‘அப்புசாமி சீத்தாபாட்டி’, அக்கறை(ரை), பாக்கியம் ராமசாமி

ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள்  7-12-17 வியாழன்  இரவு 11.40க்கு இயற்கை எய்தினார். ‘ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன்’  என்ற இயற்பெயர் கொண்ட இவர், தனது தந்தை மற்றும் தாய் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் பல கதைகளை எழுதியுள்ளார்.  ஓவியர் ஜெயராஜின் மூலம் உருவம் பெற்ற  ‘அப்புசாமி சீத்தாபாட்டி’, ‘பாக்கியம் ராமசாமி’ மூலம் உயிர்பெற்று பரவலாக பிரபலமானார். நகைச் சுவையை எழுத்தில் வடிப்பது கடினம். அதை அவர் அநாயசமாக செய்தார்.

இந்த விஷயங்கள் எல்லாம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர் சமூக அக்கறையுடன் செய்துவந்த மற்றுமொரு நல்ல செயலையும் இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில், தன்னுடைய மனதிருப்திக்காக விளம்பரம் ஏதும் இன்றி, ’அக்கறை’ என்ற அமைப்பை தலைமை ஏற்று நடத்தி வந்தார். இவருடன் பக்க பலமாக இருந்து வந்தவர் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராணி மைந்தன் அவர்கள்.

மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை மந்தைவெளியில் இவரது மருமகள் நடத்தி வந்த ‘தேஜோ மையம்’ என்ற மழலையர் பள்ளியில் ‘அக்கறை கூட்டம்’ கூடும். அந்த கூட்டத்தில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள் முதற்கொண்டு அனைத்துத் துறை ஜாம்பவான்களும் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 50 பேர் கலந்துகொள்வார்கள்.

நிகழ்ச்சி 4 மணி முதல் 5.30 வரை நடைபெறும். Punctuality என்றால் அதை பாக்கியம் ராமசாமி அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். யார் வந்தாலும் வராவிட்டாலும் மிகச் சரியாக 4 மணிக்கு ஆரம்பித்து 5.30 மணிக்கு முடித்துவிடுவார்.

நிகழ்ச்சியில் அப்படி என்னதான் நடக்கும்?

நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க விரும்பினாலும் இருக்கலாம் அல்லது வந்திருக்கும் ஒவ்வொருவருமே சிறப்பு விருந்தினர்கள் என்பதால் அனைவருக்கும் 6 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அந்த 6 நிமிடத்தில் அவரவர்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் பேசும் சப்ஜெக்ட்டை மற்றொருவர் எடுத்துப் பேசக் கூடாது. அந்த கருத்தை ஒட்டியோ, வெட்டியோ பேசக் கூடாது. அரசியல் கூடாது. இதுதான் அவர் வைத்திருந்த விதிமுறைகள்.

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் டிபனுடன் காபி/டீ வழங்கப்படும். ஆண்டுதோறும்  சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்.

இந்த நிகழ்ச்சி சுமார் 197 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் நிகழ்ச்சி நீலாங்கரைக்கு அடுத்துள்ள ‘அக்கரை’ என்ற கிராமத்தில் லேனா தமிழ்வாணன் அவர்களுன் ஹெஸ்ட் ஹவுஸில் நடந்தது என்பதால் அந்த அமைப்புக்கு ‘அக்கரை’ என பெயர் சூட்டினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியின் நோக்கம் மனிதர்கள் மனதுவிட்டு பேசவும், தங்கள் கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், மனித நேயத்தை வளர்க்கவும் என்றிருந்ததால் அந்த அமைப்பு ‘அக்கரை’ எனவும், ‘அக்கறை’ எனவும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கப்படலாம் என முடிவானது.

சில மாதங்களுக்கு முன்னர்  ‘தன்னால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாது. நிறுத்திக்கொள்ளலாம்’ என சொன்னபோது நண்பர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பிப்ரவரி 2018-ல் 200-வது நிகழ்ச்சியோடு ஆண்டுவிழா கொண்டாடிவிட்டு நிறுத்தலாம் என முடிவானது.

அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கும்போதே ‘தன் முடிவு வரப்போகிறது’ என்பதை முன்கூட்டியே அறிந்துதான், நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னாரோ என்னவோ? இது அவரது தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது.

நானும் இவரது ‘அக்கறை’ நிகழ்ச்சிக்கு அவ்வப்பொழுது சென்றிருக்கிறேன். முன்பெல்லாம், மக்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டு திண்ணைகளில் உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள். அந்த அரட்டையில் மனம் விட்டுப் பேசுவார்கள். அப்போது மன மகிழ்ச்சியோடுகூட பல பயனுள்ள விஷயங்கள் வெளிப்படும். அந்த உணர்வைதான் என்னால் ‘அக்கறை’ நிகழ்ச்சியில் உணர முடிந்தது.

அக்கறை, அப்புசாமி சீத்தாபாட்டி புகழ் நிலைத்து நின்று, பாக்கியம் ராமசாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி

08-12-2017

(Visited 68 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari