‘சுட்டி’ கணேசன்

நல்லவற்றை உரக்கச் சொல்வோம். குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் (மட்டுமே) சொல்லி புரிய வைப்போம் என்பதே என் கருத்து. என் பிசினஸ் நிமித்தமாக, நித்தம் நான் சந்திக்கும் மனிதர்களில் அவர்களின் நேர்மையான செயல்பாட்டினால், நல்ல குணத்தினால் என் மனதைத் தொடுபவர்களையும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் மனதைத்தொடுபவற்றையும் அதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் நபர்களையும் எந்த விதத்திலாவது அவர்களைத் தொடர்புகொண்டு என் பாராட்டைத் தெரிவித்துவிடுவது என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன்.

அந்த வகையில் தன் பணி நேர்மையினால் தன்னைத் தானே உயர்த்திக்கொண்டதோடு,  தான் பணிபுரியும் நிறுவனத்துக்கும் பெருமை சேர்த்த திரு. சுட்டி கணேசன் அவர்கள் மூலம் எனக்கு ஏற்பட்ட நல்ல அனுபவத்தை என் அஃபிஷியல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவாக்கி இருந்தேன். அந்தப் பதிவு  10000 நபர்களுக்கும் மேல் ரீச் ஆகியது. நிறைய பேர் ஷேர் செய்தார்கள். பலர் லைக் செய்தார்கள். இன்னும் பலர் இன்பாக்ஸில் தொடர்புகொண்டார்கள். அந்த ஃபேஸ்புக் பதிவு உங்கள் பார்வைக்கு…

‘ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அந்த நிறுவனத்தின் தலைமையின் கீழ் இயங்கி வரும் ஒவ்வொரு துறையிலும் உள்ள தனிநபர்களின் நேர்மையான செயல்பாடுகளை வைத்தே அமையும். சுருங்கச் சொன்னால் துறைத்தலைவர்கள் முதல் செக்யூரிடி ஸ்டாஃப் வரை ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் பொருத்தே அமையப்பெறும்.

நானும் ஒரு நிர்வாகத்தை நடத்தி வருவதால், இந்த நிகழ்வில் நான் கண்ட நிர்வாக ஒழுக்கம் மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

பத்து நாட்களுக்கு முன் கும்பகோணம் சென்றிருந்தேன். இதுபோல வெளியூர் செல்லும் நேரங்களில் பிரயாணத்தில் படிப்பதற்காக நிறைய புத்தகங்கள் எடுத்துச் செல்வேன். அதுவும் போதாமல், கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் பத்திரிகைகளையும் வாங்குவேன். ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த பெட்டிக்கடையில் ‘சுட்டி விகடன்’ வாங்கினேன். அவர்கள் 2 புத்தகங்கள்தான் கொடுத்தார்கள். ‘விளம்பரங்களில் மூன்று புத்தகங்கள் எனப் போட்டிருக்கிறார்களே…’ எனச் சொன்னேன். ‘இல்லைங்க… 2 புத்தகம்தான்’ என்றார்கள். நான் மொபைலில் ஃபேஸ்புக் விளம்பரத்தைக்கூட காண்பித்தேன். ஆனால், தொடர்ச்சியாக அவர்கள் மறுக்கவே நான் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டுத் திரும்பினேன்.

சென்னை  திரும்பியதும் சுட்டி விகடன் ஆசிரியர் திரு.கணேசன் (‘சுட்டி கணேசன்’) அவர்களிடம் இமெயிலில் இந்தத் தகவலை பகிர்ந்துகொண்டேன். மூன்று புத்தகமா அல்லது இரண்டு புத்தகமா என்பதையும் கேட்டு உறுதி செய்துகொண்டேன். யாரைப் பற்றியும் புகார் அளிக்கும் நோக்கம் இல்லாமல், நடந்த நிகழ்வை பகிரும் நோக்கத்தில் மட்டுமே என் கான்வர்சேஷன் இருந்தது.

இரண்டு பெரிய புத்தகம், ஒரு சிறிய புத்தகம் மொத்தம் 3 புத்தகங்கள் என இமெயிலில் தகவல் அனுப்பினார்.

அடுத்த 15-வது நிமிடம் விகடனில் சென்னை சேல்ஸில்(பத்திரிகைப் பிரிவு) இருந்து போன் வந்தது. மிகுந்த மரியாதையுடன் ஒருவர் பேசினார். ‘மேடம், விகடனில் பத்திரிகை சேல்ஸ் பிரிவில் இருந்து பேசுகிறோம். நீங்கள் எந்த ஊரில் புத்தகம் வாங்கினீர்கள்? எந்த கடையில் வாங்கினீர்கள்? உங்கள் முகவரி கொடுங்கள். நேரில் புத்தகத்தைக் கொடுக்கிறோம்’ என்றார்.

கடை பெயர் நினைவில்லை என்று சொல்லி அவருக்கு நன்றியைத் தெரிவித்தேன். நேரில் வந்து சிரமப்பட வேண்டாம்.  முகவரி கொடுக்கிறேன். கொரியரில் அனுப்பி வையுங்கள் என்றேன்.

சேல்ஸ் மேனேஜரில் நேர்மையான குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்க, அந்த அதிர்வு அடங்குவதற்குள், மற்றொரு போன். திருச்சி சேல்ஸ் டீம் மேனேஜர் பேசினார்.

‘மேடம் எந்த கடையில் புத்தகம் வாங்கினீர்கள்? கடைப் பெயர் நினைவில் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஒரு லேண்ட்மார்க்காவது சொல்லுங்கள்… என்று கூறினார். நான் சாப்பிட்ட ஹோட்டலின் பெயரைச் சொன்னதும் அவர் புரிந்துகொண்டார்… நடந்த நிகழ்வுக்கு மன்னிக்கவும்’ என சொல்லி புத்தகத்தை நேரில் கொண்டுத் தருகிறோம் என்றும் கூறினார்.

அவருக்கும் நன்றி சொல்லி கொரியரில் அனுப்பினால் போதும் என்றேன்.

சென்னை மற்றும் திருச்சி சேல்ஸ் டீமில் இருந்து பேசிய இரண்டு சேல்ஸ் மேனேஜர்களின் குரலில் ஒலித்த நேர்மையை மனதுக்குக்குள் ரசித்தபடி இருக்க, மீண்டும் ஒரு போன்கால்.

நான் எந்த கடையில் புத்தகம் வாங்கினேனோ அந்தக் கடைக்குப் புத்தகத்தை சப்ளை செய்யும் டீலர் கும்பகோணத்தில் இருந்துப் பேசினார்.

‘மேடம், எங்கள் ஊரில் உள்ள எல்லா கடைகளிலும்  சொல்லி வைத்து விட்டேன்.  இனி இதுபோல் நடக்காது. நடந்த தவறுக்கு மன்னிக்கவும். நீங்கள் புத்தகம் வாங்கிய கடை ஓனர் சாப்பிடப் போயிருக்கும் சமயம் அவர் உறவினர் ஒருவர் கடையில் இருந்ததால் அவர்கள் தெரியாமல் இரண்டு புத்தகங்கள் மட்டும் கொடுத்ததாகச் சொன்னார்…’

அவருக்கும் நன்றி சொல்லி போனை வைத்தேன்.

ஒரு புத்தகம் கிடைக்காததற்கு இத்தனை ரெஸ்பான்ஸ் கொடுத்து விகடன் பத்திரிகை சேல்ஸ் பிரிவில் இருந்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் போனில் பேசியவர்களுக்கு யாரிடம் பேசுகிறோம் என்றுகூடத்  தெரியாது. அத்தனை மரியாதை, பதற்றம், சற்றே குற்ற உணர்ச்சி…. விட்டால் கும்பகோணத்தில் இருந்தே  சென்னை வந்து எனக்கு நேரில் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்  போன்ற உணர்வு.

இந்த நிகழ்வில் ஒரு நிறுவனம்.

ஒரு துறைத் தலைமை(எடிட்டோரியல்).

ஒரு சேல்ஸ் டிபார்ட்மெண்ட்.

அதன் கீழ் பணிபுரியும் 3 ஸ்டாஃப்கள். இவர்கள் அனைவரிடமும் நான் கண்டுகொண்டது நேர்மை, உண்மை, செய்கின்ற பணியின் மீதான ஈடுபாடு.

நடந்த நிகழ்வை துறைத்தலைவரிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் அதை நேர்மையாக தெரியப்படுத்த வேண்டிய துறைக்கு தெரியப்படுத்தியதால் அவருடை நேர்மையான பாசிட்டிவ் வைப்ரேஷன் அடுத்தடுத்த நபர்களிடமும் ஏற்பட்டு ஒரு நிர்வாகத்தின் பெருமையை நிலைநிறுத்துவதாக அமைந்தது.

ஆக, ஒரு நிர்வாகம் என்பது அதில் பணிபுரியும் தலைமை நிலையில் உள்ளவர்கள் முதல், செக்யூரிட்டி ஸ்டாஃப்கள் வரையிலான  தனிநபர்களின் நேர்மையைப் பொருத்தே அமைகிறது என்பதை நிரூபிக்கும் சம்பவமாக இது அமைந்தது.

என் டேபிளில் ‘வாழ்வைப் படிப்போம். தேர்வில் ஜெயிப்போம்’ என்ற சுட்டி விகடன் குட்டி புத்தகத்தின் அட்டை காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது.  என் மனமும்தான்-பாசிடிவ்வான அணுகுமுறை கொடுத்த சந்தோஷத்தால்.

அன்புடன்

காம்கேர் கே.புவனேஸ்வரி

மார்ச் 10, 2016

 

(Visited 215 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon