ஹலோ with காம்கேர் – 2
ஜனவரி 2, 2020
கேள்வி: துரோகம் செய்தவர்களை மறப்பது எப்படி?
துரோகம். எத்தனை வலி நிறைந்த வார்த்தை.
உழைப்பாலும், உணர்வாலும், பொருளாலும் நம்மை ஏய்ப்பவர்களின் செயல்பாடுகள் எத்தனை வலி மிகுந்ததாக இருக்கும் என்பதை அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.
நம் உழைப்பைச் சுரண்டி அதற்கு தக்க சம்மானமும், அடையாளமும், அங்கீகாரமும் கொடுக்காமல் ஏமாற்றுவது ஒரு வகையான துரோகம்.
நட்பு, பாசம், காதல் என உணர்வுகளால் நம் தூய அன்பையும் மென்மைத்தன்மையை பயன்படுத்திக்கொண்டு ஒருகட்டத்தில் தூக்கி எறிந்துவிடுவது மற்றொரு வகையான துரோகம்.
ஒருசிலரின் இக்கட்டான நேரத்தில் பணமோ பொருளோ கடனாகக் கொடுத்து உதவியிருப்போம். ஆனால் அதை திருப்பித்தர வேண்டும் என்கின்ற உணர்வின்றி நாட்களைக் கடத்துவதும், நம் தேவைக்காக கேட்கும்போது திருப்பித் தராததுடன் கேட்கும் நம்மை இழிவுபடுத்தி பிறரிடம் பேசுவதும் ஒருவிதமான துரோகம்.
இப்படி துரோகங்கள் பலவிதம்.
பல விதங்களில் ஏமாற்றுவதை பிழைப்பாகக் கொண்டவர்களின் செயல்பாடுகளை ‘துரோகம்’ என்ற பிரிவில் கொண்டுவந்துவிடுகிறோம் நாம்.
ஒருவரால் ஏதேனும் ஒருவிதத்தில் ஏமாற்றப்படும்போது அதை சரிசெய்ய நம்மால் ஆன முயற்சிகளை நூறு சதவிகிதம் முழுமையாக எடுக்க வேண்டும். அப்படியும் தீர்வு கிடைக்கவில்லை எனில் குறைந்தபட்சம் நம் நலனுக்காகவாவது அந்த ஏமாற்றத்தில் இருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும்.
சர்க்கரை நோய், இதயக் கோளாறு போன்ற பெரும்பாலான நோய்கள் உணவினாலும் பழக்கவழக்கங்களினாலும் வருகிறதென்றாலும் எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாத உணவுக் கட்டுப்பாடுள்ளவர்களுக்கும் அந்த வியாதிகள் வருவதற்குக் காரணம் மன அழுத்தம்.
துரோகம் செய்தவர்களே இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது, நல்லதை செய்துவிட்டு அதற்கான பலன் கிடைக்காமல் ஏமாந்துபோனவர்கள் ஏன் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதால் நடந்தவை மாறிவிடப் போகிறதா என்ன? இல்லையே.
நடந்தவை நடந்தவைகளே. அவற்றை மாற்றவோ, மறுக்கவோ முடியாத சூழலில் என்ன செய்யலாம் என எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்.
துரோகம் சின்னதோ பெரியதோ அதனால் ஏற்பட்ட வலி அவ்வப்பொழுது எட்டிப் பார்த்துக்கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் நாமெல்லாம் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட மனிதர்கள்தானே.
அப்படி வலிகள் எப்போதெல்லாம் எட்டிப் பார்க்கிறதோ அப்போதெல்லாம் அவை நம்மை பாதிக்காமல் இருக்க வேறு ஏதேனும் ஒரு நிகழ்வை, சூழலை, கனவை நம் மனதுக்குள் கொண்டுவரலாம்.
உதாரணத்துக்கு உங்கள் உழைப்பை ஒருவர் பயன்படுத்திக்கொண்டு உரிய அங்கீகாரம் கொடுக்க மறுத்து அதனால் உண்டான புகழை அவர் மட்டுமே அனுபவிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அதனால் ஏற்பட்ட வலி எப்போதெல்லாம் உங்களுக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் ஒரு தயாரிப்பை உருவாக்குகிறீர்கள், அது பெரிய அளவில் பேசப்படுகிறது, விருதுகளெல்லாம்கூட கிடைக்கிறது என்பதுபோன்ற கற்பனை காட்சியைக் கொண்டுவாருங்கள். திரும்பத் திரும்ப இப்படி கற்பனை செய்யும்போது உங்களுக்குள் ஒரு உத்வேகம் வருவதுடன் பெரியதாக இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது புதுமையாக ஏதேனும் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உங்கள் மனதை திசை திருப்பும்.
இது ஒரு உதாரணம் மட்டுமே. உங்களுக்கு எந்தக் கற்பனைக் காட்சி பிடிக்கிறதோ அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சாப்பிட மறுக்கும் குழந்தையை போக்குக் காட்டி சாப்பாடு ஊட்டும் நுட்பம்தான் இது.
நீங்களும் முயற்சி செய்துதான் பாருங்களேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software