்ட் பணி. இப்படி இருவரும் மாறிமாறி வேலைக்குச் சென்று உழைத்ததைப் பார்த்து வளர்ந்ததால் எங்களுக்கு உழைப்பு என்பது வாழ்க்கையோடு விரும்பி இணைந்த ஒரு விஷயமாகவே மாறிப்போனது.

இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் என் அம்மா படிப்பதை மட்டும் என்றுமே விட்டதில்லை. தேடித்தேடிப் படிப்பதில் அவரை மிஞ்ச முடியாது. தான் படித்ததில் பிடித்ததை கட் செய்து வைப்பார்.

விடுமுறை தினங்களில் அப்பாவுடன் அமர்ந்து அவற்றை எங்கள் கைகளால் பைண்டிங் செய்வதே அந்த நாளில் எங்கள் ‘சம்மர் கோர்ஸ்’.

என் அம்மாவின் புத்தகங்களை சேகரிப்பதற்காக, சுவர் உயர மர பீரோ ஒன்றை செய்து சர்ப்ரைஸாக பரிசளித்தார். அதுபோன்ற அலமாரிகளை பொதுவாக நூலகங்களில் மட்டுமே பார்க்கமுடியும்.

அப்பா அம்மாவின் பணிஇட மாற்றம் ஏராளமான ஊர்களில் வசித்திருக்கிறோம். ஒவ்வொரு இடம் மாறும்போதும் புத்தகங்களும் புத்தக அலமாரிகளும் கூடவே பயணிக்கும்.

என் அம்மா ‘புரிகிறதோ இல்லையோ படிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் புரிய ஆரம்பிக்கும்’ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.

கோகுலம், ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவை எங்களை வளர்த்த புத்தகங்கள். இன்றும் அம்மா சேகரித்து எங்கள் கைகளால் பைண்டிங் செய்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை போன்றவை எங்கள் வீட்டு லைப்ரரியில் உள்ளன.

அம்மாவின் வாசிப்பும் நேசிப்பும் குறித்து தினமலர் நிஜக்கதையில் நேர்காணல்… https://www.dinamalar.com/news_detail.asp?id=903120

இப்போது  என் அப்பா அம்மாவின் வாசிப்பு முறை

இப்போது என் அப்பா அம்மாவின் வாசிக்கும் வழக்கம் இன்னும் ஆழமாக சென்றுள்ளது.

பல பத்திரிகைகளுக்கு ஆன்லைனில் சப்ஸ்கிரிப்ஷன் கட்டியுள்ளோம். வீட்டில் இருந்தால் லேப்டாப், டெஸ்க்டாப். வெளியூர் சென்றால் ஐபேட், டேப்லெட், ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வாசிக்கிறார்கள்.

அடிக்கடி அவர்கள் அமெரிக்காவில் இருக்கும் என் சகோதரன் சகோதரி வீட்டுக்கும் சென்று வருவதால் ஆன்லைனில் வாசிப்பது சுலபமாக உள்ளது.

அவர்களுக்கென தனி பிளாகும் உள்ளது. அதில் எழுதியும் வருகிறார்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் அக்கவுண்ட்டும் உள்ளது. எங்கள் குடும்பத்துக்காகவே ஒரு யு-டியூப் சேனலும் வைத்துள்ளோம். அதில் என் அம்மா பயனுள்ள வீடியோக்களை லைப்ரரியில் சேமித்து வைப்பார்கள்.

முன்பு பத்திரிகைகளில் வெளிவந்ததை எங்களுக்காக சேகரித்து வைத்த என் பெற்றோர் இன்று ஆன்லைனில் வருவதை லிங்குகளாக சேகரித்து வைக்கிறார்கள்.

இளம் வயதில் வாசிப்பு என்னெவெல்லாம் செய்தது?

புத்தகங்களுடனேயே வளர்ந்ததால் எங்களுக்குள் இருந்த கிரியேடிவிடியும் வளர்ந்தது. வாசிப்பு கற்பனையின் உச்சத்தை எங்களுக்கு காட்டியது. புத்தங்களை வாசிக்கும்போது அதிலுள்ள எழுத்துக்கள், படங்கள், ஓவியங்கள், வடிவமைப்பு இப்படி பலவிஷயங்கள் கிரஹிக்கப்பட்டு மனதினுள் செல்லும்.

எனக்கு எழுத்து, தங்கைக்கு ஓவியம், தம்பிக்கு கார்ட்டூன் என  ஆளுக்கொரு திறமையை காட்டிக்கொடுத்தது. பின்னாளில் அதுவே எங்களின் அடையாளமானது.

10 வயதில் என் திறமையை கண்டுகொண்ட எனக்கு எதிர்காலத்தில் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்பதே கனவாகவும் இருந்தது.

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பதற்கு ஏற்ப ‘என் திறமை எழுத்து’  என்பதை 12 வயதில் கோகுலம் பத்திரிகையில் வெளியான ’செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கதை நிரூபித்தது. அதன் பின்னர் அந்தத் திறமையை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நான் அதையே என் மூச்சாகக் கொண்டு என் படிப்புடன் இணைத்து என் திறமையையும் வளர்க்கத் தொடங்கினேன்.

அப்போது என் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப் செய்துகொடுத்து நான் பத்திரிகைகளுக்கு அனுப்பும் படைப்புகளில் ரப்பர் ஸ்டாம்ப்பினால் பெயரை அச்சடித்து அனுப்பும் வழக்கத்தை உண்டாகினார். அதுபோலவே என் தம்பி, தங்கைகளுக்கும் செய்துகொடுத்தார். எங்கள் படைப்புகள் பல முன்னணி பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.

தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து விடுவேன். 6 மணிவரை எழுத்து, வாசிப்பு. அதன்பின்னர்தான் பள்ளி / கல்லூரி படிப்புக்கான நேரத்தை ஒதுக்குவேன். இதுதான் நான் கல்லூரி முடிக்கும்வரை என் தினசரி வேலையாக இருந்தது.

அன்றாடம் பள்ளி / கல்லூரியில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து சுவையாக எழுதுவேன். இறுதியில் அது கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ ஏதேனும் ஒரு வடிவில் வந்துநிற்கும். பின்னர் அதை சுயமுகவரியிட்ட கவருடன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பேன். பெரும்பாலும் திரும்பி வரும். திரும்பி வருகின்ற படைப்புகளை மேம்படுத்தி சளைக்காமல் மறுபடியும் அனுப்புவேன். இதுவே என் வாழ்க்கையின் தினசரி வழக்கமாக இருந்தது.

தினமும் பள்ளி / கல்லூரியில் இருந்து திரும்பும்போது போஸ்ட் பாக்ஸில் ஏதேனும் வந்திருக்கிறதா என பார்ப்பது ஒரு சுகமான அனுபவமாக அமைந்தது. ஒன்று படைப்புகள் திரும்ப வந்திருக்கும் அல்லது படைப்புகள் பத்திரிகையில் அச்சில் வந்திருக்கும். இரண்டில் ஒன்று நிச்சயம். அதுவே என் சுவாரஸ்யம். பொழுதுபோக்கு. அன்றாடப் பணிகளுள் ஒன்று.

எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிப்பதற்குள் 100-க்கும் மேற்பட்ட கதைகள் கட்டுரைகள் கவிதைகள்  சாவி, குமுதம், ஆனந்தவிகடன், பாக்யா, சுமங்கலி, ராஜம், விஜயபாரதம் போன்ற பல்வேறு முன்னணி பத்திரிகைகளில் வெளியானதுடன் அவற்றில் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தன.

தொழில்நுட்பம் சார்ந்த எழுத்தும் வாசிப்பும்  

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்கவே யோசித்துக்கொண்டிருந்த 1992-ல்  கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் இரட்டைப் பட்டம் பெற்று காம்கேர்  சாஃப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கினேன்.

சாஃப்ட்வேர்கள் மட்டுமில்லாமல் அனிமேஷன் கார்ட்டூன் தயாரிப்புகள், ஆவணப் படங்கள் இயக்குதல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்தல், இ-புக்ஸ் வெளியிடல், மொபைல் ஆப் தயாரித்தல் என பல்வேறு பணிகள் எங்கள் நிறுவனத்தில் செய்துவருகிறோம்.

எந்த சூழலிலும் என் படைப்பாற்றலை விட்டுவிடாமல் தொழில்நுட்பம் பக்கம் மடைமாற்றினேன். அவ்வளவுதான்.

தொழில்நுட்பம் சார்ந்தே 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். இப்போதும் எழுதி வருகிறேன்.

புத்தகங்களாக மட்டுமில்லாமல் என் நிறுவனத்தின் வாயிலாக எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் அனுபவங்கள் அத்தனையையும் எழுத்து,  பேச்சு, அனிமேஷன், பயிற்சி, ஆவணப்படங்கள் என எல்லா விதங்களிலும் தொழில்நுட்பத்தின் தேவை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தமிழகமெங்கும் எடுத்துச் சென்றதில் பெரும்பங்கேற்றுள்ளேன். இப்போதும் அந்தப் பணி தொடர்வதில் மகிழ்ச்சி.

நான் எழுதியுள்ள பல புத்தகங்கள் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைகழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என பல்வேறு கல்விக்கூடங்களில் பாடதிட்டமாகவே உள்ளன.

என் புத்தகங்கள் தமிழகம் மட்டுமில்லாமல் உலகமெங்கும் பரவலாக சென்று சேர்ந்தமைக்கு நூலகங்களும் உதவி செய்தன. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் நூலகங்களில் உள்ளன என்பதை அங்கிருந்து என்னை தொடர்புகொள்ளும் வாசகர்கள் மூலம் அறிகிறேன்.

தொழில்நுட்பத்தையும் இலக்கியத்தையும் ஒருங்கிணைக்கும் பணியில்…

தொழில்நுட்பத்தையும் இலக்கியத்தையும் இணைத்து ப்ராஜெக்ட்டுகள் தயாரிக்கத் தொடங்கினேன்.

என் பணிசார்ந்து ப்ராஜெக்ட்டுகளுக்காக இரண்டு விதங்களில் படிக்க வேண்டியுள்ளது.  ஒன்று என்ன ப்ராஜெக்ட் செய்கிறோமோ அது சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்வதற்காக, மற்றொன்று எந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் ப்ராஜெக்ட்டுகளை செய்ய இருக்கிறோமோ அந்த தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதற்காக.

 1.  நாங்கள் முதன் முதலாக தயாரித்த அனிமேஷன் சிடி ‘தாத்தா பாட்டி நீதிக்கதைகள்’.  கிராமத்தில் வசிக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வரும் பேரன் பேத்திக்கு கிராமத்தில் ஒவ்வொரு இடமாக அறிமுகப்படுத்தி அது குறித்த கதைகளை சொல்வதைப் போல காட்சிகளை அமைத்திருந்தேன். மிகக் குறைந்த விலையில் 99 ரூபாய்க்கு அறிமுகம் செய்தோம். அப்போது குழந்தைகளுக்கான கதைகள் நிறைய படித்தேன்.
 2. கந்தர்சஷ்டிக் கவசத்தை பாடலுடன் விளக்கத்தையும்  ‘குழந்தைகளுக்காக கந்தர் சஷ்டிக் கவசம்’ என்ற அனிமேஷன் படைப்பாக கொண்டுவந்தபோது கந்தபுராணத்தை ஆழமாகப் படித்தேன். கந்தர் சஷ்டிக் கவசத்துக்கு உரையையும் நானே எளிமையாக எழுதினேன்.
 3. திருக்குறளை தமிழிலும் ஆங்கிலத்திலும் பார்வையற்றோர்களும் பயன்படுத்தும் விதத்தில் ஆடியோவுடன் மல்டிமீடியா படைப்பாக தயாராக்கியபோது கி.வா.ஜா அவர்களின் திருக்குறள் ஆய்வு நூலை படித்தேன்.
 4. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் 51 பதிகங்களையும் 658 பாடல்களையும் திருத்தணி என். ஸ்வாமிநாதன் அவர்கள் குரலில் பாடி, அதன் பாடல் வரிகளுடன் மல்டிமீடியா படைப்பாக உருவாக்கியபோது திருவாசகத்தை ரசித்து ரசித்து உணர்ந்து படித்தேன். திருவாசகத்துக்கு ஜி.யு.போப் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்தேன்.
 5. சுசீலா நாயர் ஆங்கிலத்தில் எழுதிய Mahadma Gandhi Biography பத்து வால்யூம்களையும் மல்டிமீடியா படைப்பாக தயாரித்தபோது மகாத்மா காந்தியின் முழுமையான வாழ்க்கையை ஆய்வு செய்தேன்.
 6. விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு தேசிய சிந்தனைக் கழகம் நடத்திய vivekanandam150.com என்ற வெப்சைட்டில் ஒருவருட காலம் தொடர்ச்சியாக விவேகானந்தர் குறித்து எழுதி வந்தபோது விவேகானந்தரை முழுமையாகக் கற்றுணர்ந்தேன். பின்னர் என் வாழ்க்கையில் பல சம்பவங்கள் விவேகானந்தரின் வாழ்க்கையோடு ஒத்திருப்பதை ஒப்பிட்டு வியந்து ‘இப்படிக்கு அன்புடன் மனசு’என்ற புத்தகத்தை எழுதினேன். (நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியீடு)
 7. பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ஆங்கிலத்தில் தொகுத்திருந்த RG Vedic Studies மற்றும் Ancient India புத்தகத்தை மல்டிமீடியா படைப்பாக தயாரித்தபோது வேதங்களையும், இதிகாசங்களையும், இந்தியாவின் பெருமைகளையும் முழுமையாக ஆய்வு செய்யும் நோக்கில் அறிந்துகொண்டேன்.
 8. ‘குழந்தைகளுக்கான இராமாயணக் கதைகள்’ கார்ட்டூன் அனிமேஷன் படைப்பை தயாரித்தபோது  இராமாயணத்தின் உள்ளே இருக்கும் சிறுசிறு உள்கதைகளையும் முழுமையாக தெரிந்துகொண்டேன்.
 9. அனிமேஷன் உலகில் முதன் முதலில் தமிழைக் கற்றுக்கொள்ள  ‘தமிழ் கற்க’ என்ற கார்ட்டூன் படைப்பை தயாரித்தபோது நான் அறிந்த இனிமையான தமிழை அழகுறச் சொல்லிக்கொடுக்கும் நுட்பத்தை அறிந்தேன்.
 10. முல்லா, ஈசாப், தெனாலிராமன் போன்ற குழந்தைகளுக்கான கதைகள் போன்ற அனிமேஷன் தயாரிப்புகள் இயக்கும்போது குழந்தைகளுக்கு கதைசொல்லும் பாங்கினைக் கற்றேன்.
 11. தினம் ஒரு பழம், தினம் ஒரு காய், தினம் ஒரு செடி போன்ற வானொலி நிகழ்ச்சிகள் தயாரிக்கும்போது பழங்கள், காய்கறிகள், செடிகொடிகள் போன்றவற்றை பற்றி ஆய்வு செய்தேன்.
 12. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல்களை ‘பேரன் பேத்திப் பாடல்கள்’  என்ற  கார்ட்டூன் படைப்பாக  தயாரித்தபோது அழ. வள்ளியப்பாவின் ஒட்டுமொத்த பாடல்களையும் படித்தேன்.

சாஃப்ட்வேர் துறையில் வாசிப்பனுபவம்

அனிமேஷன் ப்ராஜெக்ட்டுகளுக்காக மட்டுமில்லாமல் சாஃப்ட்வேர் தயாரிக்கும்போதும் எந்த கான்செப்ட்டுக்காக சாஃப்ட்வேர் தயாரிக்கிறோமோ அந்த நுட்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

ஜாதகத்துக்காக ஒரு சாஃப்ட்வேர் தயாரித்தோம். அதற்கு நானும் என் சகோதரியும் 4 வருடங்கள் பல ஜோதிட நூல்களைப் படித்தும், வயதில் மூத்த அனுபவம் பெற்ற ஜோதிடர்களின்  ஆலோசனைகளைப் பெற்றும் ஜோதிடத்தை முழுமையாக  ஆய்வு செய்து சாஃப்ட்வேரை உருவாக்கினோம்.

எங்கள் தாத்தாக்கள் அம்மாவின் அப்பா, அப்பாவின் அப்பா), எங்கள் பெரியப்பா (அப்பாவின் மூத்த அண்ணன்) என் அப்பா அனைவருமே ஜாதகத்தில் அதீத ஞானம் பெற்றவர்கள் என்பதால் அந்த ஜீனும் எங்களுக்குள்ளும் தானாகவே இருந்ததால் ஜோதிடம் கற்பதும் சாஃப்ட்வேர் தயாரிப்பதும் சுலபமானது.

ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீக்காக சாஃப்ட்வேர் தயாரித்தபோது ஆட்டோமொபைல் துறை பற்றி ஆய்வு செய்தேன். அதுபோல மருத்துவம் குறித்த சாஃப்ட்வேர் தயாரிப்பின்போது மருத்துவத்துறை குறித்து, இசை குறித்த சாஃப்ட்வேருக்காக இசைத்துறை குறித்து…

இப்படி எந்தத்துறைகாக சாஃப்ட்வேர் தயாரிக்கிறோமோ அந்தத்துறை குறித்து ஆய்வு செய்தபிறகே அந்த சாஃப்ட்வேரை தயாரிக்கத் தொடங்குவோம்.

இப்படி நான் இயங்கிவரும் தொழில்நுட்பத் துறைக்காக நான் ஆய்வு செய்த புத்தகங்களும் பிராஜெக்ட்டுகளும் ஏராளமானவை.

எங்கள் தயாரிப்புக்களுக்காக நான் படிப்பது போக, அதை தயாரிக்க வேண்டிய கம்ப்யூட்டர் தொழில்நுட்ப மொழிகள் மற்றும் பேக்கேஜுகளையும் கற்றறிய வேண்டுமல்லவா? எந்த கம்ப்யூட்டர் லேங்குவேஜில் சாஃப்ட்வேரும் அனிமேஷனும் தயாரிக்கிறோமோ அவற்றை நான் முழுமையாக கற்றறிந்த பின்னரே அந்தத் துறைக்கு பணிபுரிய ஆட்களை இண்டர்வியூ செய்து தேர்ந்தெடுப்பேன். ஆக, தொழில்நுட்பம் சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டியதும் அப்டேட் செய்துகொள்ள வேண்டியதும் எங்கள் துறையில் நித்தியப்படி பணிகளுள் ஒன்று.

ஆடியோ வீடியோ நிகழ்ச்சிகளில் வாசிப்பனுபவம்

தவிர பல்கலைக்கழகங்களுக்காக நாங்கள் தயாரிக்கும் இ-கன்டென்ட் சிடிக்களுக்கும், நான் இயக்கும் தொழில்நுட்ப தொலைக்காட்சி தொடர்களுக்கும்,  நான் தயாரித்து வழங்கும் ஆவணப்படங்களுக்கும், அனிமேஷன் படைப்புகளுக்கும் பெரும்பாலும் நானே ஸ்கிரிப்ட் எழுதுவதால் எந்த தயாரிப்போ அதுசார்ந்த விஷயங்களுக்காக நிறைய படிக்க வேண்டியுள்ளது.

சில யு-டியூப் சானல்களையும் வெப் டிவிக்களையும் வடிவமைத்து பராமரித்து வருகிறோம். எங்கள் நிறுவன யு-டியூப் சேனலில் அவ்வப்பொழுது வீடியோக்களைப் பதிவிட்டுவருகிறோம். இதற்காகவும் ஆடியோ வீடியோ கேமிரா குறித்தும் வாசித்து அப்டேட் செய்துகொள்ள வேண்டியுள்ளது.

இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துக்காக வெளிவந்த ‘டிஜிட்டல் ஹைவே’ என்ற ஒரு தொழில்நுட்ப பத்திரிகைக்கு எடிட்டராக இருந்து தொடர்ச்சியாக சில  வருடங்கள் அதையும் எங்கள் காம்கேரின் ஒரு பணியாக செய்துவந்தேன்.

எழுதுவதற்கே நிறைய படிக்க வேண்டும் என்கின்றபோது ஒரு பத்திரிகை நடத்துவதற்கு எத்தனை படிக்க வேண்டும்?

இப்படியாக வாசிப்பு என்னை விடுவதாக இல்லை. என் வாழ்க்கையின் பிடிப்பே என் வாசிப்பும் எழுத்தும்தான்.

நான் வாசிக்கும் முறை

எழுத்து, ஓவியம், புகைப்படம், லேஅவுட், கலர் கான்செப்ட், ஆடியோ வீடியோ, பிரிண்டிங்  என அனைத்திலுமே ஆர்வமும் திறமையும் இருப்பதாலும், அவற்றை(யும்) என் ப்ரொஃபஷனாக(வும்) எடுத்துக்கொண்டிருப்பதாலும் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது எழுத்துக்களை மட்டுமில்லாமல் மேலே சொன்ன அத்தனையையும் சேர்த்தே வாசிப்பேன்.

ஓவியத்தை ரசிக்கும்போது, ஆடியோவை கேட்கும்போது, வீடியோவை பார்க்கும்போது இப்படி எதுவாக இருந்தாலும் நம் மனது அவற்றை வாசித்து உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்க வேண்டும். வாசிப்பின் முக்திநிலை அதுவாகத்தான் இருக்கும்.

எந்த புத்தகமானாலும் அதில் ஏதேனும் ஒரு பகுதி நமக்குப் பிடித்த சப்ஜெக்ட்டாக இருக்கும். அது கற்பனைக் கதையாக இருக்கலாம், உண்மைக் கதையாக இருக்கலாம், கட்டுரையாக இருக்கலாம் அல்லது கவிதைத் தொகுப்பாக இருக்கலாம் அல்லது வேறெந்த வடிவத்திலும் இருக்கலாம். அந்த சப்ஜெக்ட்டே புத்தகத்தை வாசிக்கத்தூண்டும் துருப்புச் சீட்டு. அதை முதலில் எடுத்து படிக்க ஆரம்பித்தால் அது தொடர்பான விவரங்களை முன்னும் பின்னும் நகர்த்திப் படிப்பது சுகமாகிவிடும்.

எந்தப் புத்தகத்தையும் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் படிக்கத் தொடங்க மாட்டேன். படிக்கத் தொடங்கும் புத்தகத்தை நடுவில் படிக்க முடியாமல் போனாலும் அதற்காக வருத்தப்படவோ மனதை ஸ்ட்ரெஸ் ஆக்கிக்கொள்ளவோ மாட்டேன்.

எப்போதும் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்து தொடங்கி கடைசி பக்கம் வரை அப்படியே படிக்க மாட்டேன்.

அப்படி படிக்கச் சொன்னால் ஏதோ ஒரு வளையத்துக்குள் என்னை பொருத்தி அதன் ஓட்டத்தில் மட்டுமே நான் நடக்க வேண்டும் என்று யாரோ என்னைக் கட்டுப்படுவதைப்போன்ற ஒரு மனநெருக்கடிக்கு ஆளாகிவிடுவேன்.

முதலில் புத்தகத்தின் முன் அட்டை, பின் அட்டை. அடுத்து ஆசிரியர் புகைப்படம், ஆசிரியர் குறிப்பு.

புத்தகத்தினுள் சென்று ஆசிரியர் உரை, பதிப்பாசிரியர் உரை.

அப்படியே புத்தகத்தின் பக்கங்களை அப்படியே புரட்டிக்கொண்டே வருவேன். பரவலாக ஒரு பார்வை.

கட்டுரை தலைப்பு, துணை தலைப்பு, கேப்ஷன்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், லேஅவுட் அனைத்தையும் என் மனசு சேகரித்துக்கொண்டே வரும்.

எந்த இடத்தில் என் கவனம் முதலில் குவிகிறதோ அதுவே ஆரம்பப் புள்ளி எனக்கு. அப்படியே ஆரம்பித்து முன்னும் பின்னுமாக முழு புத்தகத்தையும் விரைவாக படித்துவிடுவேன்.

படிப்பது என் திருப்திக்காகவும் தேவைக்காகவும் மட்டுமே. அதை பிறரிடம் எடுத்துச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதற்காகவோ அல்லது எங்கேனும் நான் எழுதுபவற்றில் / மேடைப் பேச்சில் மேற்கோள் காட்டும் நோக்கத்துடனோ படிக்க மாட்டேன். அப்படிப் படிக்கத் தொடங்கினால் படிப்பதில் உள்ள சுகம் மறைந்து தகவல் சேகரிக்கும் கிடங்காகிவிடும் என் மனது.

இதுபோல ஒவ்வொருவருக்கும் புத்தகம் படிக்க ஒரு வழக்கம் இருக்கும். அதை சரி தவறு என்ற விவாதத்துக்குள் கொண்டுவர முடியாது. அவரவர் செளகர்யம். புரிதல். பழக்கம்.

எப்போதெல்லாம் வாசிக்கிறேன்?

நான் படிப்பதற்கென்று தனியாக நேரம் ஒதுக்குவதில்லை. கிடைக்கின்ற இடைவெளிகளில் எல்லாம் படிப்பேன். டிவி பார்க்கும்போது கிடைக்கும் விளம்பர இடைவெளியில்கூட படித்து கிரஹித்துக்கொள்ளும் சக்தி உண்டு.

பயணங்களில் புத்தகங்கள் வாசித்தால் கண்கள் பாதிப்படைவதால்  பயணங்களின்போது பெரும்பாலும் ஆடியோ / வீடியோ உரைகள் கேட்பேன்.

புத்தகங்களை மட்டுமல்ல. மனிதர்களை, இயற்கையை, சுற்றுச்சூழலை, மிருகங்களை, பறவைகளை இப்படி எதுவானாலும் அவற்றை ஆழமாக ரசிக்கத்தொடங்கும்போதே என் மனம் அவற்றை படிக்கத் தொடங்கிவிடும்.

முன்பெல்லாம் பிரயாணங்களின்போது தோள்பட்டை வலிக்க வலிக்க புத்தகமூட்டையையும் சுமந்து சென்றுகொண்டிருந்தேன். இப்போது கிண்டில் இருப்பது செளகர்யமாக உள்ளது. அதை மட்டும் பத்திரப்படுத்தினால் போதுமானதாக உள்ளது.

வாசிப்பு என்னை என்னவெல்லாம் செய்தது?

வாசிப்பு எனக்கு அறிவை கொடுத்தது.
வாசிப்பு எனக்கு எளிமையாக வாழ சொல்லிக் கொடுத்தது.
வாசிப்பு எனக்கு இனிமையாக பழக சொல்லிக் கொடுத்தது.
வாசிப்பு எனக்கு உண்மையாக இருப்பதன் உன்னதத்தை சொல்லிக் கொடுத்தது.
வாசிப்பு என் திறமையை காட்டியது.
வாசிப்பு என்னை 10 வயதிலேயே எழுத்தாளராக அடையாளப்படுத்தியது.
வாசிப்பு என்னை தொழில்நுட்பத்தையும் இலக்கியத்தையும் இணைக்க வைக்க உதவியது.
வாசிப்பு என்னை 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுத வைத்தது. இன்னும் எழுத வைக்கிறது.
வாசிப்பு என்னை பத்திரிகையாளராகவும் பரிமளிக்கச் செய்தது.
வாசிப்பு என்னை பதிப்பாளராகவும் மாற்றியது.
வாசிப்பு என்னை அனிமேட்டராக உருவாக்கியது.
வாசிப்பு என்னை ஆவணப்படங்கள் எடுக்க வைத்தது.
வாசிப்பு என்னை புகைப்பட வல்லுநராகவும் மாற்றியது.
வாசிப்பு என்னை தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநராகவும் செதுக்கியது.
வாசிப்பு என்னை மேடைப் பேச்சாளராக்கியது.
இன்று நான் ஓரளவுக்கு அறிவார்ந்தும், புத்திசாலித்தனத்துடனும் சிந்தித்து இந்த சமுதாயத்தில் கெளரவமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் வாசிப்புதான்.

ஒரு சாஃப்ட்வேர் நிறுவன சி.ஈ.ஓ ஆக 27 வருடங்களுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்தி வருவதற்குக் காரணமும் என் வாசிப்பு அனுபவமும் அதனால் உண்டான கிரியேட்டிவிடியும்தான்.

இப்படி வாசிப்புதான் எனக்கு எல்லாமும் தந்தது,  தந்தும் வருகிறது.

நீங்களும் வாசிப்பை நேசித்து பாருங்கள் உங்களுக்கும் இது எல்லாம் கிடைக்கும், இதைவிட கூடுதலாகவும் கிடைக்கும்.

 —****—

(Visited 417 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon