ஹலோ With காம்கேர் – 7 : எல்லா வேலைகளையும் உங்கள் தலையில் சுமப்பவரா நீங்கள்?

ஹலோ with காம்கேர் – 7
ஜனவரி 7, 2020

கேள்வி: எந்த வேலையானாலும் நானே செய்தால்தான் திருப்தியாக இருக்கிறது. அதனால் என்னால் நிறைய வேலைகளை செய்ய முடிவதில்லை.

ஒருசிலருக்கு இந்த குணம் உண்டு. எந்த வேலையானாலும் அதை தாங்களே தங்கள் கைகளால் செய்ய வேண்டும், அப்போதுதான் அது நேர்த்தியாக இருக்கும் என்று நினைப்பார்கள். வேறு யாரேனும் உதவி செய்தாலும் அதில் ஆயிரத்தெட்டு குற்றங்களை கண்டுபிடிப்பார்கள். அதோடு அவர்களும் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார்கள்.

இது வீட்டுக்குக்கூட ஒத்துவராத லாஜிக். சமையல் வேலை, வீட்டை ஒழுங்குபடுத்துவது, பாத்ரூம் சுத்தம் செய்வது என எல்லா வேலைகளையும் பெண்களே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள்.

சில வேலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை செய்யப் பழக்கலாம். ஒருசில பெண்கள் கணவனுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்று சொல்லியே அவர்களை எதையும் செய்ய விடுவதில்லை. குழந்தைகளாகட்டும், கணவனாகட்டும் செய்து பழகட்டும் என்று நினைப்பதில்லை. பின்னர் யாருமே எனக்கு உதவி செய்வதில்லை. நானே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது என புலம்பும் பல பெண்கள் இருக்கிறார்கள்.

‘நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன்’ – வீட்டுக்குக்கூட ஒத்து வராத இந்த குணம் அலுவலகங்களுக்குப் பொருந்துமா. பொருந்தாது அல்லவா?

நானேதான் பார்சலை தயார் செய்வேன். நானேதான் கடிதங்களை  கவரில் வைத்து ஒட்டுவேன், நானேதான் என் டேபிளை சுத்தம் செய்வேன் என தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருசிலர் தாங்களே பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். இந்த குணம் தலைமைப்பண்புக்கு ஒத்து வராத குணம்.

நாம் பார்சல் தயார் செய்வதில் திறமை பெற்றவராக இருக்கலாம், கடிதங்களை கவரில் வைத்து அழகாக பேக் செய்வதில் வல்லவராக இருக்கலாம். அலுவலகத்தை சுத்தம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். படிப்பறிவே இல்லாதவர்களால்கூட செய்ய முடியும்.

ஆனால் ஒரு புது ப்ராஜெக்ட் குறித்து சிந்திக்கவும், அதுகுறித்த தேடலுக்கு முனைப்பு காட்டவும், துறைசார்ந்த வல்லுநர்களை சந்திக்கவும், ப்ராஜெக்ட்டை செய்வதற்கான ஆட்களைத் தேர்ந்தெடுக்கவும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.

இந்த லாஜிக் நாட்டை ஆள்பவர்களுக்கும் பொருந்தும்.

மொத்தத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் மிக அவசியமான குணம் இது.

இதையேதான் திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இந்தச் செயலை இதன்பொருட்டு இவரால் செய்யமுடியுமா என்று ஆய்ந்து அதனை அவரிடத்தில் கொடுக்க வேண்டும்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களைச் சார்ந்தவர்களையும் தங்களுடன் அரவணைத்துக் கொண்டு தங்கள் செயல்பாடுகளை செய்யும்போது அதனால் கிடைக்கும் பலன்கள் பலமடங்காக பல்கிப் பெருகுவது நிச்சயம்.

அந்தத் தலைமை வீடாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், நாடாக இருக்கலாம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 71 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon