ஹலோ with காம்கேர் – 25
ஜனவரி 25, 2020
கேள்வி: முகநூலுக்கும் ‘இடக்கர் அடக்கல்’ உண்டு தெரியுமா?
இடக்கர் என்றால் சான்றோர். அடக்கல் என்றால் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகள்.
சபையில் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகளுக்கு பதிலாக வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்துவதற்கு இடக்கர் அடக்கல் என்று பெயர்.
அமங்களகரமான நிகழ்வை அவையில் சான்றோர் முன் கூற நேரிடும்போதும் அந்த நிகழ்வை மங்களப்படுத்தி எடுத்துரைப்பதும் இடக்கர் அடக்கலில் வரும். தொல்காப்பியம் இதனை ‘அவையல் கிளவி’ என்கிறது.
இந்த இலக்கணம் இன்று சமூகவலைதளங்களில் பயணிப்பவர்களுக்கும் அவசியம் தேவை.
நாம் மனதால்கூட உச்சரிக்கத் தயங்கும் எத்தனை வார்த்தைப் பிரயோகங்கள், எவ்வளவு உருவகம் செய்யப்பட்ட புகைப்படங்கள், வக்கிர எண்ணங்களின் குவியல்கள்… முகநூல் முழுவதும் பெரிய சைஸ் குப்பைத்தொட்டிபோல நிரம்பி வழிகிறது.
இங்கு அத்திப் பூத்தாற்போல ஒருசில கண்ணிய பதிவுகள் கண்களில் படுவது சற்றே ஆறுதல்தான்.
படிப்பதற்கும் கூசுகின்ற கண்ணியக் குறைவான வார்த்தைகளை சர்வ சாதாரணமாய் பிரயோகிக்கும் உரிமையை யார் கொடுத்தது? அப்படி எழுதப்படும் பதிவுகளுக்குத்தான் லைக்குகள் குவிகின்றன. கமெண்ட்டுகள் எகிறுகின்றன.
கண்ணியமான பதிவுகளின் பக்கம் வருபவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
ஒரு மாதம் முன்பு என் கிளையிண்ட்டும் அமெரிக்காவில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பரும் என் நிறுவனத்துக்கு வந்திருந்தனர்.
பிராஜெக்ட் மீட்டிங் முடிந்ததும் இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்பாடு குறித்தும் பேசினோம்.
இந்தியாவில் அடுத்தவர்களின் ஃபேஸ்புக் டைம் லைனுக்கு சர்வ சாதாரணமாக செல்வதையும், அங்குள்ள தகவல்களை காப்பி செய்வதையும், புகைப்படங்களை டவுன்லோட் செய்வதையும் பார்த்து வியந்து பேசினார்.
அவர் ஆச்சர்யப்பட்டதில் ஒன்றும் வியப்பில்லை.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அடுத்தவர் டைம்லைனுக்குச் செல்வதையே ரொம்ப கில்டியாக ஃபீல் செய்வார்கள்.
காரணம் யார் யார் நம் டைம் லைனுக்கு வந்து செல்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் கண்டுபிடிக்க முடியும். அப்படி இருக்கும்போது நாம் அடுத்தவர் டைம்லைனுக்குச் செல்வதை அந்த நண்பர் கண்டுபிடித்தால் ரொம்ப அவஸ்தையாக உணர்வார்கள்.
நோக்கம் சரியானதோ, தவறானதோ அடுத்தவர்களின் டைம்லைனில் இருந்து அவர்கள் அனுமதி இல்லாமல் தகவல்களையும், புகைப்படங்களையும் டவுன்லோட் செய்வது தர்மம் அல்ல என்றார்.
அமெரிக்காவில் ஒருசில பல்கலைக்கழகங்களில் எங்கள் காம்கேர் மூலம் நான் இயக்கித் தயாரித்த ‘உயர்கல்வியில் இந்திய கல்வி முறைக்கும் அமெரிக்கக் கல்வி முறைக்குமான ஒப்பீடு’ என்ற கான்செப்ட்டிலான ஆவணப்படத்துக்காக முதன்முறை அமெரிக்கா சென்றபோதே அதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
மேலும் கல்வி தொழில்நுட்பம் சார்ந்த ப்ராஜெக்ட்டுகளுக்காகவும் அவ்வப்பொழுது அமெரிக்கா சென்று வருவதால் அங்கு சமூக வலைதளங்களில் அவர்கள் பின்பற்றும் Ethics வியக்க வைக்கும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஒருசிலர் நம்மைப் பற்றி எதையுமே ஆழமாக தெரிந்துகொள்ளாமல் நம்மைப் புகழ்ந்து எழுதுவதாக நினைத்துக்கொண்டு அவர்களை அறியாமலேயே பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களினால் அவர்கள் எழுதும் பதிவுகள் நம்மை கீழிறக்கி விடுவதுபோல் அமைந்துவிடுவதுண்டு. காரணம், நாம் பயன்படுத்தும் ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் அர்த்தங்களை புரிந்துகொள்ளும் மனிதர்களால் சூழப்பட்டதுதான் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள்.
ஆக, நம் குறித்த சரியான புரிதல் இல்லாமல் நம்மைப் பற்றி நம்மிடம் அனுமதி பெறாமல் பொதுவெளியில் எழுதுவதும் தவறுதான்.
ஃபேஸ்புக்கில் மட்டுமல்ல டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பிளாக் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோல இன்னும் நிறைய இடக்கர் அடக்கல்களை பின்பற்ற வேண்டியுள்ளது.
சமூக வலைதளங்களில் ‘இடக்கர் அடக்கல்’ – நான் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த புத்தகத்தின் தலைப்பு!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software