இன்று எனக்குப் பரிசாக வந்த பிள்ளையார் டேபிளில் கம்பீரமாய் வீற்றிருந்தது. மிக மிக எளிமையான பரிசுதான். ஆனால் இந்தப் பரிசு கொடுத்த நினைவுகள் விலைமதிப்பற்றது.
எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் என் திறனுக்கும் திறமைக்கும் அடிகோலிய நாட்களையும், செயல்பாட்டையும் இந்தப் பரிசு நினைவில் நிஜம்போல காட்சியாக விரித்ததில் என் எனர்ஜி லெவல் பல்மடங்கு உயர்ந்தது.
1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை வரை படித்தேன். B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ், M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் என 5 வருடங்கள் லேட்டஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் என் பெற்றோர் என்னை படிக்க வைத்ததன் விளைவு, படித்து முடித்ததும் என் படைப்பாற்றல் கொடுத்த தன்னம்பிக்கையில் பெற்றோர் கொடுத்த சப்போர்ட்டில் காம்கேர் உருவானது.
1992-ம் ஆண்டு கம்ப்யூட்டர்கள் படித்து பட்டம் பெற்றவர்களுக்காக மட்டுமே, ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு மட்டுமே, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என பல்வேறு கருத்துக்களால் அவை காட்சிப்பொருளாகவே பார்க்கப்பட்டு வந்த காலம். ஒரு கம்ப்யூட்டரின் விலை லட்ச ரூபாய்க்கு குறையாமல் இருந்தது.
எந்நேரமும் எனக்கு காம்கேரை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதிலேயேதான் முழு கவனமும். நிஜக்கனவும், உறக்கக் கனவும் இதுவே.
கம்ப்யூட்டர் பெரும்பாலானோரின் கனவுப் பொருளாக இருந்துவந்த காலத்தில் வங்கிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பத்திரிகைகள் என அனைத்தும் தங்களுக்கென சாஃப்ட்வேர் துறையை வைத்திருக்கவில்லை. காம்கேர் மூலம் அனைத்தையும் எங்கள் வசமாக்கினோம். வங்ககளின் கிரெடிட் கார்ட் அப்ளிகேஷன் பிராசஸிங் சாஃப்ட்வேர் , பள்ளிகளின் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர் சாஃப்ட்வேர், மருத்துவமனை மருத்துவர்-நோயாளிகள் விவரங்கள், பத்திரிகைகளுக்கான சந்தாதாதர் பட்டியல் பராமரிப்பு என பல்வேறுவிதமான சாஃப்ட்வேர்கள் தயாரித்து காம்கேர் பேனரிலேயே விற்பனை செய்யத் தொடங்கினோம். காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தன் தயாரிப்புகளால் பிரபலமடையத்தொடங்கியது. இப்படியாக சாஃப்ட்வேர் தயாரிப்பில் புது உத்திகளைப் புகுத்தினேன்.
அடுத்ததாக தமிழில் தொழில்நுட்பத்தைப் புகுத்தத் தொடங்கினேன். அதற்கு ஒரு நிகழ்வு காரணமானது.
25 வயதுமிக்க இளைஞர் ஒருவர் எங்கள் நிறுவனத்துக்கு வந்தார். ‘தமிழில் கம்ப்யூட்டர் சொல்லித்தர முடியுமா…’ என்று கேட்டார்.
நான் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு ‘ஏன்… தமிழில்?’ என்றேன்.
அதற்கு அவர் ‘நான் நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை அணுகினேன் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள… ஆனால் அவர்கள் எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராததால் முதலில் ஆங்கிலம் பயிலுங்கள்… ஆங்கிலம் தெரிந்தால்தான் கம்ப்யூட்டர் வரும்’ என்று சொல்லி விட்டார்கள்… எனக்கு கம்ப்யூட்டர் கற்க வேண்டும். அதனால்தான்…’ என்று எந்த கூச்சமும் இல்லாமல் தெளிவாகப் பேசினார்.
‘என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு மட்டுமே… கம்ப்யூட்டர் பயிற்சி கிடையாது’ என்று சொல்லி அவரை அனுப்பினேன்.
அவருடைய பேச்சு எனக்கு ஒரு புது யுக்தியைக் கொடுத்தது.
‘நாம் ஏன் ஒரு நபருக்கு தமிழில் சொல்லிக்கொடுக்க வேண்டும்? பலருக்குப் பயனடையும் விதத்தில் அதை கொண்டுவரலாமே?’ என்ற எண்ணத்தில் என் அடிப்படைத் திறமையான எழுத்து மற்றும் படைப்பாற்றலுடன் என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு மூலம் நான் பெறுகின்ற அனுபவங்களை புத்தகமாக தமிழில் கொண்டுவரத் தொடங்கினேன். இன்று அந்தப் புத்தகங்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.
புத்தகங்கள் மட்டுமில்லாமல் தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர்கள் தயாரிக்க ஆரம்பித்தேன். முதன்முதலில் தமிழில் சாஃப்ட்வேர் வெளியிட்டதால் அதற்கான விருதும் அங்கீகாரமும் கிடைத்தது.
இதற்கும் 4 வருடங்கள் உருண்டோடி இருந்தன. தினம் தினம் புதுப்புது சிந்தனைகள். வித்தியாசமான கற்பனைகள். கற்பனைகளை சிந்தனைகளோடு இணைத்து நிஜத்தில் என் தொழில்நுட்ப அறிவை நிரூபிக்க உழைப்பு… உழைப்பு… உழைப்பு. இதை மட்டுமே நம்பினேன்.
என் நிறுவனம் வழியே காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக மாணவ மாணவிகள் பள்ளி சீருடையில் செல்லும் கண்கொள்ளாக் காட்சி என் கண்களுக்கு விருந்து. அதை ஒட்டிய ஒரு பிசினஸ் ஐடியா எனக்குள் உதித்தது.
அப்போதெல்லாம் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் என்று தனியாகக் கிடையாது. ‘நாம் ஏன் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஏற்படுத்தி, அவர்களுக்கு சிலபஸ் தயாரித்துக்கொடுத்து, புத்தகங்கள் எழுதி தேவையான கம்ப்யூட்டர்களை வாங்கி ஒவ்வொரு பள்ளியையும் தொழில்நுட்பத்துடன் இணைக்கக் கூடாது?’ – இது என் அடுத்த திட்டமானது.
சென்னை ஆதம்பாக்கத்தில் காம்கேர் நிறுவனம் இருந்த அடுத்தத் தெருவில் இயங்கிவந்த ‘ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளி’-யை அணுகினேன்.
முதன்முறை என்னிடம் இருந்த ‘டாட் மேட்ரிக்ஸ்’ பிரிண்டரில் நான் தயாரித்த பிராஜெக்ட் ப்ளானின் வித்தியாசமாக கலர் பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்துச் சென்றிருந்தேன்.
பிராஜெக்ட்டைப் பற்றிப் பேசியதைவிட கலர் பேப்பர் மற்றும் பிரிண்ட் அவுட் எடுத்த முறைபற்றி நிறைய பேசினார்கள் அந்த பள்ளி முதல்வரும் அவரது உதவியாளர்களும்.
இரண்டு நாட்கள் டைம் கேட்டிருந்தார்கள். மூன்றாம்நாள் ‘என்ன செய்யலாம் எப்படி செய்யலாம்’ என அடுத்தகட்ட விவாதம்.
இப்படியாக அந்த பிராஜெக்ட் ஒரு வடிவத்துக்கு வந்தது. 1996-ம் ஆண்டு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் காம்கேர் நிறுவனமும் ரோசரி மெட்ரிகுலேஷன் உயர் நிலைப் பள்ளியும் முறையாக ஒப்பந்தம் (MOU) போட்டுக்கொண்டு மூன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தினோம்.
ஒரு நல்ல நாளில் எங்கள் காம்கேர் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் அந்தப் பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை உருவாக்கி அமைத்தேன். அப்போது எனக்கு வயது 26.
உழைப்பினால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தலைகனமாக மாறாமல் என்னை வளர்த்தெடுக்கும் அளவுக்கு என் தன்னம்பிக்கை உச்சத்தைத் தொட்டது.
சிலபஸ் தயாரிப்பது அதற்குத் தேவையான புத்தகங்கள் எழுதுவது கம்ப்யூட்டர்களை வாங்கி இன்ஸ்டால் செய்வது என ரொம்ப பிசியானேன்.
என்னுடன் பணிபுரிந்தவர்கள் கம்ப்யூட்டர் புரோகிராமர்களே; பிறருக்குச் சொல்லிக்கொடுக்கும் / கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பணியில் ஆர்வமில்லாதவர்கள். எனவே அந்தப் பள்ளிக்கு ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியரை நியமிக்க வேண்டுமே? கம்ப்யூட்டர் தெரிந்த ஒரு ஆசிரியருக்காக தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருந்தேன்.
கடைசியில் என்னுடன் பி.எஸ்.ஸி படித்த ஒரு மாணவி ‘கே.ஆர்.ஜெயந்தி’ – வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருந்தது என கவனத்துக்கு வர அவரை அழைத்துப் பேசினேன்.
அவரும் தன்னுடன் படித்த மாணவி நடத்துகின்ற நிறுவனத்தில் பணி புரிய வேண்டுமே எந்த ஈகோவும் இல்லாமல் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டார்.
சிரித்த முகம். கலகலவென பேசும் பாங்கு. இவற்றால் அந்தப் பள்ளி குழந்தைகளுக்கு அவரை மிகவும் பிடித்துப்போனது.
இப்படியே மூன்று ஆண்டுகள் காம்கேர் மூலம் அந்தப் பள்ளியில் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப மாணவர்களை உருவாக்கினேன். அவர்களே தங்கள் கட்டுப்பாட்டில் பயிற்சி மையம் ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்கு ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுத்தோம். சில வருடங்களில் அவர்கள் தாங்களே கம்ப்யூட்டர் செண்டரை உருவாக்கிக் கொண்டார்கள். திறப்பு விழாவுக்கு என்னையே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அதன்பிறகு அவர்களுக்கு கன்சல்டண்டாக செயல்பட்டு வந்தேன்.
அடுத்தடுத்து பல பள்ளிகளில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொடுத்திருந்தாலும், எங்கள் காம்கேர் நிறுவனமே முதன்முதலில் அதற்கு அடிகோலியது.
சரி விஷயத்துக்கு வருகிறேன். பிள்ளையார் பரிசை கொடுத்தது யார்?
நான் முதன்முதலில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை புதுமையாக அறிமுகப்படுத்திய ‘ரோசரி’ மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த ஸ்ரீராம் என்ற மாணவன்தான் இந்தப் பரிசைக் கொடுத்தது. அப்போது அவர் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான விபத்தினால் உண்டான உடல்நலக் குறைவினால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை. இப்போது வயது 35.
இடையில் என்னிடம் 4 வருடங்கள் ஆஃபீஸ் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிந்துவந்தார். உலகம் புரிய வேண்டும் என்பதற்காக வெளியில் எனக்குத் தெரிந்த இடங்களில் வேலை வாங்கிக்கொடுத்து உதவினேன்.
இன்று என்னுடன் ஒரு நிறுவனத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது ஸ்ரீராம் கொடுத்தப் பரிசுதான் இந்த பிள்ளையார்.
சிறிய பரிசு எத்தனை கால நினைவுகளைக் கிளறிவிடுகிறது. எந்தப் பொருளும் வெறும் ஜடப்பொருளல்ல. அதன் பின்னர் ஏராளமான நிகழ்வுகளும் நினைவுகளும் பின்னிப் பிணைந்துள்ளதை யாராலேனும் மறுக்க முடியுமா?