வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[10] : பிள்ளைகளே ஆனாலும் பார்த்துப் பேசுவோம்!! (நம் தோழி)

ஒரு ஞாயிற்றுக்கிழமை. கோயிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு வயதான பாட்டி சைக்கிளில் தண்ணீர் பாட்டிலை வைத்து தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். பாட்டி சைக்கிள் தள்ளுவது எனக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் பரிதாபமாக இருக்கவே, ‘சைக்கிள் ஓட்டத் தெரியுமா பாட்டி?’ என்று வியப்புடன் பேச்சை ஆரம்பித்தேன்.

‘இல்லைம்மா, பக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தினமும் ஒரு கேன் தண்ணீர் இலவசமாக கொடுக்கிறார்கள். அதை இப்படி சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வேன்…’

‘ஓ…. இந்த சைக்கிள் யாருடையது?’

‘என் வீட்டுக்காரர் நினைவாக அப்படியே வைத்துள்ளேன். அவர் இறந்து ஐந்து வருடமாகிறது. சர்க்கரை வியாதியில் கால் விரல் எடுத்து, நுரையீரல் கேன்சர் வந்து, இரண்டு கிட்னியும் போய் அவர் போய் சேர்ந்துட்டார்… நான்தான் இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்….’ என்றபோது கண்கள் கசிந்தன.

‘சொந்தங்கள் யாரும் இல்லையா?’

‘அக்கா, தம்பி,  மைத்துனர்கள் என சொந்தங்கள் இருந்தாலும் ஒருவரும் கண்டு கொள்வதில்லை. நான் அனாதையாக சாப்பாடுக்கே கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்…’

‘குழந்தைகள் இல்லையா?’

‘இல்லை… என் வீட்டுக்காரருக்கு நான்தான் கொள்ளி போட்டேன். எனக்கு யார் போடப்போறாங்களோ தெரியலை…’

‘ஏதாவது வேலை பார்க்கறீங்களா?’

‘எங்க வீட்டுக்காரர் வீடு வீடாக பால் பாக்கெட் போடுவார். அதே வேலையை நான் செய்துகொண்டிருக்கிறேன்… மாசம் 4000 வரும்…’

‘தினமும் எத்தனை வீடுகளுக்கு பால் பாக்கெட் போடுவீங்க…’

‘முப்பது முப்பந்தைந்து வீடுகளுக்கு…’

‘வீடு எங்கே இருக்கும்மா?’

‘குடிசை வீடுதான். மாசம் 3000 ரூபாய் வாடகை… சாப்பிடவே காசில்லாமல் கோயில் அன்னதான சாப்பாட்டுக்குத்தான் தினமும் சென்றுகொண்டிருந்தேன். மூன்றாவது மாடியில் சாப்பாடு. இப்போது கொஞ்ச நாளாய் மூட்டுவலியினால் என்னால் மாடிப்படி ஏற முடியவில்லை…. சாப்பிடச் செல்ல முடிவதில்லை’

‘அப்போ சாப்பாட்டுக்கு என்னதான் செய்கிறீர்கள்?’

‘பட்டினிதாம்மா… ஒரு வேளை அரை வயிறுதான் சாப்பாடு. ரொம்ப பசித்தால் தண்ணீர் குடித்துக்கொள்வேன்… சர்க்கரை வியாதிவேற இருக்கு… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டாக்டர்கிட்ட போகணும்…’ என பேசுவதற்கு ஜீவனே இல்லாமல் பேசினார்.

பேச்சின் ஊடே அவர் அனுமதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

‘என் கவலையை யாரிடம் சொல்லி புலம்புவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அந்த அம்மனே நேரில் வந்ததுபோல நீங்க வந்தீங்க… நல்லா இருங்கம்மா…’ என்று சொல்லியபடி நகர முற்பட நான் கொஞ்சம் பணம் கொடுத்தேன்.

முதலில் மறுத்தாலும் ‘நல்லதா ஏதேனும் வாங்கி சாப்பிடுங்க…’ என்று சொன்னதும் கையெடுத்து கும்பிட்டு வாங்கிக்கொண்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு நகர்ந்தார்.

வயதான காலத்திலும் வசதி இல்லை என்றாலும் உற்றார் உறவினர் உதவிகள் இல்லையென்றாலும் உழைத்து கவுரவமாக வாழ்க்கையை நடத்திவரும் அந்தப் பாட்டி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு செல்லும் அந்த காட்சியை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கணவர் இல்லை என்றாலும் அவர் விட்டுச் சென்ற சைக்கிளை ஊன்றுகோலாக வைத்து நடத்திச் செல்லும் அவரது வாழ்க்கைப் பயணம் வியக்கத்தக்கது.

தன்னம்பிக்கைக்கு வசதியோ வயதோ ஒரு வரம்பல்ல என்பதற்கு இவரும் ஒரு ரோல்மாடல்தானே?

முணுக்கென்றால் தற்கொலை செய்துகொள்ளும் படிப்பாளிகளுக்கு / அறிவாளிகளுக்கு  மத்தியில் இதுபோல எத்தனையோ தன்னம்பிக்கை பெண்மணிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

குழந்தைகள் இல்லாதவர்களுக்கு இந்த சூழல் என்றால் இருக்கிறவர்களுக்கு வேறு மாதிரியான சூழல். ஆனால் இரண்டுமே ஒரே ரகம் என்பதுதான் வேதனை.

சமீபத்தில் ஒரு முதியோர் இல்லம் சென்றிருந்தேன். தாத்தாக்களுக்கு தனி கட்டிடம். பாட்டிகளுக்கு தனி கட்டிடம். என்னைப் பார்த்ததும் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை சூழ்ந்துகொண்டு என் கைகளை தொட்டு தாங்கள் பெற்ற பிள்ளைகளை கண்டால் எப்படி மகிழ்வார்களோ அத்தனை சந்தோஷத்துடன் பேசினார்கள்.

இவர்களில் ஒரு சிலரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதால் பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லாததால் இங்கு சேர்த்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஒருசிலருக்கு குழந்தைகளே இல்லை. இன்னும் ஒருசிலர் வீட்டில் பிள்ளைகளுடன் ஒத்து வராததால் தாங்களே வந்து சேர்ந்திருந்தார்கள். பெரும்பாலானோருக்கு பணத்துக்கு பஞ்சம் இல்லை. உறவுகளுக்குத்தான் பஞ்சம்.

வெளிநாட்டில் செட்டில் ஆன  பிள்ளைகள் எப்போதேனும் இந்தியா வரும்போது இவர்களை வந்து சந்திப்பார்களாம். உள்நாட்டிலேயே உள்ள பிள்ளைகள் ஏதேனும் பண்டிகை என்றால் வந்து சந்தித்துச் செல்வார்களாம். யாருமே வருத்தத்தையும் சோகத்தையும் முகத்தில் காண்பித்துக்கொள்ளவில்லை.

ஒன்றை மட்டும் கவனித்தேன். யாருமே காசு பணம் இல்லாமல் அங்கு சென்று சேரவில்லை. ஒருசிலர் பென்ஷன்கூட வாங்குகிறார்கள்.

வசதியே இல்லாமல் குடிசையில் வாழ்பவர்கள்கூட தங்கள் அப்பா அம்மாவை தன்னுடனேயே வைத்துக்கொண்டு காப்பாற்றுகிறார்கள்.  அவர்கள் யாருமே இல்லாமையை காரணம் காட்டி முதியோர் இல்லங்களில் சேர்ப்பதில்லை.

‘இப்போது எங்கள் சக்திக்கும் மீறி படிக்க வைக்கிறோம்… கடைசி காலத்துல நீ தான் எங்களுக்கு கஞ்சி ஊற்றனும்…’

‘உன்னை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்…’

‘ராஜாத்தி மாதிரி மகள் இருக்கா… எங்களுக்கென்ன குறைச்சல்? அவள் என்னை காப்பாற்றுவாள்’

இதெல்லாம் அவர்கள் தங்கள் பிள்ளைகள் காதுபட அடிக்கடி சொல்லும் வாசகங்கள்.

அவர்கள் அதிகம் படித்திருக்க மாட்டார்கள். ஆஃபீஸுக்கெல்லாம் வேலைக்குச் சென்றிருக்க மாட்டார்கள். ஐந்தாவதும் ஆறாவதும் படித்திருப்பார்கள். கூலி வேலைக்கும், வீடுகளில் வேலை செய்தும் வாழ்க்கையை ஓட்டுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்பை வளரும் தங்கள் பிள்ளைகளிடம் வளரும்போதே ஊட்டிக்கொண்டே வருவார்கள்.

அவர்கள் புத்திசாலித்தனமாகவோ, பிள்ளைகள் வளர்ப்புக்கு வகுப்புக்குச் சென்று கவுன்சிலிங்கெல்லாம் பெற்று அப்படிப் பேசுவதில்லை. அது அவர்கள் இயல்பு. உறவுகள் முக்கியம் என்ற உணர்வை இயல்பாகவே பெற்றவர்கள்.

நல்ல வசதி படைத்தவர்களால் பார்த்துப் பார்த்து கண்களுக்குள் வைத்து வளர்க்கப்படுகின்ற பிள்ளைகள்தான் காரணங்களைத் தேடி கண்டுபிடித்து பெற்றோர்களை இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். என்னைப் பொருந்தவரை இதற்கு பிள்ளைகள் மட்டுமே காரணம் இல்லை.

‘உன்னை நம்பி நான் இல்லை… எனக்கு பென்ஷன் வரும்… என் வழியை நான் பார்த்துப்பேன்… உன் வாழ்க்கைக்காக படி, நீ சவுகர்யமாக இருப்பதற்காக நல்ல வேலைக்குப் போ…’ என சொல்லி சொல்லி தங்களை தாங்களே ஒதுக்கிக்கொள்ளும் பெற்றோர்கள்தான் தங்கள் கடைசி காலத்தில் இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.

‘உன்னை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்… நன்றாக படி’ என்று வசதியற்ற பெற்றோர்கள் சொல்வதற்கும், ‘உன்னை நம்பி நாங்கள் இல்லை, எங்களுக்கு பென்ஷன் வரும்… உன் வாழ்க்கைக்காக நீ படி…’ என்று வசதியுள்ள பெற்றோர்கள் சொல்வதற்கும் இடையில்தான் எத்தனை இடைவெளி.

சின்ன சின்ன வார்த்தைகள்கூட மனித மனங்களை செம்மைப்படுத்தும் என்பது நிதர்சனம்.

பெற்றப் பிள்ளைகளே என்றாலும் பார்த்துப் பேசுவோம்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

January  9, 2020

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (ஜனவரி 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 10

புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி ஜனவரி 2020

(Visited 136 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon