ஹலோ with காம்கேர் – 10
ஜனவரி 10, 2020
கேள்வி: முகமூடி மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியுமா?
இன்றைய மனிதனின் நிஜமுகத்துக்கு மேல் அடுக்கடுக்காய் பல முகமூடிகள். நிஜமுகம் வெகு ஆழத்தில். தேடிப் பிடித்து எடுக்க நினைக்கும்போது பெரும்பாலானோர் சுயத்தை தொலைத்திருப்பார்கள். ஒருசிலர் அவர்களே மறைந்திருப்பார்கள்.
வீட்டுக்கு ஒரு இளம் வயது மரணம் நிகழ்ந்துகொண்டிருப்பதையும், வாய்க்கு சுவையாக நன்றாக சாப்பிட்டு வாழ வேண்டிய வயதிலேயே நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், ஹார்ட் அட்டாக், புற்றுநோய் போன்ற நோய்கள் அழையாத விருந்தாளியாய் வந்து ஒட்டிக்கொள்வதையும் தவிர்க்க முடியாதது வருந்தத்தக்க விஷயம்.
இதற்கு முதலாவதாக மது சிகரெட் புகையிலை போன்ற தீய பழக்க வழக்கங்கள் பிரதானக் காரணிகள்.
இரண்டாவதாக மாசுபட்ட காற்றும் தண்ணீரும்.
மூன்றாவதாக பயிரிடும்போதே உரம் ஏற்றப்பட்ட காய்கறிகள் பழங்கள், விற்பனையில் ஜெயிப்பதற்காக கலர் ஏற்றப்படும் உணவுப் பொருட்கள் என இயற்கை பொருட்கள் அத்தனையும் செயற்கையாகி கார்ப்பரேட் யுகமாகிப் போயிருக்கும் அவலம்.
இவை மூன்றுக்கும் அடுத்து மிக முக்கியக் காரணியாய் இருப்பது மனிதர்களின் உணர்வு ரீதியாக குழப்பங்கள். அவை கொடுக்கும் மன அழுத்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
‘வீட்டில் எலி, வெளியில் புலி’ என நகைச்சுவைக்காக சொல்வதுண்டு. வீட்டில் சாத்வீகமாக இருப்பவர்கள் வெளியில் கடுமையாக நடந்துகொள்ளும்போது அவர்களுக்கு இந்தப் பட்டப் பெயரை சூட்டிவிடுவார்கள்.
பொதுவாகவே நம் எல்லோருக்குமே இந்த இரண்டு முகங்கள் இருக்கும். இதை இரண்டு முகங்கள் என தரம் குறைத்துப் பேசுவது கூட தவறுதான். ஏனெனில் யாராலுமே வீட்டிலும் வெளியிலும் ஒரே மாதிரி நடந்துகொள்ள முடியாதுதானே.
வீட்டுக்கு உள்ளே சுதந்திரமான நடை உடை பாவனைகள். வீட்டுக்கு வெளியே பொது இடங்களில் அலுவலகங்களில் அந்தந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நம் நடவடிக்கைகளில் மெருகைக் கூட்டி நடந்துகொள்ள வேண்டியிருக்கும். ஒருவருக்கு இரண்டு முகங்கள் இருக்கும்போது இரண்டுவிதமான உணர்வுக் குவியல்கள் மட்டுமே.
பவர்போர்டில் உள்ள சுவிட்சில் ஆன், ஆஃப் என இரண்டே இரண்டு நிலைகள் இருப்பதைப்போல இந்த இரட்டை மனோபாவம் மனிதனுக்கு ஊறு செய்யாமல் இருந்தன. மனிதன் இயல்பாக வாழ முடிந்தது. உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தன.
ஆனால் இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு இரண்டு முகங்கள் போதுமானதாக இல்லை.
வீட்டில் தன் இயல்பில் ஒரு முகம், சொந்தபந்தங்களிடம் ஒரு முகம், பஸ்ஸோ காரோ ரயிலோ பைக்கோ அந்தப் பயணத்தில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம், நண்பர்களிலேயே ஆண் நட்புகளிடம் ஒரு முகம், பெண் தோழிகளிடம் புது முகம், முகம் காட்ட வேண்டிய அவசியமில்லாத சமூகவலைதளங்களில் மறைமுகமாக விநோதமாக சில சமயங்களில் அருவருக்கத்தக்க மற்றொரு முகம் என இன்றைய மனிதன்தான் எத்தனை முகங்களை சுமக்க வேண்டியுள்ளது.
இயற்கையில் நமக்கு ஒரு முகம். அவரவர்களின் இயல்புக்கும் செளகர்யத்துக்கும் ஏற்ப வெர்ச்சுவலாக பல முகங்களை உருவாக்கிக்கொள்கிறோம். ஒவ்வொரு முகத்துக்குள்ளும் ஆயிரமாயிரம் உணர்வுகள். பச்சோந்திபோல முகத்தை சட்சட்டென மாற்றும்போது அந்தந்த முகத்துக்கேற்ற குணாதிசயங்கள் நம்மை வடிவமைக்கும்.
சூழலுக்கேற்ப முகத்தை மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டியுள்ளதால் அதற்கேற்ப உணர்வின் மாற்றங்களை நம் மனதிலும், உடலிலும் ஏற்படுத்தும்.
விளைவு இளம் வயது மரணங்களும், அழையா விருந்தாளியாய் நோய்களும்.
முகமூடியே தேவையில்லை என சொல்ல மாட்டேன். முகமூடிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாமே என்றுதான் சொல்கிறேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software