இங்கிலாந்தின் நன்கொடை சகோதரி நிவேதிதை (விகடன் தீபாவளி மலர் 2016 )


இந்தியாவின் நன்கொடை சகோதரி நிவேதிதை

‘வாயாடி’, ‘அதிகப்பிரசங்கி’ – இவைதான் ஏன், எதற்கு என்று அதிகம் கேள்விகள் கேட்கும் மாணவிகளுக்குக் கிடைக்கும் பட்டப்பெயர்கள். ஆனால், ஒரு சிஷ்யை கேட்ட பல சிக்கலான கேள்விகளுக்கு அவரது குரு பொறுமையாக விளக்கம் கொடுத்து, அவர் போக்கில் விட்டு, இறுதி முடிவை அவரிடமே ஒப்படைத்து விட்டிருக்கிறார். மேலும், எதிர்க்கருத்தைக் கூறுகிறார்,  எதிர்கேள்வி  கேட்கிறார் என்பதற்காக அவரை ஒதுக்கி வைத்ததும் கிடையாது.

இத்தனைப் பெருந்தன்மையான குருவையும், அறிவார்ந்த கேள்வி கேட்கும் சிஷ்யையும் யார் தெரியுமா? சுவாமி விவேகானந்தரும் அவருடைய சிஷ்யை நிவேதிதையும்தான்.

சுவாமி விவேகானந்தர்  தன்னுடைய கருத்துக்களை மற்றவர்களுக்குள் திணிக்க மாட்டார். அவர்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்து,  நாளடைவில் அவர்களே ஏற்றுக்கொள்ளும்படி செய்வார்.

இப்படித்தான் அயல்நாட்டில் சந்தித்த மார்கரெட் எலிசபெத் நோபிளுக்கு நம்நாட்டைப் பற்றிய தெளிவை உண்டாக்கி, சிஷ்யையாக ஏற்றுக்கொண்டு, பின்னாளில் நிவேதிதை என பெயரிட்டு, அவர் மூலம் அயல்நாட்டிலும் நம் நாட்டின் சிறப்பைப் பரப்பினார் சுவாமி விவேகானந்தர்.

இளம் வயதில் மார்கரெட் எலிசபெத் நோபிள்

நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவர் அயர்லாந்தின் வடபகுதி மாகாணம் டைரோனில் உள்ள டங்கனன் எனும் ஊரில் சாமுவேல் ரிச்மண்ட், மேரி இசபெல் ஹாமில்டன் தம்பதியினருக்குப் பிறந்த மூத்த மகள். இவருடைய தங்கை தங்கை மே, தம்பி ரிச்மண்ட்.

மார்கரெட் எலிசபெத் நோபிளின் தந்தையும், தாத்தாவும் வாழ்ந்த காலத்தில் அயர்லாந்து மக்களை ஆங்கில அரசு துன்புறுத்தி வந்தது. இவர் தந்தைவழி தாத்தாவும், தாய்வழி தாத்தாவும் அயர்லாந்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள். மேலும்  இவர் தந்தைவழி தாத்தா பாதிரியாகப்  பணியாற்றிவர்.

மார்கரெட் எலிசபெத் நோபிளின் தந்தை சாமுவேல் ரிச்மண்ட் மதபோதகராகப் புகழ் பெற்றவர். மேலும் ஏழைகளுக்கும் சேவை புரிந்து வந்தவர்.

சமய நம்பிக்கையும், சமூக சேவையும்

குடும்பமே சமய நம்பிக்கைக் கொண்டவர்களாலும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களாலும் நிறைந்திருந்ததால், மார்கரெட் எலிசபெத் நோபிளும் சிறு வயதிலேயே சமய நம்பிக்கை கொண்டவராகவும், எளியோர்களுக்கு உதவி செய்யும் கருணை உள்ளத்தோடும் வளர்ந்தார்.

ஏசு கிறிஸ்து மீது உளமார்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது கல்வி, அனுபவம், சிந்திக்கும் ஆற்றல் இவற்றால்,  ‘மதம் என்பது கோட்பாடுகளை நம்புவதல்ல, உண்மைப் பொருளுக்கான தேடல்’ என்ற பேருண்மையைக் கண்டறிந்து, சர்ச்சுக்கு செல்வதை நிறுத்தினார்.

புத்தரின் வாழ்க்கையால் பெரிதும் கவரப்பட்ட இவர், புத்தரின்  போதனையை சில வருடங்கள் கற்றார். ஆனால், இவரது சந்தேகங்களைப் போக்கி மன ஆறுதல் தர அவை போதவில்லை.

தலைசிறந்த கல்வியாளர்

தமது பதினேழாம் வயதில் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர்,  1884 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கெஸ்விக்  நகரிலுள்ள பள்ளியில் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு வெக்ஸாம் நகரில் வேறு பள்ளிக்கு மாறி பணியாற்றினார்.

சுவிட்சர்லாந்தின் பெஸ்டலாஜி  எனும் ஆசிரியர் கண்டுபிடித்திருந்த புதிய கல்விமுறையில் ஈடுபாடு கொண்டு அதனை வரவேற்றார். அந்தக் கல்விமுறையை நடைமுறைக்குக் கொண்டு வர மிசஸ்.டி.லியூ. என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று 1890 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள விம்பிள்டன் சென்றார்.

பின்னர் தம் கருத்துக்களை தடையின்றி நிறைவேற்றும் வண்ணம் 1892 ஆம் ஆண்டில் தானே   ‘ரஸ்கின் பள்ளி’என்ற பெயரில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார்.

1884 ஆம் ஆண்டு முதல் 1894 ஆம் ஆண்டு வரை  ஆசிரியையாகப் பணியாற்றினார்.

லண்டனில் இருந்த அறிஞர்களிடையே செல்வாக்கு பெற்று,  பிரபல கல்வியாளர்  என்ற அடையாளத்தைப் பெற்றார்.

சுவாமி விவேகானந்தருடன் முதல் சந்திப்பு

மார்கரெட் எப்போதுமே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்ற காரணத்துக்காக எந்தக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். தன் மனதால் ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்களாக இருந்தால் மட்டுமே நம்புவார். உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளுக்கு இந்த குணம் இயல்பாக இருப்பதை பார்க்கலாம்.

ஆசிரியப் பணியில் இருந்தாலும், இவரது சமயம் மற்றும் மதம் குறித்தத் தேடலும், சமூக சேவையும் தொடர்ந்து வந்தது. ஒரு முறை இங்கிலாந்தில் இவரது தோழி இசபெல் மார்கசென் வீட்டில் நடந்த சுவாமிஜியின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்த சொற்பொழிவு இவரது அறிவுத் தேடலுக்கு பெருமளவில் உதவியது.

சுவாமிஜியின் உரை  பிடித்திருந்தாலும், அவர் சொல்வதில்  புதிய கருத்துகள் ஏதும்  இல்லை என்று எண்ணினார். பின்னர் தாமே சிந்தித்துப் பார்த்து தாம் அவ்வாறு எண்ணியது தவறென்று உணர்ந்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக சுவாமிஜியின் சொற்பொழிவுகளை ஆர்வமுடன் கேட்கத் தொடங்கினார்.

பல புதிய தகவல்களை வித்தியாசமான கோணத்தில் அவரது சொற்பொழிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தாலும் அவர் கூறிய எல்லா கருத்துக்களையும் அப்படியே ஏற்க முடியாத சமயங்களில், துணிந்து சுவாமிஜியிடம் கேள்விகள் எழுப்பி  விவாதம் செய்தார் மார்கரெட்.

ஒருமுறை  இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது சுவாமிஜி, ‘என் நாட்டுப் பெண்களின் கல்வி குறித்த திட்டங்களில் நீ பெரிதும் உதவ முடியும் என்று நம்புகிறேன்’என்று கூறினார்.

சுவாமிஜியின் அழைப்பை ஏற்று, ஜனவரி 28, 1898 ஆம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். இவரை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார்.

சுவாமிஜியின் முத்தான மூன்று அம்ச பயிற்சி

இந்தியாவிற்கு வந்த பின்னரும், சுலபமாக எந்தக் கருத்தையும் ஏற்றுக் கொள்பவராக இல்லாத மார்கரெட் எதிர்கேள்விகளை எழுப்பி விவாதத்தில் ஈடுபடுவார். சுவாமி விவேகானந்தரும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாமல் தன்னுடைய கருத்துக்களை  அவருக்குப் புரிய வைப்பார். மேலும், முத்தான மூன்று முக்கிய அம்சங்கள் கொண்ட பயிற்சியையும் அளித்தார்.

இந்திய வரலாறு, அதன் மன்னர்கள், துறவிகள், வீரர்கள்,  தியாகிகள் என்று இந்தியாவைப்  புரிந்து கொள்ளச் செய்தார். மேலும், இங்கிலாந்து இந்தியாவிற்கு பேரளவு நன்மை செய்வதாகவே இங்கிலாந்தில் இருந்த போது கேள்விப்பட்டிருந்த மார்கரெட்டுக்கு இங்கிலாந்து இந்தியாவிற்கு இழைத்த தீமைகள் தெரியாது. இந்தியாவின் மீதான ஆங்கில ஆட்சியின்  தீமைகளையும்  சுவாமிஜி   அவருக்கு உணர வைத்தார்.

எல்லா உயிர்களையும் இறைவனாகக் கருதிப் பணி  செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தார்.

மற்றவர்களுக்கு கற்பிக்கும் தொண்டு சார்ந்த பணியில் ஈடுபடும்போது, மற்றவர்களைவிட நாம்தான் பெரிய அறிவாளிகள் என்றோ, மற்றவர்களை  கைதூக்கி  விடும் உயர்ந்தவர்கள் என்றோ  நினைத்துக் கொள்ளக்கூடாது என்ற பண்பை எடுத்துரைத்தார்.

மார்கரெட் எலிசபெத் நோபிள் நிவேதிதையான நிகழ்வு

மார்ச் 11, 1898 ஆம் ஆண்டு மார்கரெட்டை கல்கத்தாவாசிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

மார்ச் 17, 1898 ஆம் ஆண்டு மார்கரெட் அன்னை சாரதாதேவியை சந்தித்தார். இந்நிகழ்வை அவர்  ‘பொன்னான நாள்’ என்று மகிழ்ந்தார்.

அன்னையுடன் பேசியபோது மொழி புரியாத போதும், மார்கரெட்டால் அன்னையின் இனிமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. அன்னையுடன் உரையாடுவதற்காகவே மார்கரெட் வங்காள மொழி கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.

மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர், மார்கரெட்டுக்கு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது ‘தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு’ எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது.

கல்விப் பணியில்!

      நவம்பர் 13, 1898-ம் ஆண்டு  போஸ்பாரா தெருவில் அமைந்துள்ள வீட்டில் பெண்களுக்கான பள்ளி திறக்கப்பட்டது.  இப்பள்ளியில் சிறுமிகளுக்கு எழுதப் படிக்க சொல்லித் தந்ததுடன், ஓவியம் வரைதல், மண்பொம்மைகள் செய்தல், துணி தைத்தல் முதலானவையும் சொல்லித் தந்தார் நிவேதிதை.

குடும்பத்தில் ஒரு தாய் கல்வி கற்றால் அந்த குடும்பமே பயனடையும் என்ற எண்ணத்தில்,  சிறுமிகளின் அன்னையருக்கும் கல்வியும் மற்ற நுண்கலைகளும் சொல்லித் தர விரும்பி, சகோதரி கிறிஸ்டைன் துணையுடன் அந்தப் பணியையும் ஆரம்பித்தார்.

பள்ளி நடத்துவதற்கான செலவை புத்தகம் எழுதி அதில் வரும் தொகை கொண்டு சமாளித்தார். இவருக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நண்பர்களும் உதவினர். நிவேதிதையின் மறைவுக்குப் பின்னரும் அன்னை சாரதா தேவி இந்தப் பள்ளியை தொடர்ந்து  நடைபெறச் செய்தார்.

மருத்துவ சேவையிலும்!

சுவாமிஜி, மார்ச் மாதத்தில் கல்கத்தா மக்களை தாக்கிய ’பிளேக்’ எனும் கொள்ளை நோயின் நிவாரணப் பணி செய்ய அமைத்த குழுவிற்கு நிவேதிதையை தலைவியாக்கினார். இவர் நோயாளிகளைப் பராமரிக்கவும் நகரைத் தூய்மைப்படுத்தவும் இளைஞர் குழு ஒன்றையும் அமைத்து, தானும் குடிசைப் பகுதிகளில் வாழுகின்ற மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் நலன் காக்க உதவினார்.

பெண் விடுதலைப் பாடிய பாரதிக்கே குருவாக

பாரதியார் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்ததும் நிறைய கவிதைகள் எழுதியதும் நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அவருடைய இந்த உத்வேகத்துக்குப் பின்னணியில் இருந்தவர் சகோதரி நிவேதிதைதான்.

மகாகவி பாரதியார்  இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுகிறார்.  ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது,  அவரது மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், எங்கள் சமுதாய வழக்கப்படி  மனைவியை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என குறிப்பிட்டார்.  மேலும் தனது மனைவிக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

இதைக் கேட்ட சகோதரி நிவேதிதை வருத்தத்துடன் பாரதியாரிடம்,  ‘உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்’, என்று கேட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாருக்கு பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றி, பெண்ணுரிமைக்காக போராட தூண்டுகோலாக இருந்தது.

பின்னாளில் தான் எழுதிய ‘ஸ்வதேச கீதங்கள்’  முதல் பகுதியை பாரதியார், நிவேதிதையை குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு  சமர்ப்பணம் செய்தார்.

மேலும் சில சான்றுகள்

இந்தியாவில் தான் பராமரித்து வந்த பள்ளிக்காக, அமெரிக்காவிலும் நிதி திரட்டினார் நிவேதிதை. நியூயார்க்கில் ’ராமகிருஷ்ண தொண்டர் சங்கம்’ அமைப்பை நிறுவி ’ராமகிருஷ்ணர் பெண்கள் பள்ளிக்கான திட்டம்’ என்ற தலைப்பில் சிறு புத்தகமும் வெளியிட்டார்.

இந்தியப் பெண்களின் உள்ளத் தூய்மையைப் பற்றியும் சாந்த இயல்பு மற்றும் தியாக சிந்தனை குறித்தும் பேசினார். இவற்றின் மூலம் அமெரிக்கர்கள் இந்திய மக்களின் வாழ்க்கையைப் பற்றித் தெளிவாக அறிந்து கொண்டனர்.

வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார்.

ஜெகதீஷ் சந்திரபோஸின் அறிவியல் நூல்களை வெளியிட உதவினார்.

இவை அனைத்தும் அயல்நாட்டில் பிறந்து படித்து வளர்ந்திருந்தாலும்,  சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட நிவேதிதை நம் நாட்டுக்காகவும், நம் நாட்டுப் பெண்களின் நலனுக்காகவும் உழைத்த பெருந்தன்மைக்கு சான்றாகும்.

அயர்லாந்தின் டங்கானன் நகரில் 1867 ஆம் ஆண்டு  பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபிள், நேரம் காலம் பார்க்காமல் சரியான நேரத்துக்கு சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் கடினமான உழைத்ததினால் உடல் நலன் பாதிக்கப்பட்டு 1911 ஆம் ஆண்டு சகோதரி நிவேதிதையாக சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக டார்ஜிலிங்கில் மறைந்தார்.

பெண்ணியம் கற்பித்த நிவேதிதை

இன்று, பெண்கள் நினைத்த கல்வியை கற்கமுடிகிறது. சுயமாக தொழில் செய்தும் சம்பாதிக்க முடிகிறது. விரும்பிய உடையை அணிய முடிகிறது. தனக்கான விருப்பு வெறுப்புக்களை ஆண்களுக்குப் புரியவைத்து நேர்மையான பாதையில் செல்ல முடிகிறது என்றால், அதற்குப் பின்னால், சகோதரி நிவேதிதை போன்ற துணிச்சல்மிக்க பெண்களின் பேருழைப்பு உள்ளதை மறுக்க முடியாது.

நம் நாட்டுப் பெண்கள் தலை நிமிர்ந்து பேச பயந்துகொண்டிருந்த காலத்திலேயே அவர்களின் கல்விக்காகவும், வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும், சரிநிகர் சமான நிலைக்காகவும் போராடி பெற்றுத்தந்த உரிமையைத்தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

கல்வி, வேலை, சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையான சரிநிகர் சமான நிலை – போராடி பெற்ற இந்த அரிய பொக்கிஷங்களைப்  போற்றிப் பாதுகாப்போம். அனுபவிப்போம். வரும் சந்ததியினருக்கும் பரப்புவோம்.

இதுதான் உண்மையான பெண்ணியம்.

ஒரு கேள்விக்கு விடைகொடுக்க 50 கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும் என்ற சூட்சுமம்

அடிப்படையில் நிவேதிதை ஒரு கல்வியாளராக இருந்ததால்,  குழந்தைக்கான கல்வி அறிவியல் பூர்வமாகவும், நடைமுறைக் கல்வியாகவும் அமையவேண்டும்  என்பதில் தெளிவாக இருந்தார்.

குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே சிலந்தி, கொசு, தட்டான், வண்ணத்துப்பூச்சி, நத்தை, புழுக்கள், மரவட்டை ஆகிய உயிரினங்களை அறிமுகப்படுத்தி, அவை தமக்கு நண்பர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் நிவேதிதை.

100 ஆண்டுகளுக்கு முன்னர் நிவேதிதா கூறிய இந்த கல்வியியல் கோட்பாடு இன்னும் நம் உயிரியல் கல்வியில் எட்டப்படாமலே உள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். ஆனாலும், உயிரியலையும் சூழலியலையும் முழுமையாகக் கற்பதற்கு இதுவே சிறந்த வழிமுறை என சர்வதேச அளவில் உயிரியல்  கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள்.

மாணவர்கள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் கல்விமுறையை நிவேதிதை வலியுறுத்தினார். குழந்தையின் ஒரு கேள்விக்கு திருப்திகரமான பதிலை அளிக்க ஆசிரியருக்கு ஐம்பது கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

புதுமைப் பெண்களுக்கெல்லாம் முன்னோடி நிவேதிதை

இப்போதெல்லாம் பகலில் பணிக்குச் செல்வோரின் வசதிக்காக மாலை நேர கல்விக்கூடங்கள் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்பே, குடும்பப் பெண்களின் வசதிக்காக,  நிவேதிதை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அவர்களுக்குக் கல்வி கற்பித்தார். எத்தனை புதுமையான முயற்சி இது. நிவேதிதை புதுமைப் பெண் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையா?

பெண்கள் வீட்டை விட்டே வெளியில் வரவே அனுமதி இல்லாத அந்தக் காலத்திலேயே அவர்களுக்கு அறிவுரை சொல்லி கல்வியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, கல்வி கற்க வைத்ததோடு தன் பள்ளியில் படித்த மாணவிகளை அவ்வப்பொழுது நகரத்தின் பல பகுதிகளுக்கும்  அழைத்துச் சென்றார். அதனால் பெண்கள் வெளியுலகத்தைப் பற்றிய அறிவு பெற்றனர்.

ஒரு முறை நிவேதிதை, தன் பள்ளி மாணவிகளை, தட்சிணேஸ்வரத்திற்குப் படகில் அழைத்துச் சென்றபோது, பெரிய அலைகள் அடித்ததால் படகு சற்றே ஆடியது. மாணவிகள் பயந்தனர்.

‘குழந்தைகளே!  அஞ்சவேண்டாம்!  படகோட்டி, படகைப் பத்திரமாகச் செலுத்திவிடுவார். வாழ்க்கையிலும் இப்படித்தான் சில துன்பங்கள் வரும். அவற்றைக் கண்டு அஞ்சக்கூடாது.  நாம் உறுதியாக இருந்து அவற்றை எதிர்கொள்ள வேண்டும்” என்று நிவேதிதை தைரியம் கூறினார்.

கங்காருக் குட்டிகள்  மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது  எதிரிகளைக் கண்டால்  பயந்து நடுங்கி ஓடி வந்து தன் தாயிடம் பாதுகாப்பாக தஞ்சம் அடைந்து விடுவதைபோல  நாமும் ஆபத்துக் காலங்களில் அம்பிகையைச் சரண் அடைந்தால் எதற்கும் பயப்பட வேண்டாம்’ என்று பெண்களுக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் அளித்தார் நிவேதிதை.

இந்தியர்களின் அறிவை மெச்சும் நிவேதிதை

 இந்தியக் குடும்ப அமைப்பாகட்டும், அன்பு, பாசம், உறவுமுறைகள், பண்பாடு முதலான  கலாச்சாரமாகட்டும், தினசரி நடைமுறை வாழ்க்கையாகட்டும், ஹிந்துக்களின் சமயச் சடங்குகள், கோவில் திருவிழாக்கள், தேசிய இதிகாசங்கள் எனத் தொடங்கி வேப்பமர வழிபாடுவரை அனைத்தையும் சகோதரி நிவேதிதை ஆழமாகக் கவனித்துள்ளார்.

பசுவைப் பேணுவதை, இந்தியர்கள் வேள்வியாக எண்ணுவதையும், கிராமங்களில் பசுவுக்கு வேண்டிய மேய்ச்சல் நிலம் ஒதுக்கப்படுவதையும் உன்னிப்பாக கவனித்து, பசுக்கள் இந்தியப் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றன என்று பாராட்டுகிறார் நிவேதிதை.  பசுக்களைப் பாதுகாக்கும் பயிற்சி பெண்களுக்குச் அளிக்கப்படுவதையும் நிவேதிதை  பெருமையுடன் குறிப்பிடுவதுடன், பசுவிடமிருந்து கிடைக்கும் பால் முதலிய ஐந்து பொருட்களும் ( பஞ்சகவ்யம்) மருத்துவ குணம் உடையவை என்றும் போற்றுகிறார்.

காந்தார கலை என்பது மேற்கத்திய தாக்கத்தால் ஏற்பட்டது என்றும், இந்திய கலை வளர்ச்சியே மேற்கத்திய கலை தாக்கத்தால் ஏற்பட்டதுதான் என்றும் ஒரு மேற்கத்திய நபர் கூறியதை ஏற்றுக்கொள்ளாத நிவேதிதை, அதை மறுத்து, காந்தார கலைக்கு முந்தைய மகத கலையின் நுணுக்கத்தை அஜந்தா குகைகளில் காண முடிகிறது என்பதையும், அது மேற்கத்திய கலை வளர்ச்சியைக் காட்டிலும் உயர்வானதாக, மேன்மையானதாக இருப்பதையும் ஆதாரப்பூர்வமாக நிவேதிதை நிரூபணம் செய்தார். அவர் ஒரு மேற்கத்தியப் பெண்ணாக இருந்தாலும் இப்படி செயல்பட்டது அவருடைய பெருந்தன்மையையும், நேர்மையையும் காட்டுகிறது. இந்தியாவின் மீதான அவரது பற்றைப் பறைசாற்றுகிறது.

நிவேதிதைக்கு சுவாமி விவேகானந்தரே உணவு பரிமாறிய அற்புத நிகழ்வு

ஒருமுறை சுவாமிஜியின் வேண்டுகோளுக்கு இணங்க அவரைச் சந்திக்க நிவேதிதை வந்தார். அன்று ஏகாதசி திதி. சுவாமிஜி உபவாசம் இருக்கும் நாள்.

அன்று  நிவேதிதைக்கு மதிய உணவைத் தானே பரிமாற விரும்பி, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்ததோடு,  அதை  மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குருவுக்கு சீடர்கள் தானே பணிவிடை செய்ய வேண்டும் என்ற அடைப்படையில் ‘நான்தான் தங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்’ என்று சொல்லி நிவேதிதை மறுத்தும் அதை சுவாமிஜி ஏற்றுக்கொள்ளாதவராய்,  மதிய உணவை தானே பரிமாறி, சாப்பிட்டப் பின் அவர் கையைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி, அதனை துண்டால் துடைத்தும் விட்டார்.

அதைக் கண்ட நிவேதிதைக்கு ஆச்சர்யம், அதிர்ச்சி, திகைப்பு என இவை அனைத்தும் கலந்த ஒருவித மனநிலை. சுவாமிஜியிடம் அது பற்றிக் கேட்கவும் செய்தார்.

அதற்கு அவர்,   ‘இது ஒன்றும் புதிதல்ல நிவேதிதை. இயேசுநாதர் கூட தன் சீடர்களுக்கு இவ்வாறு செய்திருப்பது தான் உனக்குத் தெரியுமே!’ என்றார்.

இயேசு தன் வாழ்வின் இறுதியில் தானே அப்படிச் செய்தார் என்று மனத்துக்குள் நினைத்துக் குழம்பி, இனம் புரியாத சோகத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் நிவேதிதை.

அதன் பிறகு இரண்டு நாட்கள் மட்டுமே சுவாமிஜி உயிருடன் இருந்தார்.  1902 ஆம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி சுவாமிஜி சமாதி நிலை எய்தினார். அப்போது சுவாமிஜியின் வயது 39.

நிவேதிதையின் இறுதி நாட்கள்

ஒருமுறை ஜகதீஸ் சந்திரபோஸ் குடும்பத்தினருடன் நிவேதிதை டார்ஜிலிங் சென்றிருந்தார்.  அங்கு அமைதி நிரம்பிய சூழ்நிலையில் சில நாட்களை செலவிட்ட பின்னர் சாண்டக்பூ எனும் மலைச்சிகரத்தை பார்க்க முடிவு செய்தார். அங்கு கிளம்பும் நாளன்று அவருக்கு ரத்தபேதி கண்டது. சிறந்த முறையில் மருத்துவர்கள் சிகிச்சை செய்தும் பலன் கிட்டவில்லை.

மனதளவில் சோர்வடைந்த அவர் தனது சொத்துக்களையும் நூல்களையும் இந்தியப் பெண்களுக்கு கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்து உயில் எழுதி வைத்து  மூத்த துறவிகளை அறங்காவலர்களாக ஆக்கினார்.

தமக்கு மிகவும் பிடித்த பிரபஞ்சம் தழுவிய அன்பையும் அமைதியையும் கூறுகின்ற பௌத்த தோத்திரத்தை அடிக்கடி படிக்கக் கேட்டு மகிழ்ந்தாள். உபநிடதத்தில் வரும் ‘அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’  என்ற ருத்ரப் பிரார்த்தனை நிவேதிதைக்கு மிகவும் பிடித்த பாடல்.  ‘உண்மையற்றதிலிருந்து எங்களை உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக, இருளிலிருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக மரணத்திலிருந்து எங்களை மரணமிலாப் பெருவாழ்விற்கு அழைத்துச் செல்வாயாக’ என்று பொருள்படும் அந்தப் பாடலை மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருந்த போது அடிக்கடிப் பாடினார்.

மேகமூட்டமான அந்த நாட்களில் டார்ஜிலிங்கில் சூரிய தரிசனம் கிடைப்பதே  அபூர்வமான நிகழ்வு. ஆனால் அக்டோபர் 13, காலை ஏழு மணிக்கு சூரியன் ஒளிவீசினான். அதைப் பார்த்தபடி நிவேதிதை ‘பழுதடைந்த இந்தப் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் என்னால் சூரியோதயத்தைக் காண முடிகிறது என்றார். உடனே அவர் ஆவி பிரிந்தது.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 28, 2019

எழுத்தும் ஆக்கமும்: காம்கேர் கே. புவனேஸ்வரி
2016 விகடன் தீபாவளி மலர்

(Visited 419 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon