சென்ற மாதம் முழுவதும் குழந்தைகள், மாணவ மாணவிகள், இளைஞர்களுடன் கலந்துரையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள். அந்த சந்திப்புகள் குறித்து அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் தினந்தோறும் நான் எழுதி வரும் ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுகளில் சுருக்கமாக எழுதியிருந்தாலும் கொஞ்சம் விரிவாக நம் வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்போமா?
அடிக்கடி எனக்கு தேவதைகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அன்றும் அப்படியே.
அன்று ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங். அலுவலகத்தில் இருந்து நானும் அப்பாவும் வீடு திரும்ப இரவு நேரமாகி விட்டதால் வரும் வழியில் அடையார் ஆனந்த பவனில் டிபன் சாப்பிடலாம் என சென்றிருந்தோம்.
எங்கள் சீட்டுக்கு எதிரே ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள். ஆறு ஏழு வயதிருக்கும். ஒரே சாயலில் இருந்தார்கள். டிவின்ஸ் என நினைத்துக்கொண்டேன்.
செல்ஃப் சர்வீஸ் என்பதால் குழந்தைகளின் அப்பா அவர்களுக்கு இட்லி எடுத்து வந்து வைத்துவிட்டு தனக்கு ஏதோ எடுத்துவரச் சென்றிருந்தார்.
அதற்குள் அந்தக் குழந்தைகளைப் பார்த்து நான் சிரிக்க, அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்க நெருக்கமானோம்.
பெயர் கேட்டேன். தன்சிகா, விஜய் என்றார்கள்.
டிவின்ஸ் என்பதை அவர்களிடமே கேட்டு உறுதி செய்துகொண்டேன்.
அந்தச் சிறுவனைப் பார்த்து ‘உனக்கு இட்லிதான் பிடிக்குமா?’ என்றேன்.
‘எனக்கு ஆனியன் ஊத்தப்பம், பரோட்டா, பூரி மசால், சமோசா சன்னா இதெல்லாம்தான் பிடிக்கும்’ என்றான் மழலையாக.
அந்த சிறுமி நான் கேள்வி ஏதும் கேட்காமலேயே ஏதோ பேச வாயெடுத்தாள். அவள் தனக்கு என்ன பிடிக்கும் என பட்டியலிடப் போகிறாள் என நினைத்திருந்தேன்.
‘உங்களுக்கு என்ன பிடிக்கும் ஆண்ட்டி?’ என்று கேட்டாளே பார்க்கலாம். நான் அசந்துத்தான் போனேன்.
‘எனக்கு சாம்பார் வடை பிடிக்கும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அவர்கள் அப்பா தோசையை எடுத்துக்கொண்டு வர நாங்கள் டிபன் சாப்பிட்டு முடித்திருந்தோம்.
அந்தக் குழந்தைகளிடம் டாடா சொல்லி விடைபெற்றேன்.
தனக்குப் பிடித்ததைச் சொல்லத் தெரிந்திருக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் பிறருக்கு என்ன பிடிக்கும் என கேள்வி கேட்டு தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ள குழந்தைகள் தேவதைகள்தானே?
என் சகோதரி சன்னா மிக நன்றாக செய்வாள். ஒருமுறை அவள் செய்திருந்த சன்னா குழைந்து கெட்டியாகிவிட்டது. இப்படியாகிவிட்டதே என வருத்தப்பட்டுக்கொண்டே பரிமாறியபோது பன்னிரெண்டு வயதாகும் என் சகோதரியின் மகன் ‘அம்மா எனக்கு சன்னா இப்படி இருந்தாலும் ரொம்பப் பிடிக்கும். என் ஃப்ரெண்ட் பிறந்தநாள் விழாவில் இப்படித்தான் செய்திருந்தார்கள்’ என்றபடி நிறையவே சாப்பிட்டான்.
அடுத்தமுறை வேண்டுமென்றே கொண்டைகடலையை சற்று குழைய வேக வைத்து சன்னா செய்தபோது அவன் ‘அம்மா போன முறை நீ சன்னா சரியா வரவில்லையே என வருத்தப்பட்டதால் உன்னை என்க்ரேஜ் செய்வதற்காக அப்படி இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும் என்றேன். உண்மையில் நீ எப்பவும் செய்வதைப்போல செய்யும் சன்னாதான் பிடிக்கும்’ என்றானாம். அந்த நொடியில் அவன் என் மனதில் தேவதையாக விஸ்வரூபமெடுத்தான்.
ஹோட்டலில் நான் பார்த்தது பெண் தேவதை. என் சகோதரியின் மகன் ஆண் தேவதை.
தேவதைகளில் ஆணென்ன… பெண்ணென்ன… கள்ளம் கபடமில்லா குழந்தைகள் அனைவருமே தேவதைகள்தானே? விகல்பமில்லாத மனது கொண்ட அனைவரும் இறைசக்தி பெற்றவர்களே என்பதுதான் குழந்தைகள் நமக்குச் சொல்லும் OTP.
நம் குழந்தைகளை தள்ளி நின்று கவனிப்போம்
சமீபத்தில் நண்பர் ஒருவர் தன் மகள் தேர்ந்தெடுத்துப் படிக்கும் துறை ஒன்றாகவும், கனவு வேறொன்றாகவும் இருப்பதாகச் சொல்லி அந்தத் துறையில் பணிக்குச் செல்ல பயிற்சியும் முயற்சியும் செய்து வருவதால் வாழ்வின் பாதை சரியா தவறா என தெரியாமல் நகர்கிறது நாட்கள் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
நான் +2 படித்துக்கொண்டிருந்தபோது, என் வகுப்பில் ஒரு மாணவியால் எனக்கு ஏற்பட்ட ஒரு தொந்திரவு குறித்து என் வகுப்பாசிரியரை சந்தித்துப் பேசுவதற்காக வந்திருந்தார்கள் என் பெற்றோர்.
பிரச்சனை குறித்தும் அதற்கான தீர்வையும் பேசிய பின்னர் பேச்சு பொதுவாக என் படிப்பு குறித்து திரும்பியது. அப்போது என் பெற்றோர் நான் தினமும் விடியற்காலையில் எழுந்து படிப்பதாகவும் கடுமையாக உழைப்பதாகவும் பெருமையாக சொன்னார்கள். அது எனக்கும் சந்தோஷமாக இருந்தது.
அப்போது வகுப்பாசிரியர் என்னை வகுப்புக்கு அனுப்பிவிட்டு என் பெற்றோரிடம் ‘உங்கள் மகள் நன்றாக படிக்கிறாள்… அமைதியாகவும் இருக்கிறாள்… நல்ல விஷயம்தான். அவள் கடுமையாக உழைத்து படிப்பதை இப்படி அவள் முன்பே பிறரிடம் சொல்லும்போது அவளுக்குள் தான் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறோம் என்ற உணர்வு ஆழமாக பதிவதுடன் நாளடைவில் கொஞ்சம் சுயபச்சாதாபமும் உண்டாகும். படிப்பில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் அவளால் அதை தாங்க இயலாது… எனவே அவள் போக்கில் அவளை விடுங்கள். நன்றாக வருவாள்’ என்று சொன்னதை என் பெற்றோர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள்.
இன்றைய இளைஞர்கள் வெற்றியோ தோல்வியோ அத்தனையையும் முயற்சி செய்து பார்த்துவிட ஆசைப்படுகிறார்கள்.
பெரும்பாலானோர் தோல்வியைக்கூட ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திலேயே இருக்கிறார்கள். அந்த பக்குவத்தை பல்வேறு காரணிகள் தொட்டுப் பார்த்து உடைக்காத வரை அவர்கள் பக்குவம் உடைபடாமல் பத்திரமாகவே இருக்கிறது.
என் மகள் / மகன் எத்தனை கஷ்டப்பட்டுப் படித்தாள்(ன்), இப்படி ஆகிவிட்டது என பெற்றோர் ஆதங்கத்துடன் புலம்ப ஆரம்பிக்கும்போது அவர்களின் தன்னம்பிக்கை சுயபச்சாதாபத்தால் சற்று ஆட்டம் காண்கிறது.
‘என்னவோ ரொம்ப பெருமையா சொல்லிக்கொண்டார்கள் அவர்கள் பிள்ளைகளைப் பற்றி… அந்த அலட்டம் எல்லாம் இதுமாதிரி சொதப்பத்தானா?’ என்று உற்றார் உறவினர்கள் கேலியாக பேசிக்கொள்ளும்போது அவர்களின் தன்னம்பிக்கை அவமானத்தால் மேலும் அடிவாங்குகிறது.
‘உன்னிடம் நாங்கள் ரொம்பவும் எதிர்பார்த்தோம். இப்படி ஆகிவிட்டதே…’ என கல்விக்கூடங்கள் ஏமாற்றத்தைத் தெரிவிக்கும்போது அவர்களின் தன்னம்பிக்கை சரியத் தொடங்குகிறது.
எல்லாவற்றையும் மீறி அரசியல் காரணிகள் உள்ளே புகுந்து விளையாட ஆரம்பிக்கும்போது அவர்களின் தன்னம்பிக்கை சிதைந்து சின்னாபின்னமாகிறது.
அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டாலே தங்கள் தோல்வியில் இருந்து தாங்களே மீண்டு வந்துவிடுவார்கள். தங்கள் விருப்பத்தைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் பக்குவம் உள்ளவர்களுக்கு அதன் வெற்றி தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவமும் தானாகவே அவர்களுக்குள் தோன்றி வழிநடத்தும். அதுதானே இயற்கை. கூடவே நாமும் வழிகாட்டுவோம்.
சுற்றத்தையும், உறவுகளையும் இன்னபிற காரணிகளையும் கட்டுப்படுத்த நம்மால் முடியாது. பெற்றோர்களாகிய நாம் அவர்களின் தோல்விக்கு பரிதாபப்பட்டு அவர்களுடன் சேர்ந்து நாமும் சோகப்பாட்டு பாட வேண்டாமே. உற்சாகத்துடன் தட்டிக்கொடுத்து நான்கு வார்த்தை இன்முகத்துடன் பேசினாலே போதும். அவர்கள் சுதாகரித்துக்கொள்வார்கள்.
ஏன் எதிர்மறையாகவே யோசிக்க வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் ஜெயிப்பதும் தோற்பதும் சகஜம். வெற்றி என்பது குறைந்த அளவு நஷ்டங்களால் உண்டாவது. தோல்வி என்பது அதிக அளவு நஷ்டங்களால் உண்டாவது. அவ்வளவுதான். என்னைப் பொருத்தவரை முயற்சியே வெற்றிதான். இதுதான் வெற்றிக்கான OTP.
பஞ்சதந்திர OTP
ஒருமுறை பத்திரிகை நேர்காணல் ஒன்றில் ‘நீங்கள் உங்கள் பிரச்சனைகளை யாரிடம் சொல்வீர்கள்?’ என்று என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘அப்பா அம்மாவிடம்தான். அவர்கள்தான் என் நண்பர்கள்’ என சொல்லி இருந்தேன். இந்த வயதிலும் அப்பா அம்மாவிடமா என பேட்டி எடுத்தவர் ஆச்சர்யப்பட்டார்.
அண்மையில் மறைந்த கிரேசி மோகனின் பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றை காண நேர்ந்தது. அதில் அவர், ‘நான், என் அப்பா அம்மா, என் சகோதரர் குடும்பம் என கூட்டுக் குடும்பமாக வசித்து வந்ததால் சின்ன தவறுகூட செய்ய முடியாது. தட்டிக் கேட்கவும், வழி நடத்தவும் பெரியவர்கள் இருந்ததார்கள்’ என சொல்லி கூட்டுக் குடும்பத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லி இருந்தார்.
பெற்றோர்களும் பிள்ளைகளுக்குமான ஆழமான புரிந்துணர்வுக்கு நான் சொல்லும் பஞ்சதந்திர OTP-கள் உங்கள் பார்வைக்கு.
- பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை எதுவும் கேட்கக் கூடாது என நினைத்து ஒதுங்கி, அவர்களுக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்து கெடுத்துவிடக் கூடாது. எத்தனை வயதானாலும் அவர்கள் உங்களுக்குக் குழந்தைகள்தான். என் மகன் / மகள் எங்கே செல்கிறான், என்ன செய்கிறான் என்றே எனக்குத் தெரியாது, வாரத்தில் ஒருநாள்தான் பேசுவேன், பாவம் ஓடா உழைக்கிறான்… ஆஃபீஸ் பிழிந்து எடுக்கிறது என்றெல்லாம் சொல்வதை நிறுத்திவிட்டு, பள்ளிக்கு, கல்லூரிக்கு அனுப்பும்போது எத்தனை கவனமாக இருந்தீர்களோ அதைவிட கவனமாக அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். மனதளவில் ஆதரவாக இருந்து, எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.உங்கள் குழந்தைகள் உங்கள் சொத்து. யாருக்காகவும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.
- ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் கொஞ்சம் அதிக அக்கறை காட்ட வேண்டும். அவர்களுக்கு பெண் குழந்தைகளின் உடல்நலம், அவர்களின் மாதாந்திர வலிகள், பிரசவ மறு ஜனனம் இப்படி எல்லா விஷயங்களையும் அவ்வப்பொழுது அம்மாக்கள் தங்கள் வாழ்க்கையில் இருந்தே உதாரணங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அவை பெண்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது. ஆண் பிள்ளைகளுக்கு முதலில் அவர்களைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.
- படிக்கின்ற மாணவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் சரி தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் முதலில் பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும். பெற்றோர்களால் மட்டுமே குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சற்று ஆழ்ந்த புரிதல் இருக்கும். எப்படி அதை சரி செய்யலாம் என்ற அனுபவமும் பக்குவமும் இருக்கும்.
- பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். அன்றாடம் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் நடக்கின்ற விஷயங்களை பேச்சுவாக்கில் அவர்களாகவே பகிர்ந்துகொள்வதைப்போல சூழலை ஏற்படுத்த வேண்டும்.
- எந்த பிரச்சனை ஆனாலும் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியும் மனோபாவத்தை வளர்த்து விடவேண்டும்.
இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…
குழந்தைகள் உலகில் பெற்றோர்களும், மாணவர்கள் உலகில் ஆசிரியர்களும் அவ்வளவு எளிதாக உள்ளே நுழைந்துவிட முடியாது. அவர்கள் உலகை புரிந்துகொள்ள மனதளவில் அவர்களைப் போலவே மாற வேண்டும். இதுவே, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான OTP.
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 16
நவம்பர் 2019
புத்தக வடிவிலேயே படிக்க: தேவதை மனசு தேவை : புதிய தலைமுறை பெண் நவம்பர் 2019