ஹலோ With காம்கேர் – 1 : சுயத்தை இழக்காமல் வாழ இயலுமா?

ஹலோ with காம்கேர் – 1
ஜனவரி 1, 2020

கேள்வி: தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா?

நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே.

எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் செய்யவே முடியாது. அலுவலக மீட்டிங், நண்பர்களின் அன்புத்தொல்லை என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதையும் புகைப்பதையும் என்னவோ தங்களுக்கு அதில் உடன்பாடே இல்லாததைப் போல சொல்லி மழுப்புபவர்கள் மனதில் எங்கோ ஒரு மூலையில் மதுவும், புகையும் விருப்பமான ஒரு செயலாக பதிந்திருப்பதால்தான் பிறரை சாக்கு சொல்லிக்கொண்டு தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

ஐடி நிறுவன பார்ட்டிகளில் மது  இடம்பெறும் என்பது பொதுவான அபிர்ப்பிராயமாக உள்ளது. என் நிறுவன நிகழ்ச்சிகளில் மதுவும், அசைவ உணவும் இடம்பெறாது. நானே உருவாக்கிய நிறுவனமாக இருப்பதால் அதை உறுதியாகப் பின்பற்ற முடிகிறது.

வெளியில் நடக்கின்ற பொதுவான மீட்டிங்குகளுக்குச் செல்லும்போது பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிகள் விருந்துடன் முடிவடையும். ஒரு சில விருந்துகளில் அசைவ உணவும் மதுவும் இடம்பெற்றிருக்கும். சைவ உணவும் அசைவ உணவும் தனித்தனியாக ஏற்பாடு செய்திருந்தாலும்கூட நான் உரியவர்களிடம் சொல்லிக்கொண்டு சாப்பிடாமலேயே கிளம்பி விடுவேன்.

என்னுடைய இந்த குணத்துக்காக நான் இதுவரை என் வாழ்க்கையிலும் பிசினஸிலும் எதையுமே இழக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் கூடுதல் மரியாதையைத்தான் பெற்றிருக்கிறேன்.

பிறர் நம்மை மதிக்கும்போது எத்தனை மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதைவிட பல்மடங்கு சந்தோஷத்தைப் பெறுகிறேன், என் உணர்வுகளை நான் மதிக்கும்போது.

2012-ம் ஆண்டு தினமலர் பத்திரிகை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சூப்பர் ஜோடி நிகழ்ச்சியில் ஏராளமான தம்பதிகள் கலந்துகொண்டார்கள். அதில் 50 வயதைக் கடந்த ரவி-கிரிஜா தம்பதியும் கலந்துகொண்டனர். சிறிய பேப்பர்களில் பாட்டு, நடனம், வசனம், மிமிக்கிரி என தனித்தனியாக எழுதி ஒரு பெட்டியில் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு தம்பதியினரையும் மேடைக்கு அழைக்கும்போது அதிலிருந்து ஒரு சீட்டை எடுத்துப் படிப்பார்கள். அதில் என்ன வருகிறதோ அதை அந்த தம்பதிகள் செய்ய வேண்டும்.

ரவி கிரிஜா தம்பதிக்கு கையைக் கோர்த்துக்கொண்டு சேர்ந்து ஆட வேண்டும் என சொல்லி அப்போது பிரபலமாக இருந்த ஒரு பாடலை இசைக்க விட்டார்கள்.

இந்த தம்பதிக்கு பொதுவில் கைகோர்த்துக்கொண்டு அந்த பாடலில் வருவதைப்போல அங்க அசைவுகளுடன் ஆடுவதில் உடன்பாடில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் ‘நான் இப்படி சினிமாவில் வருவதுபோல ஆட முடியாது. நான் தனியாக ஆடுகிறேன். என் மனைவி தனியாக ஆடுவார். உங்கள் விதிமுறை அனுமதித்தால் ஆடுகிறேன். இல்லை என்றால் விலகுகிறேன்’ என ரவி சொன்னபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதிகொடுத்தனர். இருவரும் தனித்தனியாக பயிற்சி இல்லாமல் ஆடும் சிறிய குழந்தைகளைப் போல் தங்கள் இஷ்டத்துக்கு ஆடினார்கள்.

தங்களுக்கு எங்கே பரிசு கிடைக்கப் போகிறது என நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஆச்சர்யம். அந்த நிகழ்ச்சியின் சூப்பர் ஜோடி விருது அந்த தம்பதிக்கே கிடைத்தது.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நம் வாழ்க்கையில் நாம் பின்பற்றும் சில நல்ல விஷயங்களை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் உறுதியாக இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் புரிந்துகொள்வார்கள்.

அதனால்தான் சொல்கிறேன் சுயத்தை இழக்காமல் வாழ முடியும், வாழ்க்கையில் ஜெயிக்கவும் முடியும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 48 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon