ஹலோ with காம்கேர் – 9
ஜனவரி 9, 2020
கேள்வி: எல்லோர் மனதையும் படிக்கிறீர்கள், சிறப்பாக ஆலோசனைகளும் சொல்கிறீர்கள். சைக்காலஜி படித்துள்ளீர்களா?
அண்மை காலங்களில் என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி இதுதான். பத்திரிகைகளில் நான் எழுதும் வாழ்வியல் தொடர்களை படிக்கும் பலர் நான் உளவியல்துறை சார்ந்தவர் என்றே நினைத்திருந்ததாக சொல்லி இருக்கிறார்கள்.
நான் இயங்குவது தொழில்நுட்பத்துறை. ஒரு கான்செப்ட்டுக்கு நிறைய லாஜிக்குகள் இருக்கும். அவற்றில் சிறப்பானதை பொருத்திப் பார்த்து சிக்கல் இல்லாமலும், விரைவாகவும், தகவல்களின் சுமையைத் தாங்கும் தன்மையுடையதாகவும் இயங்கக் கூடிய லாஜிக்கைத் தேர்ந்தெடுத்து புரோகிராம் எழுதி சாஃப்ட்வேர் தயாரிப்பதுதான் எங்கள் துறையின் சிறப்பு.
ஒரு புரோகிராம் சிக்கலின்றி செயல்படுவதற்கே பல்வேறு லாஜிக்குகள் இருக்கும்போது நித்தம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?
நாம் நம்முடைய பிரச்சனைகளை எதிர்கொள்வது என்பது நம்மளவில் நின்றுவிடும். பிறருக்கு ஆலோசனை சொல்லும்போது கவனம் வேண்டும்.
பிரச்சனைகளுக்குத் தீர்வை கண்டறிவதிலும் அதை வெளிப்படுத்துவதிலும் சூட்சுமம் உள்ளது.
முதலில் ஆலோசனை கேட்க வந்தவர்களின் பிரச்சனையை காது கொடுத்து பொறுமையாக கேட்டாலே அவர்கள் பிரச்சனையின் வீரியம் பாதியாக குறைந்துவிடும். மீதி பாதிக்கு நாம் ஆலோசனை வழங்குவதன் மூலம் தீர்வை சொல்லுவது மிக எளிது.
மற்றவர்களின் பிரச்சனையை நம்மிடம் சொல்லும்போது அவர்கள் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்து சிந்திக்க வேண்டும்.
அப்படி சிந்தித்து ஆலோசனையாக வெளிப்படுத்தும் போது எந்த இடத்திலும் ‘எல்லாம் நாம் நடந்துகொள்வதில் இருக்கிறது..’ என்ற அதிகார தொனியிலோ ‘எனக்கெல்லாம் இதுபோல நடந்ததே இல்லைப்பா…’ என்ற பெருமித தொனியிலோ அவை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சனைகள் எல்லாம் சகஜம். எல்லோர் வாழ்க்கையிலும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு விதமாக நடப்பதுதான் என்று நம்மை அவர்களுடன் இணைத்துக்கொண்டு பேசும்போது நாம் எந்த பிரயத்தனமும் செய்யாமல் நாம் சொல்ல வரும் கருத்துக்கள் எதிராளியின் மனதில் ஆணித்தரமாக பதிவதுடன் நம்மையும் அவர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்துக்கொள்வார்கள்.
என்னைப் பொருத்தவரை என்னிடம் ஆலோசனை கேட்பவர்களிடம் நான் பின்பற்றுவது இதுதான்.
என்னுடைய நேரடி அனுபவங்கள்…
உலகையும் மனிதர்களையும் உற்று நோக்குவதால் கிடைக்கும் அனுபவங்கள்…
நான் பங்கேற்கும் மேடை நிகழ்ச்சிகளின் வாயிலாக குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர்கள் என வயது வித்தியாசம் இன்றி பலரையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதால் அவர்களால் கிடைக்கும் அனுபவங்கள்…
27 வருடங்களாக தொழில்துறையில் சாஃப்ட்வேர் நிறுவன நிர்வாகியாகவும் பயணிப்பதால் கிடைக்கும் அனுபவங்கள்…
நிறைய வாசிப்பதால் கிடைக்கும் அனுபவங்கள்…
என் பெற்றோர் எங்களுடன் பகிர்ந்துகொண்ட அவர்களின் அனுபவங்கள்…
என் பெற்றோரின் பெற்றோர்களின் அனுபவங்கள்…
இப்படி பல்வேறு அனுபவங்களை வாழ்க்கைப் பாடமாக படித்துள்ளதால் நான் இயங்குவது தொழில்நுட்பமாக இருந்தாலும் உளவியல் துறைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் பட்டம் பெறாமலேயே கற்று வைத்துள்ளேன்.
பிரச்சனைகள் வந்த பிறகு அதற்கான தீர்வை நோக்கி நகர்வது என்பது பொதுவிதி. இப்படி செய்தால் இன்ன பிரச்சனை வரலாம் என தானாகவே மனத்துக்குள் மணியடிக்கும் வகையில் நம்மை செதுக்கிக்கொண்டு வாழ்வது வரம்பெற்று வந்த விதி.
வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் மொபைலை பையில் இருந்து எடுக்காமல் உலகை சுற்றிப் பாருங்கள். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் முகமும் ஓராயிரம் உளவியல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software