ஹலோ with காம்கேர் – 8
ஜனவரி 8, 2020
கேள்வி: நடைமுறையில் உண்மையைவிட போலித்தனம் ஜெயிப்பது ஏன்?
கலிகாலம். வேறென்ன சொல்ல?
நாம் அனைவரும் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கையே எடுத்துக்கொள்வோமே. வீட்டில் நமக்காகவே வாழும் அப்பாவோ அம்மாவோ தாத்தாவோ பாட்டியோ கரிசனமாக ’என்னப்பா(ம்மா) உடம்பு சரியில்லையா…’ என்று உண்மையான பாசத்துடன் கேட்கும்போது வராத பாசமும் நேசமும் ஃபேஸ்புக்கில் நிஜமுகம் காட்டாத நூற்றுக்கணக்கான மனிதர்கள் சொல்லும் ‘டேக் கேர்’ என்ற ஒற்றை வார்த்தையில் பொங்கிப் பொங்கி வழிகிறதல்லவா.
இதுதான், உண்மை கொஞ்சம் கொஞ்சமாக பின் நகர்ந்து போலிகள் முந்திச் செல்லும் மையப் புள்ளி.
நம் மனம் எப்போதுமே எதற்குப் பழக்கப்படுகிறதோ அதற்கு அடிமையாகிவிடும். ஒரு பொய்யை தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டே இருந்தால், அந்த பொய் கொடுக்கின்ற கிளர்ச்சியில் நம் மனமும் அதுதான் உண்மை என்று நம்ப ஆரம்பித்துவிடும்.
உண்மையாக இருப்பதற்கு நிறைய பயிற்சி வேண்டும். உறுதியான மனப்பான்மை வேண்டும். திடமான கொள்கைப் பிடிப்பு வேண்டும். பொய்யாய் வாழ்வதற்கு முதலில் சொன்ன பொய்யையே தொடர்ச்சியாக திரும்பத் திரும்பச் சொல்கின்ற திறன் இருந்துவிட்டால்போதும்.
முன்னதைவிட பின்னது சுலபமாக இருப்பதால் உண்மையைவிட போலிகள் முந்திச் செல்கின்றன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கின்ற மாணவர்களுக்காக நான் நடத்திவரும் ‘அறம் வளர்ப்போம்’ என்ற குழுவில் தினமும் ஒரு நற்செய்தியை எழுதி வருகிறேன். தினந்தோறும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு அவற்றைச் சொல்லிக்கொடுத்து வீடியோ எடுத்து அனுப்புவார்கள். அவை யு-டியூப் சானலில் இடம்பெறும்.
நேற்று ஒரு ஆசிரியை போன் செய்து அழுதபடி சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்ததுடன் சிந்திக்கவும் வைத்தது.
‘மேடம், அறம் வளர்ப்போம் என்று எழுதுகிறீர்கள். உண்மையில் அறத்தை எல்லாம் வளர்க்கவே முடியாது மேடம்…’
இதைத் தொடந்து அவர் பள்ளி தலைமை ஆசிரியை தன் பள்ளி ஆசிரியர்களிடம் காட்டும் பார்ஷியாலிடியை கதைபோல சொன்னார். அவருக்கு ஜால்ரா போடுபவர்களுக்கு சலுகைகள். சுயமாக புதுமையாக சிந்திப்பவர்களுக்கு தண்டனைகள்.
குறைந்தபட்ச தண்டனையாக அந்த வகுப்புக்கு மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது, அதிகபட்சமாக வேறு இடத்துக்கு மாற்றிகொண்டு செல்லும் அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுப்பது என அன்றாடம் நடைபெறும் அவலங்களை புலம்பித் தீர்த்தார்.
நான் அவரை சமாதானப்படுத்திவிட்டு சொன்னேன்.
‘அறம் வளர்ப்போம்’ குழுவின் மூலம் சொல்லிக்கொடுக்கப்படும் தகவல்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல. அதன்மூலம் ஆசிரியர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எழுதுகிறேன்.
அத்துடன் நீங்கள் சொல்லும் அலுவலக பாலிடிக்ஸ் பள்ளிகளில் மட்டுமல்ல ஐடிதுறை, பத்திரிகை, சினிமா, சின்னத்திரை என எல்லா துறைகளிலும் வியாபித்துள்ளது.
அறம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால்தானே அவர்களைப் போலுள்ளவர்கள் பெருகிவிட்டார்கள். நாம் கொஞ்சமாவது முயற்சி எடுத்தால்தானே அவர்களை மாற்ற முடியாவிட்டாலும் வரும் தலைமுறையாவது தப்பிப் பிழைக்கும்.
நாம் வசிக்கும் இடத்தில் திறந்த நிலையிலுள்ள ஒரு சாக்கடை ஓடினால் நாற்றம் அடிக்கும்தானே. ஒன்று நாம் வேறு வீடு மாறிச் செல்ல வேண்டும் அல்லது சாக்கடையை மூட ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீடு மாறிச் சென்றால் அங்கு வேறு பிரச்சனை காத்திருந்தால் என்ன செய்வது?
சாக்கடையை மூடுவதற்கான ஏற்பாடுபோல்தான் அறம் வளர்ப்போம் மூலம் சொல்லிக்கொடுக்கும் நற்செய்திகள் என அவருக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னேன்.
எந்த ஒரு மாற்றமும் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடாது. கல்லை செதுக்கும் சிற்பியின் நிதானத்துடன் முயற்சித்துக்கொண்டே காத்திருக்கும் பொறுமை மிக அவசியம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software